×

பக்தர்களைத் தேடிவரும் பரமன்!

தஞ்சைமாவட்டம் திருவையாற்றிலிருந்து மேற்கே சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது மேலைத்திருக்காட்டுப்பள்ளி. திருக்காட்டுப்பள்ளி என்பதே இன்றைய வழக்கு.உறையூர் நந்தவனத்தில் செவ்வந்தி மலரைத் திருடிய மன்னன் அந்த மலர்களைத் தன் மனைவிகளுக்குக் கொடுக்க, அவர்களில் மூத்தவர் மட்டும் பெற்று அணிந்து திருக்கோயில் வர, உறையூரில் மண்மாரி பெய்து அனைவரும் இருந்த இடம் தெரியாமல் போக, மலர் பெற்ற அந்த மூத்த மனைவி மட்டும் தப்பித்து மேலைத் திருக்காட்டுப்பள்ளிக்கு வர, அப்பெண்ணிற்காக பெருமான் இறங்கி வெப்பம் தணித்தார் என்பர். சிவகணங்கள் பூஜித்த தலம் இது. இறைவன் தீயாடியப்பர் இறைவி வார் கொண்ட முலையம்மை. தீர்த்தம் காவிரியாறு. திருஞான சம்பந்தர் பெருமான் 11 - பாடல்களும், திருநாவுக்கரசர் பெருமான் 10 - பாடல்களும் பாடியுள்ளனர். திருவானைக்கா பெருமான் போல் இவரும் பள்ளமான கருவரையில் காட்சி தருகிறார்.
chennai
பொதுவாக பக்தர்கள் திருவிழா நாட்களில் தெய்வதரிசனம் காண ஆலயங்களுக்குச் செல்வது வழக்கம். ஆனால், இந்த திருக்காட்டுப்பள்ளி சிவாலயத்தில் பங்குனி உத்திரநாளில் சிவனும் அம்பிகையும் சேர்ந்து மக்கள் இருக்கும் இடங்களுக்கு வரும் புதுமை நடந்து வருகிறது. இங்கு பங்குனி உத்திர நாளன்று காவிரி ஆற்று மணலில் வீற்றிருக்கும் தெய்வங்களுக்கு விசேஷ அலங்காரங்களும், அபிஷேக ஆராதனைகளும் செய்யப்படுகின்றன. விழா நாளில் சில பக்தர்கள் நாவில் அலகு குத்திக் கொள்கிறார்கள். வேறு சிலர் தீமிதிக்கிறார்கள்.

முன்னொரு காலத்தில் இந்திரன் முதலிய தேவர்கள் இந்தத் தலத்திற்கு வந்து தீயாடியப்பர் எனும் அக்னிக் கடவுளையும், சௌந்திர நாயகியையும் வணங்கி வழிபட்டார்கள். அப்பொழுது, அக்னி தேவன் தொட்ட பொருட்கள் சுட்டெரிக்கப்பட்டு நாசமானது. அந்தப் பழியிலிருந்து விடுபட வழி இல்லையா என்று அக்னிதேவன் வேண்டினான். உடனே சிவ பெருமான், அக்னி தேவன் முன்தோன்றி “இங்குள்ள தலத்தில் ஒரு குளம் அமைத்து அதற்கு உன் பெயரை இடு!

அந்தக் குளத்து நீரைக் கொண்டு வந்து எனக்கு அபிஷேகம் செய்து என்னை வழிபட்டால் உனக்கு அந்தப் பழி தீரும். அதில் நீராடும் மக்களுக்கும், அவர்கள் செய்த பாவங்கள் நீங்கும்” என்றருளினார். அப்படிப்பட்ட அக்னி தேவனால் உண்டாக்கப்பட்ட மகிமை பெற்ற குளம் கொண்ட தலம்தான் திருக்காட்டுப்பள்ளி. இங்கு திருஞான சம்பந்தர் பெருமானும், திருநாவுக்கரசன் பெருமானும் சேர்ந்து வந்து இத்திருத்தல இறைவன் சந்நதி முன் சேர்ந்தமர்ந்து
பதிகங்கள் பாடியிருக்கிறார்கள்.

அவர்களின் தேவாரப் பதிகம் பாடல்கள் ஆலயத்தில் உள்ள பிராகாரச் சுவர்களில் அழகாகப் பொறிக்கப்பட்டுள்ளன. இந்தத் திருத்தலத்து இறைவனுக்கு இடது பக்கத்தில் ஞான முகனான பிரம்மாவிற்கு தனி சந்நதி அமைக்கப்பட்டிருக்கிறது. பிரம்மனுக்கு ஏற்பட்ட சாபம் நீங்கிய இடம் இது. பிரம்மன் இங்கு வந்து தனக்கும் மும்மூர்த்திகளில் ஒருவர் என்னும் அங்கீகாரம் தரப்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்யவே ‘அப்படியே ஆகட்டும்’ என்று சிவபெருமான் கூற அவருக்குத் தனி இடம் தந்து தங்க அனுமதித்தார். பிரம்மாவிற்கு தமிழ் நாட்டில் முதல் தனி சந்நதி அடைந்த இடம் இந்தத் திருக்காட்டுப்பள்ளியே ஆகும்.

பங்குனி உத்திர நாளன்று சிவ பார்வதி திருமணக் கோலம் காட்டி அருளும். ஏதேனும் ஒரு தலம் சென்று தரிசித்தாலும், ஆலயங்களில் திருமண வைபவம் நடைபெறும் போது அதில் கலந்து கொண்டாலும், மங்களகரமான மணவாழ்வு பெற்று மகிழ்வுடன் வாழலாம். பங்குனி உத்திர விரதம் மேற்கொண்டு திருக்காட்டுப் பள்ளி சென்று இறைவனையும் இறைவியையும் வழிபட்டால் சகலபாவங்களும் தொலையும். இதற்கு அச்சாரமாக அமைந்திருக்கிறது திருநாவுக்கரசர் பெருமானின் தேவாரப்பாடல் ஒன்று;

“மாட்டைத் தேடி மகிழ்ந்து நீர் நும்முனே
நாட்டுப் பொய்யெலாம் பேசிடு நாணிலீர்
கூட்டை விட்டுயர் போவதன் முன்னமே
காட்டுப்பள்ளியு ளான் கழல் சேர்மினே!”

டி.எம்.ரத்தினவேல்

Tags : Paraman ,
× RELATED விவசாயிகளின் பிரச்னைகளை சொல்லும் பரமன்