×

பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு : அதிகாலையில் பக்தர்கள் குவிந்தனர்

திருவள்ளூர்: வைகுண்ட ஏகாதசியையொட்டி, திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசித்தனர். பெருமாளின் திருவடியை சரணடைந்த உயிர், எப்படி வீடு பேற்றை அடையும் என்பதை, பெருமாளே விளக்கி காட்டும் நிகழ்ச்சிதான் சொர்க்கவாசல் திறப்பு. இதில், நம்மாழ்வாருக்கு பெருமாள் காட்சி கொடுப்பார்.  திருவள்ளூரில் உள்ள முக்கிய பெருமாள் கோயிலான வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் இன்று அதிகாலை 5 மணிக்கு சொர்க வாசல் திறக்கப்பட்டு, ஸ்ரீதேவி பூதேவி சமேதராக உற்சவர் வீரராகவ பெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

அப்போது கோயிலில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என பக்தி பரவசத்துடன் கோஷமிட்டு பெருமாளை வழிபட்டனர். தொடர்ந்து கண்ணாடி அறையில் உற்சவர் பெருமாள், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. காக்களூர் பூங்கா நகர் சிவ  விஷ்ணு ஆலயத்தில் ஸ்ரீஜலநாராயணர் சன்னதியில், அதிகாலை 4 மணிக்கு பூப்பந்தலில் உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சொர்க்கவாசல் தரிசனம் நடைபெற்றது.

இதேபோல், நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில், பேரம்பாக்கம் வைகுண்ட பெருமாள் கோயில் உட்பட பல்வேறு பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு நடைபெற்றது. காஞ்சிபுரத்தில், வைகுண்ட பெருமாள் கோயில், அஷ்டபுஜ பெருமாள் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், அழகிய சிங்கப்பெருமாள் கோயில், பச்சைவண்ண பெருமாள் கோயில், பவளவண்ண பெருமாள் கோயில், உலகளந்தார் பெருமாள் கோயில், விளக்கொளி பெருமாள் கோயில், சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயில், பாண்டவர் சமேத பெருமாள் கோயில், நிலாத்துண்டர், ஆதிகேசவ பெருமாள் கோயில், திருநீரகத்தான் உள்ளிட்ட திவ்ய தேசங்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

உத்திரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள், மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில், ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோயில், சிங்க பெருமாள் கோயிலில் உள்ள நரசிங்க பெருமாள், ஞான தேசிங்க பெருமாள் கோயில் மற்றும் திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள், திருமுக்கூடல் அப்பர் வெங்கடேச பெருமாள் கோயில் மற்றும் கல்பாக்கம், திருக்கழுக்குன்றம், கேளம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களிலும் வைகுண்ட ஏகாதசி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Tags : opening ,paradise ,temples ,Perumal ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு