
சென்னை: ‘காதல் என்பது பொதுவுடமை’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. வினீத், ரோகிணி, லிஜாமோல் ஜோஸ், கலெஸ், அனுஷா, பாடலாசிரியர் உமாதேவி, ஒளிப்பதிவாளர் சரவணன், எடிட்டர் டேனி, இசையமைப்பாளர் கண்ணன் நாராயணன், இந்த படத்தை வெளியிடும் தயாரிப்பாளர் தனஞ்செயன், இயக்குனர் ஜெயப்பிரகாஷ், சிறப்பு விருந்தினர்களாக நடிகர் மணிகண்டன், இயக்குநர் சசி, இயக்குநர் பாலாஜி தரணிதரன், நெல்சன் வெங்கடேசன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
நடிகை ரோகிணி பேசும்போது, ‘‘இங்கேயும் மலையாளப் படங்கள் மாதிரி நல்ல படங்கள் எடுக்க முடியும், அதை ஆதரிக்க தமிழ் ஆடியன்ஸ் ரெடியாக இருப்பாங்க என்பதை நாம் நிரூபிச்சுக் காட்டணும். எல்லாத்தையும் விட, பேசாப்பொருளைப் பேசுறதுதான் ஒரு கலையோட வேலையே. அதுதான் கலையின் பொறுப்பும் அழகும். அதை நாங்க செய்திருக்கிறோம்’’ என்றார். நடிகர் மணிகண்டன் பேசுகையில், ‘‘இயக்குனர் ஜெயபிரகாஷ் தன்னுடைய கொள்கையில் அதீத பிடிப்போடு இருப்பவர். அவருக்கு திரைப்பட விழாவில் வெளியிடும் படத்திற்கும், சாதாரணமாக வெளியிடப்படும் கமர்ஷியல் திரைப்படத்திற்கும் இடையில் உள்ள இடைவெளியை சரி செய்ய நினைத்து கோபத்துடன் இதனை எடுத்துள்ளார்’’ என்றார்.
