×

குரோம்பேட்டை, தாம்பரம், குன்றத்தூர் பகுதிகளில் நள்ளிரவில் பயங்கரம் ஒரே நாளில் 4 பேர் வெட்டிக்கொலை: போலீசார் விசாரணை

சென்னை: குரோம்பேட்டை, தாம்பரம், குன்றத்தூர் பகுதிகளில் நள்ளிரவில் அடுத்தடுத்து ஆட்டோ டிரைவர் பெண் உட்பட 4 பேர் படுகொலை செய்யப்பட்டனர். குரோம்பேட்டையை சேர்ந்தவர் தாமஸ் (50). தோல் கழிவுகளை ஏற்றி செல்லும் தொழில் செய்து வந்தார். இவர், அதே பகுதியை சேர்ந்த சபரி (31) என்பவருக்கு ரூ.30 ஆயிரம் கடனாக கொடுத்துள்ளார். அதை திருப்பி கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு, தாமசை தொடர்பு கொண்ட சபரி, பணம் தருவதாக கூறி, திருநீர்மலை சாலையில் கருமாரியம்மன் கோயில் அருகே வரும்படி அழைத்துள்ளார். அதன்படி தாமஸ் சென்றபோது, சபரி அவரை அரிவாளால் வெட்டிக் கொன்றார். நேற்று சபரி குரோம்பேட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். மற்றொரு சம்பவம்: தாம்பரம் அடுத்த இரும்புலியூரை சேர்ந்தவர் ராஜா (35).

சரித்திர பதிவேடு குற்றவாளியான இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மகா என்பவருடன் திருமணமாகி, ஒரு குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பின்னர் எந்த குற்ற செயல்களிலும் ஈடுபடாமல் கார்த்திக் ராஜா ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இவர் எந்த ஆட்டோ ஓட்டுநர் சங்கத்திலும் இல்லாததால் அனைத்து இடங்களுக்கும் சென்று ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். அதன்படி தாம்பரம் பேருந்து நிலையத்திலும் இவர் சவாரி ஏற்றி சென்று வந்துள்ளார்.

இதனால் அங்குள்ள ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர் ஆனந்தன் மற்றும் சில ஆட்டோ ஓட்டுனர்கள் கார்த்திக் ராஜாவை இங்கு ஆட்டோ ஓட்டக் கூடாது என கூறியுள்ளனர். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கார்த்திக் ராஜா, நான் இங்கு தான் ஆட்டோ போட்டு ஓட்டுவேன், என கூறிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு சுமார் 11.30 மணிக்கு, பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கார்த்திக் ராஜாவை ஆனந்தன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் தாம்பரம் பஸ் நிலையத்திற்கு அழைத்து உள்ளனர்.

அப்போது அங்கு சென்ற கார்த்திக் ராஜாவை ஆனந்தன் உட்பட 5 பேர் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த தாம்பரம் மாநகர காவல் துணை ஆணையர் பவன் குமார் தலைமையில், உதவி ஆணையர் நெல்சன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர் சங்கத் தலைவர் ஆனந்தன் மற்றும் அவருடன் இருந்த நபர்களை தேடிவந்த நிலையில், ஆனந்தன் (42), சாம்ராஜ் (40), அஜித் குமார் (28), சிவகுமார் (எ) ரஞ்சித் (28), கவின்ராஜ் (21) ஆகியோர் நேற்று தாம்பரம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

தாம்பரம் பகுதியில் ஆட்டோ ஸ்டாண்ட் சம்பந்தமாக தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர்கள் இடையே தகராறு ஏற்பட்டு வருவதாகவும், இதற்கு நிரந்தர தீர்வு காண சம்பந்தப்பட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

* குன்றத்தூர் அடுத்த மலையம்பாக்கம் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் ராஜேஷ் (30) என்பவர் தங்கி, கூலி வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு செம்பரம்பாக்கம் ஏரிக்கரை அருகே இவர், நடந்து சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். ஆனால் ராஜேஷ் பணம் தர மறுத்ததால், மர்ம நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜேஷை வெட்டி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு அங்கு இருந்து தப்பினர்.

இதில், ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜேஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக குன்றத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

* வாலாஜாபாத் அடுத்த கட்டவாக்கம் செல்வ விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி சுகுணா (65). இவர்களது மகள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார். ராதாகிருஷ்ணன் சில ஆண்டுக்கு முன்பு இறந்த நிலையில், சுகுணா மட்டும் மொட்டை மாடி வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இவரது வீட்டின் கீழ்தளத்தில் வடமாநிலத்தை சேர்ந்த 5 பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் 5 பேர் மட்டும் இன்றி அதே வீட்டின் அறையில் வடமாநில தம்பதியினரும் வசித்து வருகின்றனர். இவர்கள், கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் வாடகைக்கு வந்துள்ளனர். சுகுணாவின் மகள் தினசரி தாயிடம் செல்போனில் பேசி வருவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் செல்போன் மூலம் தொடர்ப்பு கொண்டபோது, பதிலளிக்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்த சுகுணாவின் மகள், அருகில் உள்ள உறவினரை தொடர்பு கொண்டு, இதுபற்றி கூறியுள்ளார். அதன்படி அவர்கள் சென்று பாத்தபோது, வீட்டு தகவு பூட்டி இருந்தது. ஆனால், செருப்பு வெளியில் இருந்துள்ளது. இதனால், சந்தேகமடைந்து, பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கை அறையில் பலத்த காயங்களுடன் சுகுணா சடலமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவரது மகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர் விரைந்து வந்து பார்த்தபோது, சுகுணா அணிந்திருந்த கம்மல், மூக்குத்தி, செயின் உள்ளிட்ட 10 சவரன் நகை திருட்டு போனது தெரிய வந்தது. தகவலறிந்து வந்த வாலாஜாபாத் போலீசார், உடலை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, சந்தேகத்தின் பேரில் 10க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தடுத்து 4 கொலைகள் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* ரோந்து பணியை தீவிரப்படுத்த கோரிக்கை
குன்றத்தூர் சுற்றுவட்ட பகுதிகளில் இரவு 12 மணிக்கு மேல் தினமும் இருசக்கர வாகனத்தில் சுற்றித் திரியும் 3 மர்ம நபர்கள் வழிப்பறி, செயின் பறிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். புறநகர் பகுதிகளிலும் தினமும் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், மத்தியக் குற்றப்பிரிவு வழக்குகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதாக கூறப்படுகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்னைகளுக்கும் அவர் முக்கியத்துவம் கொடுத்து அதிகாரிகளின் ரோந்துப் பணியை தீவிரப்படுத்துவதோடு ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

The post குரோம்பேட்டை, தாம்பரம், குன்றத்தூர் பகுதிகளில் நள்ளிரவில் பயங்கரம் ஒரே நாளில் 4 பேர் வெட்டிக்கொலை: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Crompet ,Tambaram ,Kunradthur ,CHENNAI ,Krombettai ,Thomas ,Crompettai ,Crompet, Tambaram, Kunradthur ,Dinakaran ,
× RELATED செல்லப் பிராணிகளுக்கான உரிமம் பெற 20ம்...