×

ஆழ்வார்கள் பாசுரங்கள் உயிர்ச் சொற்கள்

திருமாலை முழுமுதற் கடவுளாகக்  கொண்ட வைணவத்தில், வைணவ தத்துவங்களையும், திருமாலின் குணங்களையும் அழகிய தமிழ்ப்பாடல்களைக் கொண்டு  அளித்தவர்கள் ஆழ்வார்கள். அவர்கள் அருளிச்செய்த பாடல்களின் எண்ணிக்கை 4000. ஆழ்வார்களின் பாடல் தொகுப்பை நாலாயிர திவ்ய பிரபந்தம் என்றே வழங்குகிறோம். இதைப் பாடிய ஆழ்வார் பன்னிருவர்.

இவர்கள் வரிசையை பின்வருமாறு சொல்வார் மணவாளமாமுனிகள். பொய்கையார், பூதத்தார், பேயார், புகழ் மழிசை அய்யன், அருள் மாறன், சேரலர் கோன், துய்ய பட்ட நாதன், அன்பர் தாள் தூளி, நற்பாணன், நற்கலியன், ஈது இவர் தோற்றத்து அடைவாம்  இங்கு இந்த ஆழ்வார்கள்  பாசுரங்களில் உள்ள உயிர்ச்சொற்களை அனுபவிக்கலாம் இந்தத்  தலைப்பிலேயே மூன்று  உயிரான பதங்கள் இருக்கின்றன

ஒன்று; ஆழ்வார்கள்
இரண்டு; பாசுரங்கள்
மூன்றாவது; உயிர் சொற்கள்
அதென்ன  உயிர் சொற்கள்?
சொற்களுக்கு உயிர் உண்டா?
இது முதல் கேள்வி.

இதற்கான பதில் சொற்களுக்கு உயிர் உண்டு என்பதுதான். அதனாலேயே அதனை உயிர் சொற்கள் என்று சொல்லுகின்றோம். ஆழ்வார்களில் ஒருவரான திருமழிசையாழ்வார் காஞ்சிபுரத்தில் தங்கி இருந்தபொழுது அவருக்குத் துணையாக கணிகண்ணன் என்று ஒரு சீடன் இருந்தான். ஒரு நாள் பல்லவ மன்னனுக்கும் ஆழ்வாரின் சீடரான கணிகண்ணனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மன்னவன் கணிகண்ணனை  ஊருக்குள் இருக்கக்கூடாது என்று சொல்லிவிட்டான். கணிகண்ணன் தன்னை மன்னன் நாடு கடத்திவிட்டதாகவும், அதனால் தான் இந்த பெருமாள் கோயிலை விட்டுச்  செல்ல வேண்டும் என்றும் சொன்னான்.

ஆழ்வாருக்கு சீடனான கணிகண்ணனைப் பிரிய மனமில்லை. ஆனால் அதே சமயம் அங்குள்ள பெருமாளையும் பிரிவதற்கு மனமில்லை. எனவே ஆழ்வார் பெருமாளைத்   தன்னுடன் புறப்படும்படி வேண்டவில்லை. கட்டளையிட்டார். கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி மணிவண்ணா நீ கிடக்க வேண்டாம் துணிவுடைய செந்நாப் புலவனும் போகின்றேன் நீயும் உந்தன் பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்
பகவானே! உன்னுடைய பாயாகிய இந்த பாம்பைச்  சுருட்டி எடுத்துக் கொண்டு, என்னோடு புறப்படு என்று தமிழால் ஆணையிட்டார்.  

அந்தச் சொற்கள் உயிர்பெற்று எம்பெருமானின் அர்ச்சாவதாரத்தையே அதாவது சிலை வடிவத்தையே அசைத்துவிட்டது அவரோடு புறப்பட்டு ஊருக்கு வெளியே பாலாற்றங்கரை ஓரமாகச்  சென்றுவிட்டார். இரவு வந்தது. ஒரு மண்டபத்தில் தங்கி விட்டார்கள்.
பிறகு மன்னன் நிலைமையை அறிந்து மன்னிப்பு கேட்கவே, திரும்பவும் ஒரு பாடலால் ஆழ்வார் பழைய இடத்துக்குப் பெருமாளை கொண்டு வந்து சேர்த்தார்.

அப்படி பெருமாள் ஆழ்வார் புறப்பட்டு வந்து தங்கிய இடம் ஓர் இருக்கை என்று வழங்கப்படுகிறது ஆழ்வார் திருக்குடந்தை  வந்து அங்குள்ள பெருமாளை சேவிக்கும் பொழுது சில கேள்விகள் கேட்கிறார் நீ இப்படி படுத்து இருக்கிறாயே ?உன் கால்கள் வலிக்கிறதா? இந்த பூமியை வராக அவதாரத்தில் தூக்கி நிறுத்திய களைப்பா?

இப்படி அடுக்கடுக்காக கேள்விகள் கேட்ட பின்னும்,அர்ச்சாவதார பெருமாள் எழுவதாகத் தெரியவில்லை. ஆழ்வார் விடவில்லை. அடுத்து அதட்டலாக எழுந்திருந்து பேசு என்று ஒரு கட்டளை இட, அந்த உயிர் சொற்களால் பெருமாள் உணர்வு பெற்று எழ எத்தனிக்கிறார். அந்தப் பாசுரம் இது
நடந்த கால்கள் நொந்தவோ நடுங்க ஞாலம்
ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ விலங்கு
மால்வரைச்சுரம்
கடந்த கால் பரந்த காவிரிக்கரைக்
குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி
கேசனே

ஐயோ அர்ச்சாவதாரத்தைக் கலைத்து விட்டோமே என்று பதறிய ஆழ்வார், ‘‘வேண்டாம்.. வேண்டாம்… எனக்காக எழ வேண்டாம்.. அப்படியே இரு” என்று வாழி கேசனே என்று பல்லாண்டு பாடுகிறார். எந்த நிலையில் எழுந்தாரோ, அந்த நிலையில் அப்படியே இருந்துவிட்டார், பெருமாள். திருக்குடந்தை சார்ங்கபாணி கோயிலில் (சாரங்கபாணி அல்ல சார்ங்கபா ணி)  இன்றைக்கும் பெருமாளைப்  பாதி எழுந்த நிலையில் நாம் சேவிக்கிறோம்.

பள்ளிகொண்ட பெருமாளின்  இந்த அமைப்புக்கு உத்தான சயனம் என்று பெயர். பெருமாளின் மூன்று நிலைகளில் ஒரு நிலை சயனநிலை.
பெருமாளின் 108 திருத்தலங்களில் சயனத் திருக்கோலங்கள் 24 தலங்களில் உண்டு.பத்து வகையில் சயனநிலைகள் உண்டு. ஒவ்வொரு சயனநிலைக்கும் ஒரு பெயர் உண்டு. ஜல சயனம்,போகசயனம், புஜங்க சயனம், உத்தான சயனம், தல சயனம்,வீர சயனம் ,தர்ப்ப சயனம்,பத்ர சயனம்,மாணிக்க சயனம்   என்று பல பெயர்கள் உண்டு.

ஆனால் குடந்தையில் உத்தான சயனம் என்ற நிலையை பெருமாள் மேற்கொண்டது ஆழ்வார் பாடிய உயிர் சொற்களால்தான். எனவே சொற்களுக்கு உயிர் உண்டு என்பது புலனாகிறது. ஒவ்வொரு ஆழ்வார்களின் ஒவ்வொரு பாசுரத்திலும் இப்படிப்பட்ட உயிர் சொற்கள் உண்டு. அந்த உயிர் சொற்கள்தான் அந்தப் பாடலின் திரண்ட கருத்தை -சொல்ல வந்த கருத்தை- மையமான கருத்தை -நமக்கு உணர்த்தும்.
ஒரு சில பாடல்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட உயிர் சொற்களும் இருக்கும்.

அந்த உயிர் சொற்களை மையமாகக்கொண்டு அந்த பாட்டின் பொருளைச்  சிந்தித்தால்,ஆழ்வார்களின்  ஆழ்மனமும், அவர்கள் சொல்ல வந்த தத்துவமும், அந்த தத்துவத்தால் நமக்கு கிடைக்கவேண்டிய பலனும் வெளிப்படும். சொற்களுக்கு உயிர் உண்டு என்பதை உலகியல் உதாரணம் கொண்டும் நாம் பார்க்கலாம்.

ஆழ்வார்களின் பாசுரங்களை அழகோடும் உணர்ச்சியோடு ஓதிக்கொண்டிருந்த ஒரு அன்பரிடம், அவருடைய நண்பர் சென்று “இதை ஏன் விடாமல் கண்ணீர் மல்க கதறிக்  கதறி பாடிக்கொண்டிருக்கிறாய். இச்சொற்களில் என்னதான் அப்படி கண்டாய்?” என்று சொல்ல, அந்த அன்பர் சொன்னாராம். “ஆழ்வார்களின் மனத்தை அப்படியே கடத்தும் உயிர் சொற்கள் இந்த பாசுரங்கள் “. நண்பர் சொன்னாராம். “சொற்களுக்கு உயிர் உண்டு என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இதை உன்னால் நிரூபிக்க முடியுமா என்ன” “மடையன்  மாதிரிக்  கேட்கிறாயே” என்று அன்பர் சொன்னவுடன் நண்பருக்கு கடும் கோபம் வந்துவிட்டது.

“என்னை எப்படி நீ மடையன் என்று சொல்லலாம்?” என்று சண்டைக்குப் போய்விட்டார். உடனே அவர் சிரித்துக்கொண்டே சொன்னார்
“இந்தச்  சொற்கள் ஏன்  உனக்குக்  கோபத்தைத் தூண்டுகிறது. மடையன் என்பது ஒரு சொல்தானே. சொற்களுக்குக்கென்ன உணர்ச்சி இருக்க முடியும் என்று சற்று முன் நீ தானே கேட்டாய். நான் ஒரு வார்த்தை  சொன்னவுடன் உனக்கு இவ்வளவு உணர்ச்சி வருவதற்கு காரணம், அந்த  உணர்ச்சியை தூண்டும் அளவுக்கு, இந்தச் சொற்களுக்கு ஆற்றலும் உயிரும்  உண்டு என்பதுதானே பொருள்.

இப்பொழுதாவது ஏற்கிறாயா என்று கேட்டாராம். உண்மையில் சொற்களுக்கு மட்டுமல்ல எழுத்துக்களுக்கும்  ஆற்றல் உண்டு. உயிரும் உண்டு.
பாசுரங்களில் உள்ள உயிர் சொற்கள் என்று பார்த்தோம். பாசுரமே ஒரு உயிர் சொல் அல்லவா. ஆழ்வார்களின் பாடல்களை பாசுரங்கள் என்று அழைப்பது வைணவ மரபு. பாசுரம் என்கிற பதத்தை பிரித்தால் பா+சுரம் என்று வரும். வேதத்திற்கு ஸ்வரம் என்று சொல்லுவார்கள். ஸ்வரங்களால் ஆன மந்திரங்கள்தான் வேதம். ஆழ்வார்கள் பாடிய பாடல்கள் தமிழ் மறை என்று அழைக்கப்படுவதால் அது வேதத்தை போலவே ஸ்வரத்தோடு ஓதப்படுவதால் இதற்குப்  பாசுரங்கள் என்று பொருள்.

ஆழ்வார் பாடிய திருவாய்மொழியை யாழின் இசை வேதத்து இயல் என்று போற்றுகிறார் பராசரபட்டர். ஆழ்வார் பாசுரங்களை தொகுத்துக் கொடுத்த நாதமுனிகள் வேதம் தமிழ் செய்த மாறன் என்று விளக்குகின்றார். எனவே பாசுரங்கள் என்பது வேதங்கள். ஆழ்வார்களின் பாடல்கள், எழுத்து எண்ணி, இலக்கணம் பார்த்து, எழுதப்பட்ட சொற்களின் கூட்டமல்ல. அவைகள் அனைத்துமே உயிர் சொற்கள். உயிர் உயிரை உருவாக்குமா? உருவாக்கும்.

உயிருள்ள தாய் உயிருள்ள குழந்தையைப் பெற்றெடுப்பது போல ஆழ்வார்களின் உள்ளத்திலுள்ள ஆன்மா என்னும் உயிரானது பரமாத்மா எனும் உயிரை வெளிப்படுத்தும்.அத்தகைய  உயிர் சொற்களின் தொகுப்புதான் பாசுரங்கள்.அதனால்தான் ஈன்ற தாய் என்று நம்மாழ்வாரை நாதமுனிகள் சொன்னார். மடிகட்டிய தாய்ப் பசுவானது தன்னுடைய கன்றை   நினைக்கும்பொழுது சுரப்பார் இல்லாமல் இயல்பாகவே பால் சுரக்கும்.
கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி  நினைத்து முலை வழியே நின்று பால் சோரும் என்றாள், ஆண்டாள்.

அதைப்போலவே பகவானை நினைத்து, அவன் குணங்களை, வடிவை, உள்ளங்களில் அசைக்கும் பொழுது, மடியிலிருந்து பால் சுரப் பதுபோல இவர்களிலிருந்து வாக்கிலிருந்துபாசுரக்கும் என்பதால் ஆழ்வார்களின் திருவாக்கை  பாசுரங்கள் என்று அழைக்கிறார்கள். பாலுக்கு அமுதம் என்று பெயர். ஆழ்வார்களின் பாசுரங்களும் அமுதம் என்றே பெயர் அதனாலேயே சுவாமி நாதமுனிகள், இந்த பாசுரங்களை பக்தாம்ருதம் (பக்தர்கள் உண்ணும் அமுதம்) என்று வர்ணித்தார்.

சடகோபர் அந்தாதியில்,   
கவிப்பா அமுத இசையின் கறியொடு
கண்ணன் உண்ணக்குவிப்பான் குருகைப்பிரான் சடகோபன் என்றார் கம்பர்.
சொற்களை அமுதம் என்பது அது தரும் உயிர் உணர்ச்சியாலல்லவா.

எனவே, பாசுரங்கள் எல்லாமே உயிர் சொற்களைக் கொண்டது. உணர்ச்சியை உண்டாக்கி, உயிர் நிலைபெற்றிருப்பதை உணர்த்துவது. காரணம், பாசுரங்களைப் படித்தால் முதலில் உணர்ச்சி வரும் அந்த உணர்ச்சிதான், நாம் உயிரோடு இருக்கிறோம் என்பதையே காட்டும் அசோகவனத்தில் சீதை ராமனை நினைத்து வருந்தி, வாடி, இனி அவன் வரவே மாட்டான் என்று நினைத்து, தன்னுடைய உயிரை போக்கிக்கொள்ள நினைக்கிறாள்.

அதற்கான முயற்சியை செய்கிறாள். அப்போது அங்கு இருந்த அனுமன் இவள்  நிலையைக்  கண்டு, இவளுடைய உயிரைக்  காப்பாற்றியாக வேண்டும் என்று முடிவெடுக்கிறார். மெல்லிய குரலில் ராமநாமத்தைச்  சொல்லுகின்றார். அந்த ராமநாமமானது சீதையின் தற்கொலை முடிவை மாற்றுகிறது. அப்பொழுது சீதை சொல்வதாக ஒரு பாடல் வருகிறது.

“இந்த அசோகவனத்தில் ராமருடைய நாமத்தை  வேறு யார் சொல்ல முடியும்? அரக்கர்களே ஒருவேளை மாறுவேடம் போட்டுக்கொண்டு இங்கு வந்து இருக்கிறார்களா? அல்லது அமரர்கள் யாராவது இங்கு புகுந்து விட்டார்களா? இந்த நாமத்தைச் சொல்லிய வடிவத்தைப் பார்த்தால், குரங்கு வடிவமாக இருக்கிறது. சரி யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். என்னுடைய தலைவன் இராமன் திருநாமத்தைச் சொல்லி என்னுடைய சாவைத்  தடுத்து நிறுத்தி உதவி செய்தார்களே! இதைவிட வேறு  உதவி என்ன செய்ய முடியும்?”

அரக்கனே ஆக; வேறு ஓர் அமரனே ஆக;
அன்றிக்
குரக்கு இனத்து ஒருவனேதான் ஆகுக;‘
கொடுமை ஆக;
இரக்கமே ஆக; வந்து, இங்கு, எம்பிரான்
நாமம் சொல்லி,
உருக்கினன் உணர்வை; தந்தான் உயிர்;
இதின் உதவிஉண்டோ
இந்தப் பாடலில் “உருக்கினன்  உணர்வை; தந்தான் உயிர்” என்பது உயிர்ச்சொல்.

முதலில் உணர்வு உருக வேண்டும் அதனால் தான் இதயத் துடிப்பு நின்றுவிட்டது என்று தோன்றுகின்ற நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றுவதற்கு, முதல் சிகிச்சையாக, கால் கைகளை தேய்த்தும், மார்பினை அழுத்தியும் உணர்வை உண்டாக்குகிறார்கள் அந்த உணர்வு அசைவை தருகிறது அந்த அசைவு வந்துவிட்டால் உயிர் இருக்கிறது என்று பொருள் அதே உணர்ச்சியை ஆழ்வார்களின் பாசுரமும் தருவதால் ஆழ்வார்களின் பாசுரங்களை உயிர்சொற்கள் என்று சொல்லலாம்.ஒரு சொல் உயிர்சொல் என்றால் அச் சொல்லானது அதன் உயிர்நிலையை காட்டிவிடும்.

உயிர் சொற்களால் பெய்த பாசுரங்களை அருளிச் செய்தவர்கள் ஆழ்வார்கள் என்று பார்த்தோம் அவர்களுடைய பாடல் தொகுப்பை நாலாயிர திவ்ய பிரபந்தம் என்றே அழைக்கிறோம் . ஆழ்வார்களின் பிரபந்தங்களை தமிழ்மாலைகள் எனவும், சந்தமிகு தமிழ்மறை எனவும் பதின்மர்கலை எனவும் குறிப்பதுண்டு.இதிலுள்ள பிரபந்தம் என்கிற சொல் உயிர்ச்சொல்.

அதிலும் பந்தம் என்பது உயிருக்குள் உயிரான சொல். பிரபந்தம் என்பது  நூல் வடிவங்களில் ஒன்றை குறிப்பிட்டாலும் அதில் உள்ள பந்தம் என்கிற சொல்லை திவ்ய என்கிற சொல்லோடு சேர்த்து பார்த்தால்  திவ்ய பந்தம் என்று வரும். திவ்யம் என்றால் தெய்வத்தன்மை வாய்ந்தது என்று பொருள். பந்தம் என்பதற்கு மூன்று வகையான பொருள் உண்டு.

1 கட்டு
2 உறவு
3 தீவட்டி

இப்பொழுது இந்த வார்த்தையை நாம் ஒன்றோடு ஒன்று இணைத்துப் பார்த்தால் எத்தனை உயிர்ப்பொருள்கள் நமக்குத் தெரியவருகின்றன
1.திவ்ய பந்தம் தெய்வத் தன்மை யோடு கூடிய உறவு அல்லது தெய்வத்தோடு கூடிய உறவு. (ஜீவாத்மா பரமாத்மாவோடு உள்ள உறவு) நிலையைபேசுகின்ற நான்காயிரம்பாடல்களின் தொகுப்பு என்று  பொருள் வரும்.  

2.பந்தம் என்பதற்கு கட்டுதல் என்ற பொருளை எடுத்துக் கொண்டால் தெய்வத் தன்மை வாய்ந்த ஒரு பொருளோடு கட்டுதல் என்று பொருள். அப்படி  4000 பாசுரங்களைப்  படித்தால் நம்மை எம்பெருமானிடம்  அழைத்துச்சென்று சேர்த்து கட்டிவைத்து விடுகிறதல்லவா  3.மூன்றாவது தீவட்டி என்ற பொருளை எடுத்துக் கொள்ளுங்கள். தீவட்டி, வழியையும்,அந்த வழி மூலமாக சேரவேண்டிய இடத்தையும், யாரைச்  சேருகிறோம் என்பதையும் காட்டும் வெளிச்சம் தருகிறது அல்லவா.

ஜீவாத்மா செல்ல மார்க்கத்தையும், அந்த மார்க்கத்தின் மூலமாக அடைய வேண்டிய எம்பெருமானையும்  காட்டுகின்ற வெளிச்சம் இந்த பாசுரங்கள் என்பதால்  வெளிச்சம் தரும் நான்காயிரம் புனிதமான பாசுரங்கள் என்றும் நாம் எடுத்துக் கொள்ளலாம் எனவே ஒரு சொலலுக்குள் உள்ள உயிர் நாடியை பிடித்து விட்டால், அந்த சொற்களின் பொருள் நமக்கு தெற்றென விளங்கிவிடும்.

மற்ற உறவுகள் நீங்கி, எம்பெருமானிடம் உறவு நிலைக்க வேண்டும் என்றால் இந்த பாசுரங்களைப் படிக்க வேண்டும் என்கிற பொருளில் பிற பந்தங்கள் நீங்க பிரபந்தம் படி என்றும் சொல்வார்கள் இனி இத்தலைப்பின் நிறைவாக  ஆழ்வார்கள் என்கிற சொல்லின் உயிர் நாடியைப்  பார்க்க வேண்டும்.
பொதுவாக ஆழ்வார்களின் பாசுரங்களை நாலாயிர திவ்ய பிரபந்தம் என்று சொல்லுகின்ற மரபு இல்லை ஆழ்வார்களின் பாசுரங்களின் தொகுப்பை அழகிய தமிழில் அருளிச்செயல் என்றுதான் சொல்லுவார்கள் அருளிச்செயல் சேவைகள் என்றுதான் வைணவத் திருக்கோயில்களிலும், வைணவர்களின் திருமாளிகைகளிலும் சேவிப்பார்கள்.

நாலாயிர திவ்ய பிரபந்தம் என்கிற வார்த்தையை அவர்கள் பெரும்பாலும் பயன்படுத்து வதில்லை. எம்பெருமானுடைய திருவருளைப் பெற வேண்டும் என்பதற்காக ஆழ்வார்கள்  அருளால் பிறந்த பாடல்கள் என்பதால் இவற்றை அருளிச் செயல் என்றே வைணவர்கள் சொல்லும் வழக்கம் உண்டு.
அனேகமாக பதினைந்தாம் நூற்றாண்டு வரை ஆழ்வார்கள் என்கிற சொல் அதிகம் புழங்கத் தொடங்கியதாகத்  தெரியவில்லை  இந்தியவியல் மொழியியல் ஆய்வாளர் திரு. எஸ். பழனியப்பன் தன் ஆய்வுக் கட்டுரையில் முதலில் ஆள்வார் என்கிற சொல்தான் வழங்கி பின் ஆழ்வார் என்று மாறி இருக்கிறது என்று குறிப்பிடுகிறார் ஆழ்வார் என்கிற சொல்லின் உயிரான பொருள் இறைவனின் குணக்கடலில் ஆழ்ந்தவர்கள் பக்தி நிஷ்டர்கள்.

இப்பதம் முதலில் திருமழிசை ஆழ்வார் பயன்படுத்துகின்றார். ஒரு தத்துவத்தின் ஆழ் பொருளைச்  சொல்பவர்கள் ஆழ்வார்கள் என்ற பொருளில்...
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளை சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து - என்று நான்முகன் திருவந்தாதி முதல் பாசுரத்தில் பாடுகின்றார்.
தத்துவத்தின் ஆழ் பொருள்களை கடலில் மூழ்கி முத்துக்களை எடுத்துக் கொடுப்பதுபோல் தமிழில் கொடுத்தவர்கள் ஆழ்வார்கள் என்கிற பொருள்படும்படியாக அவர் பாடி இருக்கிறார்.

எனவே, இறைவனைப் பற்றிய ஆழமான தத்துவப் பொருள்களை சொன்னவர்கள் ஆழ்வார்கள் என்று எடுத்துக்கொள்ளலாம் .
ஆழ்வார்களை சடகோபன், கலியன், பொய்கையார், குலசேகரன், தொண்டரடிப்பொடி, என்று பல்வேறு பெயர்களால் அழைத்தார்கள் தவிர ஆழ்வார்கள் என்று கம்பீரமாக பெயர்சூட்டி அழைத்தவர்களில் சிறப்பானவர் மணவாளமாமுனிகள் அவர்தான் தம்முடைய உபதேசரத்தினமாலையில்  ஆழ்வார் என்கிற பதத்தையும் அவர்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்ய பிரபந்த பனுவலை அருளிச் செயல் என்றும் பல்லாண்டு பாடுகின்றார்
ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி
தாழ்வாதுமில் குரவர்தாம் வாழி
ஏழ்பாரும் உய்ய அவர்கள் உறைத்தவை
கள்தாம் வாழி
செய்ய மறை தன்னுடனே சேர்ந்து.”  (பாசுரம் 3, உபதேசரத்தினமாலை)
வடமொழி வேதங்களோடு இணைந்து தமிழ் மறையாய் விளங்குகின்ற அருளிச்செயலும்,   அருளிச்செய்த ஆழ்வார்களும் வாழவேண்டும் என்று போற்றுகின்றார்.

எனவே ஆழ்வார்கள் வேறொன்றில் கண்வையாதே பகவானின் எல்லையற்ற குணங்களாகிய அமுத வெள்ளத்தில் ஆழ்ந்தவர்கள். அவனையே நினைந்து முதிர்ச்சியான பக்தியிலே மூழ்கியவர்கள். நம்மாழ்வார் இறையருளில் ஆழங்காற்பட்ட நிலையை, பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும் காலாழும்; நெஞ்சழியும்; கண்சுழலும் என்று  பெரிய     திருவந்தாதிப் பாசுரம் ஒன்றில்  குறிப்பிட்டுள்ளார்.

அப்படி மூழ்கி எழுந்தபோது கிடைத்த முத்துக்களைப்   பக்திப் பனுவல்களாகப்  பாடி கொடுத்தவர்கள். இப்படிப் பாடிக்கொடுத்த ஒவ்வொரு பாசுரங்களிலும் உயிர் சொற்கள் பரவிக் கிடக்கின்றன அந்த உயிர் சொற்கள் நம்முடைய(ஜீவாத்மா) உயிரையும் அடையாளம் காட்டும். பரமாத்மாவின் (உயிரையும்) நிலையையும் அடையாளம் காட்டும்.

பேராசிரியர்
எஸ். கோகுலாச்சாரி

Tags :
× RELATED இயற்கை வடித்த லிங்கம்