×

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

504. பூரிதஷிணாய நமஹ (Bhoori Dhakshinaaya namaha)

(503-வது திருநாமம் கபீந்த்ர முதல் 512-வது திருநாமம் ஸத்யஸந்த வரை - தருமத்தின் வடிவமாக இருக்கும் ஸ்ரீராமனின் பெருமைகள்)சிருங்கேரி மகா சன்னிதானம் ஒரு கதை சொல்வார். ஓர் ஊரிலே ஒரு புடலங்காய் வியாபாரி இருந்தாராம். அவர் ஒவ்வொரு நாளும் யாராவது ஒருவருக்கு ஒரு புடலங்காய் வீதம் தானம் செய்து வந்தாராம். இப்படித் தன் வாழ்நாள் முழுவதும் தானம் செய்து வந்தாராம், அந்தப் புடலங்காய் வியாபாரி. இந்த தானத்தின் விளைவாக, அடுத்த பிறவியில் அவர் ஒரு பெரிய அரசனின் மகனாகப் பிறந்தார்.

தந்தைக்குப் பின், தான் முடிசூடிக் கொண்டு சிறந்த அரசனாக ஆட்சி புரிந்தார். அந்தப் பிறவியில் மிகவும் மன நிறைவுடன் வாழ்ந்து வந்தார் அவ்வரசன். அவர் ஒரு ஜோதிடரைச் சந்தித்துத் தான் இவ்வளவு மன நிறைவுடன் வாழ என்ன காரணம் என்று கேட்டார்.அவரது ஜாதகத்தை அலசி ஆராய்ந்த ஜோதிடர், கடந்த பிறவியில் ஒரு நாளைக்கு ஒரு புடலங்காய் வீதம் நீங்கள் தானம் செய்துள்ளீர்கள். இந்த பிறவியில் நீங்கள் பெற்றுள்ள நிம்மதியான வாழ்வுக்கு அந்த தானமே காரணம் எனச் சொன்னார்.

இதைக் கேட்ட அந்த அரசன், ஒரு நாளைக்கு ஒரு புடலங்காய் தானம் செய்ததற்கே இவ்வளவு பலன் என்றால், இனி நாம் இந்தப் பிறவியில் பலப்பல புடலங்காய்களாகப் பலப்பல நபர்களுக்குத் தானம் செய்தால் நமக்கு எவ்வளவு நன்மை கிடைக்கும் என யோசித்தார்.அடுத்த நாள் முதல், அந்த நாட்டில் உள்ள மக்கள் யாராலும் புடலங்காய் வாங்கவே முடியவில்லை. ஊரில் உள்ள அனைத்துப் புடலங்காய்களையும் அரண்மனைப் பணியாட்களை அனுப்பி வாங்கி வரச் செய்தார் அரசன். அந்தப் புடலங்காய்களை எல்லாம் பலப்பல நபர்களுக்குத் தினந்தோறும் தானமாக வழங்கி வந்தார். அந்தப் பிறவி முடிந்தது.

அடுத்த பிறவியில் அந்த அரசர் மொத்த வியாபாரம் செய்யும் ஒரு புடலங்காய் வியாபாரியாக ஆனார். அந்த பிறவியிலும் ஒரு ஜோதிடரைப் பார்த்தார். அந்த ஜோதிடர், நீ முன் ஒரு பிறவியில் ஒரு நாளைக்கு ஒரு புடலங்காய் வீதம் தானம் செய்தாய். அதனால் அரசனாக பிறந்தாய். அந்த பிறவியில் அரசனாகி பலப்பலப் நபர்களுக்குப் பலப்பலப் புடலங்காய்களாகத் தானம் செய்ததால், இந்த பிறவியில் பெரிய புடலங்காய் வியாபாரியாய்ப் பிறவி பெற்றாய் என்றார்.

அந்த வியாபாரிக்கு இப்பொழுது ஒரு சந்தேகம் வந்தது. பலர்க்குப் பலப்பலப் புடலங்காய்கள் தானம் செய்ததற்குப் பலனாக நான் இன்னும் பெரிய சக்கரவர்த்தியாக அல்லவோ ஆகி இருக்க வேண்டும். இப்படிப் புடலங்காய் வியாபாரியாக ஏன் பிறந்தேன் என்று கேட்டார் வியாபாரி.ஒரு புடலங்காய் வியாபாரியின் நிலைக்கு, ஒரு நாளைக்கு ஒரு புடலங்காய் தானம் செய்வது என்பது உயர்ந்தது. ஆனால் அரசன் தானம் செய்தால் அவன் தகுதிக்கு ஏற்றபடித் தங்கம், வைரம் என்றல்லவா தானம் செய்திருக்க வேண்டும்! அதை விட்டுவிட்டுப் புடலங்காயையே தானம் செய்தால், எண்ணம் போல்தான் பிறவி கிடைக்கும் என்றார் ஜோதிடர். அதன்பின் அந்த வியாபாரி தானத்தின் பெருமையை முழுமையாக உணர்ந்து கொண்டாராம்.

தானம் என்றால் ராமனைப் போல் செய்ய வேண்டும். ராமன் நூறு அஸ்வமேத யாகங்கள் செய்தார். அப்பொழுது ரிஷிகள், சான்றோர்கள், வேதம் வல்லார் என அனைவர்க்கும் அள்ளிக் கொடுத்தார் ஸ்ரீராமன். இவ்வாறு கணக்கே பாராமல், அவரவருக்குரிய தட்சிணையையும், சம்மானத்தையும் அள்ளிக் கொடுத்து, தானம் எப்படிச் செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு நல்ல முன்மாதிரியாக விளங்கியதால், ஸ்ரீராமனுக்கு பூரிதஷிண: என்று திருநாமமே ஏற்பட்டது.

யாகங்கள், தானங்கள் போன்றவற்றைச் செய்வதால், இறைவனாகிய ஸ்ரீராமனுக்குப் புதிதாக எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை. நாம் எல்லோரும் அவனைப் பின்பற்றி, நிறைய தானம் செய்ய வேண்டும் என்பதற்காக ராமன், தானம் செய்து காட்டியிருக்கிறார். பல யாகங்கள் செய்து அதற்கு தட்சிணையாக நிறைய தானம் செய்ததால் பூரிதக்ஷிண: என்று ஸ்ரீராமன் அழைக்கப்பெற்றார். பூரி என்றால் தாராளமாக, தக்ஷிணை என்றால் சம்மானம். பூரிதக்ஷிண: என்பது ஸஹஸ்ரநாமத்தின் 504-வது திருநாமம்.பூரிதக்ஷிணாய நமஹ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் அனைவருக்கும் பரந்த உள்ளம் ஏற்படும்படி ஸ்ரீராமன் அருள்புரிவார்.

505. ஸோமபாய நமஹ (Somapahaya namaha)

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருநாளை ஒட்டி, வடுவூர் என்ற திருத்தலத்தில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமிக்குப் பவித்தோற்சவம் நடைபெறும்.அதே சமயத்தில், அதே ஊரில், புராணத் தெருவில் ராமரின் பக்தரான வில்லுர் ஸ்ரீநிதி சுவாமிகளின் அவதார உற்சவமும் ஐந்து நாட்கள் நடைபெறும். வில்லூர் ஸ்ரீநிதி சுவாமிகளும் கார்த்திகை தீபத் திருநாளன்றே அவதாரம் செய்தார். எனவே இறைவனின் உற்சவமும் அடியவரின் உற்சவமும் ஒன்றாக நடக்கும் வைபவத்தை அங்கே அந்த சமயத்தில் காணலாம்.

வில்லூர் ஸ்ரீநிதி சுவாமி, வடுவூர் ராமனின் புன்னகையை அனுபவித்துப் ``புன்னகை ராமாயணம்’’ என்றொரு ராமாயணமே இயற்றியுள்ளார். அந்த உற்சவக் காலத்தில், அடியேனின் குருவான ஸ்ரீ.உ.வே.கருணாகராச்சாரிய மகாதேசிக சுவாமியும், அடியேனும், வடுவூர் ராமன் முன் புன்னகை ராமாயணத்தைப் பாராயணம் செய்வோம். அதை ஆனந்தமாக கேட்டு அருள்வான் ராமன். இந்த உற்சவத்தின் நடுவே ஒவ்வொரு ஆண்டும், ஒருநாள் ஏகாதசி வந்துவிடும்.

அந்த சமயம், அடியேனின் குருவான ஸ்ரீ.உ.வே. கருணாகராச்சாரியார் சுவாமி ஏகாதசி அன்று முழுமையாக விரதம் இருந்து உற்சவத்தில் பங்கேற்பார். இதை ஒவ்வொரு ஆண்டும் அடியேனும் கவனித்து வந்தேன்.இரண்டு வருடங்களுக்கு முன்பு அடியேன், கருணாகராச்சாரியார் சுவாமிகளிடம், ``சுவாமி, ஏகாதசி அன்று தண்ணீர்கூட உட்கொள்ளாமல் விரதம் மேற்கொண்டு உற்சவத்திலும் பங்கேற்பது எளிதன்று. உங்கள் வயதையும், உங்களுக்கு இருக்கும் நீரிழிவு நோயையும் கருத்தில் கொண்டு ஏதாவது உணவு எடுத்துக் கொள்ளலாமே’’ என்று கேட்டேன்.

அதற்குக் கருணாகராச்சாரியார் சுவாமி, ``என் ஆச்சாரியனும் தந்தையுமான வில்லூர் ஸ்ரீநிதி சுவாமிகளின் உற்சவம் இது. அவரது இஷ்டதெய்வமான ராமனின் உற்சவம் இது. ராமனும் ஆசானும் துணைநிற்க, எனக்கு எந்த ஒரு பாதிப்பும் நேராது. உண்ணாமல் இருந்தால், சர்க்கரையின் அளவு குறையும் என்றுதான் மருத்துவனான நீ சொல்வாய். இது தவிர வேறு என்ன ஆகிவிடும் எனக் கேட்டார்.ஒரு மருத்துவனாக அடியேன், சர்க்கரையின் அளவு அதிகமாகவும் வாய்ப்பு இருக்கிறது சுவாமி. அதற்கு ஸோமோகி விளைவு எனப் பெயர். ஸோமோகி என்ற விஞ்ஞானி இதைக் கண்டுபிடித்தார். சர்க்கரையின் அளவு குறையும் பொழுது, நம் உடம்பில் சில ஊக்கிகள் (Hormones) உருவாகிச் சர்க்கரை அளவைச் சமன் செய்ய முயலும். அப்பொழுது அதன் எதிர்விளைவாகச் சர்க்கரையின் அளவு கூடவும் வாய்ப்புள்ளது எனச் சொன்னேன்.

ஏகாதசி விரதம் முடிந்து, துவாதசி உணவு உட்கொண்ட பின் சர்க்கரையின் அளவு கூடுகிறதா குறைகிறதா என்று பார் என்று கருணாகராச்சாரியார் சுவாமி தெரிவித்தார். துவாதசி அன்று அவர் உணவு உட்கொண்டு முடித்தபின், ஒன்றரை மணிநேரம் கழித்துச் சர்க்கரையின் அளவைப் பரிசோதித்தேன். சரியாக 140 mg/dl என்று இருந்தது.அடடா ஸோமோகி விளைவு எடுபடவில்லையோ என்றேன். ஆச்சாரியனோ, இது ஸோமோகி விளைவன்று, இது ஸோமயாஜீ விளைவு. ஸோமயாகம் செய்பவர்களை ஸோமயாஜீ என்பர். ஸோமயாகம் செய்கையில் பல நாட்கள் விரதம் இருக்க வேண்டும். நமது முன்னோர்கள் பலர் ஸோம யாகம் செய்துள்ளனர். அவர்களின் அருள் நமக்கு நிச்சயமாக உண்டு.

மேலும் நமக்கு வழிகாட்டுவதற்காகத் தான் ராமனே பல ஸோம யாகங்கள் செய்து, யாகம் செய்கையில் விரதமும் அனுசரித்தான். ராமனை விடச் சிறந்த ஸோமயாஜீ உண்டா. அந்த ராமனின் திருத்தலத்தில் நாம் இருக்க, முன்னோர்களின் அருள் இருக்க, ஸோமயாஜீ விளைவு துணையிருக்க, ஸோமோகி விளைவு என்ன செய்யும் என்று பெருமிதத்துடன் சொன்னார் கருணாகராச்சாரியார் சுவாமி.

இப்படிப் பல ஸோம யாகங்கள் செய்து, அவ்யாகங்களில் இருந்து வரும் ஸோம பானத்தைப் பருகினான் ராமன். ஸோமம் என்னும் செடியிலிருந்து வருவதால் ஸோமரசம், ஸோமபானம் என்று அது சொல்லப்படுகிறது. இதை யாகத்தில் நாராயணனுகு அர்ப்பணித்துப் பிரசாதமாக உட்கொள்வர். இன்றைய காலத்தில் சிலர் ஸோமபானத்துக்குத் தவறான பொருள் சொல்லி வருவதை நாம் காணமுடிகிறது. ஆனால் வேத நூல்களில் சொன்ன விளக்கத்தை ஏற்பதே என்றும் சாலச் சிறந்தது.

நாம் விரதம் இருந்து யாகம் உள்ளிட்ட வழிபாடுகளைச் செய்ய வேண்டும் என்பதற்காக, ஸ்ரீராமன் முன்னோடியாக விரதம் இருந்து யாகம் செய்து ஸோம ரசத்தை உட்கொண்டு நமக்கு வழிகாட்டியுள்ளார். நம் சக்திக்கு ஏற்றவாறு நாமும் ஏகாதசி போன்ற விரதங்களை மேற்கொள்ள வேண்டும் என்று உணர்த்துகிறார் ஸ்ரீராமன். அசுவமேத யாகம், ஸோம யாகம் போன்ற யாகங்கள் செய்து அதிலிருந்து பிரசாதமாகப் பெறப்படும் ஸோம பானத்தை உட்கொள்வதால் ராமன் ஸோமப: என அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 505-வது திருநாமம். ஸோமபாய நமஹ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு அறநெறிகளைப் பின்பற்றி நடக்கக் கூடிய வலிமையை ஸ்ரீராமன் தந்தருள்வான்.

506. அம்ருதபாய நமஹ (Amruthapaaya namaha)

(503-வது திருநாமம் கபீந்த்ர முதல் 512-வது திருநாமம் ஸத்யஸந்த வரை - தருமத்தின் வடிவமாக இருக்கும் ராமனின் பெருமைகள்) ஸ்ரீராம பட்டாபிஷேகம் அயோத்தியில் இனிதே நிறைவு பெற்றது. தேவர்களும் முனிவர்களும் ராமனையும் சீதையையும் வாழ்த்தினார்கள். தேவர்கள் குறிப்பாக லட்சுமணனை வாழ்த்தினார்கள். பலப்பல வரங்களைப் பெற்றவனும், பல்வகை மாயா ஜாலங்கள் செய்ய வல்லவனுமான இந்திரஜித்தை வதைப்பது சாதாரண காரியம் அன்று எனச் சொல்லி லட்சுமணனின் சாகசத்தை முனிவர்கள் கொண்டாடினார்கள். அவ்வாறே அனுமனின் தொண்டையும் பாராட்டினார்கள்.

இதைக் கவனித்த ராமன், முனிவர்களே, லட்சுமணனின் மனைவி ஊர்மிளையை யாருமே கொண்டாடவில்லையே. கைங்கரியச் செம்மல் என்று லட்சுமணன் விளங்குவதன் பின்னணியில் ஊர்மிளை தன் கணவனைப் பிரிந்திருந்த தியாகம் இருக்கிறதே. அவளது தியாகத்தை நாம் அவசியம் போற்றவேண்டும். கணவனைப் பிரிந்ததால் ஏற்பட்ட பெரும் துயரத்தையும் பொருட்படுத்தாமல் இருந்த ஊர்மிளைக்கு நான் வரம் தரப்போகிறேன் என்றான் ராமன்.ஊர்மிளையை அழைத்து அவள் விரும்பும் வரம் என்ன என்று கேட்டான் ராமன். ராமனைக் கைகூப்பி வணங்கிவிட்டு ஊர்மிளை, சுவாமி, நான் ஏதும் பெரிதாகத் தியாகம் எல்லாம் செய்யவில்லை.

எது நடந்தாலும் அது உங்களது அருள் அன்றி வேறு எதனாலும் சாத்தியமில்லை. எனவே எனக்காகக் கோயில் கட்டுவது, என்னைக் கொண்டாடுவது, என்னைப் போற்றிப் பாராட்டுவது உள்ளிட்ட எதுவுமே இனி உலகில் இருக்க வேண்டாம். எல்லாப் புகழும் உங்களுக்கு மட்டுமே, அது தான் சரி. அடியேன் நீங்கள் அமுதுசெய்த பிரசாதத்தைப் பெற விரும்புகிறேன். அதைத் தந்தருள வேண்டும் என்று வேண்டினாள்.

அதற்கு ராமன், ஊர்மிளா, இனி நான் பல யாகங்கள் செய்யப் போகிறேன். அந்தந்த வேள்விகள் தோறும் அவற்றிலிருந்து வரும் ஒரு பிரசாதத்தை உனக்கு நான் தருவேன் என்றான். அதற்கு ஊர்மிளை, அடியேன் யாகத்தில் அர்ப்பணிக்கப் படும் பிரசாதத்தைக் கேட்கவில்லையே. நீங்கள் அமுதுசெய்த பிரசாதத்தைத் தானே அடியேன் கேட்டேன் என்றாள். ராமன், ஊர்மிளா, எந்த யாகத்தில் எந்தப் பொருளை அக்னியில் சமர்ப்பித்தாலும், அந்தப் பொருளை அக்னிதேவன் அமுதம் ஆக்கி, அதைத் திருமாலுக்குச் சமர்ப்பித்து விட்டு அதன் பின் திருமாலின் பிரசாதமாகத் தான் மற்ற தேவர்களிடம் அக்னி சேர்க்கிறான்.

நான் திருமாலின் அவதாரம் என்பது இப்போது வந்த ரிஷிகளின் வாக்கின் மூலம் நீ அறிந்திருப்பாய். எனவே அந்த வேள்விகளால் ஆராதிக்கப்படுபவன் நானே. அதில் வரும் பிரசாதம் எனது பிரசாதமே. அதை உனக்குத் தருகிறேன் என்று விடையளித்தான்.யாகத்தில் வந்த ராமனின் அமுதமயமான பிரசாதத்தைத் தொடர்ந்து உண்டு வந்த ஊர்மிளை அமுதமயமாகவே மாறிவிட்டாள். அதனால் அவளே பூரி ஜகந்நாதர் க்ஷேத்திரத்தில் உள்ள அமுதமயமான பிரசாதமாக ஆகிவிட்டாள் என்கிறது பூரி க்ஷேத்திர மாஹாத்மியம்.

எனக்குக் கோயில் வேண்டாம், வழிபாடு வேண்டாம், கொண்டாட்டம் வேண்டாம், உங்கள் பிரசாதத்தை உண்ணும் பேறு மட்டும் வேண்டும் என்று கேட்ட ஊர்மிளையைப் பிரசாதமாகவே ஆக்கி அருள்புரிந்து விட்டான் ஸ்ரீராமன்.இன்றும் பூரியில் ஜகந்நாதரின் மஹாபிரசாதம் அமுதத்துக்கு நிகரானதாகக் கொண்டாடப் படுகிறது. அது அம்ருத நிலையாகிய முக்தி வரை நம்மைச் சேர்க்க வல்லது என்று தல வரலாறு சொல்கிறது.

ஊர்மிளை இப்படி மஹா பிரசாதமாக ஆனதற்கு, யாகத்தின் அமுதமயமான பிரசாதத்தை ஊர்மிளை பெற்றதே காரணம். ராமன் நடத்திய அனைத்து வேள்விகளிலும் அவன் சமர்ப்பித்த ஹவிர்பாகம் என்னும் உணவு யாவும், அக்னிதேவனால் அமுத வடிவில் மீண்டும் ராமனிடமே சேர்க்கப்பட்டன. அதை ராமன் பருகிப் பின் தன் பிரசாதமாகப் பிறர்க்கு வழங்கி இருக்கிறான். எனவே ராமன் யாகம் செய்தவன் மட்டும் அல்லன், யாகத்தில் அர்ப்பணிக்கப் படும் பொருளை அமுது செய்யும் இறைவனும் அந்த ராமனே. அதனால் தான் அம்ருதப: என்று ராமன் அழைக்கப்படுகிறார்.

அம்ருதம் என்பது யாகத்தில் அர்ப்பணிக்கப்படும் ஹவிர்பாகத்தைக் குறிக்கிறது. அம்ருதப: என்றால் யாகத்தில் அர்ப்பணிக்கப்படும் அமுதைப் பருகுபவர் - அதாவது, யாகத்தால் ஆராதிக்கப்படுபவர் என்று தாத்பரியம். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 506-வது திருநாமம்.அம்ருதபாய நமஹ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு அமுத நிலையாகிய வைகுண்ட வாழ்ச்சியை ஸ்ரீராமன் அருள்வார்.

507. ஸோமாய நமஹ (Somaaya namaha)

(503-வது திருநாமம் கபீந்த்ர முதல் 512-வது திருநாமம் ஸத்யஸந்த வரை - தருமத்தின் வடிவமாக இருக்கும்ஸ்ரீராமனின் பெருமைகள்)

வனவாசம் செல்லும் ராமபிரானின் வடிவழகைக் கவிச்சக்கரவர்த்தி கம்பர் வர்ணித்து ஒரு பாடல் பாடியுள்ளார்.

வெய்யோன் ஒளி தன் மேனியின் விரிசோதியில் மறையப்
பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான்
மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ

ஐயோ இவன் வடிவென்பதொர் அழியா அழகுடையான்

கருமை நிறம் கொண்ட ராமபிரானின் திருமேனி அழகுக்கு என்ன உவமை சொல்லலாம் என்று சிந்தித்துப் பார்த்தார் கம்பர். கறுப்பு நிறம் கொண்ட மையைச் சொல்லலாமோ எனச் சிந்தித்து, மையோ என்றார்.

ஆனால் மையில் கருமை இருந்தாலும் ராமனுக்கு இருக்கும் பளபளப்பையோ பொலிவையோ மையில் காணமுடியவில்லை. அதனால் மை பொருத்தமான உவமையாக ஆகாது. ஒளியும் பளபளப்பும் மிக்க மரகதக் கல்லைச் சொல்லிப் பார்க்கலாம் என்று யோசித்த கம்பர், மரகதமோ என்று அடுத்த உவமையை அடுக்கினார். ஆனால் மரகதக்கல்லில் ஒளி இருந்தாலும் குளிர்ச்சி இல்லை, ராமனின் திருமேனியில் மிகுந்த குளிர்ச்சி உள்ளதே. அப்படியிருக்க, மரகதக் கல் எப்படிப் பொருத்தமான உவமையாகும் எனக் கருதி, அடுத்த உவமையைச் சிந்தித்தார். குளிர்ந்த கடல்நீரை உவமையாகச் சொல்லலாமோ எனக் கருதி, நீலவண்ணம், குளிர்ச்சி யாவும் நிறைந்த மறிகடலோ என்றார் கம்பர். ஆனால் கடல்நீர் உப்பு கரிக்குமே.

ராமன் அமுதம் போல் அல்லவோ இருக்கிறான். எனவே உப்பு நிறைந்த கடல்நீரை ராமனுக்கு உவமையாக்க முடியாது எனக் கருதி அதற்கு அடுத்த உவமையைச் சிந்தித்தார். தூய நீரை மழையாகப் பொழியும் கார்மேகத்தை உவமையாகச் சொல்வோம் என்று முடிவெடுத்த கம்பர், அடுத்து மழைமுகிலோ என்றார். ஆனால் கார்மேகத்தில் கருமை குளிர்ச்சி தூய்மை யாவும் இருந்தாலும் கூட, மழை பொழிந்து முடித்து விட்டால், வெளுத்துப் போகிறது.

ராமனோ எவ்வளவு அருள்மழை பொழிந்தாலும் வெளுக்காமல் அப்படியே கருமையோடு இருக்கிறானே. அப்படியானால் மேகமும் அவனுக்கு உவமையாகாது. இப்படி எந்தப் பொருளை உவமையாக்க முயன்றும் ராமனின் அழகுக்கு நிகரான உவமையைச் சொல்ல முடியவில்லை. திடப்பொருளான மரகதக்கல், திரவப் பொருளான கடல்நீர், இரண்டுக்கும் இடைப்பட்ட மை, வாயுப்பொருளான மேகம் என எதுவுமே ராமனின் அழகுக்கு நிகராகாத நிலையில், இனி என்ன வார்த்தை சொல்லி ராமனை அழைப்பது என்று சிந்தித்தார். கவிச்சக்கரவர்த்திக்கே வேறு வார்த்தைகள் கிடைக்கவில்லை. என்னிடம் இனி வார்த்தைகளே இல்லையே என்று தெரிவிக்கும் விதமாக, ஐயோ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார் கம்பர்.

செய்ய வாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே
நீல மேனி ஐயோ நிறைகொண்டது என் நெஞ்சினையே


என்று திருப்பாணாழ்வாரும் அரங்கனின் அழகை அனுபவிக்கையில், ஐயோ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது இங்கே ஒப்பிட்டு நோக்கத் தக்கது.

இப்படி வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பேரழகோடு திகழ்ந்து, தன்னை அனுபவிக்கும் அடியார்களுக்கு அமுதமாக இனிப்பதால், ஸ்ரீராமன் ஸோம: என்று அழைக்கப்படுகிறார். இவ்விடத்தில் ஸோம என்பதற்கு அமுதம் என்று பொருள். அனுபவிப்போர்க்கு அமுதமாக இனிப்பவர் ஸோம:  அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 507-வது திருநாமம். ஸோமாய நமஹ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்நாளில் எந்நாளும் இனிமையான நாளாக அமையும்படி ஸ்ரீராமன் அருள்புரிவார்.

திருக்குடந்தை
டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

Tags : Anantan ,
× RELATED அனந்தனுக்கு 1000 நாமங்கள்!