×

குரோம்பேட்டை ராதா நகர் – ஜிஎஸ்டி சாலையை இணைக்கும் சுரங்கப்பாதை பணிகள் நிறைவு; 4 மாதத்தில் திறக்க நடவடிக்கை அதிகாரிகள் தகவல்

தாம்பரம்: குரோம்பேட்டை ராதா நகர் – ஜிஎஸ்டி சாலையை இணைக்கும் வகையில் பல ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு 4 மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட குரோம்பேட்டை கிழக்கு பகுதியில் உள்ள ராதாநகர், ஜமீன் ராயப்பேட்டை, நெமிலிச்சேரி, பாரதிபுரம் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், தங்களது பகுதியில் இருந்து மருத்துவமனை, காவல் நிலையம், பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு ஜிஎஸ்டி சாலை வந்து செல்கின்றனர். அவ்வாறு செல்லும்போது, குரோம்பேட்டை ரயில்வே கேட்டை கடந்து செல்ல வேண்டும்.இந்த ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் காலை, மாலை நேரங்களில் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் மணிக்கணக்கில் காத்துக்கிடக்கும் நிலை இருந்தது. குறிப்பாக, இங்குள்ள மகளிர் கல்லூரிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் நூற்றுக்கணக்கான மாணவியர் தண்டவாளத்தை கடந்து செல்லும் நிலை உள்ளது. மேலும், ரயில்வே கேட் முடியிருக்கும்போது தண்டவாளத்தை பொதுமக்கள் கடக்க முயற்சிக்கும் போது ரயிலில் சிக்கி பலர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது.எனவே, அந்த ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். அதன்பேரில், கடந்த 2009ம் ஆண்டு ரூ.14.75 கோடி செலவில், குரோம்பேட்டை ராதா நகர் மற்றும் ஜிஎஸ்டி சாலையை இணைக்கும் வகையில், 4 சக்கர வாகனம் செல்லும் வகையில் சுரங்கப்பாதை அமைக்க நெடுஞ்சாலைத்துறை மற்றும் தெற்கு ரயில்வே இணைந்து திட்டமிட்டது. தொடர்ந்து, இதற்கான பணிகள்  தொடங்கியது. இதில் ரூ.4 கோடி செலவில் ரயில்வே தரப்பில் தண்டவாளத்திற்கு கீழ், கான்கிரீட் பாக்ஸ்கள் அமைக்கப்பட்டன. இதில், பாறைகள் இருந்ததால் அவை வெட்டி எடுக்கப்பட்டு, ரயில்வே துறையின் பாதை அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டன. ரயில் பாதைக்கு கிழக்கு பகுதியில் 1935 சதுர மீட்டர், மேற்கு பகுதியில் ரயில்வேக்கு சொந்தமான 900 சதுர மீட்டர் நிலமும் இத்திட்டத்துக்கு தேவைப்பட்டது. இதை கையகப்படுத்தும் பணியை நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த் துறையினர் மேற்கொண்டனர். இதில், பல்வேறு இடையூறுகள், நீதிமன்ற வழக்கு போன்றவைகளால் பணியை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த சுரங்கப்பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதியிடம் பொதுமக்கள், நகர் நலச்சங்க பிரதிநிதிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து அப்பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்காக அதிமுக ஆட்சியில் சட்டமன்றத்தில் துணை கேள்விகள், நேரடி கேள்விகள் எழுப்பியதோடு, முதல்வர் மீது கவனம் ஈர்ப்பு தீர்மானத்தை திமுக எம்எல்ஏ இ.கருணாநிதி கொண்டுவந்தார். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில், கட்டிடங்கள் இடிக்கப்பட்டு ரூ.26 கோடி செலவில் கார், ஆம்புலன்ஸ், ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் செல்லும் அளவிற்கு ஐந்தரை மீட்டர் அகலத்திற்கும், பாதசாரிகள் நடந்து செல்ல 2 மீட்டர் அகலத்தில் பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பணிகள் என்பதால் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் இழுபறியில் இருந்த இந்த பணிகள், தற்போது திமுக ஆட்சிக்கு பிறகு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெடுஞ்சாலை துறைக்கு உத்தரவிட்டிருந்தார். தற்போது, வேகமாக நடைபெற்று வரும் பணிகள் சுரங்கபாதையில் இருந்து ஜிஎஸ்டி சாலையை இணைக்கும் பகுதியில் உள்ள மின்சார வயர்கள், தொலைதொடர்பு வயர்களை அப்புறப்படுத்துவதில் காலதாமதம் காரணமாக தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில், பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி தலைமையில் மண்டல குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை, நெடுஞ்சாலை துறையினர், மின்வாரிய துறையினர், தொலை தொடர்பு துறையினர், ரயில்வே துறை அதிகாரிகள் சுரங்கப்பாதை பணிகள் நடைபெறும் இடத்தில் கடந்த  சில நாட்்களுக்கு முன் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மின்சார வயர், தொலைத்தொடர்பு வயர்களை ஒரு மாதத்தில் அப்புறப்படுத்தி, மாற்று இடம் மூலம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும், என அந்தந்த துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர். இந்த பணிகளை ஒரு மாதத்தில் முடித்துவிடுவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.இதனைத் தொடர்ந்து ராதா நகர் ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் மீண்டும் வேகமெடுத்துள்ளது. மீதமுள்ள பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு 4 மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இந்த சுரங்கப்பாதை மூலம் ஒரு லட்சம் மக்கள் பயனடைவார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். …

The post குரோம்பேட்டை ராதா நகர் – ஜிஎஸ்டி சாலையை இணைக்கும் சுரங்கப்பாதை பணிகள் நிறைவு; 4 மாதத்தில் திறக்க நடவடிக்கை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Crompet ,Radha Nagar ,GST road ,Tambaram ,Krombettai Radha Nagar ,GST Road… ,Krombettai Radha Nagar – ,Dinakaran ,
× RELATED குரோம்பேட்டை, தாம்பரம், குன்றத்தூர்...