×

இந்த வார விசேஷங்கள்

மாசி மகம் 24.2.2024 – சனி

சூரியன் கும்பராசியில் இருக்க, மாசி மாதத்தில் பௌர்ணமி தினம் அன்று மக நட்சத்திரம் கூடி இருப்பதான சேர்க்கை நடைபெறும். அன்றைய தினமே மாசி மகம் என்று கொண்டாப்படுகிறது. இந்த நன்னாளில் கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடுதல், பல நன்மைகளைத் தரும். திருஞானசம்பந்தர் தன்னுடைய மயிலாப்பூர் பதிகத்தில் கபாலீஸ்வரரின் மாசிமகக் கடலாடு விழாவைப் பற்றி கூறியுள்ளார். மாசிமகத்தன்று தட்ச பிரஜாபதி, தன் மனைவி வேதவல்லியுடன் யமுனைநதியில் நீராடினான். அங்கு தாமரை மலரில் இருந்த வலம்புரிச் சங்கினைத் தொட்ட உடனேயே அது பெண்ணுருவாக மாறியது. இது சிவனின் வரம் என்பதை அறிந்து, தட்சன் அத் தெய்வப் பெண்ணுக்கு தாட்சாயிணி என்று பெயர் சூட்டினான்.  தாட்சாணியாக, பார்வதி அவதரித்த தினம் மாசிமகம். பெருமாள் வராக அவதாரம் எடுத்து, பாதாளத்தில் இருந்து பூமியை வெளிக் கொணர்ந்த நாளும் மாசி மகம்தான். அதனால் வைணவத் தலங்களிலும் தீர்த்தவாரி நடைபெறும். இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தல், ஏழு தலைமுறை பாவங்களை போக்கக் கூடியதாகும்.

மணக்கால் நம்பிகள் 24.2.2024 – சனி

இன்று மாசி மகம். ராமானுஜரின் குருவான ஆளவந்தாரின் குரு மணக் கால் நம்பி ஸ்வாமிகள் ரங்கத்துக்கு அருகில் உள்ள அன்பில் என்னும் ஊரின் கிராமப்பகுதியான மணக்கால் என்னுமிடத்தில் அவதரித்தார் ‘ராம மிஸ்ரர்’ என்னும் திருநாமம் இவருக்கு உண்டு. மணக்கால் நம்பியின் ஆசார்யர்  உய்யக் கொண்டாரின் தேவியர் (மனைவி) இளமையிலேயே பரமபதம் அடைந்துவிட்டதால், அவருடைய குடும்பக் காரியங்களையும், இரு திருக்குமாரத்திகளையும் கவனித்துக் கொண்டார் மணக்கால் நம்பி. ஒரு நாள் காலையில் பெண்குழந்தைகள் இருவரையும் ஆற்றில் இருந்து வீட்டிற்கு அழைத்து வரும்போது, வழியில் ஓரிடத்தில் சேறும், சகதியுமாக இருந்தது. அவர்கள் அந்த இடத்தைத் தாண்ட முடியவில்லை. அதைக் கண்ட நம்பிகள், அந்த சேற்றின் மீது குப்புறப் படுக்க, அவர் முதுகின் மீது ஏறிச்சென்று குழந்தைகள் சகதியான இடத்தைக் கடந்தனர். அவர்களின் மண்கால் இவரது மீது பட்டதாலேயே இவர் மணல்(க்)கால் நம்பி ஆனார் என்றும் சொல்வார்கள். மணக்கால் நம்பி சோழ நாட்டின் ஒரு பகுதிக்கு மன்னராக விளங்கிய நாத முனியின் பேரனான ஆளவந்தாருக்கு, அவருக்குப் பிடித்தமான தூதுவளைக்கீரையை அரண்மனை தளிகை செய்பவன் மூலம் தினமும் கொடுத்தார். திடீரென்று ஒருநாள் அப்படி அனுப்புவதை நிறுத்தினார். மன்னன் ஆளவந்தார், ‘‘ஏன் இன்று தூதுவளைக் கீரை இல்லை?” என்று கேட்டார். சமையல் செய்பவரின் மூலம் மணக்கால் நம்பியை அரச சபைக்கு அழைத்தார். அதுவரை அவரைச் சந்திக்க முடியாத மணக்கால் நம்பி, ஆளவந்தாருக்கு வைஷ்ணவத்தைப் பற்றி எடுத்துரைத்து அவரை ரங்கத்துக்கு அழைத்து வந்து, நம்பெருமாள் முன்னர் நிறுத்தினார். அன்று முதல் ஆளவந்தார், அரசபதவி நீங்கி வைணவ சமயத் தலைவரானார். இன்று மணக்கால் நம்பி அவதார நாள்.

திருக்கோட்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் தெப்பம் 24.2.2024 – சனி

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் கோயில், 108 திவ்ய தேசங்களில் 104 – வது திவ்யதேசம் ஆகும். மூலவரின் மேலுள்ள அஷ்டாங்க விமானம் மிகவும் புகழ்பெற்றது. இத்தலத்தை பெரியாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர்.இத்தலத்தில் உள்ள சிம்மக்கிணறு மிகவும் புகழ்பெற்றது. நவகோள்களில் ஒருவர் புதன். இவரது புதல்வன் புரூருவன் என்பவன் அசுர சக்ரவர்த்தியாகத் திகழ்ந்தான். ஒரு சமயம் இத்தலத்துக்கு புரூருவன் வந்த தினத் தன்று மாசிமகம், கங்கையில் நீராடி திருமாலைத் தரிசிக்க எண்ணியிருந்தான். ஆனால், அது நடவாது போனதால், திருமாலை வேண்டினான். திருமாலும் அவனுக்கு அருள்பாலித்து, கிணற்றில் இருந்து கங்கை பொங்கி வரும்படி செய்து, அதன் நடுவே காட்சி அளித்தார். இக்கிணறு மகாமகக் கிணறு என்றும் அழைக்கப்படுகிறது. இக்கிணற்றுத் தீர்த்தத்தில் மாசி மகத்தன்று நீராடி இத்தல பெருமாளை தரிசித்தால், நைமிசாரண்யம் தலத்தில் தவம் செய்த பயனும், கங்கை நதியில் நீராடி முக்திபெற்ற பயனும், குருதலத்தில் கடுகளவு தங்கம் தானம் செய்த பயனும் கிட்டும் என்பது நம்பிக்கை.இக்கோயிலில் அருள்பாலிக்கும் சந்தான கோபால கிருஷ்ணர் (பிரார்த்தனைக் கண்ணன்) சந்நதியில் விளக்கேற்றி வழிபட்டு, விளக்கை இல்லத்துக்கு எடுத்துச் சென்று (காசும் துளசியும் வைத்து) வழிபட்டால், காரிய சித்தி உண்டாகும். விளக்கில் பெருமாளும் லட்சுமியும் எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். திருமணத் தடை நீக்கும் முக்கிய தலங்களில் இதுவும் ஒன்று. குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்க இங்கு வேண்டிக் கொள்ளலாம். இன்று அந்த மாசிமக தெப்ப விழா.

மாம்பலம் கோதண்டராமர் கருடசேவை 24.2.2024 – சனி

தட்சண பத்ராசலம் என்றழைக்கப்படும் மேற்கு மாம்பலம் கோதண்டராமர் ஆலயம், பிரசித்தி பெற்றது. தி.நகர் பஸ் நிலையத்திற்கு மிக அருகில், மேற்கு மாம்பலத்தில் மேட்லி ரோட் கீழ்ப்பாதை (SUBWAY) முடியும் இடத்தில், இடது பக்க தெருவில் கோயில் உள்ளது. 200 ஆண்டுகள் பழமையான இந்தக் கோயில், ஆதி நாராயண தாசரால் கட்டப்பட்டது. மேற்கு மாம்பலம் கோதண்டராமர், ராமர் நஞ்சை அமுதாக்கிய பெருமாளாய் கருணைக் கடலாய் பட்டாபிஷேக கோலத்திலும், கோதண்ட ராமராகவும் என இருகோலத்தில் சேவை சாதிக்கின்றார். வருடத்தில் நான்கு நாட்கள் கருடசேவை இக்கோயிலில் நடைபெறுகின்றது. சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் மாலை, கருட வாகனத்தில் ராமர் சேவை சாதிக்கின்றார். ஆனி மாதத்தில் ஸ்வாதியன்று ஆனி கருடன்,  நரசிம்மர் கருட வாகனத்தில் சேவை சாதிக்கின்றார். ஆடி மாதம் பௌர்ணமியன்று கஜேந்திர மோட்சம்,  ரங்கநாதர் கருட சேவை. மாசி மகத்தன்று ராமர் கருடசேவை. அந்த கருட சேவை இன்று.

திருக்குறுங்குடி அழகிய நம்பிகள் தெப்பம் 24.2.2024 – சனி

திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையடி வாரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. இத்தலம் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதாகும். இத்தலத்தினைப் பற்றி திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் பாடியுள்ளார்கள். இத்தலத்தின் மூலவர் அழகிய நம்பிராயர் என்றும், தாயார் குறுங்குடிவல்லி நாச்சியார் என்றும் அழைக்கப்படுகிறார். வராக அவதாரம் கொண்டு திருமால் தனது நாயகியுடன் இத்தலத்தில் தங்கி, தனது அச்சந்தரும் வராக உருவத்தை குறுகச் செய்தமையால், இத்தலம் குறுங்குடி ஆனது. திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயில் 2 நாள் மாசிமக தெப்ப உற்சவ திருவிழா நடைபெறும். மாலையில் பெருமாள், தாயார்களுடன் தெப்பத்தையொட்டி தெப்ப மண்டபத்திற்கு எழுந்தருள்வர். 12 முறை தெப்ப மண்டபத்தை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுப்பர்.

திரிபுர சுந்தரி ஜெயந்தி 24.2.2024 – சனி

திரிபுரசுந்தரி பத்து மகா வித்யாக்களில் ஒருத்தியாவாள். வித்யா என்றழைக்கப்படும் இவளது முடிந்த முடிவே ஏனைய மகாவித்யாக்கள் ஆகும். ஆதிசக்தியின் மிகவுயர் அம்சமான லலிதையே பார்வதி யாகத் திகழ்கின்றாள். தாய் குழந்தையுடன் விளையாடுவது போல, லலிதை தன் அடியவர்களுடன் விளையாடுகின்றாள். மாயையின் வடிவமானதால், அவளே, மகாமாயையும் ஆகின்றாள். திரிபுரசுந்தரிக்கு லலிதா என்ற பெயர் உண்டு. இராஜராஜேஸ்வரி என்றும் திரு நாமம் உண்டு. அரசர்க்கெல்லாம் அரசி என்றும் பொருள்படும் திருநாமமுடைய இவள் பதினாறு பேறுகளையும் அருள்வாள். பதினாறு வயது இளமடந்தையாக விளங்குவதால், ஷோடசீ ஆகின்றாள். சிவனால் எரிக்கப்பட்ட காமனின் சாம்பலிலிருந்து தோன்றிய பண்டன் எனும் அரக்கன் சோணிதபுரத்தைத் தலைநக ராகக் கொண்டு பூவுலகை ஆண்டதுடன், தேவர்களையும் துன்புறுத்தி வந்தான். தேவர்களின் கோரிக்கைக் கிணங்க, தேவியும் ஈசனும், மகா காமேசுவரனாகவும், திரிபுர சுந்தரியாகவும் தேவர்கள் வளர்த்த சிதக்னிகுண்டத்தில் தோன்றினர். காமனின் ஆயுதங்களான கரும்பு வில்லும் மலர்ப்பாணமும் தாங்கி தேவி தனது சேனை புடைசூழ பண்டனையும் அவனது படையையும் கொன்றொழித்தாள். சூரியனால் ஏற்படும் தோஷங்களை போக்கும் திரிபுர ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது.செங்கல்பட்டு மாவட்டம், திருப் போரூரில் இருந்து சுமார் 7 கி.மீ. தூரத்தில் வட திருவானைக்கா என வழங்கும் செம்பாக்கம் என்ற இயற்கை எழில் கொஞ்சும் அழகிய கிராமம், உள்ளது. இந்த சின்னஞ்சிறு கிராமத்தில் மிகவும் சக்தி வாய்ந்த கோயிலாக  பாலா திரிபுரசுந்தரி விசுவரூப மூலிகை அம்மன் கோயில் அழகிய வடிவில் கம்பீரமாக உள்ளது. எல்லா அம்பாள் கோயில்களிலும் சக்தி உபாசகர்கள் இந்த ஜெயந்தியை கடைப்பிடித்தாலும், பாலா திரிபுரசுந்தரி கோயிலில் விசேஷ வழிபாடுகள் நடக்கும்.

எறிபத்தநாயனார் குருபூஜை 27.2.2024 – செவ்வாய்

கொங்கு நாட்டிலே உள்ள கருவூரிலே அவதரித்தார் எறிபத்த நாயனார். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். அவ்வூரிலுள்ள ஆனிலை என்னும் திருக்கோயிலில் எழுந்தருளிய பெருமானை வழிபட்டு சிவனடியார்களுக்குத் திருத்தொண்டு செய்துவந்தார். இவர் சிவனடியார்களுக்கு ஓர் இடர் வந்து உற்றவிடத்து உதவும் இயல்பினை உடையவர்; அடியார்களுக்கு இடையூறு வந்த காலத்து அங்கு விரைந்து சென்று அடியார்களுக்குத் தீங்கு புரிந்தோரைப் பரசு என்னும் மழுப்படையால் எறிந்து தண்டிப்பார். அதன் பொருட்டு அவர் கையிலே எப்பொழுதும் மழுப்படை இருக்கும்.ஒரு முறை அடியார் எடுத்துவந்த சிவ பூஜைக்குரிய பூக்களை, புகழ்ச் சோழரின் பட்டத்து யானை தட்டிவிட, அந்த யானையையும், அதன் பாதுகாவலரையும், எறிபத்த நாயனார் மழுவால் வெட்டி, தண்டித்தார். அதன் பின்பு, செய்தியறிந்த புகழ்ச் சோழர், தன்னையும் தண்டித்துக் கொள்ள முனைய, சோழரின் வாளைப் பெற்று, தன்னையே வெட்டிக் கொள்ள முற்பட்டார். அடியாரின் பெருமையை அறிந்து, சிவபெருமான், உமையம்மையுடன் ரிசப வாகனத்தில் தோன்றி, இறந்தோர்களை உயிர்ப்பித்து அருள் வழங்கினார். அவருடைய குருபூஜை இன்று. மாசி ஹஸ்தம்.

கோவை கோனியம்மன் திருக்கல்யாணம் 27.2.2024 – செவ்வாய்

கோவை மாநகரத்தின் மையப் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற, 600 ஆண்டுகால பழமையான ஆலயம் அருள்மிகு கோனியம்மா ஆலயம். கோனி என்றால் அரசி என்று பொருள். கோவை மாநகரத்தின் அரசியாக விளங்கி, அருள் பாலிக்கும் இந்த அம்மனுக்கு மாசிப் பெருவிழா 14 நாட்கள் நடைபெறும். அந்த விழா இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இக்கோயிலின் சிறப்பாக பல விஷயங்களைச் சொல்லலாம். குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தைப் பேறு கிடைக்கவும், திருமணத் தடை நீங்கவும், நோய்களால் அவஸ்தைப்படுபவர்கள் நலம் பெறவும் இந்த அம்மனை வணங்கி, தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். இந்த கோனியம்மன் ஆதிபராசக்தியின் பல வடிவங்களில் ஒன்றான துர்கா பரமேஸ்வரியின் வடிவமாக வடக்கு பார்த்து அமர்ந்து காட்சி தருகின்றாள். இன்று திருக்கல்யாண உற்சவம். நாளை, பிரசித்தி பெற்ற தேர் உற்சவம்.

சஷ்டி 1.3.2024 – வெள்ளி

இன்று சஷ்டி விரதம், வெள்ளிக்கிழமையும் சஷ்டியும் இணைந்து வருவது சிறப்பு. தொடர்ந்து சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு அறிவுக் கூர்மையும், ஆற்றலும், செயல் திறனும் கூடும். குடும்ப உறவுகள் மகிழ்ச்சியாக இருக்கும். பெண்களுக்கு திருமாங்கல்ய பலம் கூடும். சஷ்டி விரதம் இருப்பவர்கள், முதல் நாளான பஞ்சமி மதியம் முதலே விரதம் இருப்பது நல்லது. அன்று இரவு பால், பழம் மட்டும் சாப்பிட்டு, அடுத்த நாள் காலை நீராடி, சங்கல்பம் செய்து கொண்டு முருகப் பெருமானுடைய ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்ய வேண்டும். மாலை பூஜை அறையில் விளக்கேற்றி, முருகப் பெருமானுக்கு மலர் மாலைகள் சாற்றி ஏதேனும் ஒரு நிவேதனத்தை வைத்துப் படைக்க வேண்டும். தூப தீபங்கள் காட்டி வணங்கி உபவாசத்தை முடித்துக் கொள்ள வேண்டும். 

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Tags : Masi ,Saturn Sun ,Kumbarasi ,Maha ,Masi Magam ,
× RELATED சித்திரை திருவிழாவில் அழகர்...