×

தம்பிரானார் தோழருக்கு நோய் தீர்த்த திருக்குளம்

திரு என்ற அடை மொழியோடு திகழும் குளங்கள் அனைத்தும் திருக்கோயில்களோடு இணைந்த தீர்த்தக் குளங்களே ஆகும். திருவெண்காட்டுக் கோயிலில் திகழும் முக்குளங்களில் நீராடுபவர்களுக்கு தீவினையாகிய பேய் அவர்களைப் பீடித்திருந்தாலும் அவை நீங்கும் என்றும், குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு அப்பேறு கிட்டும் என்றும், நாம் நினைப்பது மெய்ப்படும் என்றும், இவை அனைத்தும் ஐயமே இன்றி உறுதியாக நிகழும் என்றும் திருஞான சம்பந்தப் பெருமானார் அங்கு பாடிய தேவாரப் பதிகத்தில் எடுத்துரைத்துள்ளார்.

திருவாரூர் திருக்குளத்தில் நீராடியதால் பிறவிக்குருடரான தண்டியடிகள் கண் பெற்றார். அதே குளத்து நீர் கொண்டு நமிநந்தியடிகள் திரு அரநெறியாம் திருக்கோயிலில் விளக்கு எரித்தார் என்று திருநாவுக்கரசு பெருமானும் ஆரூர் பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆரூர் திருக்குளத்திலிருந்து தான் மணிமுத்தாற்றில் இட்ட பொன்னை, சுந்தரர் மீண்டும் பெற்றார். உருத்திர பசுபதி நாயனார் திருத்தலையூரில் உள்ள பொய்கையில் கழுத்தளவு நீரில் நின்று உருத்திரம் சொல்லி சிவனருள் பெற்றார். தில்லை திருப்புலீச்சரத்துத் திருக்குளத்தில் மனைவியாருடன் மூழ்கி எழுந்த திருநீலகண்ட குயவனாருக்கு முதுமை நீங்கிய இளமையும் இல்வாழ்வும், சிவப்பேறும் கிட்டின். இவ்வாறு தமிழகத்துத் திருக்கோயில்களின் திருக்குளங்கள் ஒவ்வொன்றும் பேரதிசயம் வாய்ந்தவைகளாக வரலாற்றில் திகழ்ந்துள்ளன.

இத்தகைய அற்புதங்களுக்கு எல்லாம் மகுடம் வைத்தாற்போன்று தமிழ் மண்ணில் இரு நிகழ்வுகள் நடைபெற்றமையை சேக்கிழார் பெருமான் திருத்தொண்டர் புராணத்தில் இயம்பியுள்ளார். திருநாவுக்கரசு பெருமானார் தனி ஒருவராக  கயிலாயமலை நோக்கி நடந்து சென்றபோது உடல் உறுப்புக்கள் எல்லாம் தேய்ந்தும் நைந்தும் சிதைந்தும் போக அவர்முன் எதிர்பட்ட அரன் அருளால் ஒளி திகழ்மேனியை மீண்டும் பெற்றார். அப்போது சிவபெருமான் தன்கையில் எடுத்து வந்த புனல் தடமாகிய சிறுகளத்தை அப்பரடிகளிடம் கொடுத்து அதில் மூழ்கப் பணித்தார்.

அவ்வாறே அப்பொய்கையில் நாவுக்கரசர் மூழ்க திருவையாற்றில் உள்ளதோர் திருக்குளத்திலிருந்து யாதும் சுவடுபடாத பிரணவ உடலோடு எழுந்தார். ஐயாற்றுக் கோயில் கயிலையாகவே காட்சி தந்தது. கயிலாயம் பெருமானை அங்கு தரிசித்தார். அக்கோயிலுக்குச் செல்லும் வழியில், தான் முன்பு கண்ட விலங்கினங்களையும் பறவைகளையும் பட்டியலிட்டு ‘‘மாதற் பிறைக் கண்ணி யானை’’ எனத் தொடங்கும் அருந்தமிழ்ப் பதிகத்தைப் பாடியருளினார். ஐயாற்றுத் திருக்குளம் அப்பர் பெருமானுக்கு பிரணவ சரீரம்  எனும் மாயாவுடலைத் தந்தது. நடந்தால் சுவடு ஏற்படாது. யாரும் காணா வண்ணம் எங்கும் செல்லலாம். அதனால் சம்பந்தரே காண இயலாதவாறு அவர்தம் பல்லக்கைச் சுமந்தார். அவ்வுடலோடு புகலூர் மேவி புண்ணிய மூர்த்தியின் திருவடிகளில் ஒன்றினார்.

திருநாவலூரினரான சுந்தரர் ஆரூரினை அடைந்து பெருமானை வணங்கி நின்றபோது புற்றிடம் கொண்ட ஈசனார் தம் திருவாக்கால் ‘‘தோழமையாக நம்மை உனக்குத் தந்தோர். முன்பு மணவேள்வியின்போது நீ பூண்ட வைதீக வடிவமும், மன்னவர்  கோலமும் புனைந்து நின் வேட்கை தீர மண்மிசை வாழ்வாய்’’ என்று அருளினார். அன்று முதல் அடியாரெல்லாம் நம்பியாரூரரை (சுந்தரரை) ‘‘தம்பிரான் தோழர்’’ என்றே அழைத்தனர்.

சுந்தரர் கொங்குநாட்டுத் தலப் பயணம் முடித்த பிறகு நடுநாட்டு முதுகுன்றம் (விருத்தாசலம்) சென்று ஈசனைப் பாடி பன்னீராயிரம் பொன் பெற்று அங்கிருந்த மணிமுத்தாறு நதியின் அதனை இட்ட பிறகு தில்லை சென்றார். ஆடல் வல்ல பெருமானை பேரூரில் கண்ட வண்ணமே தரிசித்தார். பின் மீண்டும் சோழநாட்டுத் தலப் பயணம் மேற்கொண்டார். அப்போது காவிரி நதியின் வடகரையில் இருந்த திருவேள்விக்குடித் திருக்கோயிலை அடைந்து பொருனை வழிபட்டார். அங்கு காவிரியின் நடுவில் திட்டாக இருந்த (தீவாக) இருந்த திருத்துருத்தித் திருக்கோயிலைக் கையில் இருந்தவாறே  தரிசித்து ‘‘மூப்பதும் இல்லை பிறப்பதும் இல்லை’’ என்ற பதிகத்தைப் பாடினார். பாடல்கள் தோறும் திருவேள்விக்குடி மற்றும் திருத்துருத்தி ஆகிய இருதலங்களையும் இணைத்தே கூறி ஈசனைப் போற்றிப்  பரவினார்.

திருத்துருத்தி என்று சுந்தரர் போற்றிய திருத்தலம் தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம் என்ற பெயரில் திகழ்கின்றது. தேவார மூவர் வாழ்ந்த 7 - 9 ஆம் நூற்றாண்டுகளில் இத்தலம் காவிரியாற்றின் நடுவமைந்த திட்டில்தான் இருந்துள்ளது. அக்கோயிலுக்குச் சென்று பதிகம் பாடிய திருநாவுக்கரசு பெருமானார்,‘‘பொன்னியின்  நடுவு  தன்னுள்  பூம்புனல்  பொலிந்து தோன்றும்துன்னிய துருத்தியானைத்  தொண்டனேன்   கண்டவாறே’’என்று  குறிப்பிட்டுள்ளார்.

திருத்துருத்தித் திருக்கோயிலில் உறைந்துள்ள ஈசனின் திருநாமம் ‘‘சொன்னவாறு அறிவார்’’- என்பதாகும். சுந்தரருக்குக் காலத்தால் முற்பட்டவரான திருஞானசம்பந்தர் அத்தலத்தைத் தனிப் பதிகமொன்றால் பாடியதோடு திருவேள்விக்குடியையும் (அருகமைந்த வடகரைத்தலம்) திருத்துருத்தியையும் இணைத்து ஒரே பதிகமாகவும் பாடியுள்ளார். இணைத்துப் பாடிய பதிகத்தின் பாடல்கள் தோறும் பகற் பொழுதில் திருத்துருத்தி ஈசனார் அவர் தம் கோயிலிலும் (குத்தாலம் கோயிலிலும்) இரவில் திருவேள்விக் குடியிலும் உறைவதாகக் கூறியுள்ளார்.

‘‘அரும்பு  அன வனமுலை அரிவையோடு
ஒரு பகல் அமர்ந்த பிரான்
  விரும்பு  இடம் துருத்தியார்  இரவு
இடத்து உறைவர் வேள்விக் குடியே ’’

என்பது போன்ற கூற்றுகளே அப்பதிகம் முழுவதும் காணப் பெறுகின்றன. இவ்வாறு ஈசன் பகலில் ஒரு கோயிலிலும் இரவில் மற்றொரு கோயிலிலும் உறைந்து அருள் புரிகிறான் என்ற கூற்று வேறு எங்கும் காணப் பெறாத ஒன்றாகும்.துருத்தி என்ற தமிழ்ச் சொல் ஆற்றிடைக்குறை (ஆற்றின் இடையே உள்ள திட்டு அல்லது தீவு) என்பதைக் குறிப்பதாகும். திருத்துருத்தியும் (குத்தாலமும்) திருப்பூந்துருந்தியும் தேவார மூவர்காலத்தில் காவிரியாற்றின் நடுவே திகழ்ந்து பிற்காலத்தில் ஏற்பட்ட பெருவெள்ளங்கள், மற்றும் நதியின் போக்கில் ஏற்பட்ட மாறுபாடுகளால் தற்போது காவிரியின் தென்கரைத் தலங்களாய் விளங்குகின்றன.

சுந்தரர் ஆதிபுரி எனும் திருவொற்றியூர் சென்று சங்கிலியாரை மணந்து, பின்பு சத்தியவாக்கை மீறி அரூர் காணப் புறப்பட்டபோது இருகண்களின் பார்வையை  இழந்தார். வழியில் காஞ்சிபுரம் ஏகாம்பர நாதரை இறைஞ்சி ஒற்றைக் கண் பார்வையைப் பெற்றார். ஒரு கண் பார்வையோடு திருவரத்துறை வழியே சோழநாடு வந்தணைந்தபோது புறை நோய் அவரைப் பற்றியது.

உடல் முழுவதும் கறுத்து ஒளியிழந்த மேனியரானார். அந்நிலையில் திருவாவடுதுறை அரனார் கோயிலுக்கு வந்து பெருமானை வணங்கி ‘‘கங்கைவார் சடையாய்’’ எனத் தொடங்கும் தேவாரப் பதிகத்தைப் பாடினார். அப்பதிகத்தில் ‘‘கண் இலேன்  உடம்பில் அடுநோயால் கருத்து அழிந்து உனக்கே பொறையானேன் ’’- என்று கூறு ‘‘அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு  அமரர்கள் ஏறே’’ - என வேண்டினார். பின்பு திருவாவடுதுறையிலிருந்து காவிரியன் நடுவே இருந்த திருத்துருத்திக் கோயிலினைச் சென்றடைந்தார்.

சொன்னவாறு  அறிவார் முன்பு நின்று  தன்னைப் பற்றியுள்ள நோய் நீங்க அருள வேண்டினார். அதனைச் செவிமடுத்த பெருமானார் ‘‘கோயிலின் வடமேற்குத் திசையில் உள்ள தீர்த்தக் குளத்தில் குளி’’ எனப் பணித்தார். கை தொழுதவாறு சந்நதியிலிருந்து புறப்பட்ட சுந்தரர் கோயில் வளாகத்தினுள் திகழும் தீர்த்தக் குளத்தை அடைந்து திருத்துருத்தியாரை நினைத்த வண்ணமே குளத்தில் இறங்கி நீரில் மூழ்கி எழுந்தார். அது வரை அவரைப் பற்றியிருந்த நோய் அவர் உடலை விட்டு அகன்றது. ஒளி சேர்திருமேனியோடு கரை ஏறினார்.

‘‘மிக்கபுனல்  தீர்த்தத்தின் முன் அணைந்து வேதமெலாம்
தொக்க வடிவாய் இருந்த துருத்தியார்  தமைத் தொழுது
புக்கதனில் மூழ்குதலும் புதிய பிணி அது  நீங்கி
அக்கணமே மணியொளிசேர் திருமேனி ஆயினார்’’
எனச் சேக்கிழார் பெருமான் கூறியுள்ளார்.

இவ்வதிசயத்தைக் கண்டவர்கள் வியந்து கைகூப்பி நின்றனர். உடை புனைந்த நம்பியாரூராகிய சுந்தரர் மீண்டும் கோயிலுக்குள் சென்று ‘‘மின்னுமா மேகங்கள் பொழிந்து’’ எனத் தொடங்கும் பதிகத்தினைப் பாடி திருத்துருத்தியாரை வணங்கினார். அப்பதிகத்தின் முதற்பாடலில் ‘‘என்னை நான் மறக்குமாறு எம்பெருமானை ஊன் உடம்பு அடும்பிணி இடர் கெடுத்தானை’’- என்றும், ‘‘தொடர்ந்து அடும் கடும் பிணித் தொடர்பு அறுத்தானை’’- என்றும் ‘‘உற்றநோய் இற்றையே உற ஒழித்தானை’’- என்றும் பலபட கூறி தான் நோயிலிருந்து பெருமான் அருளால் விடுபட்ட   திறம்  குறித்து பதிவு செய்துள்ளார்.

சுந்தரர்க்கு நோய் தீர்த்த அத்திருக்குளம் திருத்துருத்தி மகாதேவர் கோயில் வளாகத்தின் வடமேற்குத் திசையில் பேரழகோடு விளங்குகின்றது. அதனை மக்கள் சுந்தரர் தீர்த்தம் என்ற பெயரால் குறிப்பிடுகின்றனர். அக்குளத்தின் மேல் கரையின் வடபால் சுந்தரரின் திருவுருவச்சிலை பிரதிட்டை செய்யப்பெற்ற சிற்றாலயம் ஒன்று வழிபாட்டில் திகழ்கின்றது. சுந்தரரின் பிரதிமை கைகூப்பிய நிலையில் நின்ற கோலத்தில் காட்சி நல்குகின்றது. தமிழகத்தின் எந்த ஒரு சிவாலயத்திலும் காணப்பெறாத எழில் மிகு திருவடிவமாக அது உள்ளது. ஒளி திகழ்மேனி பெற்ற நம்பியாரூரரின் ஒப்பற்ற திருவடிவம் இதுவாகும்.

மயிலாடுதுறையிலிருந்தோ அல்லது கும்பகோணத்திலிருந்தோ காவிரியின் இருகரை நெடுஞ்சாலைகள் எதன் வழியும் திருத்துருத்தி எனப் பெறும் குத்தாலம் சென்றடையலாம். இங்குள்ள பழமையான சிவாலயம் சோழப் பேரரசி செம்பியன் மாதேவியாரால் கற்றளியாகப் புதுப்பிக்கப் பெற்றதாகும். ஐந்து நிலைகளையுடைய ராஜகோபுரம் மேற்குத் திசை மகாவாயிலாக இக்கோயிலுக்கு அமைந்துள்ளது. ஸ்ரீவிமானம் இருதளங்களுடன் அர்த்த மண்டபம், மகாமண்டபம், முக மண்டபம் ஆகியவற்றோடு மேற்குத் திசை நோக்கிய திருக்கோயிலாக மூலவர் கோயில் அமைந்துள்ளது. தெற்கு நோக்கியவாறு திருக்காம கோட்டம் திகழ்கின்றது.

ஸ்ரீவிமானத்தின் வடபுற கோஷ்டங்களில் அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை, பிச்சை உகக்கும் பெருமான், பிரம்மன் ஆகிய திருமேனிகளும், கீழ்த்திசை கோஷ்டத்தில் லிங்கோத்பவரும், தென்திசை கோஷ்டங்களில் ஆலமர் செல்வர், ஆடல் வல்லான், கணபதி, அகத்தியர் ஆகிய திருமேனிகளும் இடம்பெற்றுள்ளன. கருவறை அர்த்த மண்டபம் ஆகியவற்றின் சுவர்களின் புறத்தே கண்டராதித்த சோழர் சிவலிங்கத்தை வணங்கும் கோலக் காட்சியும், ராஜராஜ சோழனின் சிற்றப்பனும் செம்பியன் மாதேவியாரின் மகனுமான மதுராந்தக உத்தம சோழரின் எழில்மிகு வடிவமும் சிற்பங்களாக  இடம் பெற்றுள்ளன. இதுவரை கிடைத்த உத்தமசோழரின் திருவுருவங்கள் வரிசையில் இதுவே முதன்மை இடம் பெறுவதற்கு உரியதாகும்.

கொடி மரத்திற்கு அருகே தல விருட்சமான உத்தாலமரம் காணப்பெறுகின்றது. உத்தாலம் என்பது ஆத்தி மர வகையைச் சார்ந்ததாகும். இதன் காரணமாக இக்கோயில் திகழ்ந்த ஆற்றுத் தீவு பண்டு உத்தாலவனம் என அழைக்கப் பெற்றது. உத்தால வனம் என்பது காலப் போக்கில் குத்தாலம் என மருவி ஊர்ப்பெயராயிற்று, செம்பியன் மாதேவியார், ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் எனப் பல சோழ மன்னர் தம் கல்வெட்டுச் சாசனங்கள் இங்கு இடம் பெற்றுள்ளன.

சொன்னவாறு அறிவார், திருத்துருத்தி மகாதேவர் என்ற பெயர்கள் கல்வெட்டுக்களில் காணப்பெறுகின்றன. அம்பிகையின் திருப்பெயர் அரும்பன்ன வனமுலையாள் என்பதாகும். இப்பெயர்கள் வட மொழியில் உக்தவேதீஸ்வரர் என்றும் ம்ருதமுகுள குஜாம்பிகை என்றும் வழங்கப்பெறுகின்றன.

திருக்கோயில்களில் தீர்த்தங்களாகிய திருக்குளங்கள் நம் மரபின் செல்வங்கள். அவற்றை அழியாமல் பேணிக் காக்கும் செயல்பாடுகள் இன்றியமையா இறைத்தொண்டு என்பதை உணர்வோம்.

முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

Tags : Thirukulam ,Thambiranar ,
× RELATED பொற்றாளம் வழங்கிய தாளபுரீஸ்வரர்