×

வேலூரில் போலி ஆதார் கார்டு மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிம் கார்டு வாங்கிய 4 பேர் கைது: தீவிரவாதிகளுடன் தொடர்பா? சைபர் கிரைம் போலீஸ் விசாரணை

வேலூர்: வேலூர் சத்துவாச்சாரி போலீசார் நேற்று முன்தினம் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அலமேலுமங்காபுரம் அருகே சர்வீஸ் சாலையில் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த 2 வாலிபர்களை பிடித்து சோதனை நடத்தியபோது, அவர்கள் வைத்திருந்த பையில் பல முகவரிகள் கொண்ட ஆதார் அட்டை நகல் மற்றும் 40 சிம்கார்டுகள் இருப்பது தெரியவந்தது. போலி ஆதார் அட்டைகளை வைத்து சிம்கார்டுகள் வாங்கியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, 2 வாலிபர்களையும் சைபர் கிரைம் போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில் போலி ஆவணங்கள் தயாரித்து சிம்கார்டு வாங்கியதாக மேலும் 2 பேர் என 4 பேரை சைபர் கிரைம் போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது: வேலூர் மாவட்டத்தில் போலியான ஆதார் அட்டைகளை வைத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை வாங்கியதாக ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தை சேர்ந்தவர்களான இப்ராஹிம்(23), ஷேக் தஸ்தகீர்(22), அசோக்(21), வேலூரை சேர்ந்த விஜய்(22) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் இப்ராஹிம், ஷேக் தஸ்தகீர் கடந்த 2 ஆண்டுகளாக தனியார் நிறுவனத்தின் சிம்கார்டுகளை விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு முன் இப்ராஹிம், ஷேக் தஸ்தகீர் ஆகிய 2 பேரும் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, இப்ராஹிம் தஸ்தகீர் இருவரும் அசோக், விஜய் ஆகியோருடன் சேர்ந்து சிம்கார்டுகள் வாங்கிய நபர்களின் ஆதார் அட்டையில், புகைப்படத்தை நீக்கி விட்டு, வேறு புகைப்படங்களை வைத்து போலி ஆதார் அட்டைகளை தயார் செய்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிம்கார்டுகளை வாங்கி, ஆந்திரா, புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு கூரியர் மூலம் பார்சல் அனுப்பி வைத்துள்ளனர். மேலும் ஒவ்வொரு ஆதார் அட்டையில் இருந்து 10க்கும் மேற்பட்ட சிம்கார்டுகளை வாங்கியது தெரியவந்துள்ளது. இந்த சிம்கார்டுகள் தீவிரவாத செயலுக்கு பயன்படுத்தப்பட்டதா? என ஆய்வு செய்து வருகிறோம். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 50 சிம்கார்டுகள், 100க்கும் மேற்பட்ட ஆதார் அட்டை நகல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலியாக ஆதார் அட்டை மூலம் சிம் கார்டுகள் வாங்கியதாக புகாரின் பேரில் 420, 465, 468 மற்றும் 471 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, அவர்கள் பார்சல் அனுப்பிய விவரங்கள் மற்றும் சிம்கார்டுகளின் விவரங்கள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்….

The post வேலூரில் போலி ஆதார் கார்டு மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிம் கார்டு வாங்கிய 4 பேர் கைது: தீவிரவாதிகளுடன் தொடர்பா? சைபர் கிரைம் போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Aadhar ,Vellore ,Sattuvachari ,Chennai-Bengaluru National Highway ,Aadhaar ,Dinakaran ,
× RELATED ஆன்லைனில் பணத்தை இழந்த 7 பேரின் ₹1.78...