×

யோகங்களும் தோஷங்களும் தரும் கிரகங்கள்

ஜோதிட முரசு மிதுனம் செல்வம்

வர்கோத்தம யோகம்

ஜாதக பலம் என்பது ஜாதக கட்டங்களில் கிரகம் இருக்கும் அமைப்பை வைத்துத் தெரிந்து கொள்வதாகும். ஒரு கிரகம், பல கிரகங்கள் அல்லது பாவம் அல்லது வீடு. பலமாக இருக்கிறதா, யோகமாக இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள ஜோதிட சாஸ்திரத்தில் பல நுணுக்கமான வழிமுறைகள் உள்ளன. அந்த வகையில் வர்கோத்தமம் என்பது மிகவும் முக்கியமான அம்சமாகும். ஒரு ஜாதகத்தை தூக்கி நிறுத்துகின்ற வல்லமை, ஆற்றல் உடைய அமைப்பாகும். வர்க்கோத்தமம் என்றால் ராசிக் கட்டத்தில் எந்த ராசியில் ஒரு கிரகம் இருக்கிறதோ, அந்த கிரகம் நவாம்ச கட்டத்தில் அதே ராசியில் இருப்பதை வர்கோத்தமாம்சம் என்று சொல்கிறோம். உதாரணமாக ஒருவரின் ராசிக்கட்டத்தில் கடக ராசியில் புதன் இருந்தால், அந்த புதன் நவாம்ச கட்டத்திலும் கடக ராசியில்  இருந்தால் புதன் வர்கோத்தமம் அடைந்து இருப்பதாக அர்த்தம் அதாவது புதன் ஜாதகத்தில் பூரண பலத்துடன் இருக்கிறார். ஒரு ஜாதகத்தில் ஒரு கிரகம், இரண்டு கிரகம், மூன்று கிரகம் கூட வர்கோத்தமம் பெறும் வாய்ப்பு உள்ளது.

அதேபோல் ராசி வர்கோத்தமம், லக்ன வர்கோத்தமம் அடைவதும் உண்டு. ஒரு ஜாதகத்தில் இரண்டு கிரகங்கள் வர்கோத்தமம் அடைந்திருந்தால் பல வகையான அதிர்ஷ்ட வாய்ப்புக்கள், வசதி, பட்டம், பதவி என பல பாக்கியங்கள் கிடைக்கும். மேலும், எந்த லக்னம் மற்ற அமைப்புகள் எப்படி உள்ளது என்பதைப் பொறுத்து யோக அம்சங்கள் வேலை செய்யும். பொதுவாக ஒரு கிரகம் வர்கோத்தமம் அடைந்தால் என்ன பலன்கள் இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

லக்னம் :

பொதுவாக லக்னம் வர்கோத்தமம் அடைவது மிகவும் சிறப்பாகும். மிக எளிதாக தலைமை பொறுப்புக்கு வந்து விடுவார்கள். உயர்ந்த லட்சியம், பெயர், புகழ், கீர்த்தி, ஆயுள், பெருந்தன்மை இருக்கும்.

சந்திரன்:

சந்திரன் வர்கோத்தமம் அடைவது என்பது ராசி வர்கோத்தமம் என்பதாகும். பெண்கள், தாய் வழி ஆதரவு இருக்கும். அழகு, கவர்ச்சி இருக்கும். கதை, கவிதை, பாடல்கள், இசைத்துறை போன்றவற்றில் பிரபலமடைவார்கள். சிறந்த கலா ரசிகர்களாக இருப்பார்கள். தனிமையை விரும்புவார்கள். இயற்கையை நேசிப்பவர்கள்.

சூரியன் :

உயர்ந்த கொள்கை, லட்சியம் உடையவர்கள். பொது வாழ்க்கை, பொதுத் தொண்டில் ஈடுபடுவார்கள். உயர்ந்த பதவிகள் இவர்களை தேடி வரும். அரசாங்கம், அரசியல் தொடர்புகள் உண்டாகும்.

செவ்வாய் :

அதிகாரம், ஆற்றல், செயல்திறன் மிக்கவர்கள். பிடிவாதம் வளைந்து கொடுக்காத தன்மையுடையவர்கள் மன வலிமை, உடல் திறன் இருக்கும். விளையாட்டுத் துறையில் புகழ் பெறுவார்கள். ராணுவம், காவல்துறை, வனத்துறை, தீயணைப்புத்துறையில் பணிபுரியும் அமைப்பும் உண்டு.

புதன்:

வித்தையின் நாயகன், கல்விக்கு அதிபதி, கணக்கன், பேச்சாற்றல், எழுத்தாற்றல், மூளை, புத்தி, சிந்தனை, செயல்திறன், மதிநுட்பம் என அனைத்திற்கும் காரண கர்த்தா. கம்ப்யூட்டர் தொழில் நுட்பங்கள். சாஸ்திரங்கள், ஆராய்ச்சிகள் என எங்கும் எதிலும் புதன் ஆளுமை இருக்கும்.

குரு:

தலைமைப் பதவி, நீதித்துறை, நிதித்துறை, வழக்கறிஞர்கள், நல்ல சிந்தனைகள், பக்தி, ஞானம், சாஸ்திர சங்கீதம், உயர்ந்த பதவிகள், கௌரவ பதவிகள், அறக்கட்டளைகள், பள்ளி, கல்லூரி சம்பந்தமான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும்.

சுக்கிரன்:

இயல், இசை, நாட்டியம், கலைத்துறை, சுக போகம், அழகு கவர்ச்சி, நளினம், கௌரவப் பதவிகள், இல்லறம், காமசுகங்கள். வசதி படாடோபமான உச்சபட்ச உயர்தரமான வாழ்க்கை என பலவகையான உயர் அந்தஸ்துக்களை வாரி வழங்கும் அசுர குருவாவார்.

சனி:

இரும்பு, இயந்திரம், தளவாடங்கள், எண்ணெய் வகைகள், கடின உழைப்பு, பொறுமை, சகிப்புத்தன்மை, தொண்டு உள்ளம், பொது சேவை, தலைமைப் பதவி, தொழில் அதிபர்கள், அரசியல் தலைவர்கள் ஆயுள்காரகன் என பல வகைகளில் சனியின் அம்சம் இருக்கும்.

ராகு :  

வீரதீரச் செயல்கள், விளையாட்டுத்துறை, பிடிவாத குணங்கள், மன வலிமை, அதீத துணிச்சல், வாழ்க்கையில்  எதிர்பாராத உயர்வுகள் திருப்பங்கள், பதவிகள், கலைத்துறை, நிழற்படம், அனிமேஷன், தொலைத்தொடர்புத்துறை, வெளிநாட்டு தொடர்பு, வாசம், எதிர்பாராத அசுர வளர்ச்சியை தரக் கூடியவர்.

கேது:

ஆன்மிகம், சாஸ்திர ஞானம், இசை ஞானம், மருத்துவம், பட்டம், பதவி, ஆராய்ச்சி படிப்புக்கள், ரசாயணம், கோடீஸ்வர யோகத்தை தரக்கூடிய வல்லமைமிக்க கிரகமாகும். ஆன்மிகச் சிந்தனைகள், சொற்பொழிவாளர்கள், அறங்காவலர்கள். வேதம், வேதாந்தம், ஆலயம், அறக்கட்டளைகள் என பல விஷயங்களுக்கு காரகன். மதம், மடாதிபதிகள் மற்றும் ஞான மோட்சத்தை அருளக் கூடிய கரிகம்.

சுப மங்கள ராஜயோகம் - விபரீத ராஜயோகம்

காலநேரம் கூடி வரும்போது எல்லாம் நடக்கும். அவன் யோகம். மண்ணைத் தொட்டாலும் பொன்னாக குவிகிறது. இதெல்லாம் ஒருவரின் உயர்ந்த அந்தஸ்தைப் பற்றி நாம் ஒருவருக்கொருவர் பேசும் வழக்கு மொழியாகும். இந்த நேரம், காலம், அம்சம், அமைப்பு, பாக்கியம், அதிர்ஷ்டம், கொடுப்பினை, யோகம் என பலர் பல மாதிரி சொல்கிறார்கள். இது ஒருவரின் உயர்வான ராஜயோக வாழ்க்கையை குறிக்கிறது. அப்படி என்றால் அது ஏன் ஒரு சிலருக்கு மட்டும் வருகிறது. இன்னும் சிலருக்கு அள்ள அள்ள குறைவில்லாமல் கிடைக்கிறது. இதன் சூட்சமம் என்ன.

அவரவர் வினை வழி வந்தனர் யாவரும் என்பது திருமுறை வாக்கு. அதாவது நாம் வாங்கி வந்த வரம் என்று சொல்லலாம். விதைத்தது முளைக்கும். விதிப்படி நடக்கும். நிகழ்வுகள் யாவும் நிச்சயிக்கப்பட்டவை. அதை நமக்குரிய கால நேரத்தில் வழங்கி நம்மை அனுபவிக்கச் செய்வதுதான் ஜாதகம், கிரகங்கள், கட்டங்கள், தசாபுக்திகள் போன்ற இந்த விஷயங்களெல்லாம் நம் பூர்வ ஜென்ம கர்மவினைப்படி ஒருவருக்கு அமைவதாக யோகீஸ்வரர்கள், சப்த ரிஷிகள், இடைக்காடர் முதல் புலிப்பாணி மாற்றும் எண்ணிலடங்கா முனிவர்கள் ஜோதிடச் சுவடிகள் மூலம் தெரிவித்துள்ளார்கள்.

ராஜயோகம் என்பது ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள கிரக அமைப்புக்கள், சேர்க்கைகள், பார்வைகள் மூலம் செல்வத்திருமகள். லட்சுமி தேவியின் ஆசிர்வாதம், அனுக்கிரகமாகும். சுபகிரக யோகம் என்ற வரிசையில் பல நூற்றுக்கணக்கான கிரகச் சேர்க்கைகள் உள்ளது. பஞ்சமகா புருஷ யோகங்கள் உள்ளது. ஒரு சுப கிரகமும் இன்னொரு சுப கிரகமும் சேரும்போது, பார்க்கும்போது பல வகையான யோகங்கள் ஒருவருக்கு வேலை செய்கிறது. காலங்காலமாக தொன்றுதொட்டு பல நூற்றுக்கணக்கான யோக அம்சங்கள் இருந்தாலும், தற்காலத்தில் அனுபவரீதியாக சில முக்கிய புகழ்மிக்க யோகங்கள் பெரும்பான்மையான ஜாதகங்களில் இருக்கிறது. மேலும், அதற்குண்டான பலன்களும் கிடைக்கின்றது.

முக்கியமாக கஜகேசரி யோகம், தர்ம கர்மாதிபதி யோகம், சுபகத்திரியோகம், பர்வதயோகம், கிரக மாலையோகம், நிஷேபயோகம், சந்திரமங்கள யோகம், பௌர்ணமி யோகம் , அமாவாசை யோகம், குரு மங்கள யோகம், குரு சந்திர யோகம். கிரக பார்வை, பரிவர்த்தனை, சார யோகம், வர்கோத்தமம் என பல வகையான ராஜயோகங்கள் உள்ளது. ஒரு ஜாதகத்தில் 1,5,9 ஆகிய இடங்களை மிக சிறப்பாக சொல்வார்கள். அதாவது லக்னாதிபதி, பஞ்சமாதிபதி, பாக்கியாதிபதி ஆகிய இந்த மூன்று கிரகங்கள் நல்ல பலமான நிலையில் ஒருவருக்கொருவர் சம்பந்தம் பெறுவது நேரடியாக சுபமங்கள ராஜயோகமாகும்.

Tags : Planets ,
× RELATED ஜோதிட ரகசியங்கள்