×

சேலத்துக்காரரின் பெயருக்கும் பிரச்னை வந்துள்ளதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘மாங்கனியாரின் பெயருக்கும் உரிமை கொண்டாடி பிரச்னை கொடுக்கிறாங்களாமே.. என்ன விஷயம்..’’ என கேட்டார் பீட்டர் மாமா.‘‘இலை கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை பிடிக்க ரெண்டு தலைகளும் கோர்ட்டு படிக்கட்டு ஏறி சட்டப்போராட்டம் நடத்திக்கிட்டு இருக்காங்க. ஆனா மாஜி மாங்கனியாரின் பெயரே என்னோடதுன்னு நிர்வாகி ஒருத்தரு போர்க்கொடி பிடிச்சிருக்காராம். தேனிக்காரரின் ஆலோசனை கூட்டத்துல அவர் மாங்கனியாரை பிடிபிடியென பிடிச்சாராம். இதுல உச்சக்கட்டமா என்னோட நேமுக்கு முன்னால எடப்பாடிங்குற பெயரை, தொன்னூத்து ஒன்பதுல இருந்து நான் தான் போட்டுக்கிட்டு வாறேன். எங்க ஊருல எடப்பாடின்னு சொன்னா என்னைத்தான் குறிக்கும். ஆனா 2001 தேர்தல்ல வேட்பாளரா அறிவிக்கும்போது எடப்பாடி தொகுதிக்கு இவருன்னு மம்மி சொன்னாங்க. அது அப்படியே பெயரோட ஒட்டிக்கிச்சு. என்னையும் கட்சிக்காரங்க ஊர் பெயரைச்சொல்லியே அழைப்பதால் கோபம் அடைஞ்ச அவர், அதிலிருந்து என்னை ஒதுக்கிட்டாரு. அந்த பெயர் என்னோடதுன்னு நிரூபிப்பேன், தேனிக்காரரின் கரத்தை வலுப்படுத்துவேன்னு உறுதி பூண்டிருக்காராம் அவர். பதவிக்கு சண்டைப்போட்டுக்கிட்டிருக்கும் நிலையில் மாஜியின் பெயருக்கே உரிமை கொண்டாடுவது ரத்தத்தின் ரத்தங்கள் மத்தியில் கலகலப்பை ஏற்படுத்தியிருக்காம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ராகுல் பயண திட்டத்தில் மாற்றம் என பேச்சு அடிபடுகிறதே..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு நடைபயணம் செல்ல ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளார். இதற்கான பயண திட்டம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. முதலில் அக்டோபர் 2ம் தேதி என திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி இப்போது  செப்டம்பர் 7ம் தேதிக்கு என முன்கூட்டியே மாற்றப்பட்டுள்ளது. மேலும் கன்னியாகுமரியில் இருந்து தொடங்குவதற்கு பதிலாக சுசீந்திரத்தில் இருந்து தொடங்கலாமா என்றும் ஆலோசிக்கப்படுகிறது. கன்னியாகுமரி சென்டிமென்ட் ரீதியாக  பல பயணங்கள் மேற்கொண்ட பல தலைவர்களுக்கு எதிர்பார்த்த அளவு வெற்றியை  தரவில்லை என்று காங்கிரஸ் கட்சியினர் கருத்து தெரிவித்ததால் இந்த மாற்றத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டு அதற்கேற்ப காங்கிரஸ் கட்சியினர் பயணத்திட்டத்தை வகுத்து வருகின்றனர்’’ என்றார் விக்கியானந்தா.‘‘பிரமாண்ட கூட்டம் நடத்தி வைத்திக்கு செக் வைக்க சேலத்துக்காரர் திட்டம் போட்டிருக்காரமே?’’‘‘டெல்டா மாவட்டங்களில் இலை கட்சியில் பவர்புல்லாக இருந்த வைத்தியானவர், தேனிக்காரர் அணியில் தற்போது இருந்து வருகிறார். வைத்தியானவருக்கு பல்வேறு வகையில் செக் வைக்க சேலத்துக்காரர் திட்டமிட்டுள்ளாராம். முக்கியமாக, நெற்களஞ்சியம் மாவட்டத்தில் பிரமாண்ட கூட்டத்தை கூட்ட சேலத்துக்காரர் ஏற்பாடு செய்துள்ளாராம். இந்த தகவல் வைத்தியானவருக்கு தெரியவந்ததால் கடும் அதிர்ச்சிக்குள்ளானார். இதை முறியடிக்க, தனது நெருங்கிய நண்பர்கள், ஆதரவாளர்களிடம் நேரிலும், போனிலும் வைத்தியானவர் ஆலோசனை கேட்டு வருகிறார். இந்த தகவல் தனது டீம் மூலமாக தெரிய வந்ததால் நெற்களஞ்சிய மாவட்டத்தில்  கூட்டம் நடத்துவதை சேலத்துக்காரர் முடிவு செய்து விட்டாராம். அதற்கான இடம், தேதி இன்னும் விரைவில் அறிவிக்கப்படலாம் என பேச்சு அடிபட்டு வருகிறதாம். முக்கியமாக, ‘விட்டமின் ப’ இறைக்கவும் சேலத்துக்காரர் தயாராகி விட்டார் என அவரது அணிக்குள் பேச்சு ஓடுகிறது..’’ என்றார் விக்கியானந்தா.‘‘கம்பை எடுத்தவன் தண்டல்காரன் கதையாக இப்ப இலைக்கட்சியில ஆளாளுக்கு நாட்டாமை செய்கிறார்களாமே…’’ ‘‘9ம் தேதி தனது மாஸை காட்ட இலை கட்சியின் விவிஐபியான மாம்பழ மாவட்டத்துக்காரர் சென்னைக்கு காரிலேயே பயணித்தாராம். அப்ப தனக்கு ஒவ்வொரு மாவட்டத்திலயும்  தடபுடலான வரவேற்பை தரணும்னு வாய்மொழியா உத்தரவே போட்டாராம். அதனால அவருக்கு  தருமபுரி, கிருஷ்ணகிரி, ஜோலார்பேட்டைனு ஆட்களை திரட்டி வந்து வரவேற்பு கொடுத்தாங்களாம் இலை கட்சி நிர்வாகிங்க. இதுல வெயிலூர் மாவட்டத்துல இலை  கட்சியின் தலையான மாம்பழ விவிஐபியை வரவேற்று பேனர்களா வைச்சாங்களாம். இந்த பேனர் வைத்ததிலும் பல இடத்துல கசமுசா ஆச்சாம். வெயிலூர் கெங்கையம்மன் கோயில் உள்ள பகுதி நிர்வாகி ஒருத்தர் தான் வைச்ச பேனர்ல ஏ.ஏனு ஆரம்பிக்கிற  பேரை கொண்ட நிர்வாகி பெயரை போடவில்லை என்று அவரை போனில் பிடித்தவர் சகட்டு மேனிக்கு திட்டிட்டாராம். இதை புகாரா எழுதி புறநகர் மாவட்டத்துல போயி அங்க  நடக்கிற வரவேற்பு நிகழ்ச்சியில கொடுத்தாராம் அந்த வட்ட நிர்வாகி. அதை வாங்கி பார்த்த விவிஐபி ரொம்ப நொந்துட்டாராம். அந்த புகார்ல திட்டிய நிர்வாகியின் மனைவிதான் மாவட்ட அளவில பொறுப்புல இருக்காங்க. அவங்க படத்தை  கேட்டும் தராம, அவங்க நிர்வாகினாலும் நான்தான் உண்மையான நிர்வாகி என்று சொன்ன கதையையும் குறிப்பிட்டிருந்தாராம் அந்த வட்ட நிர்வாகி’’ என்றார் விக்கியானந்தா. ‘‘சார்பதிவாளர் ஒருவரின் கொட்டம் அதிகமாக உள்ளதா பேசுகிறார்களே…’’‘‘ஆமாமா… செந்திலாண்டவர் பெயரில் உள்ள இந்த குமாரர் திருத்தங்கல்லில் 3 ஆண்டுகள், சிவகாசியில் 2 ஆண்டுகள் பணியாற்றி விட்டு, தற்போது கடந்த 5 மாதங்களாக சாத்தூரில் பணிபுரிந்து வருகிறார். இவர் அலுவலக நேரத்திலும் குடித்துவிட்டு தான் பத்திரம் பதிவாராம். அடையாள அட்டை உள்பட எந்த ஆவணங்களையும் சரிபார்க்க மாட்டாராம். காசு கொடுத்தால் எதை வேண்டுமானாலும் பதிவாளர் பதிவாராம். இப்படி சரிபார்த்து பதியாமல் பல அப்பாவி மக்களின் சொத்து அபகரிக்கபட்டுள்ளதாம். இவர் எங்கு மாறுதலாகி சென்றாலும் கேமரா ஆபரேட்டரான பெண் பணியாளரை உடன் மாறுதல் வாங்கி அழைத்துக் கொள்வாராம். இந்த பெண்ணை சிவகாசி அருகிலுள்ள தனது பண்ணை இல்லத்திற்கு அழைத்து வரும் ஆவண எழுத்தர் ஒருவர் கொண்டு வரும் எல்லா போலி பத்திரங்களையும் பதிவு செய்து கொடுத்ததால், தனது இரண்டு கோடி கடனையும் அடைத்து, தற்போது பல கோடிகளுக்கு அதிபதியாக உள்ளாராம் அந்த ஆவண எழுத்தர்’’ என்றார் விக்கியானந்தா. …

The post சேலத்துக்காரரின் பெயருக்கும் பிரச்னை வந்துள்ளதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Selathukkar ,Yananda ,Peter ,Manganiyar ,
× RELATED தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து...