×

விஷக்கடி நிவர்த்திக்கு பூவனூர் சாமுண்டீஸ்வரி திருத்தலம்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பூவனூர் திருத்தலத்திலும் சாமுண்டீஸ்வரி தனிச் சன்னிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த ஆலயம் நீடாமங்கலம் அருகே இருக்கிறது. பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவன் சதுரங்கவல்லபநாதர். புஷ்பவனநாதர் என்பதும் இறைவனின் பெயரில் ஒன்றாகும். கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி என்பது இத்தல இறைவியின் திருநாமமாகும். இக்கோவிலில் அம்பிகை கற்பகவள்ளியோடு, ராஜராஜேஸ்வரியும் மற்றொரு தேவியாக வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்.

ராஜராஜேஸ்வரியை சதுரங்க ஆட்டத்தில் இறைவன் வெற்றி கொண்டமையால், சதுரங்க வல்லபநாதர் என்னும் திருப்பெயரை இத்தலத்தில் இறைவன் பெற்றுள்ளார். இத்தலத்தில் நந்திதேவர், தேவர்கள், சித்தர்கள், சிவ கணங்கள், முனிவர்கள் பலரும் வழிபட்டு பெரும்பேறு பெற்றுள்ளனர். ஆலயத்தின் தல விருட்சம் பலா மரமாகும். ஆலயத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசிக்க பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். எலிக் கடியினாலும், பிற விஷக் கடியினால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் இங்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.

நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் சாமுண்டீஸ்வரி அம்மன் வாசல் எதிரே நின்று, வேர் கட்டிக் கொண்டு இக்கோவில் முன்னால் உள்ள சீரபுட்கரணி குளத்தில் நீராட வேண்டும். அவ்வாறு செய்து வந்தால், நோய் நீங்கி நலம் பெறலாம் என்கிறது தல வரலாறு. இத்தலத்தில் தான் அகத்திய முனிவர், போகருக்கு விஷக்கடி நிவர்த்திக்கான மூலிகை வைத்திய முறைகளை போதித்தார் என்று கூறப்படுகிறது.

அனைத்து சித்த வைத்தியர்களும் அகத்தியருக்கு பூஜை செய்து வழிபட வேண்டிய தலம் இது. ஞாயிற்றுக்கிழமை தோறும் விஷக்கடி நிவர்த்தி செய்ய அகத்தியரின் ஆசியுடன் சாமுண்டீஸ்வரி அம்மன் சன்னிதி முன்பு மூலிகை வேர் கட்டப்படுகிறது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் வழித்தடத்தில் பூவனூர் என்ற ஊரில் உள்ளது.

Tags :
× RELATED வாசிப்பும் வழிபாடுதான்…