×

விழுப்புரம் புதிய பஸ்நிலையத்தில் இரவில் கஞ்சா போதையில் உலாவரும் இளைஞர்கள் ரகளை: பயணிகளை தாக்குவதால் அச்சம்

விழுப்புரம்: விழுப்புரம் புதியபேருந்து நிலையத்தில் கஞ்சாபோதையில்  இரவுநேரத்தில் உலாவரும் இளைஞர்கள் பயணிகளை வழிமறித்து தாக்குவதால்  அச்சமடைந்துள்ளனர். இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் திக், திக் பயத்துடன் செல்லும்  நிலை ஏற்பட்டுள்ளது. இதனைபோக்க காவல்துறை ரோந்தினை தீவிரப்படுத்தியும்,  சந்தேக நபர்கள் பேருந்து நிலையத்தில் சுற்றித்திரிந்தால் நடவடிக்கை  எடுக்கவும் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தின் தென்மாவட்டங்களை  இணைக்கும் மிகப்பெரிய பேருந்து நிலையமாக விழுப்புரம் புதிய பேருந்து நிலையம்  உள்ளது. இங்கிருந்து ஆந்திரா, கேரளா போன்ற வெளிமாநிலங்களுக்கும்,  திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கும் பேருந்து  வசதிகளை கொண்டிருப்பதால் தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.  பண்டிகை, முகூர்த்த நாட்களில் வழக்கத்தைவிட பயணிகள் கூட்டம் அதிகரித்து  காணப்படும். குறிப்பாக, இரவு நேரங்களில் நீண்டதூர பயணம்செல்லும் பொதுமக்கள்  இப்பேருந்துநிலையத்திற்கு வருகின்றனர். ஆனால், இரவு நேரங்களில் போதிய  போலீஸ் பாதுகாப்பு என்பது இப்பேருந்துநிலையத்தில் கேள்விக்குறியாகவே உள்ளது. முன்பு  வழிப்பறி, நகைதிருட்டு போன்ற சம்பவங்கள் நடந்துவந்த நிலையில் தற்போது  கஞ்சாபோதையில் உலாவரும் இளைஞர்கள் பயணிகளை வழிமறித்து தாக்குதல், பெண்  பயணிகளிடம் சீண்டல் போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறுவதாக அன்மைக்காலமாக  புகார்கள் எழுந்துள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் பொது இடங்கள், பேருந்து  நிலையம், பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கஞ்சா  விற்பனை அதிகரித்ததாக புகார் எழுந்தது. இதுவரை 50க்கும் மேற்பட்ட  கஞ்சா வியாபாரிகளை போலீசார் கைது செய்துள்ளனர். இருப்பினும், கஞ்சா  விற்பனையை முற்றிலும் ஒழிக்கமுடியவில்லை. இதனால், புதியபேருந்து நிலையத்தில்  இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. வெளியூர் செல்லும் பயணிகள்  அச்சத்துடனும், திக், திக் பயத்துடனும் இரவு பயணங்களை மேற்கொள்ளும்நிலைக்கு  தள்ளப்பட்டுள்ளனர். எனவே, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை  எடுத்து பயணிகளின் அச்சத்தை போக்க புதிய பேருந்து நிலையத்தில் போலீசாரின்  ரோந்து பணியை தீவிரப்படுத்திடவும், சமூகவிரோத செயல்களை தடுக்க வேண்டுமெனவும்  கோரிக்கை வைத்துள்ளனர்.அதிகாலையில் தாக்கப்படும் செய்தித்தாள் ஊழியர்கள்விழுப்புரம்  புதிய பேருந்துநிலையத்தில் அதிகாலை 3 மணியளவில் செய்தித்தாள்கள்  வேனில் கொண்டுவரப்பட்டு பிரித்து அங்கிருந்து மற்ற ஊர்களுக்கும்,  கடைகளுக்கும் அனுப்பப்படுகிறது. இவ்வாறு 2, 3 மணிக்கு வேனில் வரும்  டிரைவர்கள், ஊழியர்களை கஞ்சா போதையில் உலாவரும் இளைஞர்கள் பிடித்து தாக்கும்  சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த மாதம் ஒரு சம்பவம் நடந்த நிலையில் நேற்று  முன்தினம் செய்தித்தாள்களை கொண்டுவந்த வேன் ஓட்டுநரை கஞ்சா இளைஞர்கள்  சரமாரியாக தாக்கியுள்ளனர். செய்தித்தாள் ஊழியர்களுக்கே உரிய பாதுகாப்பில்லாத நிலையில்,  பயணிகளின் நிலையை எண்ணிப்பார்த்து காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும்  என்று கோரிக்கை வைத்துள்ளனர்….

The post விழுப்புரம் புதிய பஸ்நிலையத்தில் இரவில் கஞ்சா போதையில் உலாவரும் இளைஞர்கள் ரகளை: பயணிகளை தாக்குவதால் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Vilappuram ,Ganjabhodhi ,Vilappuram Pudiyabiruddhi station ,Udalur ,Vilapuram ,New Bastion ,
× RELATED கிளியனூரில் வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்த இளைஞர் கைது