×

வக்கிரக தோஷங்களை தூளாக்கும் வெள்ளரிமலை ஆத்மலிங்கேஸ்வரர்

சேலம்-அரூர் மெயின்ரோட்டில் வலசையூரில் இயற்கை எழில்சூழ்ந்து விளங்கும் காட்டூர்குன்று வெள்ளரிமலை தற்போது ஆத்மகிரிமலை என்ற பிரசித்தி பெற்ற கிரிவலப் பாதையாக உருவெடுத்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் திரண்டு வந்து, இங்கு அருள்பாலிக்கும் ஆத்மலிங்கேஸ்வரரை தரிசித்து மனநிறைவுடன் செல்கின்றனர். தமிழ்க்கடவுள் முருகன் மீது அளவற்ற பற்று கொண்ட, வைர வியாபாரி ஒருவரின் கனவில், மதம் கொண்ட யானை வந்து துரத்தியது. அவர் பதறியடித்து ஓடிச் சென்று ஸ்படிக லிங்கத்தை பற்றிக் கொண்டார். அன்று முதல் எப்படியாவது ஸ்படிக லிங்கத்தை தனது இருப்பிடத்திற்கு அருகில் எங்காவது வைத்து வழிபட வேண்டும் என்பது மனதுக்குள் ஏற்பட்ட உந்துதல்.

ஆனால் லிங்கத்தை நீ மட்டும் வழிபடாமல், அனைத்து மக்களும் வழிபடும் வகையில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்ற ஒளிக்கீற்று அவருக்குள் ஊடுருவியது. இதையடுத்து வலசையூர் வெள்ளரிப்பட்டி மலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது தான், தற்போது 15 அடி அகலம், பத்தடி உயரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கும் ஆத்மலிங்கேஸ்வரர் சிற்பம். இதற்கான ஆதார பீடம் 18 நாகங்களை கொண்டு அமைக்கப்பட்டிருப்பது வேறு எங்கும் இல்லாத சிறப்பு. பண்டைக்கால சிற்ப சாஸ்திர ஆகமவிதிப்படி ஆண்கள், பெண்கள், திருநங்கைகளை குறிக்கும் வகையில் பிரம்மபாகம், விஷ்ணுபாகம், ருத்ரபாகம் என்று சிற்பத்தின் அமைப்பு நுட்பமாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆத்மா இருக்கும் இடமே ஆலயம்.

இதன் குறியீடாக இங்கு அருள்பாலிக்கிறார் ஆத்மலிங்கேஸ்வரர். நாம் பார்க்கும் அனைத்து உயிரினங்களையும் இறைவனாக காண்பது தான், ஆத்மலிங்க  தரிசனம். பூமி உருவாவதற்கு முன்பே தோன்றியது ஸ்படிகம். அதன் பிறகே பிரியல், வைடூரியம், கோமேதகம் என்று ஒவ்வொரு ரத்தினங்களாக உருவானது. இப்படி சிறப்பு பெற்ற ஸ்படிகத்தில் ஆத்மலிங்கேஸ்வரர் காட்சியளிப்பதும் கூடுதல் சிறப்பு. லிங்கம் என்பது கிரகங்களின் சக்தி மற்றும் வானில் இருந்து உருவாகும் இடிமின்னல் போன்றவற்றை தாங்கி எழும் ஜோதி என்பது ஐதீகம். இதை கருத்தில் கொண்டு சூரியன், சந்திரன் ஒளியானது கோபுர கலசத்தின் வழியாக லிங்கத்தின் மீது விழும் வகையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் நவக்கிரக சிற்பங்களும், லிங்கத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. ராகு, கேது, நாகதோஷம் உள்ளவர்கள் ஆத்மலிங்கேஸ்வரரை தரிசித்து பால் அபிஷேகம் செய்தால், தோஷங்கள் அனைத்தும் விலகி ஓடும். மனமுருகி தொடர்ச்சியாக வழிபட்டால் பித்ரு சாபம் என்று சொல்லப்படும் நமது முன்னோர்கள் செய்த பாவ, சாப தோஷங்கள் கூட நீங்கும். கணவன்மனைவி சகிதமாக இங்கு வந்து அபிஷேகங்கள் செய்தால் தோஷங்களில் இருந்து விடுபட்டு நீண்ட ஆயுள் பெறலாம். இதன் பலனாக நமது முன்னோர்களால் ஏற்பட்ட கர்மதோஷங்கள் விலகும் என்பதும் ஆண்டாண்டு காலமாய் இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை. அனைத்து விசேஷநாட்களிலும் இங்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. பவுர்ணமி நாளில்  ஆயிரக்கணக்கான பக்தர்கள், கிரிவலம் வருகின்றனர். பிரதோஷம், அமாவாசை, நாகபஞ்சமி என்று கிரகங்கள் சார்ந்த நாட்களில் இங்கு நடக்கும் பூஜைகள், வழிபாடுகளால் மலைச்சால் எங்கும் பக்தி மணம் வீசிக்கொண்டே  இருக்கிறது.

Tags : Vellarimalai Atmalingeswarar ,
× RELATED வாசிப்பும் வழிபாடுதான்…