×

ராவணனை மிரட்டிய பூத நாராயணர்

சுருளிமலை - தேனி

ஒரு முறை சிவனை நோக்கி ராவணன் கடுந்தவம் புரிந்தார். ஈரேழு உலகம், அண்ட சராசரங்கள், நவக்கிரகங்கள், தேவர்கள் யாவரும் எனக்கு கீழ் படிந்து நடக்கவேண்டும் என்ற வரத்தைப் பெற்றான். அந்த வரத்தின் காரணமாக தேவர்கள் முதலான யாவரையும் துன்புறுத்தி வந்தான். ராவணனின் கொடுமைகளை தாங்க முடியாத தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் முறையிட சென்றனர். இத்தகவலை நாரதர் மூலம் அறிந்த ராவணன், தேவர்களை துன்புறுத்தி இழுத்து வர, தனது அரக்கர் கூட்டத்துடன் புறப்பட்டான்.

அடர்ந்த கானகத்தின் நடுவே ஓங்கி உயர்ந்து வளர்ந்திருந்த புற்றின் முன்னே தேவர்களைக் காக்கும் பொருட்டு மகா விஷ்ணு பூத சொரூபத்துடன் விண்ணுக்கும், மண்ணுக்குமாக எழுந்து நின்றார். அவரது பூதகோலத்தைக் கண்டு பயந்த ராவணன் தன் அரக்கர் கூட்டத்துடன் திரும்பிச் சென்றான். பூத சொரூபத்துடன் ஆங்காரத்தோடும், உக்கிரத்தோடும் நின்ற மகாவிஷ்ணுவிற்கு முன் பல வகையான பண்டங்கள் செய்து வைத்து அன்னம் படைத்து துதி பாடி அவரை குளிரச்செய்தனர்.

அதன் பின்னர் மகாவிஷ்ணு பூத தோற்றத்தை மாற்றி, சாந்த சொரூபன் ஆனார். இதையடுத்து அவ்விடம் விட்டு அகன்ற பெருமாள், ஒளியாக தேவர்களுக்கு காட்சி கொடுத்தார். தேவர்களுக்கு பூதநாராயணனாக காட்சி கொடுத்த பெருமாளே நின்ற கோலத்தில் அருளாட்சி புரியும் தலமே சுருளிமலை. இந்த சுருளிமலை தேனி மாவட்டத்தில் உள்ளது. இங்குள்ள சுரபி நதியில் நீராடி, நாராயணனை வழிபட பாவங்கள் நீங்கி, புண்ணியம் கிடைக்கும்.

தொகுப்பு: ஆர்.அபிநயா

Tags : Bhuta Narayan ,
× RELATED இயற்கை வடித்த லிங்கம்