×

குற்றாலத்தில் திருவாதிரை திருவிழா தேரோட்டம்

தென்காசி:  குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோயில் திருவாதிரை திருவிழாவில் நேற்று பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடந்தது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்தனர். 23ம் தேதி ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோயிலில், கடந்த 14ம் தேதி திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் தினமும் காலை, மாலையில் சிறப்பு அபிஷேக அலங்கார, தீபாராதனை, இரவில் சுவாமி  அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா நடந்து வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சமூர்த்திகள் தேரோட்டம், நேற்று சிவபூதகனம் வாத்தியங்கள் முழங்க நடந்தது. முதலில் விநாயகர் தேர் இழுக்கப்பட்டது. தொடர்ந்து முருகன், நடராசர், குற்றாலநாதர், குழல்வாய்மொழி அம்மன் ஆகிய தேர்கள் ஒன்றன் பின் ஒன்றாக இழுக்கப்பட்டன. பூஜைகளை ஜெயமணிசுந்தரம் பட்டர், கணேசன் பட்டர், கண்ணன் பட்டர், மகேஷ் பட்டர் ஆகியோர் நடத்தினர்.

இதில் கோயில் உதவி ஆணையர் செல்வகுமாரி, அகஸ்தியர் சன்மார்க்க சபை முத்துக்குமாரசாமி, முன்னாள் அறங்காவலர்கள் வீரபாண்டியன், தங்கம்பலவேசம், அதிமுக பேரூர் செயலாளர் அசோக்பாண்டியன், திமுக ஒன்றிய செயலாளர் ராமையா, கருப்பசாமி, இலஞ்சி அன்னையாபாண்டியன், பாஜ நிர்வாகிகள் செந்தூர்பாண்டியன், திருமுருகன், பிலவேந்திரன், செங்குந்தர் சமுதாய தலைவர் மகாலிங்கம், செயலாளர் அழகுசங்கரன், பொருளாளர் சக்திவேலாயுதம், குருசாமி, திருமலைக்குமார், சுப்பிரமணியன், விக்னேஷ், பாலாஜி, சபரி, பாலு, மூர்த்தி, சண்முகவேல், குற்றாலம் வர்த்தக சங்க நிர்வாகிகள் காவையா, அம்பலவாணன், ஜோதிமுருகன், வேல்ராஜ், பண்டாரசிவன், நாராயணன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

தென்காசி செங்குந்தர் சமுதாயம் சார்பில் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  விழாவில் 21ம் தேதி காலை 10 மணிக்கு சித்திரசபையில் நடராச மூர்த்திக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை, 23ம் தேதி காலை 4 மணிக்கு சித்திரசபையில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனை, 5 மணிக்கு கோயில் திரிகூட மண்டபத்தில் தாண்டவ தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் கட்டளைதாரர்கள், திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags : Thiruvathirai ,festival festival ,
× RELATED அந்தியூர் குருநாதசாமி கோயில் ஆடி தேர்...