×

என்ன சொல்கிறது, என் ஜாதகம்?

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

?என் பேத்தியின் எதிர்காலம் எப்படி உள்ளது?  தாய் தந்தைக்கு யோகம் உண்டா? இவளுக்கு தம்பி பிறக்க யோகம் உண்டா?
- S. R. , திருச்சி.

உங்கள் பேத்தி பிறந்தது - புரட்டாசி மாதம் - சதயம் நட்சத்திரம் - கும்ப ராசி - தனுசு லக்னம். பூராடம் சாரம். ராகு தசை சூரிய புத்தி நடக்கிறது. ஆயுசு ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. இவள் பிறந்த பின் வீட்டிற்கு யோகம் உண்டு. தோஷம் ஏதுமில்லை. ஒன்பதாம் இடத்தில் செவ்வாய் மற்றும் குரு இருப்பதால் தந்தைக்கு யோகத்தை தரக் கூடிய ஜாதகம்.

வீடு மற்றும் மனை வாங்கும் யோகம் உண்டு. பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். ஆண் லக்னத்தில் பிறந்திருப்பதாலும் மூன்றாமிடமும் ஆண் ராசியாகவே வருவதாலும் கண்டிப்பாக தம்பி உண்டு. முருகனுக்கு வேண்டிக் கொள்ளவும். முடிந்தால் சுவாமிமலை சென்று முருகனுக்கு அபிஷேகம் செய்து விட்டு வருவது நன்மையைக் கொடுக்கும்.

?இத்துடன் எனது தம்பி மகனுடைய ஜாதகத்தை அனுப்பியுள்ளேன். அவர் ஒரு மாற்றுத் திறனாளி. அவருக்கு எதிர்காலம் நன்றாக இருக்குமா? திருமணம் பற்றியும் கூறவும்.
-  வேல்முருகன் திருநெல்வேலி.

அவர் பிறந்தது ஆனி மாதம் - உத்திரட்டாதி நட்சத்திரம் - மீன ராசி - ரிஷப லக்னம் - ரோகிணி சாரம். அவருக்கு
இப்போது புதன் தசையில் செவ்வாய் புத்தி நடக்கிறது. அவருக்கு ப்ரஸ்ணம் பார்க்கும் போது வந்திருக்கும் லக்னம்: மிதுனம். ரிஷப லக்னம் மீன ராசி என்பதால் மிகுந்த சேவை மனப்பான்மை கொண்டவர். மிகச் சிறந்த அறிவு கொண்டவர். கடினமான சூழ்நிலையிலும் தமது புத்தி நுணுக்கத்தால் சமாளிப்பவர். அவருடைய ஜாதகப்படி அவருக்கு இதுதான் கடைசி ஜென்மமாகும். இப்போது அவருக்கு நல்ல காலம் பிறந்திருக்கிறது.

கண்டிப்பாக திருமணம் நல்ல முறையில் நடைபெறும். குல தெய்வத்தின் கிருபையும் - முன்னோர்கள் ஆசிகளும் உண்டு. தோஷம் எதுவுமில்லை. பரிகாரம் எதுவும் தேவையில்லை. திருமணம் செய்யும் காலகட்டம் கனிந்து விட்டது. வரும் பெண் சொந்தமில்லை - அசல். ஒரே பெண்ணாக இருக்க மாட்டாள். நல்ல கல்வி - நல்ல வேலையுடன் கூடிய பெண்ணாக வருவாள். மேற்கு திசையிலிருந்து பெண் வருவாள். வரும் நவம்பர் மாதத்திற்குள் திருமணம் முடியும். எதிர்காலம் சிறப்பாக இருக்கும். அருகிலிருக்கும் திருச்செந்தூர் ஆலயத்தில் எழுந்தருளி இருக்கும் சத்ரு சம்ஹார மூர்த்திக்கு வேஷ்டி அணிவித்து அர்ச்சனை செய்து விட்டு வரவும்.

?எனக்கு வயது 64 ஆகிறது. எனது பிற்காலம் எப்படி இருக்கும்? மேலும் எங்கள் வீட்டில் அனைவரது பிறந்த தேதிகளும் 8 அல்லது 17 ஆக உள்ளது. அதனால் ஏதும் தோஷம் உண்டா?
-  K P A, சிவகாசி.

துர்முகி வருஷம் - ஐப்பசி மாதம் - ரேவதி நட்சத்திரம் - மீன ராசி - ரிஷப லக்னம் - ரோகினி சாரம். தற்போது உங்களுக்கு ராகு தசையில் சுக்கிர புத்தி நடக்கிறது. ஆயுசு ஆரோக்யம் சிறப்பாக உள்ளது. தற்போதைய நேரம் மிகவும் சிறப்பாக உள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அதிர்ஷ்டமான யோகமான நேரம் வந்திருக்கிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பொருளாதாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் அகலும். வீடு மனை சார்ந்த விஷயங்
களில் இருந்து வந்த மந்த நிலை மாறும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

வழக்குகளில் சாதகமான நிலைஉண்டாகும். எட்டாம் எண் உங்கள் குடும்பத்தில் அதிகமாக சம்பந்தப்பட்டிருப்பதை கண்டு மிகவும் யோசிக்க வேண்டியதில்லை. உங்கள் மொத்த குடும்பமுமே அதிர்ஷ்டத்தை நம்பாமல் உழைப்பை நம்புபவர்கள். எனவே இதைப்பற்றி கவலை கொள்ள வேண்டாம். அடுத்து வரும் சந்ததிகளும் இதே எண்ணிலேயே பிறப்பார்கள். தினமும் மகாலட்சுமி வழிபாடு செய்து வாருங்கள். மாற்றங்கள் வந்து சேரும்.

?எனது மகளுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? ஏதேனும் தோஷம்
உள்ளதா? பரிகாரங்கள் என்ன?
-  S. R, தஞ்சாவூர்

உங்கள் திருமகள் பிறந்தது மார்கழி மாதம் - அசுவினி நட்சத்திரம் - மேஷ ராசி - கடக லக்னம் - பூசம் சாரம். தற்போது அவருக்கு 25 பூர்த்தியாகி உள்ளது. சூரிய தசையில் செவ்வாய் புத்தி நடக்கிறது. மிகமிக அனுகூலமான காலகட்டத்தில் இருக்கிறார். திருமண வேளை வந்து விட்டது. அதிகபட்சம் இவ்வருடம் ஜூன் மாதத்திற்குள் திருமணம் முடிவாகும். வரும் வரன் சொந்தம் கிடையாது. அசல். நல்ல கல்வி - நடுத்தர உயரம் - மாநிறம். அரசு சார்ந்த தொழிலில் இருப்பார்.

மிகவும் அனுசரணையாக நடந்து கொள்வார். மனதிற்கு ஏற்ற நல்ல வரன் அமையும். குழந்தை பாக்கியம் உண்டு. திருமண வாழ்க்கையில் நல்ல மகிழ்ச்சி ஏற்படும். சப்தம ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சனி இருப்பதை நினைத்து கவலை கொள்ள வேண்டாம். சப்தம ஸ்தானத்தில் செவ்வாய் உச்சமாக இருப்பதும் - அஷ்டம ஸ்தானத்தில் சனி ஆட்சியாக இருப்பதும் நன்மையை கொடுக்குமே தவிர கெட்டதைக் கொடுக்காது. திருமணஞ்சேரி சென்று பரிகாரம் செய்து வந்தால் தடைகள் நீங்கும். நோயுற்று வாழும் ஏழைகளுக்கு தங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள்.

?சமீபத்தில் இறந்த என் மகனின் மரணம் மிகவும் எம்மை பாதித்து விட்டது.  அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
- S J, திண்டிவனம்.

அம்மா, உங்கள் மகனின் ஜாதகத்தை அனுப்பி வைத்துள்ளீர்கள். முறைப்படி பார்த்தால் இறந்து போனவர்களுக்கு ஜாதகம் பார்க்கக் கூடாது. அது சம்பந்தமாக ப்ரஸ்ணம் பார்த்தபோது வந்த லக்னம்: கன்னி. உங்கள் மகனுடைய மரணம் என்பது ஜாதகப்படி நிகழ்ந்த ஒன்றே. வேறேதும் தோஷங்களோ அல்லது பாவமோ ஏதும் இல்லை. மேலும் அவரது மரணத்திற்குக் காரணம் அவருக்கு இருந்த குடிப்பழக்கமே. மனதை குழப்பிக் கொள்ளாதீர்கள். தினமும் முன்னோர்களையும் உங்கள் குலதெய்வத்தையும் வணங்கி வாருங்கள். உங்கள்
மகனின் முதல் வருட திதியை ராமேஸ்வரத்தில் நடத்துங்கள். அருகில் ஏதேனும் சிவாலயம் இருப்பின் தினமும் சென்று வாருங்கள். நல்லதே நடக்கும்.

?எனது இரண்டாவது மகனின் ஜாதகத்தை இத்துடன் அனுப்பியுள்ளேன். அவருடைய தொழில் ஸ்தானம் எப்படி இருக்கிறது. சுயதொழில் ஆரம்பிக்கலாமா? சொந்த வீடு அமையுமா?
-  R. கணபதி, சென்னை.

ஐயா, வணக்கம். உங்கள் மகன் பிறந்தது கார்த்திகை மாதம் - திருவாதிரை நட்சத்திரம் - மிதுன ராசி - மேஷ லக்னம் - பரணி சாரம். புதன் தசை ராகு புத்தி நடக்கிறது. புதன் பாக்கிய ஸ்தானத்தில் இருக்கிறார். கோசாரரீதியாக தற்போது மிதுன ராசிக்கு அஷ்டமத்து சனி நடக்கிறது. ஆயுசு ஆரோக்கியம் தீர்க்கமாக உள்ளது. லக்னத்தில் சனி இருக்கிறார். மிகவும் கஷ்டப்பட்டு வாழ்க்கையில் வெற்றி பெறக்கூடிய ஜாதகம். அதிர்ஷ்டத்தை நம்ப மாட்டார்.  உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு வாழ்வில் முன்னேறுவார்.

தற்போதைய சூழ்நிலையில் ஏப்ரலில் நல்ல மாற்றங்கள் வரும். சொந்த தொழில் நவம்பர் மாதத்திற்குப் பிறகு தொழில் ஆரம்பிக்கலாம். சொந்த வீடு இந்த வருடமே அமையும். கட்டிய வீட்டினை வாங்கலாம். வருடத்திற்கு ஒரு முறை ராமேஸ்வரம் சென்று ஸ்நான சங்கல்பம் செய்து நீராடி விட்டு வரச் சொல்லுங்கள். தினமும் சிவாலயத்தில் விளக்கேற்றி வழிபடச் சொல்லுங்கள். சிரமங்கள் மறைந்து நன்மைகள் ஏற்படும்.

தம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண விரும்பும் வாசகர்கள் தங்களுடைய ஜாதக நகலுடன் தங்கள் பிரச்னையைத் தெளிவாக எழுதி அனுப்பலாம். கீழ்க்காணும் முகவரிக்கு அவ்வாறு அனுப்பி வைக்கும் உங்களுக்கு இப்போதே, வண்ணமயமான, வளமான வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம்.

Tags :
× RELATED இயற்கை வடித்த லிங்கம்