×

மரத்தினுள் நின்றருளும் மலையப்பன்

கருங்குளம், தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் மலையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வெங்கடாசலபதி கோயில் கொண்டுள்ளார். இக்கோயில் சுமார் 1200 வருடங்களுக்கு முந்தைய கோயில். தாமிரபரணி ஆற்றின் தெற்குக் கரையில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சந்தன மரக்கட்டையில் தன்னை நிலை நிறுத்தி அருட்பாலிக்கிறார் வெங்கடாசலபதி. இத்தல வெங்கடாசலபதிக்கு தினமும் திருமஞ்சனம் என்பது சிறப்பு. சுபகண்டன் என்னும் அரசனுக்கு தீராத நோய் ஏற்பட்டு, அந்நோயின் காரணமாக உடல் வலியால் மிகவும் அவதிப்பட்டார். அதன் காரணமாக திருப்பதி சென்று ஏழுமலையானிடம் தனது உடல் உபாதையிலிருந்து தன்னை விடுவிக்கும்படி மனமுருக வேண்டிக்கொண்டார்.

அவரது கோரிக்கையை ஏற்ற திருப்பதி வேங்கடவன், சந்தன மரத்தால் ஆன தேர் ஒன்றை செய்யும்படியும், அவ்வாறு தேர் செய்யும்போது இரண்டு சந்தனக் கட்டைகள் மீதமிருக்கும் எனவும், அந்த சந்தனக் கட்டைகளை, தென்பாண்டி நாட்டிற்கு எடுத்துச் சென்று, கருங்குளத்தில் உள்ள வகுளகிரிமலையில் பிரதிஷ்டை செய்தால் அங்கு வாழும் எல்லா மக்களும் நல்வாழ்வு பெறுவர் எனவும், அவ்வாறு செய்தால் மன்னரின் உடல் உபாதை சரியாகும் எனவும், திருமலையின் நாயகன், மன்னரின் கனவில் வந்து கூறினார். இறைவனின் அருள்வாக்கின்படியே மன்னர் தேர் செய்து மீதமான இரண்டு சந்தனக் கட்டைகளை கருங்குளத்தில் பிரதிஷ்டை செய்தார். அதன் காரணமாக அவரது வேதனையும் தீர்ந்தது. இக்கோயில் தலவிருட்சம் புளியமரம். இந்த மர இலைகள் மாலை நேரத்திலும் சுருங்குவதில்லை.

அதனாலேயே இந்த மரத்தினை உறங்காப் புளி என்றும், இக்கோயில் கிணறு எந்த காலத்திலும் வற்றியதில்லை என்பதால், தண்ணீர் ஊற வேண்டிய அவசியம் இல்லாததால் ஊறாக் கிணறு என்றும் அழைக்கப்படுகின்றன. வகுளகிரி மலையின் மேல் அமைந்துள்ளதால் வகுளகிரி க்ஷேத்திரம் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது. மன்னனுக்கு பிணி தீர்த்த பெருமாள் இந்த வெங்கடாசலபதி என்பதால் மருத்துவர்களுக்கெல்லாம் மருத்துவராக இவர் விளங்குகிறார். இதனால் பல இருதயநோய் சிகிச்சை நிபுணர்கள் இத்தலம் வந்து பெருமாளை வணங்கி விட்டு, தாங்கள் செய்யும் மருத்துவம் எல்லோரது நோய்களையும் சரிபடுத்த வேண்டும் என்று வேண்டிச் செல்கின்றனர்.

அது மட்டுமன்றி மருத்துவம் படித்த பயிற்சி மருத்துவர்கள் புதிதாக பணியில் சேரும் முன்பு இச்க்ஷேத்திரம் வந்து வணங்கிச் செல்கின்றனர். புதிதாக மருத்துவம் படிக்கும் மாணவர்களும் இச்க்ஷேத்திரம் வந்து வேங்கடவனை வேண்டிச் செல்கின்றனர். சித்திரை மாதம் பௌர்ணமி விழா இங்கு வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதத்தின் எல்லா சனிக்கிழமைகளிலும் கருட சேவை நடைபெறுகிறது. பவித்ரோத்சவம் ஜூலை மாதத்தில் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. மாசி மகமும் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இக்கோயில் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில் உள்ள கருங்குளத்தில் அமைந்துள்ளது. திருநெல்வேலியில் இருந்து 18 கி.மீ.தொலைவிலும், தூத்துக்குடியில் இருந்து 40 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

தொகுப்பு: ச. சுடலை குமார்

Tags : Malayappan ,
× RELATED குட்கா விற்ற மளிகை கடைக்கு சீல்