
நடிகையும், தயாரிப்பாளரும், இயக்குனருமான கங்கனா ரனவத், சமீபத்தில் தனது சோஷியல் மீடியாவில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் ஏஐ போட்டோவுக்கு எதிரான கருத்தை தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் நடந்து வரும் கங்கனா ரனவத்தின் போட்டோ சமீபத்தில் வைரலானது. எப்போதுமே சேலையில் நாடாளுமன்றம் செல்லும் வழக்கம் கொண்ட அவர், அந்த போட்டோவில் கோட் சூட், டை அணிந்திருந்தார். பிறகுதான் அது ஏஐ போட்டோ என்று தெரியவந்தது. இது கங்கனா ரனவத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் கடும் கோபமடைந்த அவர், எச்சரிக்கை விடுக்கும் தொனியில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘உண்மையிலேயே இவை நான் நாடாளுமன்றத்தில் சேலை அணிந்து சென்றபோது எடுத்த போட்டோதான். எனது போட்டோக்களை ஏஐ மூலம் மாற்றுவதை உடனடியாக நிறுத்துங்கள்.
இது வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு ஒரு விதிமீறல். தினமும் நான் கண் விழிக்கும்போது, என்னை நானே பல உடைகளிலும், பலவிதமான ஒப்பனைகளிலும், திருத்தப்பட்ட போட்டோக்களிலும் பார்க்கிறேன். மற்றவர்களுக்கு ஆடை அணிவிப்பதை ஏஐயில் மேற்கொண்டுள்ள நபர்கள், உடனே அப்படி செய்வதை நிறுத்த வேண்டும். தயவுசெய்து ஏஐ மூலம் திருத்தம் செய்வதை நிறுத்துங்கள். நான் எப்படி இருக்க வேண்டும், என்ன உடை அணிய வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும். அது முற்றிலும் எனக்கான தனிப்பட்ட உரிமை. அதில் யாரும் தலையிட வேண்டாம்’ என்றார்.

