×

சகலகலா சரஸ்வதி

சகலகலா சரஸ்வதி

சிருஷ்டித் தொழிலை நடத்துபவர் பிரம்மா. ஞான சக்தி அல்லது அறிவு சக்தி இல்லாவிட்டால் சிருஷ்டித் தொழிலை நடத்த முடியாது. அதனால்தான் அறிவு சக்தியை பிரம்மா தன் மனைவியாக ஏற்றார் என்றும் ‘சாரதா’ என்ற பெயரும் அந்த அறிவு சக்திக்கு உண்டு என்றும் சாமவேதம் கூறுகிறது. சரஸ்வதி ரகஸ்யோபநிஷத்தில் சரஸ்வதி, வேதாந்தங்களின் தத்துவ சொரூபிணியாகவும், நாம ரூப பேதங்களுடன் உலகில் காட்சியளிப்பவளாகவும், பிரம்மத்தின் அத்வைத சக்தியாகவும், ‘க்ஞப்தி’ மாத்திர ஸ்வரூபியாகவும், பிரம்ம சொரூபிணியாகவும் விளங்குகிறாள்.

நாத ரூபமானதால் வாணீ; சகலகலா நிலையமானதால் பாரதி; வாக்காக விளங்குவதால் வாங்மயீ; அக்ஷர ஸ்வரூபமாக உள்ளதால் பீஜாக்ஷர ஸ்வரூபிணி; மந்திர தந்திர யந்திரமாகத் திகழ்வதால் வாக்பவகூட சதுர்வேத ஸ்வரூபிணி என்று கலைமகள் அழைக்கப்படுகிறாள். பிரம்மாண்ட புராணத்தில் தேவியின் மூச்சிலிருந்து வேதங்களும், அவளுடைய தொண்டையிலிருந்து மீமாம்ஸாவும், நாக்கிலிருந்து 64 கலைகளும், தோளிலிருந்து காமகலையும், உடம்பின் இதர உறுப்புகளிலிருந்து இதர தந்திர சாஸ்திரங்களும் வெளிப்பட்டன என்று கூறப்பட்டுள்ளது. மூன்று கூடங்களில் வாக்பவ கூடத்தின் அதிதேவதை ‘சரஸ்வதி’. வாமகேஸ்வர தந்திரம் வாக்தேவிதான் ஞானசக்தி என்கிறது.

2. நீல சரஸ்வதி - தாரா

பத்து விதமான வித்யா தேவதைகளில் ஒருவளான தாரா சரஸ்வதி அம்சமே. தாராவில் ஐந்து விதங்கள் உண்டு. நீல சரஸ்வதி, உக்ர தாரா, சகல தாரா, சித்ர தாரா என்று நீல சரஸ்வதி அல்லது தாரிணி பேசும் சக்தியை அளிப்பவள். எல்லா மொழியின் ரூபமாக இருப்பவள் என்று நீல சரஸ்வதி புகழப்படுகிறாள். அதாவது அங்கம், வங்கம், அருணம், கலிங்கம், கௌசிகம், காம்போஜம், கொங்கணம், கோசலம், சாவகம், சிங்களம், சிந்து, சீனம், சோனகம், திராவிடம், துளுவம், பப்பரம், மகதம், மராடம் என மொழிகளை பதினெட்டாக வகுத்திருக்கிறார்கள்.

மேலும், தாரணம் என்றால் கடத்துவிப்பது, தாண்டுவிப்பது என்று பொருள். சம்ஸார சாகரத்தை தாண்டுவிப்பவள் தாரிணி. பிரணவம் தாரக மந்திரம் எனப்படும். அந்த ஓங்காரமே தாராவின் மந்திரம் என்பதிலிருந்து இவள் மகிமையை உணரலாம். இவளது உபாசனைக்கான தீட்சை தர பெண்களே உரிமை பெற்றிருக்கிறார்கள். தங்கள் குழந்தைகள் பிறந்து மூன்று நாட்களுக்குள் அதன் வாயில் தேனைக் கொண்டு நீல சரஸ்வதி மந்திரத்தை எழுதிய தாய்மார்கள் பலர் காஷ்மீரத்தில் முன்காலத்தில் இருந்தனர். அங்கு பாண்டித்யம் மிக அதிகமாக விளங்கி காஷ்மீரி பண்டிட் என்ற ஒரு வகுப்பினர் சிறப்புடன் திகழ்ந்ததற்கு இதுவே காரணம் என்று சொல்லப்படுகிறது.

3. பாலா - சரஸ்வதி

ஸ்ரீவித்யையில் கணபதி மந்திர உபதேசத்திற்கு அடுத்ததாகக் கருதப்படும் பாலா உபதேசம் சரஸ்வதியின் சொரூபம்தான். பாலா தேவி கையில் ஜப மாலையும் புஸ்தகமும் கொண்டிருப்பவள். இவள் உருவத்தை பராசக்தி மாலை,செங்கதிராற்றிசை பத்தையும் செம்மை செய் செவ்வுருவும் அங்கைகள் நான்கில் வரதாபய மணியக்கவடம் துங்க நற்புத்தகம் தாங்கிய செந்தாரணியும் பங்கய ஆசனப் பாலைக் கமலை பராசக்தியே திருவாரூர் கமலாம்பாள் பாலை உருவமே.
 
4. ‘மாநிஷாத’ என்னும் அஹிம்ஸா சரஸ்வதி

இந்த சரஸ்வதியே வால்மீகியின் வாக்கில் குடி கொண்டதால்தான் ராமாயண காவியம் இவ்வுலகிற்கு கிடைத்தது. இரு பறவைகள். ஆணும் பெண்ணும் கூடிக் குலாவிக் கொண்டிருக்கும்போது ஒரு வேடன் ஆண் பறவையை அம்பினால் கொன்று விட்டான். பெண் பறவை துடிதுடித்துக் கதறியது. இதைக் கண்ட வால்மீகி மகரிஷி வாக்கிலிருந்து அவரை அறியாமலேயே ஒரு ஸ்லோகம் வெளிவந்தது.

‘‘மாநிஷாத ப்ரதிஷ்டாம் த்வம் அகம்:
சாச்வதீ:         
ஸமா:
யத் கிரௌஞ்ச மீது நாத் ஏகம் அவதீ: காம மோஹிதம்


(மையலால் மயக்கமுற்ற க்ரௌஞ்சப் பறவைகளின் ஜோடியில் ஒன்றை வதைத்தனை அல்லவா? ஏ வேடனே! நீ நீடித்த ஆண்டுகள் வாழ்வு பெற்றிருக்க மாட்டாய்.)
இவ்வாறு தன் வாக்கிலிருந்து வெளிப்பட்டதைக் கண்டு மகரிஷியே ஆச்சரியமடைந்தார். ‘‘என் உள்ளத்தில் தோன்றிய சோகமல்லவா இந்த ஸ்லோகமாக வெளிவந்தது’’ என்று எண்ணினார்.

ரிஷி முன் பிரம்மா தோன்றி ‘‘நான் போகும்படி சொல்லியே ‘மாநிஷாத்’ என்னும் அஹிம்ஸை சரஸ்வதி உம் வாக்கில் அவதரித்திருக்கிறாள். அந்த அஹிம்ஸா தர்மமே உலகெங்கும் மேம்பாடு அடைய ராம விருத்தாந்தத்தை அருளும்’’ என்று கூறி ஆசீர்வதித்தார்.

5. நித்யா சரஸ்வதி

வேதம் அநாதிகாலமாக நம் நாட்டில் உள்ளது. அது காலத்திற்கு அப்பாற்பட்டது. ‘நித்யா சரஸ்வதி’ என்று வேதத்திற்குப் பெயர். இக்கருத்தை கம்பர் கிஷ்கிந்தா காண்டத்தில் ராமர் அனுமனைப் பாராட்டும் படலத்தில் தெரிவிக்கிறார்.

தாட்படாக்கமல மன்ன தடங்கணான் தம்பிக்கம்மா
கீட்படாநின்ற நீத்தம் சிளர்படாதாகி என்றும்
நாட்படா மறைகளாலும் நவைபடா ஞானத்தாலும்
கோட்படாப் பதமே ஜய குரங்குருக் கொண்ட தென்றான்.


நாட்படா அதாவது கால அளவுக்கு உட்படாதது என்றும், என்றைக்கும் உள்ள அழியாதது என்று வேதத்தைப்பற்றி இங்கே கம்பர் கூறுகிறார்.

தொகுப்பு: K.ஜெயலட்சுமி

Tags : sarasvathi ,
× RELATED திமுக பெண் கவுன்சிலர் மரணம்: முதல்வர் இரங்கல்