×

ஓடோடி வருவாயே ஸ்ரீ ரங்கநாதா!

வைகுண்ட ஏகாதசி என்பது இந்துக்கள் கடைபிடிக்ககூடிய மிகவும் புனிதமான விரதமாகும். இந்த நாளில், வைகுண்ட துவாரம் திறக்கப்படுகிறது. ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், மோட்சம் செல்வார்கள். எனவே, இது முக்கோடி ஏகாதசி மற்றும் ஸ்வர்க ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு டிசம்பர் 30, 2025 அன்று வைகுண்ட ஏகாதசி வருகிறது. பத்ம புராணத்தின்படி, விஷ்ணு முரன் என்ற அரக்கனுடன் சண்டையிட்டார்.20

சண்டையின் நடுவில், ஓய்வெடுக்கவும், அசுரனைக் கொல்ல ஒரு புதிய ஆயுதத்தை உருவாக்கவும் ஒரு குகைக்குச் சென்றார். விஷ்ணு ஓய்வெடுக்கும் போது, ​​அசுரன் முரன் குகையில் அவனைக் கொல்ல முயன்றான். இருப்பினும், அவனது முயற்சிகள் தோல்வியடைந்தன. விஷ்ணுவின் உடலில் இருந்து வெளிப்பட்ட பெண் வடிவிலான சக்தி, அவனைக் கொன்றது. விஷ்ணு அவளை ஏகாதசி என்று அழைத்தார். அவர் ஏகாதசிக்கு ஒரு வரத்தையும் கொடுத்தார், ஏகாதசி நாளில் விரதம் இருப்பவர்களுக்கு மோட்சம் கிடைக்க வேண்டும் என்று அவள் கேட்டாள். விஷ்ணு அவளுக்கு அந்த வரத்தை அருளினார்.

வைகுண்ட ஏகாதசி தோன்றிய கதை

வைகுண்ட ஏகாதசி, பரமபத வாசல் திறப்புக்கு ஒரு கதை உண்டு. மது, கைடபன் என்ற இரண்டு அசுரர்கள். நான்முகனிடமிருந்து வேதத்தை அபகரித்துச் சென்றனர். நான்முகன் திகைத்து பகவான் நாராயணனிடம் முறையிட்டார். திருமால் குதிரை முகத்துடன் ஹயக்ரீவராக அவதரித்தார் அசுரர்களை வதைத்து, வேதங்களை மீட்டார். அப்போது மனம் திருந்திய இருவரும் தங்களுக்கு முக்தியளிக்குமாறு திருமாலிடம் வேண்டினர். மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசி அன்று, மது – கைடபர்களுக்காக வைகுண்டத்தின் வடக்கு வாசலைத் திறந்து அவ்விருவரையும் வைகுண்டத்துக்குள்ளே அழைத்துச் சென்றார். வைகுண்ட வாசலைத் திறந்து மது கைடபருக்கு முக்தியளித்த ஏகாதசி என்பதால், வைகுண்ட ஏகாதசி என்று இந்நாள் அழைக்கப்படுகிறது. மார்கழி மாத வைகுண்ட ஏகாதசியில் “பரமபதவாசல்’’ என்ற அந்த வைகுந்த துவாரத்தின் வழியாக நாம் பகவானை சென்று சேவிக்கிறோம். பரமபதத்தில் உள்ள நுழைவு வாசல் வழியாக திருமாமணி மண்டபத்திலே தேவி பூதேவி நீளா தேவியோடு அமர்ந்திருக்க கூடிய பெருமாளிடம் சென்று, பேரின்பத்தைப் பெற்று, நித்ய கைங்கரியம் செய்யும் வாய்ப்பை பெறுகிறோம் என்று பொருள்.

எத்தனை பெருமை தெரியுமா?

ருக்மாங்கத மன்னன் தனது நாட்டில் அனைவரும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கும்படி செய்தாராம். அதனால் மக்கள் அனைவரும் பக்தியிலும், ஞானத்திலும் சிறந்து, நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் என்று நாரத புராணம் கூறுகிறது. அம்பரீஷ மன்னன் ஏகாதசி விரதம் கடைபிடித்து அடைந்த நன்மைகளை ஸ்ரீ பாகவத புராணம் விவரிக்கிறது. பகவானின் சக்கரத்தைப் பெற்றான் அம்பரீஷ மன்னன். மகாவிஷ்ணு கூர்மமாகவும், தன்வந்த்ரியாகவும், மோகினியாகவும் அவதாரம் எடுத்து பாற்கடலில் அம்ருதத்தை வெளிப்படுத்தியதும் ஏகாதசியன்றே. இப்படி ஏகாதசி விரத பெருமையைச் சொல்லிக் கொண்டே போகலாம். பெற்ற தாயைவிட ஆவன செய்யும் விரதம் வைகுண்ட ஏகாதசி விரதம். பெற்ற தாய் உடலை மட்டுமே காப்பாற்றுவாள். ஏகாதசி விரதம் ஆன்மாவைக் காப்பாற்றும்.

மது கைடபர் கேட்ட வரம்

“நாங்கள் முக்தியடைந்த இந்நாளில், யாரெல்லாம் முறையாக விரதமிருந்து துளசி மாலை சமர்ப்பித்து உன்னைத் தரிசனம் செய்கிறார்களோ, அவர்கள் அனைவருக்கும் நீ முக்தியளிக்க வேண்டும்!’’ என்று மது கைடபர்கள் வேண்ட அதை ஏற்று அருள் புரிந்தார் திருமால். அதனால்தான் வைகுண்ட ஏகாதசியன்று, அனைத்துப் பெருமாள் கோயில்களிலும் வடக்குப் புறத்தில் உள்ள வைகுண்ட வாசல் (பரமபத வாசல்) திறக்கப்படுகிறது. வைகுண்டத்தின் வாசலைத் திறந்து மது கைடபர்களுக்கு முக்தி அளித்தது போல், அந்த வைகுண்ட வாசல் வழியாக வந்து தன்னை சேவிப்போர் அனைவருக்கும் திருமால் நல்ல சௌக்கியமான வாழ்வைத் தந்து நிறைவில் முக்தியளிப்பார்.

அசுரர்களுக்கும் மோட்சம் தந்த ஏகாதசி

திருமால் ஹயக்ரீவராக அவதரித்து, மது கைடபர்களை அழித்து வேதங்களை மீட்டுத் தந்தார். மனித உடல் அமைப்பில், வெள்ளை குதிரை முகத்துடன் திருமால் எடுத்த இந்த அவதாரம் தசாவதாரங்களுக்கு முற்பட்டது. மதுகைடபர்கள் பெருமாளிடம் தங்களுக்கு வைகுண்டம் தருமாறு பிரார்த்தனை செய்தனர். அவர்களிடம் பகவான், “மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி அன்று உங்களுக்கு மோட்சம் தருகின்றேன்’’ என்று வாக்களித்தார். மார்கழி மாச ஏகாதசி அன்று வைகுண்டத்தின் வடக்கு வாசல் கதவைத் திறந்து மது கைடபர்களை உள்ளே அனுமதித்தார். மது கைடபர்களுக்கு வைகுண்டம் தந்த ஏகாதசி என்பதால் “வைகுண்ட ஏகாதசி”.

நீண்ட விழா

வைகுண்ட ஏகாதசி வைணவ மரபில், குறிப்பாக திருவரங்கம் முதலான கோயில்களில் திருமொழி திருவாய்மொழி உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, நம்மாழ்வாரின் பாசுரங்களின் மயங்கிய எம்பெருமான், அவருக்கு தன்னுடைய பரமபதத்தைத் தருகின்ற விழாவாக இந்த விழா கொண்டாடப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி 22 நாட்கள் நடக்கக்கூடிய பெருவிழா. பொதுவாக கோயில்களில் பிரம்மோற்சவம் என்பதுதான் பெருவிழாவாக 10 நாட்களுக்குக் குறையாமல் நடைபெறும். ஆனால் 22 நாள் நீண்ட விழாவாக நடைபெறுவது வைகுண்ட ஏகாதசி திருவிழா.

அத்யயன உற்சவம்

மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியற்காலை, பிரம்ம முகூர்த்த நேரம் என்று சொல்வார்கள். மார்கழிமாதத்தில் வளர்பிறை பிரதமை தொடங்கி, 20 நாட்கள் பகவானுக்கு உற்சவம் செய்ய வேண்டும் என்று ஸ்ரீ பாஞ்ச ராத்திரம் ஸ்ரீ பிரஸன்ன ஸம்ஹிதையில் விதிக்கப்பட்டுள்ளது. பிரதமை முதல் தசமி முடிய பத்து நாள் வேதங்களையும் ஸ்தோத்திரங்களையும் பாடி உற்சவம் செய்ய வேண்டும். அந்த பத்துநாள் உற்சவத்திற்கு “அத்யயன உற்சவம்” என்று பெயர். அத்யயனம் என்றால் வேதங்களை பாராயணம் செய்தல் என்று பொருள்.

மோட்ச உற்சவம்

அடுத்து வளர்பிறை ஏகாதசி (வைகுண்ட ஏகாதசி) முதல் பஞ்சமி முடிய 10 நாட்கள் நடத்த வேண்டிய உற்சவத்திற்கு “மோட்ச உற்சவம்’’ என்று பெயர். அத்யயன உற்சவம் பகலில் செய்ய வேண்டிய உற்சவம். மோட்ச உற்சவம் இரவில் செய்யவேண்டிய உற்சவம். இந்த உற்சவங்களில் பகவானை மண்டபத்தில் எழுந்தருளப் பண்ணி உற்சவங்களை நடத்த வேண்டும். ஏகாதசியன்று பகவத் சந்நதிகளில், வேதங்களை ஆரம்பித்து, பத்து நாட்கள் தொடர்ச்சியாக நடத்தி, பத்தாவது நாளில் பூர்த்தி செய்ய வேண்டும் என்பது ஆகமங்களில் சொல்லப்பட்ட விதி. திருமங்கையாழ்வார் காலம் வரையிலும் இந்த விதிப்படியே நடந்தது.

பெருமாள் தமிழ் கேட்க வேண்டும்

திருமங்கை ஆழ்வார் காலத்தில் வேதங்களையும் ஸ்தோத்ரங்களையும் தவிர, வேறு எதுவும் பகவான் முன் சமர்ப்பிக்கப்படவில்லை. திருமங்கை யாழ்வார்தான் இந்த உற்சவத்தின் அமைப்பை முதன்முதலில் மாற்றியவர். திருமங்கையாழ்வார், தம்முடைய தலைவராகிய நம்மாழ்வாரின் பாசுரங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். நம்மாழ்வாரின் நான்கு பிரபந்தங்களையும், நான்கு வேதங்களுக்குச் சமமாகக் கொண்டால், அதற்கு ஆறு அங்கங்களை ஆறு பிரபந்தங்களாக அருளியவர் திருமங்கை ஆழ்வார். வேதங்களைப் போலவே தன்னுடைய திருச்செவிகளால் எம்பெருமாள், தமிழ் வேதமான நம்மாழ்வாரின் திருவாய்மொழியைக் கேட்கச் செய்ய வேண்டும் என்ற உறுதி கொண்டார். இதற்கான ஒரு நல்ல நாளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.

திருநெடுந்தாண்டகம்

தன்னுடைய ஜன்ம நட்சத்திரமான கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்தில், திருவரங்கன் முன்னால், தன்னுடைய ஆறாவது பிரபந்தமான திருநெடுந்தாண்டகம் என்கின்ற பிரபந்தத்தை தேவகானத்தில் இசைத்தார் திருமங்கையாழ்வார். பெருமாளும் ஆழ்வாரின் தமிழை இயலும் இசையும் அபிநயமுமாகக் கேட்டு மிகவும் உள்ளமுகந்தார். சாமவேதம் கேட்டுப் பழகிய திருச்செவிகளுக்கு, உள்ளம் உருக்கும் தமிழ் எல்லையற்ற மகிழ்ச்சியைத் தந்தது. திருமங்கையாழ்வாருக்குப் பரிசு தர எண்ணினார்.

தமிழுக்கு வேத சாம்யம்

“என்ன வரம்?’’ என்று பெருமாள் கேட்க, ஆழ்வாரின் (நம்மாழ்வார்) தமிழுக்கு “வேத ஸாம்யம் தரவேண்டும்’’ என்று கேட்க, “அது என்ன?’’ என்று பெருமாளும் திரும்பக் கேட்க, “தேவரீர் வைகுண்டத்தில் எப்பொழுதும் சாமகானம் கேட்டுக் கொண்டிருப்பீர். பூலோக வைகுந்தமான திருவரங்கத்தில் மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசி அன்று உற்சவத்தின் போது வடமொழி வேதத்தோடு தமிழ் வேதமாகிய திருவாய் மொழியையும் சமமாகக் கேட்டருள வேண்டும். திருவாய்மொழித் திருநாளாக இந்த விழா நடக்க வேண்டும்’’ என்று கேட்க, பகவானும் அப்படியே தந்தருளினார். எனவே இந்தத் திருவிழாவுக்கு ஆதாரம் திருமங்கை ஆழ்வார் பாடிய திருநெடும் தாண்டகம். இதனை சாத்திர நூல் என்று சொல்வார்கள். வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவின் தொடக்கமாக எல்லா ஆலயங்களிலும் திருநெடுந்தாண்டகம்தான் முதல் நிகழ்வாக இருக்கும். இந்த ஆண்டு திருவரங்கம் தொடக்கமாக எல்லா ஆலயங்களிலும், 19.12.2025 திருநெடும்தாண்டகம் தொடங்கியது.

மோஹினி அலங்காரம்

பகல் பத்து பத்தாம் திருநாள் அன்று பகவானுக்கு மோஹினி அவதார அலங்காரத்தைச் செய்வார்கள். இதற்கு “நாச்சியார் திருக்கோலம்” என்றும் பெயர். பெருமாள் நாச்சியாராக அலங்கரித்துக்கொண்டு கருட மண்டபம் வந்து காட்சி தருவார். இந்த ஆண்டு இந்த நிகழ்வு 29.12.2025 நடைபெறுகிறது. அடுத்த நாள் காலை 30.12.2025 அதிகாலை 4:30 மணி அளவில் கோயிலுக்கு வடக்கே உள்ள சொர்க்கவாசல் (பரமபத வாசல்) திறக்கப்படுகிறது. சொர்க்கவாசல் வழியாக பெருமாள் புறப்பாடு நடக்கும் பெருமாளோடு அடியவர்களும் பரமபதவாசலைக் கடப்பார்கள். சில கோயில்களில் சொர்க்கவாசல் இருக்காது. பெருமாளை நேரடியாகச் சேவிப்பது, சொர்க்கத்தில் சேவிப்பது போலதான்.

திருவரங்கமும் பரமபதவாசலும்

கலியுகத்தில் நம்மாழ்வாருக்கு முன்பு வைகுண்டம் செல்வார் யாருமில்லாமையாலே வைகுண்டக் கதவு மூடியே கிடந்தது. ஆழ்வார் திருவாய்மொழி அருளிச் செய்து வீடு பெற்றார். அதன் பின்பே சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஆழ்வார் வைகுந்தம் செல்லும் நிகழ்ச்சியை நடத்திக்காட்ட திருமங்கை யாழ்வார் வைகுண்ட ஏகாதசி உற்சவத்தை ஏற்படுத்தினார். வைகுண்ட ஏகாதசியன்று பெருமான் பரமபதத்திலிருந்து வந்து, நம்மாழ்வாரை எதிர் கொண்டழைத்துக் கொண்டு, பரமபதம் சென்று, தானும், தேவிமார்களும் நித்ய முக்தரும் அமர்ந்திருக்கும் திருமாமணி மண்டபத்திலே, ஆழ்வார் கையில் தாளம் கொடுத்து திருவாய்மொழி பாடக் கேட்பது ஐதீகம். இதனை அடிப்படையாகக் கொண்டு. திருமங்கையாழ்வார் காலம் முதல் சொர்க்க வாசலில் நம்மாழ்வார் எழுந்தருளி, திருவாய்மொழிப் பாடலைத் தொடங்கிய பின்பே பரமபத கதவு திறப்பு நடக்கிறது.

நம்மாழ்வார் மோட்சம்

வைகுண்ட ஏகாதசி அன்று மூலவர் ரங்கநாதப் பெருமாள் முத்தங்கி சேவையிலும், (முத்துக்கள் பதித்த பட்டாடை) உற்சவரான நம்பெருமாள் ரத்னாங்கி சேவையிலும் காட்சி தருவார்கள். வைகுண்ட ஏகாதசி நாள் இரவு முதல் ராபத்து தொடங்கும். இந்த நாட்களில் ஸ்ரீ ரங்கம் பரமபதவாசல் மதியம் 1 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். ஜனவரி மாதம் ஐந்தாம் தேதி ராப்பத்து உற்சவம், ஏழாம் நாள், கைத்தல சேவை நடைபெறும். அன்றைய தினம் பெருமாள் அதிகமான திருவாபரணங்கள் சாத்திக் கொள்ள மாட்டார். பெருமாள் அர்ச்சகர்களின் திருக்கரங்களில் எழுந்தருளி திருமாமணி மண்டபத்தின் மேல் குறட்டுக்கு வந்து, நம்மாழ்வாருக்குச் சேவை சாதிப்பார். இதை திருக்கைத்தல சேவை என்பார்கள். அன்று ஆழ்வார், நாயகி பாவத்தில் கங்குலும் பகலும் பாசுரம் சேவிப்பதால், ஆழ்வாருக்கு மோஹினி அலங்காரம் செய்யப்பட்டிருக்கும். ஜனவரி 6-ஆம் தேதி திருமங்கையாழ்வாரின் வேடுபரி உற்சவம் நடைபெறும். எம்பெருமாள் குதிரை வாகனத்தில் வலம் வருவார். ஜனவரி மாதம் 8-ஆம் தேதி தீர்த்தவாரியும், 9-ஆம் தேதி நம்மாழ்வார் மோட்சமும் நடைபெறும். இந்த நாட்களில் திருவரங்கத்தில் பரமபதவாசல் திறந்திருக்கும்.

எப்படி விரதம் இருப்பது?

விரதங்களுக்குள் தலையாயது ஏகாதசி விரதம். அனைத்து ஏகாதசிகளிலும் சிறப்பானது வைகுண்ட ஏகாதசி. எட்டு வயது முதல் எண்பது வயது வரை மனிதர்கள் ஏகாதசி விரதம் இருக்க வேண்டும் என்று ஸ்ம்ருதி வாக்யம் கூறுகிறது. வைகுண்ட ஏகாதசியன்று, வைகுண்டவாசல் வழியாகச் சென்று பெருமாளைத் தரிசிப்பது மிகவும் முக்கியம். முடிந்தால் ஸ்ரீ ரங்கம் செல்லலாம் அல்லது அருகிலுள்ள பெருமாள் கோயில் சென்று வழிபடலாம். சில கோயில்களில் பரமபதவாசல் இருக்காது. அந்த கோயில்களில் பெருமாளைச் சேவித்தாலே போதும். அன்று தண்ணீர்கூட உட்கொள்ளாமல் (நிர் ஜலமாக) விரதம் இருப்பது மிகவும் சிறப்பானதாகும். அவ்வாறு விரதம் இருக்க இயலாதவர்கள், பால், பழம் என எளிய பலகாரங்களை உட்கொள்ளலாம். மறுநாள் துவாதசியன்று காலை பூஜை செய்து பெருமாளின் தீர்த்தத்தை உட்கொண்டு, அதன்பின் அகத்திக்கீரை, சுண்டைக்காய், நெல்லிக்காய் போன்றவற்றை உணவோடு உட்கொண்டு விரதத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு விரதத்தை நிறைவு செய்வதற்கு, துவாதசி பாரணை என்று பெயர். அன்றும் பகலில் உறங்காமல் இருந்து மாலை சூரியன் மறைந்த பின்தான் உறங்க வேண்டும்.

செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததும்

ஏகாதசிக்கு முதல் நாள் தசமி அன்று பகலில் ஒரு வேளை மட்டும் உணவை சாப்பிட வேண்டும். ஏகாதசி நாளில் முழுமையாகப் பட்டினி கிடக்க வேண்டும். இரவு உறங்காமல், திருமால் சரிதங்களையும், ஆழ்வார் பாசுரங்களையும் படிக்கலாம், கேட்கலாம். ஏகாதசியன்று அன்னதானம் செய்யக் கூடாது. பகலில் தூங்கக் கூடாது. இரவில் பஜனை செய்ய வேண்டும். முடியாதவர்கள் பகவானுடைய நாமங்களைச் சொல்ல வேண்டும். ஏகாதசி தினத்தில் கோபம் கொள்ளக் கூடாது. பிறரை தூஷித்தல், கடுமையான வார்த்தை சொல்லுதல், சந்தனம் பூசுதல், வெற்றிலை போடுதல், மாலை அணிதல், கண்ணாடி பார்த்தல் முதலானவை கூடாது.

எஸ். கோகுலாச்சாரி

Tags : Ododi ,Sri Ranganatha ,Hindus ,Dwaram ,
× RELATED புராணங்களில் அறக் கதைகள்