×

மேலப்பாவூர் தர்மராஜர்

குலதெய்வங்களும் கிராம தேவதைகளும் கிராம எல்லைகளில், வயல்வெளிகளில், ஆற்றங்கரைகளில் கோயில்கொண்டுள்ளார்கள். இந்த தெய்வங்கள் கிராம மக்களையும் பயிர் பச்சைகளையும் நோய் நொடியிலிருந்தும் துர்தேவதைகளிலிருந்தும் காத்துவருகின்றனர்.

நவராத்திரி மற்றும் வருடாந்தர பண்டிகைகளின்போது பெரிய திருத்தலங்களுக்குச் செல்ல இயலாத கிராம மக்களுக்கு கிராமக் கோயில்களை நம் முன்னோர் ஏற்படுத்திக் கொடுத்து பெருந்தொண்டாற்றி உள்ளார்கள். பல கிராமக் கோயில்களில் சாதாரண மக்கள் அசாதாரண வைபவத்தோடும் பக்தி சிரத்தையோடும் உற்சவங்கள் நடத்துவதைக் கண்டு மகிழ முடிகிறது. கிராம தேவதைகளுக்கான பல கோயில்களில் வாயில் நுழையாத மந்திரங்களை உச்சரித்து வழிபாடு செய்யும் தேவையின்றி அந்தந்த கிராமத்தில் பேசும் வழக்கு மொழியிலேயே பூஜைகளை ஆற்றிக் கொள்ளும் வசதிகளை நம் முன்னோர் பாரம்பரியமாக ஏற்படுத்தியுள்ளார்கள்.

பல கிராமக் கோயில்களில் பெருங்கோயில்களில் வழிபடப்படும் தெய்வ விக்கிரங்கள் காணப்படுவதில்லை. சில அம்மன் கோயில் களில் வேப்ப மரத்தின் கீழ் ஒரு கல்லை நட்டு பக்தி சிரத்தையோடு வழிபாடு நடத்துவதைக் காண முடிகிறது. சில குலதெய்வங்களை பீடங்களில் எழுந்தருளச்செய்து வேத மந்திரங்களோடு வழிபடும் வழக்கமும் உள்ளது. அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள மேலப்பாவூர் தர்மதேவதை தர்மராஜா பீடம் ஒரு சிற்றாற்றின் கரையில் அமைந்துள்ள சிறிய வழிபாட்டுத்தலம்.

மேலப்பாவூர் தர்மதேவதை பீடம்: இங்கு சிலா மூர்த்திகள் எதுவும் கிடையாது. நான்கு பீடங்களும் பீடங்களுக்கு மேல் திறந்த வெளியும்தான் வழிபாட்டுத் தலம். இந்த நான்கு பீடங்களில் தென்மேற்கு மூலையில் இருப்பது தர்மராஜர் பீடம். அதற்கு அடுத்தபடியாக நடுவில் அமைந்திருப்பது தர்மிணீ என்ற தர்ம தேவதா பீடம். வடமேற்கு மூலையில் இருப்பது சௌபாக்கிய தேவதை ஸ்ரீமகாலட்சுமி பீடம். ஈசான திசை அல்லது வடகிழக்கு திசையில் இருப்பது தர்மராஜ பார்ஸ்வ தேவருக்கான பீடம். ஸ்ரீதர்மராஜர் என்ற மூர்த்தி மகாவிஷ்ணு என்றே வழிபடப்படுகிறது.

ஸ்ரீதர்ம தேவதை என்ற தர்மிணீ ஸ்ரீதர்மராஜ சுவாமியின் பெண் வடிவம். இந்த தேவதை கௌரி, லட்சுமி என்ற இருதெய்வங்களும் இணைந்திருப்பது. அதனால் இவள் தர்மவர்த்தினி அறம்வளர்செல்வி என்றழைக்கப்படுகிறாள். சௌபாக்கிய தேவதையான ஸ்ரீமகாலட்சுமி ஸ்ரீமஹாவிஷ்ணுவின் பத்தினி. ஸ்ரீதர்மராஜ பார்ஸ்வதேவர் சிவனும் விஷ்ணுவும் இணைந்த அம்சமாக காணப்படுகிறார். சிவனும் விஷ்ணுவும் இணைந்து தெய்வாம்சத்தை ஸ்ரீதர்மசாஸ்தா என்று அழைப்பது மரபு.

மூலக் கோயிலுக்கு வெளியே தென்புறம் மாடவடிவத்தில் இரண்டு உருவ வடிவங்கள் அமைந்துள்ளன. இவற்றில் வடபுறம் பெரியதாக உள்ளது ஆண் பரிவார சிவகணம். தென்புறம் சிறியதாக உள்ளது பெண் பரிவார சிவகணம்.இவைகள் பொதுவாக ருத்ர சக்தி பரிவார கணங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இங்கு பூஜையின் போது கோவிலை தூய்மை செய்து கோலமிடுவர். மேலே கூரைக்கு பதிலாக அமைக்கப்பட்ட கம்பிகளுக்கு மேல் தார்ப்பாய் அல்லது தென்னை ஓலைகளால் கொஞ்சம் ஈசான்ய திசையில் மட்டும் திறந்தவெளி இருக்குமாறு அமைத்துப் போடுவர்.

பூஜை செய்பவர்கள் பூஜைக்கு முன்பாக கர்பாலயத்தை சுத்தம் செய்து புண்ணியாகவசனம் செய்த பின்பு பூஜை ஆரம்பமாகும். பூஜை சாமான்கள் இரண்டு பெட்டிகளில் வைக்கப்பட்டு ஒரு வீட்டில் இருக்கும். பூஜை செய்பவர்கள் அந்தப் பெட்டிகளை கோயிலுக்கு கொண்டு வருவார்கள். அந்தப் பெட்டியிலிருந்து குதிரை, வாள், மற்ற சாமான்களை கோயிலுக்குள் எடுத்துச் சென்று அலங்காரம் செய்து தர்மதேவதை பரிவாரங்களை வேண்டுவார்கள். பிறகு, பூஜை ஆரம்பமாகும். தர்மதேவதையின் குதிரை, வாள், மற்ற பீடங்களிலும் கும்பத்திலும் கூர்ச்சம் வைத்து சுவாமிகளை ஆவாஹனம் செய்வார்கள்.

இந்த கோயிலில் கர்ப்ப கிரகத்திற்குள் பெண்கள் அனுமதி இல்லை. ஆகையால், கர்ப்பகிரகத்திற்கு வெளியில் பூஜை செய்யும் தம்பதிகள் சங்கல்பம் செய்துகொள்வார்கள். பிறகு, ஆண் நபர் உள்ளே சென்று பூஜை செய்வார். தர்மதேவதை சந்நதியின் கிழக்கே இருப்பது பலிபீடம். உள்ளே அமைந்துள்ள பீடங்களில் கோலமிட்டு அதன்மேல் இரண்டு வாழையிலை போட்டு அதன்மேல் பலகையை வைக்கிறார்கள்.

பலகையின் மேல் கூர்ச்சம் செய்து ஸ்ரீதர்மராஜா பீடத்தில் பச்சை, நீல நிற வஸ்திரங்களை வைத்து விபூதியில் ஸ்ரீதர்மராஜா யந்திரம் எழுதி அதன்மேல் நடுப்பகுதியில் வெள்ளிக் குதிரையை வைக்கிறார்கள். ஒரு மோதிரத்தை குதிரையின் நெற்றியில் வைத்து குதிரைக்கு வஸ்திரம் சுற்றுகிறார்கள். சிறப்பான வேண்டுதல் அல்லது பிரார்த்தனை இருந்தால் விபூதி தட்டிற்கு அடியில் சந்தனத்தில் எந்திரம் எழுதி வைக்கிறார்கள். ஸ்ரீதர்மிணீ என்ற தர்ம தேவதைக்கு தாம்பாளத்தில் குங்குமத்தால் யந்திரம் எழுதி சிவப்பு மற்றும் நீல நிற ஆடைகளை அலங்காரமாக சாத்துகிறார்கள்.

சௌபாக்கிய தேவதையான  மகாலட்சுமி பீடத்தில் ஒரு சிறிய தாம்பாளத்தில் மஞ்சள் பொடி பரப்பி அதில் ஸ்ரீமகாலட்சுமி யந்திரம் எழுதி அதன்மேல் பீதாம்பரத்தை அலங்காரமாக வைக்கிறார்கள். பார்ஸ்வதேவரின்பீடத்தில் தாம்பாளத்தில் விபூதியில் யந்திரம் எழுதி வெள்ளை அல்லது கருநீல வஸ்திரம் அலங்காரமாக அமைக்கிறார்கள்.

சுவாமிக்கு நிவேதனமாக பாயாசம் மற்றும் அம்மனுக்கு நிவேதனமாக ஹரிதான்னம், பார்ஸ்வ தேவப்ரீதியான  பானகம் ஆகியவற்றை மிகத் தூய்மையான வகையில் பாக சாலையில் தயார் செய்து புண்ணியாகவசனம் செய்த பிறகு பகிர்ந்து வைத்துக் கொள்கிறார்கள். சுவாமி நிவேதனம் எதிலும் உப்பு சேர்ப்பதில்லை. ஏலம் முந்திரிப்பருப்பு பச்சை கற்பூரம் ஆகியவற்றை நைவேத்தியம் ஆனபிறகு பாகசாலைக்கு பாயச பாத்திரங்களைக் கொண்டு வந்து பிறகு போட்டுக் கொள்வர். அம்பாளுக்கு ஹரிதான்னம் மிகவும் கொஞ்சமாக உப்பில்லாமல் தயார்
செய்கிறார்கள்.

பெரிய பூஜையன்று மாலை பூஜை செய்த தம்பதிகள் தங்கியிருக்கும் இடத்தில் காவல் தெய்வத்தின் பூஜாரி பூஜை செய்பவர்களோடு கூட ஒரு ஆடும் வைத்து மூன்று முறை அவர்களை சுற்றி கொண்டு வருவார். பின்பு பூஜை செய்த தம்பதிகள் குளித்துவிட்டு சஹஸ்ரநாம பாராயணம் செய்வர். நாம ஜபம் முடிந்தவுடன் பூஜை முடிவடையும். பிறகு அவர்கள் உணவு உட்கொள்ளலாம்படிப்பாயசம்: இங்கு குலதெய்வம் உள்ளவர்கள் வேண்டுதல் செய்துகொண்டு படிப்பாயசம் நிவேதனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இங்கு ஒரு விசேஷம் உள்ளது. கோவிலில் நியமத்தோடு தயாரிக்கும் பாயசத்தை நேராக பக்தர்களின் கையில் கொடுக்காமல் சிற்றாற்றின் படிகளை சுத்தம் செய்து அதில் ஊற்றுகிறார்கள். மேல் படியில் ஊற்றும் பாயசத்தை கீழ்படியில் நின்று ஏற்று பக்தர்கள் அருந்துகிறார்கள். முன்பெல்லாம் அந்த சிற்றாற்றில் நிறைய நீர் ஓடியபோது படிப் பாயசத்தை அதன் படிக்கல்லை சுத்தமாகக் கழுவிட்டு ஊற்றுவார்கள். பாயசத்தை கீழ்ப்படிகளில் கையால் ஏந்தி வாங்கி குடித்து வந்தார்கள்.

அப்போதெல்லாம் சுடச்சுட அந்த படிகளில் விடும்பொழுது அந்த நதிநீரில் கையை நனைத்துக் கொண்டு பாயசத்தை கையால் வாரிக் குடித்த காலம் ஒன்று இருந்தது. ஆனால் தற்போது நீர்வரத்து மிகவும் குறைந்து விட்டதால் இப்போதெல்லாம் மேல் படியில் ஒரு சொட்டு பெயருக்கு விட்டுவிட்டு கீழ்ப்படியில் நின்று கொண்டு பாத்திரத்தில் வாங்கி குடிக்கிறார்கள்.

மேலப்பாவூர் கிராமம் தென்காசி நகரில் இருந்து சுமார் எட்டு கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைந்துள்ளது. தென்
காசியிலிருத்து திருநெல்வேலி போகும் வழியில் வரும் பாவூர்சத்திரத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் உள்ளே போனால் மேலப்பாவூர் கிராமம் வரும். இது விவசாய பூமி. மேலப்பாவூர் நல்ல காற்றோட்டமாக கோடையிலும் சிலுசிலுவென்று எப்பொழுதும் குளுமையாக இருக்கக்
கூடியது. அதோடு இது ஒரு செம்மண் பூமி.

இங்கு சென்று வழிபட்டு வருபவர்கள் தங்கள் வீட்டுக் கோலங்களில் செம்மண் இடுவதற்கு அங்கிருந்து மண்ணை எடுத்து வருவது வழக்கம்.
சித்ரா நதி: வாய்க்காலின் பெயர் சித்ரா நதிக் கிளை வாய்க்கால். மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள குற்றாலம், பழைய குற்றாலம், ஐந்தருவி, செண்பகாதேவி அருவி ஆகிய அருவிகளின்  நீர் சித்ரா நதியாகப் பாய்கிறது. அதன் கிளை நதியே இந்த வாய்க்கால். இந்த வாய்க்காலின் கரையை ஒட்டி தர்மதேவதை கோயிலும் அதன் பக்கத்தில் பெருமாள் கோயிலும் உள்ளன.

மேலப்பாவூரிலிருந்து தர்மராஜர் என்ற பக்தர் மகாப் பெரியவாளை தரிசிக்க காஞ்சிபுரம் சென்றார். தரிசனத்திற்காக அவர் வரிசையில் நின்ற போது மகா பெரியவர் தர்மதேவதை சம்பந்தமாக விவரம் கேட்க வந்த தர்மராஜர் என்பவரைக் கூப்பிடுங்கள் என்றார். மகா பெரியவர் அவரிடம் ஒரு ஓலைச்சுவடியை கொடுத்து இதன்படி பூஜை செய்யுங்கள் என்றார். அதன் பிரகாரம் பூஜை செய்துகொண்டு வருகிறார்கள்.

1987ம் ஆண்டு பிரசன்னம் பார்த்ததில் இந்த கோவிலில் 140 ஆண்டுகளாக பெரிய பூஜை நடக்கவில்லை. வருடத்திற்கு ஒருமுறை பெரிய பூஜை செய்யுங்கள் என்று சொன்னார். அன்றிலிருந்து இன்றுவரை பெரிய பூஜை செய்து கொண்டு வருகிறார்கள். இந்தக் கோயிலில் விக்ரக வழிபாடு இல்லாததால் பூஜையன்று மட்டுமே கோவில் திறந்திருக்கும். 2013 ஆம் ஆண்டு முதல் தர்மதேவதா சமிதி ஆரம்பிக்கப்பட்டு சமிதி மூலம் மகா பூஜை நடத்தப்பட்டு வருகிறது. மகா பூஜையைத் தவிர தனிப்பட்ட முறையில் குலதெய்வக்காரர்கள் விருப்பப்பட்டால் அவர்கள் சமிதியிடம்முன்கூட்டியே அனுமதி பெற்று பூஜைசெய்யலாம்.

ராஜி ரகுநாதன்

Tags : Melappavoor Dharmarajar ,
× RELATED திருக்குறுங்குடி அழகிய நம்பி ராயர் பெருமாள் ஆலயம்