×

அரளிப் பூ சாகுபடியில் அமோக வருவாய்

ஏக்கருக்கு லட்சம் லாபம் நிச்சயம்சேலம் மாவட்டம் முழுவதும் பூக்கள் சாகுபடி பரவலாக உள்ளது. இதில் பசுமை சூழ்ந்த பனமரத்துப்பட்டி பகுதியில் அரளிப்பூ சாகுபடி பெரும் கவனம் ஈர்த்து வருகிறது. சிவப்பு அரளி, ரோஸ் அரளி, வெள்ளை அரளி, மஞ்சள் அரளி என்று பல்வேறு ரகங்களில் பயிரிடப்படும் அரளி, உள்ளூர் மட்டுமன்றி இதர மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு செல்கிறது. இதேபோல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களுக்கு சென்ட் தயாரிக்கவும் அனுப்பப்படுகிறது. இதனால் அரளி சாகுபடியில் விவசாய குடும்பங்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றன.  படித்த இளைஞர்களும் பூக்கள் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்தவகையில் பிஎஸ்சி விலங்கியல் பட்டதாரியான ராஜமணிகண்டன், எம்எஸ்சி பி.எட் பயின்ற அவரது மனைவி தேவி, பி.எட் படித்த தம்பி கார்த்திகேயன் என்று ஒரே குடும்பத்தினர், களத்தில் இறங்கி அரளி சாகுபடியில் அசத்தி வருகின்றனர். அதோடு விவசாயத்தில் ஆர்வம் காட்டும் இளைஞர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி நம்பிக்கையூட்டியும் வருகின்றனர். “பொதுவாக டிகிரியோ, டிப்ளமோவோ படித்து விட்டு நாம் தனியார் கம்பெனிகளில்தான் பணியாற்ற வேண்டும் என்பது இன்றைய கால கட்டத்தில் எழுதப்படாத விதி. அதே நேரத்தில் விவசாயம் என்பது பெருமைக்குரிய சுய தொழில். தனியார் கம்பெனிகள் அதிகப்பட்சமாக ஒரு பட்டதாரிக்கு தரும் ரூ.25ஆயிரம் சம்பளத்தை போல் 3 மடங்கு, மண்ணை நம்பி உழைத்தால் நமக்கு கிடைக்கும். அதோடு நான்கு குடும்பங்களையும் வாழ வைக்கலாம் என்பதுதான், நாங்கள் விவசாயத்தில் ஈடுபட்டிருப்பதற்கான முக்கிய காரணம்’’ என்று மனப்பூர்வமாக சொல்கிறார் ராஜமணிகண்டன். “அரளி சாகுபடியை பொறுத்தவரை முதலில் நிலத்தை சீரமைத்து செடிகளுக்கான பதியம் போட வேண்டும். பின்னர் எரு மட்டும் போட்டு, நீர்த்தேவைக்கான வாய்க்கால் உருவாக்க வேண்டும். ஒரு ஏக்கர் நிலத்தில் அரளி பயிரிடும் போது 15 அடிக்கு ஒரு வாய்க்கால் என்ற ரீதியில் வெட்டி, நீர் பாய்ச்ச வேண்டும். ஒரு ஏக்கரில் 500 செடிகளை நடலாம். இந்த செடிகள் 40 முதல் 50 நாட்களில் 2 அடி உயரத்தில் வளரும். அதன் பிறகு களைகளை வெட்டி விட்டு 20:20 கலப்பு உரம் போட வேண்டும். தொடர்ந்து செடிகளின் வளர்ச்சியை கண்காணித்து களை எடுக்க வேண்டும்.அதோடு பழைய எருக்களை உரமாக போடும் போது, விரைவில் பூக்களுக்கான கொழுந்து விடும். 3 மாதத்தில் செடியில் இருந்து பூக்கள் பறிக்க ஆரம்பிக்கலாம். தொடக்கத்தில் ஒரு ஏக்கருக்கு அரை கிலோ பூக்கள் மட்டுமே கிடைக்கும். ஆனால் 6 மாதம் காத்திருந்தால் ஒரு செடிக்கு 3 முதல் 5 கிலோ பூக்கள் கிடைக்கும். இடையில் செடிகளில் புழு தாக்குதலை கண்காணித்து மோனோபிளஸ் மருந்து தெளிக்க வேண்டும். ஒரு ஏக்கரில் 500 செடிகளுக்கு தலா ₹15 வீதம் 7,500, வாய்க்கால் வெட்ட ரூ.8 ஆயிரம், உழவு ஓட்ட ரூ.10 ஆயிரம், பூக்கள் பறிப்பதற்கு ₹5 ஆயிரம் என்று மொத்தமாக ரூ.30 ஆயிரம் செலவாகும். அதே நேரத்தில் ஏக்கருக்கு ₹1 லட்சம் லாபம் நிச்சயம் கிடைக்கும்.இதேபோல் அரளியை பறித்து அனுப்பும் நேரம் என்பது மிகவும் முக்கியமானது. அந்திசாயும் நேரத்தில் பறித்து பேக்கிங் செய்தால் பூக்கள் மலர்ச்சியாக இருக்கும். அதேபோல் அதிகாலை 2மணி முதல் 5மணிக்குள் செடிகளில் இருந்து பூக்களை பறிப்பதும் பூக்களின் மலர்ச்சிக்கு வழிவகுக்கும். எந்த காரணம் கொண்டும் மலர்ந்த பூக்களை செடியில் அப்படியே விட்டு விடக்கூடாது. அப்படி செய்தால் பூக்கள் காயாகி, அடுத்தடுத்து பூப்பதற்கு வழியின்றி போகும் என்பதையும் உணரவேண்டும். தற்போது இடைத்தரகர்களே, அவர்களுக்கு தேவையான செடிகளின் ரகங்களை கொடுத்து பயிரிடச் செய்து வாங்கிச் செல்வது பணிச்சுமையை குறைத்துள்ளது. அரளியை பொறுத்தவரை எப்போதும் மவுசு இருக்கும். திருவிழாக்காலங்களில் அதிகபட்சமாக கிலோ ரூ.400 வரை விற்கப்படுகிறது. உள்ளூரில் மாலைகள் கட்டவும், கோயில் திருவிழாக்களுக்கும், அலங்காரங்களுக்கும் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் வருடத்தில் 6 மாதங்களுக்கு பெரும் மவுசு இருக்கும் பூவாக அரளி திகழ்கிறது. எந்த விசேஷமும் இல்லாத சாதாரண நாட்களில் கூட கிலோ ரூ.100க்கு விற்கும். எனவே அரளி சாகுபடியை விரும்பி செய்தால் லாபத்தை அள்ளலாம். இதில் அரளிக்கு இடையே நிலக்கடலை, எள், மஞ்சள் போன்ற ஊடு பயிர்களையும் பயிரிடலாம். ஆர்வமுள்ள இளைஞர்கள் எந்த நேரத்திலும் எங்களை அணுகலாம். அவர்களுக்கு வழிகாட்டி ஆலோசனைகள் வழங்க தயாராக இருக்கிறோம் என்று நம்பிக்கையூட்டுகின்றனர் ராஜமணிகண்டன் குடும்பத்தினர்.தொடர்புக்கு ராஜமணிகண்டன்: 96779 21279 தொகுப்பு : ஜி.காந்தி  படங்கள் : கே.ஜெகன்

The post அரளிப் பூ சாகுபடியில் அமோக வருவாய் appeared first on Dinakaran.

Tags : Arali ,Salem district ,Panamarathupatti ,
× RELATED விவசாயிகளுக்கு தரமற்ற விதைகள் விற்றால் நடவடிக்கை