×

பிரச்சனைகளை தீர்க்கும் பரிகாரங்கள்

?இரண்டு முதுகலை பட்டம் பெற்ற நான் தனியார் அலுவலகத்தில் பணிபுரிகிறேன். பெற்றோர் நீண்ட நாட்களாக வரன் பார்த்து வருகிறார்கள். ஏதோ ஒரு காரணத்தால் தாமதமாகி வருகிறது. ஜாதகத்தில் தோஷம் ஏதும் இருப்பதாக யாரும் சொன்னதில்லை, எதிர்பார்ப்பும் கூடுதலாக ஏதுமில்லை. ஆயினும் திருமணத்தடை உள்ளது. உரிய பரிகாரம் கூறுங்கள்.
- ஜீவிதா, சென்னை.

உத்திராடம் நட்சத்திரம், தனுசு ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தின்படி தற்போது ராகு தசையில் கேது புக்தி நடந்து வருகிறது. நீங்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது போல் உங்கள் ஜாதகத்தில் தோஷம் ஏதுமில்லை. என்றாலும் 23வது வயதில் வந்த திருமண யோகத்திற்கான காலத்தினை பயன்படுத்திக் கொள்ளாததால் தற்போது 34 வயது வரை திருமணம் நடக்காமல் தடையினைக் கண்டு வருகிறீர்கள். இன்று பலரும் இதே தவறினை செய்கிறார்கள். திருமண யோகத்திற்கான காலத்தினை தவறவிட்டுவிட்டு பின்னர் நாம் நினைக்கும்போது திருமணம் ஆக வேண்டும் என்று எண்ணுகிறார்கள். நாம் நினைக்கும்படிதான் எல்லாம் நடக்கவேண்டும் என்றால் இயலுமா? காலம் இன்னும் கடந்துவிடவில்லை. உங்கள் ஜாதகபலத்தின்படி 9.7.2022 முதல் மீண்டும் திருமணத்திற்கான யோகம் என்பது கூடி வருகிறது. தகப்பனார் வழி உறவு முறையில் சற்று விலகிய சொந்தத்தில் இருந்து வரன் அமைவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமை நாளில் மாங்காடு திருத்தலத்திற்குச் சென்று ஆதிபராசக்தி அன்னையை தரிசித்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அத்துடன் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் அருகிலுள்ள மாரியம்மன் கோயிலில் சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் செய்து ஆலயத்திற்கு வரும் ஒன்பது சுமங்கலிப் பெண்களுக்கு விநியோகம் செய்யுங்கள். இவ்வாறு தொடர்ந்து ஒன்பது வாரங்கள் செய்து வர மூன்று மாதத்திற்குள் வரன் கூடி வருவதோடு திருமணமும் நல்லபடியாக நடந்தேறும். கவலை வேண்டாம்.

?எனக்கு திருமணம் நடந்து 12 வருடம் ஆகிறது. மறுவருடம் பெண் குழந்தை பிறந்து தற்போது ஆறாம் வகுப்பு படித்து வருகிறாள். துணைக்கு ஒரு ஆண் மகவு வேண்டி பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறோம். எங்களுக்கு ஒரு ஆண் வாரிசு உண்டாவதற்கு உரிய பரிகாரம் கூறுங்கள்.
- கலைப்ரியா, மதுரை.

திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, கன்னி லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது சனி தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. உத்திராடம் நட்சத்திரம், மகர ராசி, கன்னி லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் கணவரின் ஜாதகப்படி தற்போது குரு தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. இருவரின் ஜாதக பலத்தின்படி பெண் வாரிசுக்கான அம்சம் சிறப்பாக உள்ளது. தற்போது நடந்து வரும் தசாபுக்தியின் காலம் உங்கள் உடல்நிலையில் பிரசவிப்பதற்கான பலத்தினைத் தராது. சுகப் பிரசவம் என்பதற்கான சாத்தியக்கூறு குறைவு என்பதோடு பிறக்கின்ற குழந்தையின் ஆரோக்யமும் அத்தனை சிறப்பாக இருக்காது. ஆண்-பெண் பேதம் பாராமல் உங்களது மகளையே மகன்போல் எண்ணி வளர்த்து வாருங்கள். மதுரையில் வசிக்கும் நீங்கள் மீனாட்சி அன்னையின் கதையினை அறிந்திருப்பீர்கள். உங்கள் மகளையே ஆண்பிள்ளை போல் வீரம் மிகுந்தவளாக உங்களால் வளர்க்க இயலும். இறைவன் உங்களுக்கு அளித்திருக்கும் வரப்பிரசாதமாக எண்ணி உங்கள் மகளை சீரும் சிறப்புமாக வளர்த்து வாருங்கள். அவர் வளர வளர ஆண் வாரிசு இல்லையே என்ற குறை நீங்கக் காண்பீர்கள். பிரதி மாதந்தோறும் வருகின்ற திருவாதிரை நட்சத்திர நாளில் சிம்மக்கல் பகுதியில் அமைந்திருக்கும் ஆதி சொக்கநாதர் ஆலயத்திற்கு சென்று தரிசனம் செய்து வாருங்கள். மனதில் உள்ள கவலை அகலுவதோடு மகளையும் நல்லபடியாக வளர்த்து அவரை உயர்ந்த நிலைக்கு கொண்டு சேர்ப்பீர்கள்.

?என் மகளுக்கு வயதிற்கேற்ற உடல்வளர்ச்சி இருந்தாலும் மனவளர்ச்சி அத்தனை சிறப்பாக இல்லை. படிப்பும் ஏறவில்லை. எங்கேயாவது வெளியில்
அழைத்துச் சென்றாலும் அடிக்கடி சிரித்துக்கொண்டே இருக்கிறாள். மனநல மருத்துவரை அணுகியும் பலன் இல்லை. என் மகளின் எதிர்கால வாழ்வு சிறக்க உரிய வழி காட்டுங்கள்.
- கவிதா, பெங்களூரு.

ஜென்ம லக்னத்தில் உள்ள கேதுவும், ஜென்ம ராசியில் அமர்ந்திருக்கும் சனியும் இது போன்ற ஸ்திரமற்ற புத்தியைத் தருகிறார்கள். உங்கள் மகளின் ஜாதகப்படி அவளது 26வது வயதில் இருந்து அவருக்கு நல்லகாலம் என்பது பிறக்கிறது. அதுவரை அவரைக் குழந்தை போல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் கடமை ஆகிறது. அவரது ஜாதகத்தைப் பொறுத்த வரை கொடி போல படரும் அமைப்பு உள்ளது. ஒரு கொடியானது நன்கு வளர ஒரு ஊன்றுகோல் எவ்வாறு தேவையோ அதுபோல அவரது வாழ்வு சிறக்க தக்க துணை தேவை. அவளது நான்காம் இடமாகிய மாத்ரு ஸ்தானத்திற்கு உரியவர் குரு பகவான் என்பதால் பெற்ற தாய் ஆகிய நீங்கள்தான் அவருக்கு ஒரு நல்ல குருவாக இருந்து அவரை நல்வழிப்படுத்த இயலும். உங்கள் அருகாமையிலேயே அவரை வைத்துக்கொண்டு அவருக்குப் பிடித்தமான கைத்தொழில் ஒன்றி னை கற்றுக்கொடுங்கள். உங்கள் மகளின் ஜாதகப்படி அவருக்கு விதம் விதமாக சமைக்கின்ற திறமை உண்டு. வித்தியாசமான தின்பண்டங்களை வெகுருசியாக தயாரிப்பதில் வல்லவராகத் திகழ்வார். அவருக்கு விவரம் போதாது என்ற எண்ணத்துடன் சமையலறைக்குள் அனுமதிக்காமல் இருக்காதீர்கள். அடுப்பு பற்ற வைப்பதில் இருந்து எண்ணெய் பலகாரங்களை தயாரிக்கும் வரை அத்தனையிலும் வெகு ஜாக்கிரதையாக செயல்படுவார். அவரது ஜாதக பலத்தின்படி சமையல் கலைக்கு உரிய சனியின் ஆதிக்கம் என்பது வருகின்ற 23.4.2022 முதல் துவங்குகிறது. அது முதல் கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கு சமையல் கலையை கற்றுக் கொடுக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் புள்ளி வைத்தாலே போதும், அவர் அழகாக கோலம் போட்டு முடித்துவிடுவார். சமையல் கலையில் அவரது திறமை மெருகேறி புகழ் பெறுவார். சனிக்கிழமை தோறும் அருகிலுள்ள கிருஷ்ணர் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு வாருங்கள். கீழ்க்கண்ட ஸ்லோகத்தினை மகளுக்கு மெதுவாக கற்றுத்தாருங்கள். தினமும் காலையில் 18முறை சொல்லி வர பழக்கப்படுத்துங்கள். கண்ணபிரானின் அருளால் உங்களது கவலை தீருவதோடு மகளின் வாழ்வும்
நல்லபடியாக அமையும்.
“வனமாலீ கதீசார்ங்கீ சங்கீ சக்ரீ சனந்தகீ
மந் நாராயணோர் விஷ்ணு: வாசுதேவோ அபிரக்ஷது.”

?அறியாத வயதில் தெரியாமல் செய்த தவறால் என் வாழ்க்கையை இழந்து தவிக்கிறேன். வீட்டிற்குத் தெரியாமல் காதல் திருமணம் செய்து கொண்ட எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன் என் கணவர் என்னைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். எங்கு சென்றார் என்று தெரியவில்லை. பிறந்த வீட்டிற்கும் என்னால் செல்ல இயலவில்லை. நான் ஒரு தொழிற்சாலையில் வேலைக்குச் சென்று சம்பாதித்து என் குழந்தையை காப்பாற்றி வருகிறேன். நான் மறுமணம் செய்துகொண்டால் வாழ்க்கை நல்லபடியாக அமையுமா? எனக்கு ஒரு நல்ல வழி காட்டுங்கள்.
- கோவை வாசகி.

உங்கள் ஜாதகத்தில் கடுமையான களத்ர தோஷம் உள்ளது. நீங்கள் மறுமணம் செய்துகொண்டாலும் இனிமையான வாழ்க்கை அமைவதற்கான வாய்ப்பு இல்லை. அதே நேரத்தில் உங்கள் ஜாதகத்தில் சுயதொழிலைக் குறிக்கும் ஜீவன ஸ்தானமும், பிள்ளையைக் குறிக்கும் புத்ர ஸ்தானமும் உங்களுக்குத் துணை நிற்கிறது. மனதில் இருக்கும் வீண் குழப்பங்களை விரட்டிவிடுங்கள். உங்கள் குழந்தையை நல்ல முறையில் வளர்த்து வாருங்கள். மறுமணம் பற்றிய யோசனையை விடுத்து உங்கள் உத்யோகத்தில் முழு கவனத்தையும் செலுத்துங்கள். நீங்கள் பணிசெய்து வரும் தொழிற்சாலை சார்ந்த விஷயங்களை நன்கு கற்றுத் தெரிந்துகொள்ளுங்கள். அத்துடன் உங்களுடன் பணிபுரியும் சகதொழிலாளர்களுடன் நல்லதொரு உறவினை வளர்த்துக் கொள்ளுங்கள். அவர்களது துணையுடன் வெகுவிரைவில் சொந்தமாக தொழில் தொடங்கும் வாய்ப்பும் பிரகாசமாய் உள்ளது. உங்களது 32வது வயது முதல் தனலாபம் சிறப்பாக உள்ளதால் குழந்தையை நன்றாகப் படிக்க வைத்து சிறப்பான வாழ்க்கையை அமைத்துத் தருவீர்கள். உங்கள் குழந்தையின் வளர்ச்சி உங்கள் மனக்குழப்பத்தைப் போக்கி முழுமையான சந்தோஷத்தைத் தரும். வாழ்க்கையில் நீங்கள் சந்தித்த ஏமாற்றமே உங்கள் சாதனைக்கான முதல்படியாக அமையும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் உங்கள் திறமை மீது நம்பிக்கை வைத்து உழைத்து வாருங்கள். உங்களைப்போல் ஆதரவின்றி தவிக்கும் பல பெண்களுக்கு வாழ்வளிக்கும் அளவிற்கு சாதித்துக் காட்டுவீர்கள். ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமை நாளில் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு மனமுருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். தினமும் காலையில்
ஏழு முறை கீழ்க்கண்ட ஸ்லோகத்தினைச் சொல்லி விஷ்ணுதுர்கையை வழிபட்டு
வாருங்கள். வாழ்க்கை வளம் பெறும்.

“ஸர்வஸ்வரூபே ஸர்வேசே ஸர்வசக்தி ஸமந்விதே
பயேப்யஸ் த்ராஹிநோ தேவி துர்க்கே தேவி நமோஸ்துதே.”

?கூட்டுக்குடும்பமாக காய்கறி வியாபாரம் செய்து வரும் என் குடும்பத்தினர் மீது உறவினர்கள் மிகவும் பொறாமையாக இருக்கிறார்கள். எங்கள் வளர்ச்சி அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. இவர்களிடமிருந்து எங்களைக் காப்பாற்றிக் கொள்ள என்ன செய்ய வேண்டும்.
- முத்துக்குமார், நாகை மாவட்டம்.

சித்திரை நட்சத்திரம், கன்னி ராசியில் பிறந்த உங்களுக்கு தற்போது நல்ல நேரம் நடந்துகொண்டிருக்கிறது. அடுத்தவர்களின் எண்ணங்களைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? கடமையைச் செய்பவனுக்கு கவலை எதற்கு? உங்கள் ஜாதகத்தில் தொழில் ஸ்தானத்தில் சூரியனும், செவ்வாயும் ஒன்றாக இணைந்திருக்கிறார்கள். அதனால் நீங்கள் அடுத்தவர்களால் நமக்கு பாதிப்பு வந்துவிடுமோ என்று அநாவசியமாக அஞ்சத் தேவையில்லை. குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக வீட்டில் இருக்கும் நாளில் சுதர்ஸன ஹோமம் செய்து கொள்ளுங்கள். ஹோமம் செய்து முடித்தபின் மூன்றாவது நாள் ஹோம பஸ்மத்தை (சாம்பலை) தனியாக எடுத்து நன்றாக வடிகட்டி அதனை விபூதியாக குடும்பத்தினர் அனைவரும் தினசரி நெற்றியில் இட்டுக்கொள்ளுங்கள். ஆண்கள் வெள்ளியில் ஆன தாயத்து செய்து அதற்குள் இந்த ஹோம பஸ்மத்தை நிரப்பி அதனை அரைஞாண் கயிறு அல்லது கழுத்தினில் கட்டிக் கொள்ளலாம். கும்பகோணத்தில் உள்ள சக்ரபாணி ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு அர்ச்சனை செய்து கொள்வதும் நல்லது. தினசரி காலையில் கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லி சுதர்ஸனப் பெருமாளை வழிபட்டு வர
உங்கள் கவலை தீரும். திருஷ்டி தோஷம் என்பதும் காணாமல் போகும்.
“ஹூங்கார பைரவம் பீமம் ப்ரணதார்தி ஹரம் ப்ரபும்
 ஸர்வதுஷ்ட ப்ரசமநம் ப்ரபத்யேஹம் ஸூதர்சநம்”.

திருக்கோவிலூர்
ஹரிபிரசாத் சர்மா

Tags :
× RELATED ஏன்? எதற்கு ?எப்படி ?