×

மாசி மகம் நாளில் மகத்தான தேர்த்திருவிழா

காரமடை - கோவை

நீலகிரி மலைத்தொடரின் அடி வாரத்திற்கருகே வற்றாத ஜீவ நதியாகிய பவானி நதியின் வளம் நிறைந்த இந்த இடம் முற்காலத்தில் ‘ஆறை நாடு’ என வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலப்பகுதிகள் காரைப் புற்கள் நிறைந்ததும் நீர் ஓடிக்கொண்டிருக்கும் மடைகள் நிறைந்திருந்தும் இருந்த காரணத்தால் இத்திருநகர் காரமடை எனப் பெயர் பெற்றது.

 இங்கு வீற்றிருந்து அருட்பாலிக்கும் ரங்கநாதர் சுயம்புவாக உண்டானவர்.  சின்ன தொட்டி பாளையம் என்ற சிற்றூர் காரமடை அருகில் உள்ளது. முன்னொரு காலத்தில் இவ்வூரிலிருந்து இந்தக் காரை வனத்திற்குப் பசுக்களை மேய்க்க ஓட்டி வருவார்கள். அவை பகலெல்லாம் மேய்ந்த பிறகு மாலையில் தொழுவத்தில் சேர்ப்பார்கள். சில நாட்களாக ஒரு காராம் பசு மாலை வீடு திரும்பியதும் பால் தருவதில்லை. பசுவின் சொந்தக் காரன் ஆராய்ந்து பார்த்ததில், காரை வனத்தில் ஒரு காரை மரத்தின் அடியின் இருந்த புற்றில் அந்தப்பசு தானாகவே பால் சொரிவதைக் கண்டான். உடனே அவன் அந்தப் புற்றையும். புதரையும் வெட்டத் தொடங்கினான். ஆனால் மயக்க முற்று விழுந்து விட்டான்.

நீண்ட நேரம் அப்படியே கிடந்தான். அவனைக் காணாத காரணத்தால் அவனைத் தேடி ஊரார், பட்டர் தலைமையில் தேடி வந்தார்கள். இரவானது இருள் சூழ்ந்தது. தீப்பந்தங்களை ஏந்தி பார்த்ததில் அவன் மயக்கமாய் இருப்பதைக் கண்டார்கள். அப்போது ஐந்து வயதுச் சிறுவன் ஒருவனுக்கு அருள் வந்தது. அவன் ‘‘துவாபர யுகத்தில் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவுக்கும் கருடனுக்கும் யுத்தம் ஏற்பட்டது. அப்போது சற்றுச் சோர்வு காட்டிய கிருஷ்ணனைக் கருடன் தூக்கி எறிந்தான். அவர் காரை வனத்தில் வந்து விழுந்தார். அப்போது இவ்விடத்திலிருந்து பகவான் கலியுகத்தில் பிரகஸ்பதியின் தவத்தை நிறைவேற்றும் பொருட்டு பிரத்யட்சமாவதாக’’ அவன் கூறினான்.

அந்த நேரம் நங்கநாதர் சிரசு மட்டும் வெளிப்பட்டு அதுவும் நான்கு பட்டைச் சதுரமாக ஒரு அடி உயரமாய்க் காட்சியளித்தார். அவரது கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்தின் இடப்புறம் வெட்டுப்பட்ட தழும்பு தெரிகிறது. தலைமட்டும் சதுரவடிவில் வெளிப்பட்டதால் லிங்கத் திருமேனியோ என்று சில பாமரர்கள் சந்தேகப்பட்டனர். பிச்சு மன்றாடியார் என்ற பாளையக்காரர் கனவில் பெருமாள் தோன்றி மறுநாள் சூரிய உதயத்தில் சந்தனக் காப்பு செய்து வழிபடச் சொன்னார். அப்படிச் செய்த போது சங்கு சக்கரங்களோடு காட்சியளித்தார் பெருமாள். திடீரென அக்கூட்டத்தில் ஒருவருக்கு ஆவேசமாகி ரங்கநாதர் காட்சி கொடுத்தார்.

அப்போது அக்கூட்டத்தினர் தீப்பந்தங்களை கையில் ஏந்தி தேன், பழம், கற்கண்டு, சர்க்கரை தேங்காய் ஆகியவற்றைக் கலந்து வைத்து அரங்கனுக்குப் படைத்து வழிபட்டனர். அப்போது பக்தர் அனைவரும் கண்ணீர் மல்க பக்திப் பரவசத்தில் ‘ரங்கா பராக் !’ ‘கோவிந்தா பராக்’, (ரங்கன் வருகிறான் கோவிந்தன் வருகிறான்) என முழங்கி ஆடிப்பாடி தங்கள் கையில் உள்ள தீப்பந்தங்களை பெருமாளாக எண்ணி அவனுக்குப் படைத்த வாழைப்
பழம் சர்க்கரை கலந்த பிரசாதத்தையே  கவளம் கவளமாக தாங்களும் உண்டு மற்றவர்களுக்கும் கொடுத்து பக்தியின் எல்லைக்கே சென்றார்கள். திருத்தேர் உலா வந்து நிலை சேர்ந்த பின் இன்றும் இந்நிகழ்வு  நடந்து வருகிறது.

‘ரங்கா பராக்’, கோவிந்தா பராக்’ என்பது இத்தலத்தின் மந்திரமாயிற்று. இங்கு கருணைக் கடலாகிய ரங்கநாதப் பெருமாள் தன் வலப்புறத்தே ரங்கநாயகி தாயாரையும் இடப்புறத்தே ஆண்டாள் நாச்சியாரையும் தனிக் கோயிலாகக் கொண்டு தாம் சுயம்பு வடிவத்தில் பக்தர்களுக்கு அருட்பாலிக்கிறார். இப்பெருமாள் நான்கு யுகங்களையும் கண்டவர் என்று புராணம் கூறுகிறது. கிருதயுகத்தில் பிரம்மனால் அர்ச்சிக்கப்பட்டு அவரால் பிரம்ம தீர்த்தமும் செண்பக வனமும் உண்டாக்கப்பட்டது. இத்தீர்த்தமே தற்போது கோயிலின் பின்புற திருக்கிணறு தீர்த்தம். திரேதாயுகத்தில் அருள்மிகு வாசவன் வழிபட்டு பக்தியுடன் பணிந்து சந்திர தீர்த்தம் உண்டாக்கினார்.

துவாபர யுகத்தில் அருள்மிகு குபேரன் இத்தலம் கண்டு, பெருமானை வழிபட்டார். நறுமணம் நிறைந்த மலர்கள் கூடிய நந்தவனம் ஏற்படுத்தினார். கலியுகத்தில் இக்காரை நகரில் இலங்கும் கமலை நாயகனை பிரகஸ்பதியாம் பெட்டத்தம்மன் மலையில் உள்ள ரங்க நாயகி தாயாருடன் திருக்கல்யாண கோலத்தில் கண்டு கைகூப்பி  கருடன் வழிபட்டு இவ்வரங்கனுக்காக கருட தீர்த்தம் ஏற்படுத்தினார். அதுவே தற்போது உள்ள தெப்பக்குள தீர்த்தமாகும். உற்சவரின் திருநாமம் வேங்கடேசப் பெருமாள். உபய நாச்சியாராகிய ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக எழுந்தருளி இருக்கிறார். மூலவர் சந்நதியும், வலது புறத்தில் ரங்கநாயகி தாயார் சந்நதியும், இடது புறத்தில் ஆண்டாள் சந்நதியும் உள்ளன.

ரங்க நாயகியை பெட்டத்தம்மன் என்றும், ஆண்டாளைத் துளசி அம்மன் என்றும் பாமர மக்கள் அழைக்கிறார்கள், மூன்று மைலுக்கப்பால் பெட்டத்தம்மன் மலை என்ற பிரகஸ்பதியின் மலை மீது தாயார் சந்நதி தனியே இருக்கிறது. சோழ மன்னனின் கொடுமைகளிலிருந்து காக்க சீடர் கூரத்தாழ்வார் திருவரங்கத்திலிருந்து உடையவரான ஸ்ரீராமானுஜரை மைசூரில் உள்ள மேல் கோட்டைக்கு அனுப்பிய போது அவர் வழியில் வேடுவரால் காரமடையில் வைத்து சில நாட்கள் உபசரிக்கப்பட்டார் என்று குரு பரம்பரை கூறுகிறது. கொடியவன் மாலிக்காபூர் படையெடுப்பின் போது ஸ்ரீ ரங்கத்து உற்சவ மூர்த்தியாகிய அழகிய மணவாளர் அர்ச்சகர்களால் அப்புறப்படுத்தப்பட்ட போது இங்கும் எழுந்தருளினார் என்பதும் குருபரம்பரைச் செய்தியாகும். பெண்ணாதி என்ற  இடத்திலிருந்த அழகு மாதவப் பெருமாள் அந்நியர் கொடுமைகஞ்சி இக்கோயிலில் இடம் பெற்றுள்ளார்.

மூன்றரை அடி உயரத்தில் ஒலி எழுப்பும் கருங்கல்லால் உருவாக்கப்பட்டு தெய்வீகக்களையும், சிற்பச்சிறப்பும் மிளிரக் காணப்படுகிறார். காரமடை ரங்கநாத சுவாமி மூலவர் சுயம்புவானவர். உற்சவர் வெங்கடேசப் பெருமாள். மாசி மாதம் வந்தாலே காரமடை ரங்கநாதர் ஆலயம் விழாக்கோலம் பூணத்தொடங்குகிறது. ஆண்டு தோறும் பிரம்மோற்சவத்தின் கடைசி நாளாகிய மாசி மகத்தன்று ‘தேர்த்திருவிழா’ கோலாகலமாக விமரிசையாக நடக்கிறது. மதுரை திருமலை நாயக்கர் (கி.பி. 1623 - 1659) கொங்கு நாட்டுக்கு வருகை தந்த போது  ‘ராஜ பிளவை நோய்’ ஏற்பட்டது. அவர் காரமடை பெள்ளாதிக் கோட்டையில் தங்கி, இருந்தபோது அருகில் உள்ள தோட்டிபாளையத்தைச் சேர்ந்த கம்பள நாயக்கர்கள் மன்னனிடம் அனுகி  ‘பிரபு, காரமடையில் உள்ள ஸ்ரீரங்கநாதர் சக்தி வாய்ந்தவர் அவரை வணங்கி, அக்கோயிலின் தல விருட்சமான காரைச் செடிகளினுடைய இலைகளைப் பறித்து ஒரு மண்டல காலம் அரைத்துப் போட்டால். இந்நோய் குணமாகும்’’ என்றனர். திருமலை நாயக்கரும் அதன்படி செய்ய விரைவில் அந்த நோய் குணமடைந்தது.

தீராத நோயைத் தீர்த்த காரமடை ரங்க நாதரின் பெருமையை உணர்ந்து காரமடையிலேயே திருமலை நாயக்கர் தங்கி, மிக அற்புதமான திருக்கோயிலை காரமடை ரங்கனுக்கு கட்டி வைத்தார். காரமடை ரங்க நாதர் திருக்கல்யாண மண்டபத்தில் உள்ள தூணில் திருமலை நாயக்கர் மற்றும் அவரது ராணியின் உருவச்சிலைகள் உள்ளன. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்த ஊரில் ஒரு வெள்ளைக்கார என்ஜினியர் ரயில்வே இருப்புப் பாதையை கோயிலின் அருகே அமைக்க முயன்றார். அதைப் பலர் தடுத்தும் கேளாமல் மதிப்பீடு செய்து வேலையைத் துவக்க நினைத்தார். அன்றைய வேலை முடிந்து அவர் இரவு தூங்கும் போது, அவர் கனவில் எம்பெருமான் ஒரு வெள்ளைக் குதிரை மேல் ஏறிவந்து கோபத்துடன் ஆங்கிலேய என்ஜினியரை சாட்டையால் இருமுறை அடித்தாராம்.

திடீரென கனவு கலைந்து எழுந்த அந்த என்ஜினியர் தம் தவறை உணர்ந்து எம்பெருமானிடம் மன்னிப்பு வேண்டிய பிறகு இருப்புப் பாதையை வேறு பக்கம் மாற்றியமைத்து திருத்திய மதிப்பீடு தயாரித்து மேலிடத்திற்கு அனுப்பினாராம். தம் பிழைக்கு வருந்தி தம் சொந்த செலவில் வெள்ளை மரக்குதிரை ஒன்றை செய்து, திருக்கோயிலுக்கு அன்பளிப்பாகக் கொடுத்து இறைவனை வணங்கினாராம். இன்றைக்கும் இத்திருக்கோயிலில் உற்சவ மூர்த்தி வெள்ளைக் குதிரை மேல் எழுந்தருளித்தான் பரிவேட்டை உற்சவத்திற்கு திருவீதியுலா புறப்படுகிறார். காரமடை ரங்கநாதரை சரணடைந்தால் போதும். அவர்களது கஷ்டங்கள் அனைத்தும் விலகி விடும். நல்லனவெல்லாம் வந்து சேரும். இத்திருநகரம் கோயம்புத்தூர் - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் கோவையிலிருந்து 29 கி.மீ. தொலைவிலும் மேட்டுப்பாளையத்திலிருந்து  7 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இத்திருத்தலம் (காரமடை) ரங்க நாதர்‘கோயிலை மையமாகக் கொண்டு தனிச் சிறப்புடன் விளங்கி வருகிறது.

தொகுப்பு: டி.எம். இரத்தினவேல்

Tags : Great Terai Festival ,Masi Magam ,
× RELATED இந்த வார விசேஷங்கள்