×

உங்கள் குழந்தைகள் நன்கு படிப்பார்களா?

ஜோதிடம், சில விஷயங்களில் நமக்கு முன்கூட்டியே சில உண்மைகளை உணர வைக்கும். அதில், பிள்ளைகளின் கல்வி நிலை எப்படி இருக்கும் என்பதைக் குறித்து சில தகவல்களை, அவர்களது ஜென்ம ஜாதகத்தின் மூலமாகவும், தசாபதி புத்தி மூலமாகவும், நடைபெறும் கோச்சார கிரகங்களின் அமைப்பின் மூலமாகவும் நாம் அறிந்து கொள்ள முடியும். யோகங்களில் கல்வி சம்பந்தப்பட்ட புதன், சூரியனோடு இணைந்து இருக்கும்பொழுது, “புதஆதித்யயோகம்’’ என்று சொல்கின்றார்கள். ஜோதிட கிரந்தங்களில் புதஆதித்யயோகம் பற்றி மிகப் பிரமாதமாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. காரணம், சூரியன் வியாகரண சாஸ்திர நிபுணன். உண்மையில் கல்விக்கான கிரகம் சூரியன்தான்.

ஞான கல்வி மட்டும் அல்ல, உலகியல் கல்வியையும் வழங்கக்கூடிய கிரகம். வேத சாஸ்திரங்களுக்கு குருவைச் சொன்னாலும்கூட, சூரியனின் பலம் முக்கியமாக வேண்டும். கம்பராமாயணத்தில் ஆஞ்சநேயரை “சொல்லின் செல்வன்” என்று பட்டம் கொடுத்து அழைக்கின்றார் ராமபிரான். “இவன் யாரிடம் கல்வி கற்றான்? இவ்வளவு அற்புதமாகப் பேசுகின்றானே? இவ்வளவு வினயமாக நடந்து கொள்கிறானே?” என்று வியக்கிறார். இதில் இரண்டு விஷயங்களும் முக்கியம்.

ஒருவன் கல்வியாளனாக இருந்தும், அகம்பாவம் பிடித்தவனாக இருந்தால் அல்லது அந்த கல்வியைத் தவறாகப் பயன்படுத்தினால், அந்தக் கல்வி அவனுக்கும் பயன்படாது, சமூகத்துக்கும் பயன்படாது. அதனால்தான் கற்க கசடற, கற்பவை கற்றபின், நிற்க அதற்குத் தக என்று வள்ளுவர் பாடினார். ஜாதகத்தில் கல்வி நிலையை பார்க்கின்ற பொழுது, அந்தக் கல்வி தருகின்ற பண்பாடு, ஒழுக்கம் போன்றவை அவனுக்கும் சமூகத்துக்கும் பயன்படுகிறதா என்றும் பார்க்க வேண்டும். அதற்கு லக்ன விசேஷம் என்று சொல்லப்படுகின்ற ஜன்ம லக்னம் சிறப்பாக அமைந்து, கல்வி ஸ்தானங்களோடும், புதனோடும், சூரியனோடும் குருவோடும் நல்ல தொடர்பில் இருக்க வேண்டும். ஒருவருடைய கல்வி நிலை என்பது அடிப்படையாக இரண்டாம் இடத்தைப் பொறுத்தது.

அதற்கு கல்வி ஸ்தானம் என்றே பெயர். இந்த இடம் பலம் இல்லாமல் இருந்தால், இதற்கு அடுத்தடுத்த இடங்களான நான்காம் இடம் ஐந்தாம் இடம் 9ஆம் இடம் போன்றவை பலம் பெறுவதற்கு வாய்ப்பில்லை. எனவே, அடிப்படை கல்வி இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். இரண்டாம் இடத்தின் ஆதிபத்திய விசேஷங்களையும், சுபகிரகப் பார்வைகளையும் வைத்து ஒரு முடிவுக்கு வரவேண்டும். அதோடு சம்பந்தப்பட்ட கிரகங்களின் தசாபுத்திகள் சரியான காலத்தில் வருகின்றதா என்பதையும் பார்க்க வேண்டும். நன்கு கல்வி கற்கின்ற ஒருவருக்கு, இடையில் அஷ்டமச்சனி, 6,8,12 தசைகள், ஏழரைச் சனி முதலிய தோஷங்கள் வருகின்ற பொழுது, அவர்கள் படிக்கின்ற கல்வியின் வேகம் மட்டுப்படும் அல்லது கவனத்தை திசை திருப்பும்.

அதோடு, ராகு போன்ற கிரகங்கள் சேர்ந்துவிட்டால், படிக்கின்ற காலத்தில் அவர்கள் தவறான பழக்க வழக்கங்களுக்கு ஆட்பட்டுவிடவும் வாய்ப்புண்டு. சனியும் அவர்களோடு இணைந்துவிட்டால், சொல்ல வேண்டியதில்லை. செவ்வாய் போன்ற கிரகங்களின் இணைப்பு இருக்கின்ற பொழுது, அவர்கள் தேவையில்லாத வம்பு வழக்குகளில் மாட்டிக் கொள்வார்கள்.இதை நாம் பல நேரங்களில் பார்க்கலாம். கல்லூரிக்குப் போகும் மாணவர்களில் சிலர் அடிதடி வம்பு வழக்குகளில் சம்பந்தப்பட்டு, காவல் நிலையங்கள் வழக்குகள் என சந்திப்பதும் உண்டு. அதனால், அவர்கள் படிப்பு கெடுவதுண்டு. இவற்றையெல்லாம் கவனித்து அவர்களை சரியான காலத்தில் நாம் கட்டுப்படுத்த வேண்டும். அதற்கான முயற்சிகளுக்கு ஜோதிடம் ஓரளவு உதவும். கிரகங்கள் சில உண்மையை முன்கூட்டியே உணர்த்தும். அதற்குத் தகுந்தாற்போல், நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரு செடியை நாம் நம் தோட்டத்தில் போடுகின்றோம். அந்தப் பகுதியில் ஆடு மாடுகள் நடமாட்டங்கள் மிக அதிகமாக இருக்கின்றன என்று சொன்னால், நாம் சற்று கூடுதல் செலவு செய்தாவது அந்தப் பயிரைக் காப்பாற்றுவதற்காக வேலி போட வேண்டும் அல்லது வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும். அதைத்தான் நம்முடைய பிள்ளைகள் படிக்கின்ற போதும் நாம் செய்ய வேண்டும். அடுத்து என்ன படிப்பார் என்ற விஷயம். ஒரே ஒரு கிரகத்தை மட்டும் வைத்துக் கொண்டு இவர் இந்தப் படிப்பு படிப்பார் என்பதை நிச்சயமாக சொல்லிவிட முடியாது. பெரும்பாலும், நாம் ஊன்றி கவனித்தால் நம்முடைய பிள்ளைகளின் மனநிலை மற்றும் ஆர்வம் எதில் இருக்கிறது என்பதைப் பார்த்துவிடலாம். இதற்கு ஜாதகத்தை பார்ப்பதைவிட, முதல் நிலையில், அவர்களுடைய நடவடிக்கைகளை பார்க்க வேண்டும். ஒரு உதாரணம் சொன்னால் தெரியும். ஒரு முறை ஒரு மாணவரை, அவரது தாயார், பையன் சரியாகப் படிப்பதில்லை; பல பாடங்களில் மிகவும் குறைந்த மதிப்பெண்களே வாங்குகிறான், எனவே தனிப் படிப்பு (Tution) சொல்லித் தர வேண்டும் என்று ஒரு ஆசிரியரிடம் கொண்டு வந்து சேர்க்கின்றார். அந்த ஆசிரியரும் சிறப்பாக அந்த மாணவருக்கு கல்வி (personal coaching) கற்பிக்கிறார். ஆனால், அந்த மாணவனால் பாடங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. காரணம் என்ன என்று சொன்னால், பாடங்கள் சொல்லித் தருகின்ற பொழுது, அந்த மாணவனின் கவனம் வேறு விஷயங்களில் செல்லுகின்றது. குறிப்பாக, பாடம் சொல்லித்தருகின்ற பொழுது, மூன்றாவது வீட்டில் வானொலியில் (இது 50 வருடங்களுக்கு முன் நடந்த கதை) மிக சப்தமாக கர்நாடக இசை கச்சேரி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும். இவர் பாடம் சொல்லித் தரும் நேரமும், கச்சேரி நேரமும் கிட்டத்தட்ட ஒன்றாக இருக்கும்.

அதை ஒரு பக்கம் காதில் வாங்கிக் கொண்டு பாடம் கவனிப்பவர்கள் உண்டு. ஆனால், இந்த மாணவரை பொறுத்தவரையில் இவருடைய கவனம் முழுக்க அந்தக் கச்சேரியில் இருப்பதோடு, அவருடைய விரல்கள் தொடையில் தாளம் இடுவதையும் பார்த்தவுடன், ஆசிரியர் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார். கணிதம் அல்லது அறிவியல் பாடங்களில் கவனம் இல்லை. இவனுக்கு இசைப் பாடங்களில்தான் கவனம் இருக்கிறது என்று அவருடைய தாயாரிடம் சொல்லி, இவர் எதிர்காலத்தில் நல்ல இசைப்பண்டிதனாக வருவார். அதற்கேற்ற முயற்சிகளையும் ஏற்பாடுகளையும் செய்யுங்கள்’; என்று சொல்ல, அப்படியே அந்த அம்மையார் ஏற்பாடு செய்தார்கள். அவர் இப்பொழுது மிகச் சிறந்த இசைக்
கலைஞராக விளங்குகிறார். அவருடைய ஜாதகத்தில் நிச்சயம் சுக்கிரனுடைய ஆதிக்கம் கூடுதலாக இருக்கும். சந்திர பலமும் அதிகமாக இருக்கும். இதையும் கவனிக்க வேண்டும். ஜாதகத்தில் கல்வி கிரகங்கள் மாணவனின் ஆர்வத்தை சுட்டிக் காட்டுவதை அலட்சியம் செய்து விடக்கூடாது.

 

The post உங்கள் குழந்தைகள் நன்கு படிப்பார்களா? appeared first on Dinakaran.

Tags : Janma Jataka ,Dasapati Buddhi ,Kochara ,
× RELATED ஜோதிட ரகசியங்கள்