×

சைவ சமயத்துள் பசுக்களின் பெருநிலை

நன்றி குங்குமம் ஆன்மிகம்

* பசுவுக்கு ‘‘ஆ’’ அல்லது ‘‘ஆன்’’ என்பது சிறப்பான பெயர். எனவே பசுக்கள் சிவனை வழிபட்ட தலங்கள் ஆவூர் எனவும், அங்குள்ள இறைவனின் பெயர் பசுபதீசர் எனவும் வழங்குகின்றன.

* தேனு என்பது பசுவின் வடமொழி பெயர் களில் ஒன்றாகும். எனவே பசுவால் வழிபடப்பட்ட இறைவன் தேனீஸ்வரர் என்று அழைக்கப்படுகின்றார். பசு வடிவம் கொண்டு இறைவனை வழிபட்டதால், இறைவிக்குத் தேனாயி தேனாம்பிகை என்பவை பெயராயின.

* கொண்டி என்பது காமதேனுவின் மகளுக்கும் பார்வதிக்கும் பெயராகும். இவ்விருவராலும் வழிபடப்பட்டதால் இறைவர் கொண்டீஸ்வரர் என அழைக்கப்படுகின்றார்.

* பட்டி என்பது பசுக் கூட்டத்திற்கும், காமதேனுவின் மகள் ஒருத்திக்கும் பெயராகும். எனவே பட்டியால் பூஜிக்கப் பெற்ற இறைவரும் மாட்டுப் பட்டிக்கு இடையே அமைந்த இறைவரும், பட்டீசர் என்றழைக்கப்படுகின்றார். கோவைப் பேரூரிலும், தஞ்சை மாவட்டத்திலும் இறைவர் பட்டீசர் என்று பெயர் பெறுகின்றார்.

* பசுவினைக் கட்டுமிடம் கட்டுத்தறி எனப்படும். கன்றினைக் கட்டும் முளை, ஆப்பு எனப்படும். ஒரு பெண் இந்த ஆப்பையே சிவனாக எண்ணி வழிபட்ட தலம் ஆப்பனூர் எனவும், இங்கு எழுந்தருளிய இறைவனின் பெயர் நடுத் தறியப்பர் எனவும் வழங்குகின்றது. இந்த தலம் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது.

* பசுக்களுக்கு (உயிர்களுக்கு) பாசங்களை விலக்கி (மலங்களை நீங்கி) ஞானமும் மோட்சமும் தரும்-பதிலாக விளங்குதலின் இறைவன் பசுபதி எனப்படுகின்றான்.

* கோ என்பது பசுக்களுக்குப் பெயர். ஆதலின் பசுக்கள் சிவவழிபாடு செய்த தலங்கள் கோவூர், கோமங்கலம், கோவந்தபுத்தூர் எனப்பெயர் பெற்றன.

* பசுக்களின் கூட்டம் கோகுலம் எனப்பட்டது. எனவே பசுமந்தை நிறைந்த இடமும் கோகுலம் எனப்பட்டது. திருகோழம்பம் எனும் பாடல் பெற்ற தலத்தில், பசுக்கூட்டம் தங்கி இறைவனை வழிபட்டதால், அதற்குக் கோகுல புரம் என்று பெயராயிற்று என்பார்கள்.

* ‘‘கோ’’க்கள் வழிபட்டதால் இறைவன் கோபதி எனவும், அவனுடைய தேவி கோமதி எனவும் அழைக்கப்படுகின்றனர்.

* பசுக்களை நிலையாகக் கட்டுமிடம் ஆநிலை எனப்பட்டது. இத்தகைய இடத்தில் அமைக்கப் பெற்றதால் கருவூர் கோயில், கருவூர் ஆநிலை எனப்பட்டது. இதனையொட்டி இறைவன் ஆநிலையப்பர் என்றழைக்கப்படுகின்றார்.

* தேவி பசுவடிவம் கொண்டு வழிபட்ட தலம் திருவாவடுதுறையாகும். இங்கு தேவியின் கோவடிவம் (கழிந்ததால் இத்தலம் கோகழி எனப்படுகிறது. இந்த தலம் திருவாசகத்தில் கோகழி என்றே குறிக்கப்படுகின்றது. பசுவடிவில் விளங்கிய தேவர்களுக்கு இங்கு இறைவன் முத்தியளித்ததால், அவர் கோமுக்தீஸ்வரர் என்றழைக்கப்படுகின்றார்).

* தம் உடலிலிருந்து பாலைச் சுரந்து உயிர்களைக் காப்பதால், பசுக்களுக்குச் சுரபி என்பது பெயராயிற்று. அமுதமாகிய பாலைச் சுரந்தளிப்பதால் இவற்றிற்கு அமுதசுரபி என்பதும் பெயராயிற்று.

*  கருநீல நிறம் (அ) மயிற்கழுத்து நிறம் கொண்ட பசு கபிலை எனப்படும், இத்தகைய கபிலையால் வழிபட்டதால் இறைவன் கபிலேஸ்வரர் என்றழைக்கப்படுகின்றார். திருப்பதி திருமலையின் அடிவாரத்தில் ஆழ்வார் தீர்த்தத்தின் (நந்தி சர்க்கிள்) அருகில் கபிலேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.

தொகுப்பு: ஆட்சிலிங்கம்

Tags : Saivism ,
× RELATED அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரம் அளித்த திருவேட்களம்