×

செவ்வாய் தோஷம் நீக்கும் குறுக்குத்துறை முருகன் கோவில்.

இந்தத் தலத்தில் 2½ அடி உயரத்தில் முருகப்பெருமான் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். வெகு காலத்திற்கு முன்பு இங்குள்ள கருவறை, ஒரு கற்பாறையாக இருந்துள்ளது. இந்தப் பாறையில் ஒரு சிற்பி, தனது உள்ளத்தில் நெடுநாளாக தீட்டி வைத்திருந்த முருகப்பெருமானின் திருவுருவை வடித்திட நினைத்தார். அவரது எண்ணப்படியே தன் முயற்சியால் முருகனின் உருவத்தை அந்தப் பாறையில் உருவாக்கினார். இது புடைப்பு சிற்பமாகும். அழகிய இத்திருவுருவம் வெயிலிலும், மழையிலும் கவனிப்பார் இன்றி கிடந்தது. ஒரு சமயம் அந்த வழியாக வந்து ஒரு மூதாட்டி, இந்தத் திருவுருவைக் கண்டார். முருகனின் திருவுருவை கண்டதும் உளம் மகிழ்ந்த அந்த மூதாட்டி, முருகன் திருவுருவுக்கு ஆட்பட்டு அங்கேயே தங்கியிருந்து இறை பணி செய்யத் தொடங்கினார்.

தினமும் முருகன் திருவுருவை நீராட்டி, மலரிட்டு வழிபட்டு வந்தார். அவரை தொடர்ந்து பலரும் வழிபடத் தொடங்கினர். பக்தர்கள் கூட்டம் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக பெருகியது. இதனைத்தொடர்ந்து அந்த இடத்தில் முருகப்பெருமானுக்கு ஒரு நிழலிடம் அமைக்கப்பட்டது. வழிபாடு தொடர்ந்து சிறப்புடன் நடைபெற்றது. பின்னர் இத்திருக்கோவில் திருவாவடுதுறை ஆதீன ஆளுகைக்கு வந்தது. இந்த ஆலயத்தில் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று இன்று இக்கோவில் சீரோடும், சிறப்போடும் விளங்குகிறது. திருநெல்வேலி நகரில் இருந்து தெற்கே 2 கிலோமீட்டர் தொலைவில் இந்தத் திருக்கோவில் அமைந்துள்ளது. ஊரின் நடுவில் நான்கு வீதிகள் உள்ளன. இதுவே ஆலயத்தின் தேரோடும் வீதியாகும். மேல ரதவீதியும், வடக்கு ரதவீதியும் சந்திக்கும் பகுதியில் கோவில் அமைந்திருக்கிறது.

கோவிலின் முகப்பில் ராஜகோபுரம் சிறிய வடிவில் எழிலுடன் விளங்குகிறது. அதன் வழியே கோவிலுக்குள் நுழைந்தால் மணி மண்டபம் உள்ளது. இங்கு பலிபீடம், மயில் கொடி மரம், அலங்கார மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தை தாண்டி உள்ளே நுழையும்போது தென்புறம் விநாயகரும், வட புறம் முருகனும் காட்சி தருகின்றனர். அவர்களை வணங்கி உள்ளே சென்றால் மகா மண்டபம். அந்த மண்டபத்தின் நடுவில் மயிலும், நந்தியும், தென்புறம் விநாயகரும், வாயிற் காப்போனும் உள்ளனர். கருவறை வாசலில் இருபுறமும் வாயிற்காவலர்களும், வடபுறம் நெல்லையப்பர், காந்திமதி அம்மாள், ஐம்பொன் வடிவில் நடராசர், சமய குரவர்கள் நால்வர், விநாயகர், படைத்தேவர் முதலிய திருமேனிகள் உள்ளது. தென்புறம் உள்ள அறையில் முருகனின் உலாத்திருமேனி உள்ளது. இதற்கு அடுத்து இடைநாழி. அதற்கு அடுத்து கருவறை அமைந்து உள்ளது.

இந்த ஆலயத்தின் அருகில் காணப்படும் கற்பாறைகளில் இருந்து இறைவனின் உருவங்கள் உருவாக்கப்படுவது வழக்கமாக இருக்கிறது. அதன்படியே திருச்செந்தூர் கருவறை இறைவனின் திருமேனி இங்குள்ள கல்லில் வடிக்கப்பட்டது. எனவே திருச்செந்தூருக்கு செலுத்தும் காணிக்கைகளை இந்தத் திருத்தலத்தில் செலுத்தலாம் என்பது ஐதீகம். தினமும் நண்பகல் உச்சி காலத்தில் திருக்குட பூஜையும், இரவு பள்ளியறை வழிபாடும் நடக்கிறது. செவ்வாய் தோஷம் உடையவர்கள், செவ்வாய்க்கிழமை அன்று ஆற்றில் நீராடி, முருகப்பெருமானை வலம் வந்து வழிபட வேண்டும். இப்படி 11 செவ்வாய்க்கிழமைகள் தொடர்ந்து வழிபட்டு வந்தால், செவ்வாய் தோஷம் நீங்கி திருமண வாழ்க்கை கூடும் என்பது ஐதீகம். இதேபோல் இந்தக் கோவிலுக்கு வந்து சஷ்டி விரதம் மேற்கொண்டால், துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகும் என்பதும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

Tags : Crossroads Murugan Temple ,
× RELATED இயற்கை வடித்த லிங்கம்