×

ஆதி முதல்வனான மகாகணபதி

ஸ்ரீவித்யா எனும் சக்தி வழிபாடே மகாகணபதி மந்திரத்தால் ஆரம்பிக்கிறது. உலகிற்கே தாய் தந்தையரான ஈசனுக்கும் அம்பிகைக்கும் முதல் குழந்தை பிள்ளையார்.

ஒருவன் தனக்கு முன்பின் தெரியாதவர்களிடத்தில் பழக வேண்டுமானாலும், அவர்களுடைய திருப்திக்கோ, ப்ரியத்திற்கோ பாத்திரமாகவேண்டுமானாலும் அது லேசானதல்ல. உபாயத்தினால் மட்டுமே முடியும். அவர்கள் குழந்தையை யார் அன்புடன் கொஞ்சினாலும் அதன் தாய் தந்தையர் அவர்களுக்கு அறிமுகமில்லாவிட்டாலும் தங்கள் பிரியத்தைக் காட்டுவது இயல்பு.

அதுபோல் ஜகத்துக்கே தாய் தந்தையரான பார்வதி பரமேஸ்வரர்களின் அருளை நாம் அடையவேண்டும். அதற்கு அவர்கள் குதூகலத்துடன் இருக்கும் சமயம் பார்த்துப் பெறவேண்டும். அவர்கள் இருவரின் அன்பே உருவானவர் விநாயகர். அவர் மூலம் இறைவனின் அருளையும் சக்தியையும் பெறலாம் என்பது பொருத்தமே.

விநாயகருக்கு பிரியமான முதல் நாமமான சுமுகன் என்பது ஜகத்பிதாவிற்கும் ஜகன்மாதாவிற்கும் உண்டான மந்தஸ்மிதத்தில் கணபதி ஆவிர்ப்பவித்ததை சுட்டிக் காட்டுகிறது. விக்னேஸ்வரர் விக்னங்களைத் தருவது பூரண ஆசீர்வாதமாக என்னை வந்தடைகிறது. பேரானந்தம் கொள்ளச்செய்கிறது. மகாகணபதியே எங்கள் குல தெய்வம் என கண்ணன் ராதையிடம் விநாயகரைப் பற்றி கூறியுள்ளார்.

அவர் பெரு வயிறு படைத்தவராயினும் திருப்தியுள்ளவர். அவர் வயிற்றுக்கும் வாட்டமில்லை. திருப்திக்கும் குறைவில்லை. அவர் கோயிலில் இருந்தால் என்ன? குளக்கரையில் இருந்தால் என்ன? மரத்தடியில் இருந்தால் என்ன? மலைமேல் இருந்தால் என்ன? இந்த சம தர்ம மூர்த்திக்கு எதிலும் ஒரே வகையான திருப்திதான்.

இவரை வித விதமான பட்சணங்களோடு அர்ச்சித்து ஆராதனை செய்தாலும் சரி நிந்தா ஸ்துதி என திட்டினாலும் சரி அவர் ஒரே மாதிரிதான் திருவருள் பாலிப்பார். நொண்டியும் குருடனுமான இரட்டையர்கள் ஒரு தனவந்தரைப் புகழ்ந்து பாடி பொன்னும் பரிசுப்பொருட்களும் பெற்றுக் கொண்டார்கள்.

ஒரு காட்டு வழியே தம் வீட்டிற்குத் திரும்பிய அவர்கள் வழியில் இரவானதால் அங்கிருந்த பிள்ளையார் கோயிலில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு திருடன் இவர்களின் பொருட்களைக் களவாடி அவனும் கோயிலின் ஒரு பக்கமாய் ஒதுங்கியிருந்தான். இரட்டையர் கண் விழித்ததும் பணம் திருடு போனதை அறிந்து வருந்தினார்கள்.

பிள்ளையாரைப் பார்த்து,தம்பியோ பெண் திருடி தாயாருடன் பிறந்த வம்பனோ நெய் திருடும் வாயன் என்றார் மூத்தவர். உடனே இளையவர் அம்புவியில் மூத்த பிள்ளையாரே! முடிச்சு அவுத்தீர்! போமோ கோத்திரத்துக்குள்ள குணம் என்று பாடி முடித்தார்.

அதைக் கேட்ட மறைந்திருந்த திருடன் திகைத்தான். அவனும் பிள்ளையார் பக்தன். நாம் திருடியிருக்க இந்த பிள்ளையாருக்கு கெட்ட பெயர் வரக்கூடாது என்று பொன்னையும் பொருளையும் அவர்களிடம் தந்து மன்னிப்புக் கேட்டான். இப்படி எப்படி வேண்டுமானாலும் ஆராதிக்கக் கூடிய தெய்வம் பிள்ளையார்.

விநாயகர் கைகளில் பாசம், அங்குசம் இரண்டும் ஏந்தியுள்ளார். இவை இரண்டும் யானைப்பாகன் கையில் இருப்பவை. இந்த விநாயகரான யானையை அடக்கும் பாகன் யாருமில்லாததால் அவரிடமே அவையிரண்டும் இருக்கின்றன. யானைப்பாகன் யானையை மேடுபள்ளம் பார்த்து அழைத்துச் செல்வான். பிள்ளையாரும் மேடாகிய விருப்பம், பள்ளமாகிய வெறுப்பு ஆகியவற்றைத் தவிர்த்து இருவினை ஒப்பு என்ற சம பூமியில் நம்மை நடத்திக்கொண்டு போகிறார்.

வரேண்யராஜனுக்கு கணேசரால் உபதேசம் செய்யப்பட்டது கணேசகீதை. மாறுதல்களை எங்கும் காண்கிறோம். பழையன கழிந்து புதியன புகுவது காலப்போக்கில் இன்றியமையாதது.

எனினும் கால வெள்ளத்தையும் புரட்சி வெள்ளத்தையும் எதிர்த்து நிற்கும் உண்மைகளும் உண்டு. இவற்றில் இறைவனை இதயத்தில் தியானித்து எல்லா உயிர்களையும் சமமாக நினைத்து வாழ்வதே உண்மையான யோகம் என்கிறது கணேச கீதை. அன்பு நிறைந்த மனமுள்ளவர்களாக சினத்தை வென்று பொறிகளை அடக்கி யோகிகள் உலக நன்மைக்காகவே வாழ்வார்கள் என்கிறது இக்கீதை.

விநாயகரின் திருத்தோற்றம் கனமுள்ளதாகவே தோன்றும். அவ்வளவு கனமுள்ளவரை உருவில் சிறிய மூஷிகம் எனும் மூஞ்சூறு எப்படித் தாங்குகிறது? உடம்பில் சதை அதிகமானால் எடை காட்டும் யந்திரம் அதிக கனத்தைத் துல்லியமாகக் காட்டும்.

ஆனால் அறிவு அதிகமானவனுக்கு அறிவு அதிகம் என்ற காரணத்தால் அதிக எடையைக் காட்டாது. அதுபோல அறிவே உருவான கணபதிக்கு எடை ஏது? அறிவுக்கு ஸ்தூலகனம் கிடையாது. ஸூக்ஷ்ம கனம் உண்டு. அதாவது அறிவுள்ளவன் வார்த்தைக்கு அதிக மதிப்பு உண்டு. பிள்ளையாரை மூஞ்சூறு தாங்கும் வித்தை இதுதான். தேவி வழிபாட்டின் முதல் மந்த்ரோபதேசமே மகாகணபதி மந்திரம்தான்.

அந்த மகாகணபதியின் மந்திரத்தில் உள்ள ஸ்ரீம் பீஜம் மகாலட்சுமியைக் குறிக்கும். அதனால் அந்த மகாகணபதி தன் மேலிரு கரங்களில் தாமரையையும், விஷ்ணுவைக் குறிக்கும் சக்கரத்தையும் ஏந்தியுள்ளார். அடுத்து ஹ்ரீம் பீஜம் பராசக்தியைக் குறிக்கும்.

எனவே அடுத்த இரு கரங்களில் பராசக்தியைக் குறிக்கும் பாசத்தையும் ஈசனைக் குறிக்கும் சூலத்தையும் தாங்கியுள்ளார். அடுத்துள்ள க்லீம் பீஜம் ரதிதேவியைக் குறிக்கும். காமம் இல்லாமல் இந்த உலகம் இல்லை. எனவே ரதிதேவியின் அம்சமாக நீலோத்பல மலர்களையும், மன்மதனின் அம்சமாக கரும்பு வில்லையும் தன் அடுத்த கரங்களில் மகாகணபதி ஏந்தியுள்ளார்.

அடுத்துள்ள க்லெளம் பீஜம் பூமாதேவியைக் குறிக்கும். எனவே பூமாதேவியின் அம்சமாக பூமியிலிருந்து விளையும் நெற்கதிரையும், வராஹமூர்த்தியின் அம்சமாக கதையையும் தாங்கி அருள்கிறார். அடுத்து கணபதி பீஜமான கம் என்பதைக் குறிக்கும் வகையில் தன் திருக்கரங்களில் மாதுளம் பழத்தையும், உடைந்த தந்தத்தையும் அடுத்த இரு கரங்களில் தாங்கி, தன் மடியில் மரீசி முனிவரின் தவத்திற்கு மெச்சி அவருக்கு மகளாகப் பிறந்து, வல்லபை என்றும் சித்தலக்ஷ்மி என்றும் அழைக்கப்பட்ட தேவியை அணைத்து இருத்தி அருட்காட்சி அளிக்கிறார்.

துதிக்கையில் அம்ருதத்தோடு கூடிய ரத்ன கலசத்தை ஏந்தியருளும் திருக்கோலம் கொண்டுள்ளார்.  மேற்கூறிய லட்சுமி, விஷ்ணு, பராசக்தி, ஈசன், ரதிதேவி, மன்மதன், பூமாதேவி, வராகமூர்த்தி, கணபதி, சித்தலக்ஷ்மி போன்ற அனைத்து தேவதேவியரின் அருட்கடாட்சத்தையும் பெற்றுத் தரும் என்பது இந்த மகாகணபதியின் உபாசனா ரகஸ்யம்.

விஷ்ணு-லட்சுமிக்குரிய சக்கரமும் தாமரையும் தர்மத்தைக் குறிக்கின்றன. வராஹர்-பூமிதேவிக்குரிய கதையும், நெற்கதிரும் அர்த்தத்தைக் குறிக்கின்றன. மன்மதன்-ரதிக்குரிய கரும்பு வில்லும், நீலோத்பல மலரும் காமத்தைக் குறிக்கின்றன. சிவன்-பார்வதிக்குரிய சூலமும், பாசமும் மோட்சத்தைக் காட்டுகின்றன. மோட்ச ரூபத்தில் தர்மம் மிக மிக நெருக்கமாகத் தன் தூய வடிவில் உள்ளது. காம இன்பம், மோட்ச இன்பத்தில் உயிர்களுக்குத் தம்மையறியாமலேயே இயல்பாக உள்ள ஆசையைக் காட்டுவதால் மோட்சத்திற்குப் பக்கத்தில் அது உள்ளது.

காமம் அர்த்தத்தின் மூலம் நிறைவேறுவதால் காமத்திற்குப் பக்கத்தில் உள்ளது. தர்மம் கடவுளுடைய வடிவமாகவே உள்ளபோது மோட்சமாகிறது என்பதே மகாகணபதி நமக்கு உணர்த்தும் தத்துவம். இந்த மகாகணபதியின் உபாசனையால் தர்ம, அர்த்த, காம, மோட்சம் எனும் நான்கு வித புருஷார்த்தங்களையும் பெறலாம்.மகாகணபதியின் கையில் உள்ள மாதுளம் பழம் இந்த உலகைக் குறிக்கிறது.

அதனுள் உள்ள மாதுளை முத்துக்கள் கோடிக்கணக்கான அண்டங்களைக் குறிக்கிறது. அந்த அவ்வளவு பெரிய பிரபஞ்சமே கணபதியின் கரத்தில் அடக்கம் என்பதை மாதுளை உணர்த்துகிறது. இடது கையில் உள்ள உடைந்த கொம்பு எழுத்தாணி போல் செயல்பட்டு உயிர்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கிறது. துதிக்கையில் காணப்படும் ரத்னகலசம் சதுர்வித புருஷார்த்தங்கள், ஆகம சக்தி, சித்சக்தி போன்ற அனைத்தும் கடவுளை ஆச்ரயித்து ரத்னகலசத்தில் உள்ள அமிர்தம் போல் திகழ்வதை உணர்த்துகிறது.

இந்த மகாகணபதி மந்திரத்தை 4,44,444 முறை ஜபிக்க நன்மைகள் பெருகி வளங்கள் சேரும். இந்த மகாகணபதியின் யந்திரம் ஐந்து ஆவரணங்களாக உள்ளது. சக்கரத்தின் நடுவில் உள்ள பிந்து ஸ்தானத்தில் மகாகணபதியை பூஜிக்கவேண்டும். சுற்றிலுமுள்ள கோணங்களிலும் தளங்களிலும் பூபுரத்திலும் பல தேவதேவியர்கள் உறைகின்றனர். முறைப்படி கணபதி யந்திர பூஜை செய்யும் உபாசகனுக்கு இந்த உலகில் கிட்டாதது ஏதுமில்லை. இந்த கணபதி மூல மந்திரத்தால் செய்யப்படும் சதுராவ்ருத்தி தர்ப்பணம் எனப்படும் கணபதி தர்ப்பணம் ஸ்ரீவித்யா உபாசகர்களிடையே பெயர் பெற்றது.

கற்பகச்சோலையில், ரத்னமண்டபத்தில், ரத்ன சிம்மாசனத்தில் அவர் வீற்றருள்பாலிக்கிறார். தீவ்ரை, ஜ்வாலினீ, நந்தாநந்தினீ, போகதை, காமதாயினீ, உக்ரை, தேவஜோதி, ஸத்யை, விக்னநாஸினீ என்ற தாமரை மலரின் அஷ்ட தளங்களிலும் மொட்டுகளிலும் வசிக்கும் சக்திகள் விநாயகரை வணங்கி அவரின் பீடசக்திகளாகத் திகழ்கிறார்கள். விநாயகருக்கு அறுகம்புல் விசேஷமாக சாத்தப்படுகிறது. துளசியை விநாயகர் சதுர்த்தி அன்று மட்டுமே விநாயகர் பூஜைக்கு பயன்படுத்தும் வழக்கமும்நடைமுறையில் உள்ளது.

விநாயகர் ஞானாக்னி. எவருக்குமே தன் இனத்தைச் சார்ந்தவர்கள் மேல் தனி பிரியம் உண்டு. அறுகம்புல் உஷ்ண வீர்யமுள்ளது. அதன் சூடு அளவு கடந்தது. அனலன் எனும் அசுரனை விநாயகர் விழுங்கிய போது அவன் உள்ளே சென்று அங்குள்ள ஈரேழு பதினான்கு உலகங்களையும் தகித்தான்.

அந்த உஷ்ணம் சமனமாக விநாயகப் பெருமான் அறுகம்புல்லை தரித்துக்கொண்டார். உஷ்ணம் உஷ்ணேன சாந்த: எனும் கூற்றுப்படி உஷ்ணம் உஷ்ணத்தால் அகன்றது.  சாந்திகரமான யாகங்கள் அறுகம்புல் இன்றி செய்யப்படுவதில்லைவிநாயகர் விரதங்களில் சதுர்த்தி விரதம் பெருமை பெற்றது.

ஒரு சமயம் விநாயகர் கையிலயங்கிரியில் நர்த்தனமாடியபோது அவரின் சரிந்த தொந்தி, குறுகிய கால்கள், இவற்றைக் கண்ட பேரழகனான சந்திரன் சிரித்தான். ஏன் சிரிக்கிறாய் என விநாயகர் கேட்டபோது, தங்கள் உருவத்தைக் கண்டதும் எனக்கு சிரிப்பு வந்துவிட்டது என்றான் சந்திரன். அதைக் கேட்ட பிள்ளையார் ,எந்த அழகினால் ஆணவம் கொண்டு என்னைக் கண்டு சிரித்தாயோ அந்த அழகு உன்னை விட்டு நீங்கக் கடவது என்று சாபமிட்டார்.

மேலும் சந்திரனைப் பார்ப்பவர்களுக்கு வீண் அபவாதமும் வந்து சேரும் என்றும் கூறினார். அன்று முதல் சந்திரன் தன் கலைகளை ஒவ்வொன்றாக இழந்து மெலிந்து பார்ப்பவர் இகழும் வண்ணம் தோற்றமளித்தான். மனம் திருந்திய அவன் விநாயகப்பெருமானிடமே மன்னிப்பும் சாப விமோசனமும் கேட்டான்.

அவர் மனமிரங்கி சுக்ல சதுர்த்தி அன்று மட்டும் உன்னைக் காண்பவர்களுக்கு அபவாதம் ஏற்படும். ஆவணி மாதம் சுக்ல சதுர்த்தியில் என்னை பூஜிக்க அந்த அபவாதம் நீங்கும் என்று திருவாய் மலர்ந்தருளினார். அதன் காரணமாகவே வளர்பிறை (நான்காம் பிறை) அன்று பக்தர்கள் சந்திரனைப் பார்க்காமல் ஒதுங்குகிறார்கள்.

அப்படி தெரியாமல் சந்திரனைப் பார்த்தவர்கள் ஆவணி மாதம் சுக்ல சதுர்த்தியில் விரதம் அனுஷ்டித்து விநாயகரை வணங்கி சாபவிமோசனம் பெறுகிறார்கள். வருடம் முழுவதும் வரும் 24 சதுர்த்திகளிலும் விரதம் அனுஷ்டிப்பதோடு ஆவணி சுக்ல சதுர்த்தியில் விரதத்தை பூர்த்தி செய்தால் விநாயகர் திருவருளால் சகல செல்வங்களையும் வளமான வாழ்வையும் பெறலாம்.

விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்கும் முறை நடைமுறையில் உள்ளது. மாசி மாதம் தேய் பிறையில் செவ்வாய்க்கிழமையுடன் வரும் சதுர்த்தி திதியில் தொடங்கி ஓராண்டு விரதம் அனுஷ்டிக்க வேண்டும். இதை அங்காரகன் முதன் முதலில் அனுஷ்டித்ததால் இந்த விரதம் அங்காரக சதுர்த்தி என்றும் அழைக்கப்படுகிறது.

கணபதியின் திருவருளைப் பெற கணபதி ஹோமம் செய்வது மிகச் சீக்கிரமான பலன்களைத் தரும். கணபதியை பிரம்மாதி தேவர்கள் அனைவரும் வழிபட்டே தத்தமது ஆற்றலைப் பெற்றனர். மற்ற அனைத்து தெய்வங்களின் உபாசனையால் பெறப்படும் பலன்கள் அனைத்தும் மகாகணபதி உபாசனையால் மட்டுமே பெறமுடியும்.

கணபதியைக்குறித்து பல்வேறு துதிகள் இருந்தாலும் ஆதிசங்கரர் அருளிய கணேச பஞ்சரத்னம், ஔவையார் அருளிய விநாயகர் அகவல், சங்கடநாசன கணேச ஸ்தோத்திரம், ருணஹர கணேச ஸ்தோத்திரம் போன்ற துதிகள் புகழ் பெற்றவை.

திருமூலர் தன் திருமந்திரத்தில்
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே

என்று போற்றிப் பாடியுள்ளார். அனைத்து புராணங்களுமே கணபதியின் காப்புச்செய்யுளுடனேயே தொடங்குகிறது. இவ்வளவு மகிமை பெற்ற கணபதியின் மந்திரத்துடனேயே சக்தி வழிபாடும் தொடங்குகிறது.

இந்த மகாகணபதியின் உபாசனையையே ஒருவன் தன் வாழ்வில் பிரதானமாகக் கொண்டும் செய்யலாம் என்றும் தந்திரங்களில்கூறப்பட்டுள்ளது. உள்ளம் கனிந்து மகாகணபதியை பிரார்த்தனை செய்து நம் வாழ்வில் ஏற்படும் இடர்கள் பொடிபட பிரார்த்தித்து வளமான வாழ்வுபெறுவோம்.

மகாகணபதி தியானம்:

பீஜாபூர கதேக்க்ஷு கார்முகருஜா
சக்ராப்ஜ பாசோத்பல
வ்ரீயஹ்ர ஸ்வவிஷான ரத்னகலச
ப்ரோத்யத் கரோம்போருகஹ
த்யேயோ வல்லபயா ச பத்மகரயா
ச்லிஷ்டோத்வலத்பூஷயா
விச்வோத்பத்திவிபத்தி ஸம்ஸ்திதிகரோ விக்னேச இஷ்டார்த்ததஹ

மூலம்:

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம்கம் கணபதயே
வர வரத ஸர்வஜனம்மே வசமானய ஸ்வாஹா.

செய்தி: ந.பரணிகுமார்

ஓவியம் : வெங்கி


Tags : Adi ,Mahaganapati ,
× RELATED ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை...