×

கோலாகல வாழ்வருளும் கோல்ஹாபூர் மகாலட்சுமி!

இந்தியாவில் பல சக்தி தலங்கள் இருந்தாலும், குறிப்பிட்ட தலங்கள் நம் மனத்தில் நீங்கா இடம் பெற்று விடுகின்றன. சென்னை காளிகாம்பாள், மதுரை மீனாட்சி, கொல்கத்தா காளி தேவி, மும்பை மகாலக்ஷ்மி, கொல்லூர் மூகாம்பிகை, சோட்டாணிக்கரை பகவதி, காசி விசாலாட்சி, காஞ்சி காமாட்சி என மகாலட்சுமிக்கான கோயில்கள் குறித்த நீண்ட பட்டியல் இடலாம். இதேபோல் மராட்டிய  மாநிலத்தில் செல்வ வளத்தை அள்ளித் தருவதற்காகவே கோல்ஹாபூரில் மகாலக்ஷ்மி எழுந்தருளியுள்ளாள். இத்தலம் ‘தட்சிண காசி’ என்றும் அழைக்கப்படுகிறது.

கோயிலுக்கருகில் பஞ்ச கங்கா நதி ஓடுகிறது. இத்தலத்தில் எழுந்தருளியுள்ள மகாலக்ஷ்மி, சௌந்தர்ய ரூபவதி, துர்கா லக்ஷ்மியின் கிரீடத்தில் நாகம் இருப்பது போல் தேவியின்
கிரீடத்திலும் நாகம் படமெடுத்தாடுகிறது. அன்னையின் பாதத்தில் சிம்மத்தின் ரூபமும், தாமரையின் வடிவமும் அமைக்கப்பட்டுள்ளன. இத்தலத்தில் ஸ்ரீ மகாலக்ஷ்மி, விஷ்ணு ஸ்வரூபமாக இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள். ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி மகா விஷ்ணுவின் அம்சமே ஆனதால், இங்குள்ள துர்கா லக்ஷ்மி, மகாவிஷ்ணுவாக போற்றப்படுவதில் வியப்பில்லை. கோயில்களில் உள்ள கடவுள் சிலைகளுக்கு சக்தியை கொடுப்பதற்காக அதன் பீடங்களில் நவரத்தினங்கள், தங்கம், வெள்ளி  போன்றவற்றை இடுவார்கள். ஆனால் கோல்ஹாபூர் மகாலக்ஷ்மி சிலையிலேயே நவரத்தினங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.இங்கு மகாலக்ஷ்மி அன்னையுடன் திருமாலும் வாசம் செய்வது விசேஷம் ஆகும்.

மகாபிரளயம் நிகழ்ந்த காலத்தில் கூட அன்னையும் திருமாலும் இத்தலத்தில் இருந்து வெளியேறவில்லை என்பதால், இத்தலம் ‘அவிமுக்தி’ க்ஷேத்திரமாக புகழ் பெற்றுள்ளது. அத்துடன் திருமால் வாசம் செய்வதால் அனைத்து தீய சக்திகளிடம் இருந்தும் பாதுகாக்கப்பட்ட தலமாக ‘கரவீரம்’ விளங்குவதாக இத்தல வரலாறு கூறுகிறது. வைகுண்டத்தில் வாசம் செய்வதை விட அன்னை மகாலக்ஷ்மியின் இஷ்ட தலமான கோல்ஹாபூரில்தான் திருமால் அதிக காலம் வாசம் செய்கிறார் என்பது ஐதீகம்.

அம்பிகை மஹிஷாஸுரமர்த்தினியாக மகாலக்ஷ்மியாக அருள்கிறாள். இங்கு தேவிக்கு பஞ்சகால பூஜைகள் தினமும் நடக்கிறது. பூஜையின் போது வித விதமான பணியாரங்கள் படைக்கப்படுகின்றன. தேவி தன் திருக்கரங்களில் வாள், கேடயம், கதை, மாதுளை மற்றும் தலையில் வைரக்கிரீடம், ஐந்து தலை வெள்ளி நாகம் குடைபிடிக்க சர்வாலங்கார பூஷிதையாக அம்பிகை ஜொலிக்கிறாள். நவராத்திரி ஒன்பது நாட்களும் வித விதமான அலங்காரம் மற்றும் வாகனங்களில் தேவி பவனி வருவதைக் காணக் கண் கோடி வேண்டும். ஆலயத்தின் எட்டு திக்குகளிலும் எட்டு சிவலிங்கங்களும், நான்கு திசைகளிலும் நான்கு தடாகங்கள் உள்ளது.

6 அல்லது 7ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் சாளுக்கிய மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டதாக நம்பப்பட்டாலும் அதற்கான வரலாற்று ஆதாரங்கள் எதுவுமில்லை. 10ம் நூற்றாண்டு வாக்கில் இயற்கை பேரிடரால் ஸ்ரீ மகாலக்ஷ்மி அன்னையின் கோயில் இடிந்து விழுந்ததாகவும், அதன் பிறகு 17ம் நூற்றாண்டு வரை அன்னையின் விக்ரகம் வேறொரு இடத்தில் வைத்து பூஜிக்கப்பட்டதாகவும் வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன. மகாராஷ்டிராவில் ‘மராத்தா' மன்னர்கள் ஆட்சி தோன்றிய பிறகுதான் இடிந்து விழுந்த அன்னையின் கோயில் மீண்டும் கட்டப்பட்டு, 1715ம் ஆண்டில் அன்னையின் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

முழுக்க முழுக்க கருங்கல்லால் பிரமாண்டமாக எழுப்பப்பட்டிருக்கும் இக்கோயிலில், நான்கு திசைகளை விளக்கும் வகையில் நான்கு கோபுரங்கள் உயர்ந்து நிற்கின்றன. கோயிலுக்கு நான்கு திசைகளிலும் நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கிழக்கு திசையில் கோயிலின் பிரதான நுழைவு வாயில் இருந்தாலும், பக்தர்கள் வடக்கு வாசல் வழியாகவே கோயிலுக்குள் பிரவேசம் செய்கின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்களை முழு முதற்கடவுள்  ‘சாக்ஷி கணேஷ்’ என்றழைக்கப்படும் விநாயகப் பெருமான் வரவேற்கிறார். வலது பக்கத்தில் சிவப்பு பட்டுடுத்தி, தலையில் கிரீடம் தாங்கி சாந்த சொரூபிணியாக பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கிறாள் மகாகாளி. இடது பக்கத்தில் மகாலக்ஷ்மி யந்திரம், கண்ணாடிப் பேழையில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு நேர் எதிர் திசையில் வருண பகவான் சந்நதி.

இதற்கு அடுத்ததாக அழகிய வேலைப்பாடுகளுடன் 12 கருங்கல் தூண்களுடன் வடிவமைத்த கருவறையில், கருங்கல் பீடத்திற்கு மேலே, வெள்ளியால் உருவாக்கப்பட்ட சிங்கத் தலை சிம்மாசனத்தில் மகாலக்ஷ்மி திருவருட்பாலிக்கிறாள். மகாலக்ஷ்மியின் கருவறை அருகில் தன்வந்திரி விக்ரகம் உள்ளது. இந்த விக்ரகத்தின் உடல் முழுவது விரல்களால் அமுக்கி விட்டு பக்தர்கள் வழிபடுகிறார்கள். இப்படி வணங்குவதன் மூலம், நம்மை பிடித்த பிணிகள் விலகி, தனபாக்கியம் பெருகும் என்பது ஐதீகம். நாள் தோறும் காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் அன்னை அபிஷேகம் செய்து அலங்கரிக்கப்படுகிறாள்.

இத்தலத்தில் மகாலக்ஷ்மி அன்னை மேற்கு திசையை நோக்கி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருட் பாலிக்கிறாள். மேற்கு திசை சுவற்றில் உள்ள சிறிய துவாரத்தில் வருடத்தின் 6 நாட்கள் மட்டுமே சூரியபகவான் தன் கதிர்களின் மூலம் அன்னையை தரிசிக்க வருவதாக ஐதீகம். முழு நிலவு நாட்களில் மட்டும் வெள்ளி சப்பரத்தில் கோயில் வளாகத்தில் அன்னை வீதியுலா வருவது வழக்கம்.

கருவறையில் அன்னையை வணங்கிய பிறகு வலது பக்கம் வந்தால், மகாசரஸ்வதி. வடக்கு திசையில் பெருமாள், தத்தாத்ரேயர் அவதாரத்தில் காட்சியளிக்கிறார். அடுத்து நவக்கிரக சந்நதி. கோயில் வளாகம் முழுவதும் சூர்ய பகவான், சனி பகவான், ராதாகிருஷ்ணர், கிருஷ்ணர் ருக்மணி, கஜலக்ஷ்மி அம்மன், பார்வதியுடன் சிவபெருமான் வீற்றிருக்கும் சந்நதி, கவுரி சங்கர் ஆலயம் என கோயிலின் நான்கு புறங்களிலும் ஆலயங்கள் இருக்கின்றன. கோயிலின் வடக்கு வாசல் அருகில் தமிழ்க் கடவுள் முருகப் பெருமானுக்கு தனி ஆலயம் இருப்பது
இன்னும் சிறப்பு. சிவபெருமானுக்கும் தனி சந்நதி இருக்கிறது.

மும்பையிலிருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவிலும் புனேயில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது கோல்ஹாபூர். கோல்ஹாபூர் ரயில் நிலையத்தில் இறங்கினால் ஆட்டோவில் 5 நிமிட பயணத்தில் மகாலக்ஷ்மி அம்மன் கோயிலை சென்றடையலாம். இப்புனிதத் தலத்திற்கு செல்பவர்கள் புத்தி, முக்தி இரண்டையும்  பெற்றுப் பெருவாழ்வினைப் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

தலத்தின் புராணம்

முன்பொரு சமயம் சிவனுக்கும் சக்திக்கும் சிவபெருமை சேர்க்கும் வாரணாசி க்ஷேத்ரம் பெரியதா அல்லது சக்தியின் க்ஷேத்ரம் பெரியதா என்ற சர்ச்சை ஏற்பட்டது. இருவரும் மகாவிஷ்ணுவிடம் செல்ல அவர் ஒரு தராசில் இரண்டையும் வைக்க, தேவியின் பக்கம் தராசின் தட்டு தாழ்ந்தது. இரண்டு தலங்களும் சிறந்ததே ஆயினும் தேவியின் திருத்தலம் ஒரு மணி அளவு அதிக பெருமையுடையது என மகாவிஷ்ணு தீர்ப்பளித்தார். சிவனுக்கும் சக்தியைக் கொடுப்பவளல்லவா அந்த பராசக்தி! ஆதலால் இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.

பக்தர்களின் பாவங்களை போக்குவதோடு மட்டுமின்றி, கேட்ட வரங்களை அள்ளிக் கொடுத்து அருள்வது கோல்ஹாபூர் மகாலக்ஷ்மி அன்னையின் சிறப்பம்சம். அதனாலேயே, ஆண்டு முழுவதும் இந்தியாவின் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் பக்தர்கள் இத்தலத்துக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். இத்தலத்தில் வீற்றிருக்கும் மகாலட்சுமி ‘கரவீரவாஸினி’ என்று போற்றப்படுகிறாள். ஆதியில் பிரம்ம தேவர், கயா, லவணன், கோலன் என மூன்று புத்திரர்களைப் படைத்ததாகவும் இதில் லவணாசுரன் மகாவிஷ்ணுவால் கொல்லப்பட்டதாகவும் கோலன், இந்நகரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து பின் தன் மூத்த மகனிடம் பொறுப்பைக் கொடுத்துவிட்டு கானகம் சென்றதாகவும் கூறப்படுகிறது.

கோலனின் மகன் கரவீரன் கொடுங்கோலனாக இருந்ததால், மும்மூர்த்திகள் இணைந்து அவனை வதம் செய்தனர். சுக்கு நூறாக சிதைக்கப்பட்ட அவனது, உறுப்புகள் விழுந்த இடங்கள் தீர்த்தங்களாக உருப்பெற்றன. அவன் நினைவாக இந்த க்ஷேத்ரமும் கரவீரபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. வனம் சென்ற கோலன், கரவீரனின் முடிவைக் கேள்வியுற்று, மகாலஷ்மியைக் குறித்து தவமிருந்தான். அன்னை காட்சி தந்த போது நூறு வருடங்களுக்கு, லக்ஷ்மி இந்த இடத்தை விட்டு சென்று விட வேண்டுமென்று வரம் கேட்டான்.

வரத்தை தந்து அவ்விடத்தை விட்டு அகன்ற தேவி 100 வருடம் கழித்து, கோலனை வதம் செய்ததாக வரலாறு கூறுகிறது. கோலன் ஆண்ட ஊர் கோல்ஹாபூர் என்று பெயர் பெற்று, தேவி அங்கு மக்களின் பாதுகாவலாக இன்றும் அருள் பாலித்து வருகிறாள். அகஸ்தியர், பராசரர், துர்வாசர், இந்திரன், நாரதர் உட்பட பலரும் இங்குள்ள மகாலக்ஷ்மியை வழிபட்டுள்ளனர்.

தொகுப்பு: மகி

Tags : Kolhapur ,Mahalakshmi ,
× RELATED மக்களின் பிரச்னைகள் குறித்து பிரதமர்...