- முன்னாள் சபாநாயகர்
- சேடபட்டி முத்தையா
- முதல் அமைச்சர்
- முத்தையா ஜி.கே
- ஸ்டாலின்
- திருமங்கலம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தமிழ்நாடு சட்டமன்றம்
- சபாநாயகர்
- சேடபட்டி முத்தையா
- மதுரை
- கெ ஸ்டாலின்
திருமங்கலம்: திமுக முன்னணி நிர்வாகிகளில் ஒருவரும், தமிழக முன்னாள் சட்டமன்ற சபாநாயகருமான சேடபட்டி முத்தையா (77) உடல்நலக்குறைவால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவர் நேற்று காலமானார். மதுரை மாவட்டம், சேடபட்டி சட்டமன்ற தொகுதியில் கடந்த 1977, 1980, 1984 மற்றும் 1991 ஆகிய 4 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். சேடபட்டி தொகுதியில் வெற்றி பெற்றதால் இவர் தனது பெயருக்கு முன்னால் தொகுதியின் பெயரையும் சேர்த்து சேடபட்டி முத்தையா என அழைக்கப்பட்டார். இதேபோல் பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்டு மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றினார். 1991-96ல் சபாநாயகராக இருந்தார். ஒன்றிய அமைச்சராகவும் இருந்துள்ளார். மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அதிமுகவில் முக்கிய தலைவர்களில் ஒருவராக சேடபட்டி முத்தையா இருந்தார். ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அதிமுகவில் இருந்து விலகி, கலைஞர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அன்று முதல் திமுகவில் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார். தற்போது திமுக தேர்தல் பணிக்குழுத்தலைவராக பதவி வகித்து வந்தார். கடந்த சில காலமாக உடல்நலக்குறைவால் வீட்டில் ஓய்வு எடுத்து வந்த சேடபட்டி முத்தையா 10 தினங்களாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று பகல் 1 மணியளவில் காலமானார். இவரது உடல் சொந்த ஊரான முத்தப்பன்பட்டி கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 3 மணியளவில் முத்தப்பன்பட்டியில் அடக்கம் செய்யப்படும் என கட்சியினர், உறவினர்கள், தெரிவித்தனர். முன்னதாக திருமங்கலத்தில் உள்ள மதுரை தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் சேடபட்டி முத்தையா உடல் வைக்கப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். சேடபட்டி முத்தையாவுக்கு மனைவி சகுந்தலா. இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இளைய மகன் மணிமாறன் தற்போது மதுரை புறநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக உள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திமுகவின் வளர்ச்சிக்காகவும், மேன்மைக்காகவும் தொடர்ந்து பங்காற்றி வந்த சேடப்பட்டி முத்தையா மறைவுற்ற செய்தி, வேதனையை தந்துள்ளது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், திமுக உடன்பிறப்புகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியும் இரங்கல் தெரிவித்துள்ளார். …
The post முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா காலமானார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.