×

சுற்றத்துடன் வாழ்க!

‘குடும்பம்’ என்று கூறினோம் என்றால் கூட்டுக் குடும்பத்தில் உறவினர்கள் ஒன்றுபட்டு ஒற்றுமையாகக் கூடி வாழ்வதையே அவ்வாறு அழைத்தனர். மனங்கள் வேற்றுமை காணாது ஒருவர்க்கு ஒருவர் விட்டுக் கொடுத்து ‘நம்முடையது’ என்ற எண்ணத்தை நெஞ்சில் விதைத்து வாழ்ந்தனர். அதில் பேரின்பம் அடைந்தனர். தற்காலத்தில் அவ்வாறு கூடி வாழ்வதென்பது முடியாத காரியம்.

தொழில் எங்கு பிணைக்கப்பட்டிருக்கிறதோ அங்கே சென்றாக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இத்தகைய தருணத்தில் முக்கிய பண்டிகை நாட்களில், குலதெய்வ வழிபாட்டில்  சுற்றத்துடன் இணைந்துகொண்டாடினோம் என்றால் அடுத்த தலைமுறையினர் பண்பட்ட நிலமாக வளத்துடன் வாழ்வதற்கு வழி அமைக்கும்.

சிவப்பிரகாச சுவாமிகள் கவிபாடுவதில் வல்லவர். திருமண விழாவில் பங்கேற்றார். அங்கிருந்தோர் மத்தியில் சுவாமிகளே மணமக்களை வாழ்த்தி ‘‘உமையம்மை உங்களைக் காப்பாளாக! கண்ணுதல் உங்களைக் காப்பாராக! அறத்துடன் வாழ்க!'' என்று பாடினார். அதில் நகைச்சுவையும் உள்ளுறையும். பொதிந்துள்ளது. வைகுண்டத்தை இருப்பிடமாகக் கொண்ட திருமகளும். கைலாயத்தை தன்னிடமாகக்கொண்ட மலைமகளும் இருவரும் சந்திக்கின்றனர். அவ்வாறு கூடி நிற்கும் போது அவர்கள் என்ன உரையாடியிருப்பர் என்பதை மனமகிழ பாடியுள்ளார்.

கவுரி கமலாய் அரன் இரந்த சோறி(இ)து வெனக்
கமலை மண் கண்டே(ன்) னெ(ன)னக்
காளையொ(ஒ)ன்றே அரற்கெனமாடு மேய்த்ததைக்
கட்டி(இ)டையனாரோ எனச்
சிவ(ன்)னெ(ஒ)ருவர் தூதென்ன அத்தூது சென்றகதை
செப்பிலொரு பாரத(ம்)மெனச்
சேரோடு திருடினான் அரனெனக் கட்டுண்ட

 செய்திநாம் அறிவோமென
அவையில் நடமாடினா னரனென்ன அவ்வாடல்
அரவமறி யாதோவென
ஆலமுதை யுண்டனன் அரவென்ன மண்ணுண்ட
அதனையறி யோமோவென
விவரமொடு மலைமகளு மலர்மகளு மிவ்வாறு
விளையாடு மிவர்கள் துணையாம்
மேவி வரு புத்ர மித்திர களத் திரருடன்
மேன்மேலு மிக வாழியே!

பார்வதி தேவியானவள் தன் அண்ணனின் (கோவிந்தன்) மனைவி இலக்குமியை கண்டு, தாமரைமலரில் வாழ்பவளே! சிவன் பிச்சை எடுத்துக்கொண்டு வந்த சோறு  இவ்வளவுதான் பார் என்றாள். (தன் வறுமையைப் புலப்படுத்த) இலக்குமி. தேவியே ! சிவனார் சோற்றையாவது கொண்டு வந்தார். எந்நிலை இன்னும் தாழ்ந்தது! நான் சோற்றை எங்கே கண்டேன். நான் மண்ணைத்தான் உணவாகப் பார்த்தேன் என்றாள். (திருமால் மண்ணை உண்டவன் என்பதை உணர்த்துகிறாள் பார்வதி: உணவாவது சரி விடு. வாகனம் ஓர் எருது மட்டுமே உள்ளது என்றாள்.

இலக்குமி : ‘‘அப்படி என்றால்’’ மாட்டை மேய்த்து இட்டும் கோனார் யார்? என்று வியப்புடன் கேட்டாள் தன் கணவனுக்கு ஒரு மாடுகூடச் சொந்தம் இல்லையே!
பார்வதி: சிவபெருமான் ஒருவனுக்கு (சுந்தரமூர்த்திநாயனார்) தூதராகச் சென்றார்.இலக்குமி : உமாதேவியே ! உன் அண்ணன்  கண்ணபிரான் தூதுபோன வரலாற்றைச் சொன்னால் அது ஒரு பாரதக்கதையாக சொல்லிக்கொண்டே போகலாம் என்று பெருமூச்சு விட்டாள்.

பார்வதி : ஸ்ரீதேவி! பொறுப்பாக வைத்திரு என்று (சிவன்) நீலகண்டர் ஒப்படைத்த ஓட்டைத் திருடினார் என்று மொழிந்தாள்.
இலக்குமி : உலகைக்காக்கும் உமையம்மையே! ‘‘திருட்டுக் குற்றத்துக்காகக் கண்ணன் உரலில் கட்டப்பட்ட செய்தியை நாம் அறிவோம் என விடையிறுத்தாள்.

பார்வதி: புருஷாகரம் உடையவரே! ‘‘கொஞ்சமும் வெட்கமில்லாமல் சபையில் (கூறினாள் கூத்தாடியவர் சிவபெருமான்! என இயம்பினாள்.)
இலக்குமி: மலையரசனின் மகளே! கண்ணன் ஆடிய கூத்து காளிங்கனாகிய பாம்புக்குத் தெரியும். அத்துடன் குடம் தூக்கிப்போட்டு ஆடு குடக் கூத்தும் அறிந்தவன் தெரியுமா என்றாள்.

பார்வதி : பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமனின் திருமகளே! சிவபெருமான் ஆலகால விடத்தை உண்டான் என்றாள்.
இலக்குமி: சிவகாமி ‘‘கண்ணன் மண்ணை உண்ட செய்தியை அறிய மாட்டாயோ ! என்று மறுமொழி கூறினாள். இவ்வாறு பேசி விளையாடும் தன்மையையுடைய சிவகாமியும் இலக்குமியும் அருளுதலால் பெறக்கூடிய மக்கள் நண்பர்கள் மனைவியர் ஆகியவருடன் சிறந்து வாழ்வீராக!இப்படி இரு பெண்டீர் தங்கள் கணவனுடைய பெருமையைக் கூறினர். இதில் எல்லா செயல்களும் சிவனும் திருமாலும் ஒன்றுபோல மாய விளையாட்டை செய்துள்ளனர்.

ஹரியும் சிவனும் ஒன்று. இதனை சைவ, வைணவர் என்ற பிரிவில்லாமல் பரம்பொருள் ஒன்று. இந்த ஜீவன் சரீரத்தை துறந்து சுத்த ஆன்மாவாக பரம்பொருள் திருவடி அடைய வேண்டும் என்பதற்காக சுற்றமுடன் (சுற்றத்துடன்) கூடி வாழ்ந்து ஏற்றத்தாழ்வின்றி மகிழ்ந்து இருப்பதே சிறப்பு.

-பொன்முகரியன்

Tags :
× RELATED தாயின் உயர் தகுதி