×

ரங்கா பராக்! கோவிந்தா பராக்!: மாசிமக நாளில் மகத்தான தேர்த் திருவிழா

வைணவ திவ்விய தேசங்கள் எனும் 108 திருத்தலங்களுக்குட்படாத பிரசித்தி பெற்ற ஏராளமான வைணவத்திருக்கோயில்கள் நாடெங்கிலும் பரவலாக அமைந்துள்ளன. அவற்றுள் பல நூற்றாண்டுகள் பழமையானது ‘காரமடை ரங்கநாதர் ’ எனும் புகழ் பெற்ற ஆலயமும் ஒன்று. இந்த அற்புதமான திருக்கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யாத குறையாக உள்ளது. எல்லாத் தலங்களிலுமே எம்பெருமானின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும். தரிசித்து பலன் பெறலாம். வைணவத் தலங்கள் எல்லாமே நம்மை வாழ்விக்கத் தோன்றியவை. எத்தனை தவறுகளதெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் அதற்குரிய பலன்களை அனுபவிக்கும் போது ‘நாராயணா’ என்று ஒருமுறை சொன்னாலே போதும்.

நற்கதி அடைந்து விடலாம்.  ‘காரமடை ரங்கராதர்’ திருக்கோயிலில் பக்தர்கள் ‘ரங்கா பராக்’ கோவிந்தா பராக்’ என்று கோவிந்தன் திருநாமம்  முழங்கி வழிபடுவது வேறெங்கும் காணாததொன்றாகும். இங்கு நடைபெறும் ‘ மாசி மகத்தேரோட்டம்’ நூற்றுக்கணக்கான கிராமமக்கள் பங்கு கொள்ளும் பிரசித்தி பெற்ற தேர் திருவிழாவாகும். ரங்கநாதர் என்றவுடன் அவருடைய பள்ளி கொண்ட கோலமே எல்லோருக்கும் நிறைவு வரும் . இந்த மாதிரி படுத்த நிலையில் இல்லாத  ரங்கநாதர் அதுவும் மாரியம்மன் போல முகம் மட்டும் உள்ள திருமால் சிலை வழிபாடு காரமடையில் தவிர வேறு எங்குமே கிடையாது.

திருமகள் தினமும் திருநடம்புரிய தாமரை மலர்கள் பூத்துக் குலுங்கும் நீர் நிரம்பிய குளங்கள் கூடியதும், மல்லிகை, முல்லை, செண்பகம் முதலான வாசம் மிக்க மலர்கள் நிறைந்த இயற்கை அழகு மிக்கதும், திருமாலின் நிறமாகிய கருநீல வண்ணமாகிய இயற்கை மலைத் தொடரின் ராணி என அழைக்கப்படும் நீலகிரி மலைத்தொடரின் அடி வாரத்திற்கருகே வற்றாத ஜீவ நதியாகிய பவானி நதியின் வளம் நிறைந்த இந்த இடம் முற்காலத்தில் ‘ஆறை நாடு’ என் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலப்பகுதிகள் காரைப் புற்கள் நிறைந்ததும் நீர் ஓடிக்கொண்டிருக்கும் மடைகள் நிறைந்திருந்தும் இருந்த காரணத்தால் இத்திருநகர் காரமடை எனப் பெயர் பெற்றது.

இங்கு வீற்றிருந்து அருட்பாலிக்கும் ரங்க நாதர் சுயம்புவாக உண்டானவர்.  சின்ன தொட்டி பாளையம் என்ற சிற்றூர் காரமடை அருகில் உள்ளது. முன்னொரு காலத்தில் இவ்வூரிலிருந்து இந்தக் காரை வனத்திற்குப் பசுக்களை மேய்க்க ஓட்டி வருவார்கள். அவை பகலெல்லாம் மேய்ந்த பிறகு மாலையில் பட்டியில் அடைப்பார்கள். சில நாட்களாக ஒரு காராம் பசு மாலை வீடு திரும்பியதும் பால் தருவதில்லை. பசுவின் சொந்தக் காரன் ஆராய்ந்து பார்த்ததில், காரை வனத்தில் ஒரு காரை மரத்தின் அடியின் இருந்த புற்றில் அந்தப்பசு தானாகவே பால் சொரிவதைக் கண்டான். உடனே அவன் அந்தப் புற்றையும். புதரையும் வெட்டத் தொடங்கினான். ஆனால் மயக்க முற்று விழுந்து விட்டான்.

நீண்ட நேரம் அப்படியே கிடந்தான். அவனைக் காணாத காரணத்தால் அவனைத் தேடி ஊரார் பட்டர் தலைமையில் சென்று தேடினார்கள். தீப்பந்தங்களை ஏந்தி வந்து, தேடிப் பார்த்து அவன் மயக்கமாய் இருப்பதைக் கண்டார்கள். அப்போது ஐந்து வயதுச் சிறுவன் ஒருவனுக்கு அருள் வந்தது. அவன் மூலம் ஒரு அற்புதமான வரலாறு வெளிப்பட்டது. துவாபர யுகத்தில் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவுக்கும் கருடனுக்கும் யுத்தம் ஏற்பட்டது. அப்போது சற்றுச் சோர்வு காட்டிய கிருஷ்ணனைக் கருடன் தூக்கி எறிந்தான். அவர் காரை வனத்தில் வந்து விழுந்தார். அப்போது இவ்விடத்திலிருந்து பகவான் கலியுகத்தில் பிரகஸ்பதியின் தவத்தை நிறைவேற்றும் பொருட்டு பிரத்யட்சமாவதாகக் கூறினார்.

அவரது சிரசு மட்டும் வெளிப்பட்டு அதுவும் நான்கு பட்டைச் சதுரமாக ஒரு அடி உயரமாய்க் காட்சியளித்தார். அவரது கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்தின் இடப்புறம் வெட்டுப்பட்ட தழும்பு தெரிகிறது. தலைமட்டும் சதுரவடிவில் வெளிப்பட்டதால் லிங்கத் திருமேனியோ என்று சில பாமரர்கள் சந்தேகப்பட்டனர். பிச்சு மன்றாடியார் என்ற பாளையக்காரர் கனவில் பெருமாள் தோன்றி மறுநாள் சூரிய உதயத்தில் சந்தனக் காப்பு செய்து வழிபடச் சொன்னார். அப்படிச் செய்த போது சங்கு சக்கரங்களோடு காட்சியளித்தார் பெருமாள். திடீரென அக்கூட்டத்தில் ஒருவருக்கு ஆவேசமாகி ரங்கநாதர் காட்சி கொடுத்தார்.

அப்போது அக்கூட்டத்தினர் தீப்பந்தங்களை கையில் ஏந்தி தேன், பழம், கற்கண்டு, சர்க்கரை தேங்காய் ஆகியவற்றைக் கலந்து வைத்து அரங்கனுக்குப் படைத்து வழிபட்டனர். அப்போது பக்தர் அனைவரும் கண்ணீர் மல்க பக்திப் பரவசத்தில் ‘ரங்கா பராக் !’ ‘கோவிந்தா பராக்’, (ரங்கன் வருகிறான் கோவிந்தன் வருகிறான் !) என முழங்கி ஆடிப்பாடி தங்கள் கையில் உள்ள தீப்பந்தங்களை பெருமாளாக எண்ணி அவனுக்குப் படைத்த வாழைப்பழம் சர்க்கரை கலந்த பிரசாதத்தையே  கவளம் கவளமாக தாங்களும் உண்டு மற்றவர்களுக்கும் கொடுத்து பக்தியின்எல்லைக்கே சென்றார்கள். திருந்தேர் உலா வந்து நிலை சேர்ந்த பின் இன்றும் இந்நிகழ்வு  நடந்து வருகிறது.

‘ரங்கா பராக்’, கோவிந்தா பராக்’ என்பது இத்தலத்தின் மந்திரமாயிற்று . இங்கு கருணைக் கடலாகிய ரங்கநாதப் பெருமாள் தன் வலப்புறத்தே அருள் மிகு ரங்கநாயகி தாயாரையும் இடப்புறத்தே வேதத்திற்கு வித்தாகிய திருப்பாவை அருளிய அருள்மிகு ஆண்டாள் நாச்சியாரையும் தனிக் கோயிலாகக் கொண்டு தாம் சுயம்பு வடிவத்தில் பக்தர்களுக்கு அருட்பாலிக்கிறார். இப்பெருமாள் நான்கு யுகங்களையும் கண்டவர் என்று புராணம் கூறுகிறது. கிருதயுகத்தில் பிரம்மனால் அர்ச்சிக்கப்பட்டு அவரால் பிரம்ம தீர்த்தமும் செண்பக வனமும் உண்டாக்கப்பட்டது. இத்தீர்த்தமே தற்போது கோயிலின் பின் புற திருக்கிணறு தீர்த்தம். திரேதாயுகத்தில் அருள்மிகு வாசவன் வழிபட்டு பக்தியுடன் பணிந்து சந்திர தீர்த்தம் உண்டாக்கினார். துவாபர யுகத்தில் அருள்மிகு குபேரன் இத்தலம் கண்டு, பெருமானை வழிபட்டார். நறுமணம் நிறைந்த மலர்கள் கூடிய நந்தவனம் ஏற்படுத்தினார்.

கலியுகத்தில் இக்காரை நகரில் இலங்கும் கமலை நாயகனை பிரகஸ்பதியாம் பெட்டத்தம்மன் மலையில் உள்ள ரங்க நாயகி தாயாருடன் திருக்கல்யாண கோலத்தில் கண்டு கைகூப்பி  கருடன் வழிபட்டு இவ்வரங்கனுக்காக கருட தீர்த்தம் ஏற்படுத்தினார். அதுவே தற்போது உள்ள தெப்பக்குள தீர்த்தமாகும். உற்சவரின் திரு நாமம் வேங்கடேசப் பெருமாள். உபய நாச்சியாராகிய ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக எழுந்தருளி இருக்கிறார். மூலவர் சந்நதியும், வலது புறத்தில் ரங்கநாயகி தாயார் சந்நதியும், இடது புறத்தில் ஆண்டாள் சந்நதியும் உள்ளன. ரங்க நாயகியை பெட்டத்தம்மன் என்றும், ஆண்டாளைத் துளசி அம்மன் என்றும் பாமர மக்கள் அழைக்கிறார்கள், மூன்று மைலுக்கப்பால் பெட்டத்தம்மன் மலை என்ற பிரகஸ்பதியின் மலை மீது தாயார் சந்நதி தனியே இருக்கிறது.

சோழ மன்னனின் கொடுமைகளிலிருந்து காக்க சீடர் கூரத்தாழ்வார் திருவரங்கத்திலிருந்து உடையவரான ஸ்ரீராமானுஜரை மைசூரில் உள்ள மேல் கோட்டைக்கு அனுப்பிய போது அவர் வழியில் வேடுவரால் காரமடையில் வைத்து சில நாட்கள் உபசரிக்கப்பட்டார் என்று குரு பரம்பரை கூறுகிறது. கொடியவன் மாலிக்காபூர் படையெடுப்பின் போது ஸ்ரீ ரங்கத்து உற்சவ மூர்த்தியாகிய அழகிய மணவாளர் அர்ச்சகர்களால் அப்புறப்படுத்தப்பட்ட போது இங்கும் எழுந்தருளினார் என்பதும் குருபரம்பரைச் செய்தியாகும். பெண்ணாதி என்ற  இடத்திலிருந்த அழகு மாதவப் பெருமாள் அந்நியர் கொடுமைகஞ்சி இக்கோயிலில் இடம் பெற்றுள்ளார். மூன்றரை அடி உயரத்தில் ஒலி எழுப்பும் கருங்கல்லால் உருவாக்கப்பட்டு தெய்வீகக்களையும், சிற்பச்சிறப்பும் மிளிரக் காணப்படுகிறார்.

காரமடை ரங்கநாதர் சந்நதியில் தினந்தோறும் மூன்று கால பூஜை நடைபெறுகிறது. வைணவத்தில் ததியாராதனம் நடத்துவது மிகவும் சிறப்பானதாகும். ததியாராதனம் என்பது வைணவ அடியார்களுக்கு ‘அமுதுபடைத்தல் என்பதாகும். அடியார்களாகிய தாசர்களுக்கு அமுதிற்குத் தேவையான அரிசி , பருப்பு, காய்கறிகளை தலை வாழை இலையில் படையல் இட்டுக் கொடுத்தாலே, அது அமுதாக, பெருமாள் மூலமாக நமது முன்னோர்களை அடையும் என்பது ஐதீகம் இத்தகைய ததியாராதனத்தை முதல் முதலில் ஆரம்பித்து வைத்தவர் திருமங்கை ஆழ்வார் ஆவார். காரமடை ரங்கநாத சுவாமி மூலவர் .

சுயம்பு வானவர். உற்சவர் வெங்கடேசப் பெருமாள். இத்திருக்கோயில் ஸ்தலத்தாரால் வைணவ சடங்காகிய பஞ்ச சமஸ்காரங்கள் என்ற முத்திரை வைத்துக் கொண்டவர்களே, ‘தாசர்’களாக அங்கீகரிக்கப்பட்டு படையல் பெற அனுமதிக்கப்படுகிறார்கள். இத்தகைய தாசர்கள் தமக்கு அமுது செய்யப்படையில் கொடுத்தவர்களுக்கு எல்லா நன்மைகளும் கிடைக்க வேண்டி பெருமாளிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். இறந்த முன்னோர்களுக்கு அந்த திதியில் படையல் படைக்க இயலாதவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் சந்நிதானத்தில் உள்ள தாசர்களுக்கு படையல் செய்தலே சிறப்பு என தர்மசாஸ்திரம் கூறுகிறது. வேறு எங்கும் காணமுடியாது வகையில் காரமடை ரங்கநாதர் கோயிலில் மிகச் சிறப்பாக படையல் நடைபெற்று வருகின்றது.

நூற்றுக் கணக்கில் கூடியிருக்கும் தாசர்களிடம் பக்தர்கள் படையல் செலுத்தி ஆசி பெறுவது கண் கொள்ளாக் காட்சியாகும். மாசி மாதம் வந்தாலே காரமடை ரங்கநாதர் ஆலயம் விழாக்கோலம் பூணத்தொடங்குகிறது. ஆண்டு தோறும் பிரம்மோற்சவத்தின் கடைசி நாளாகிய மாசி மகத்தன்று ‘தேர்த்திருவிழா’ கோலாகலமாக, விமரிசையாக, நடக்கிறது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்தத் தேர்த்திருவிழாவை யொட்டி முக்கியமான மூன்று சேவைகள் நடைபெறுகின்றன. அவை தண்ணீர் சேவை. கவாள சேவை, பந்த சேவை என்பவையே அந்தச் சேவைகள். இந்த மூன்று சேவைகளும் சுயம்பு மூர்த்தியின் தோற்றத்தோடு சம்பந்தப்பட்டவை.

குறிப்பிட்ட பருவம் இல்லாமல் நிரந்தரமாக கிடைக்கின்ற வாழைப்பழமே கவாள சேவையில் இடம் பெறுகிறது. சமாச்ரயணம் செய்து கொண்டவரே விழாவுக்காகப் பழம் வாங்க வேண்டும். புறங்கை கட்டப்பட்ட தாசர் கருடனைப் போல் முழங்கால் ஊன்றி ஒரு வெள்ளைத் துணியில் வைக்கப்பட்ட வெல்லம் கலந்த பழத்தைக் கவளம் கவளமாக உண்ணும் கவள சேவை இன்று கவாள சேவை என்று மாறிவிட்டது. தேர் ஓட்டம் முடிந்து சுவாமி இறங்கியதும் இந்த நிகழ்ச்சிகள் நடைபெறும். இது பூத கவாளம், தடை கவாளம், மாற்றுக் கவாளம் என்று மூன்று இடங்களில் நண்பகலில் நடைபெறும்.

எல்லா இடங்களிலும் ‘ரங்கா பராக்’, ‘கோவிந்தா பராக்’ என்று ஓயாமல் இறைவன் திருநாமம் முழங்கிய வண்ணமே இருக்கிறார்கள் . அங்கீகாரம் பெற்ற தாசர்கள் தங்களுடைய மான் தோல் பையில் புனித தீர்த்தம் கொண்டு வந்து காலையில் சுவாமிக்கு திருமஞ்சனம் செய்வது தண்ணீர் சேவை எனப்படும். இதில் ஏராளமான தாசர்கள் கலந்து கொள்கிறார்கள். இரவில் நடைபெறும் பல நிகழ்ச்சிகளுக்கு தீப்பந்தங்கள் முக்கியமாக தேவை. கவாள சேவை பந்தங்களை ஏந்தியபடி தாசர்கள் ஏராளமானவர்கள் வருவதுண்டு. இது பந்த சேவை எனப்படும். தேரோட்டம் நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பாரி வேட்டை அன்று கல்யாண உற்சவம் நடக்கிறது. அப்போது அருள் வந்த அர்ச்சகர் கோயிலில் உள்ள ராமபாணத்தை ஏந்திக் கொண்டு புறப்படுகிறார்.

வலம்புரிச் சங்கிலிருந்து தெளிந்த நீரில் மஞ்சனமாடிய ராம பாணத்துடன் ஊருக்கு வெளியே பெட்டத்தம்மன் மலையில் உள்ள தாயாரை எதிர் கொண்டு அழைக்கிறார். மலையருகில் அர்ச்சகரின் அருள் நீங்குகிறது. அதன்பிறகே திருக்கல்யாணம் நடக்கும். தேரோட்டத்தை விட இந்த நிகழ்ச்சி முக்கியமானது. ராமபாணம் ஐந்தரை அடி உயரத்தில் வெள்ளியால் ஆகியது. பக்தர்களின் தலையில் இந்த ராம பாணத்தை வைத்து அர்ச்சகர் ஆசி கூறினால் பேய், பிசாசு, பூதங்களின் தோஷங்கள் நீங்குகின்றன என்று கூறப்படுகிறது. இங்கே ராமபாண ஆசீர்வாதமே முக்யத்துவம் பெறுகிறது. கோயிலுக்கு வெளியே கருடதீர்த்தம் என்ற தெப்பக்குளம் இருக்கிறது. தாயார் கட்டளைப்படி காவல் இருந்த தன்னை மீறத் துணிந்த பெருமாளை எதிர்த்ததற்கு பிராயச்சித்தமாக பெரிய திருவடியாகிய கருடன் உண்டாக்கிய தெப்பக்குளம் இது.

கோயிலின் வடமேற்கு மூலையில் உள்ள காரைச் செடியில் குழந்தை இல்லாதவர்கள் சிறு தொட்டில்களைக் கட்டுகிறார்கள். அதன் அருகில், ரங்கநாதர், கருடாழ்வார், சந்தான கிருஷ்ணன், நாகர் சிலைகள் உள்ளன. இதன் அருகில் பிரம்ம தீர்த்தம் என்ற கிணறு உள்ளது. மதுரை திருமலை நாயக்கர் (கி.பி. 1623 - 1659) கொங்கு நாட்டுக்கு வருகை தந்த போது திருமலை நாயக்கருக்கு அரசர்களுக்கே வரக்கூடிய ‘ராஜ பிளவை நோய்’ ஏற்பட்டது. அவர் காரமடை பெள்ளாதிக் கோட்டையில் தங்கி, சிரமப்பட்ட போது அருகில் உள்ள தோட்டிபாளையத்தைச் சேர்ந்த கம்பள நாயக்கர்கள் மன்னனிடம் அனுகி  ‘பிரபு, தாங்கள் இந்நோயைப் பற்றி சற்றும் கவலைப்பட வேண்டியதில்லை. மேற்கே காரமடையில் ஸ்ரீ ரங்கநாதர் சந்நதி உள்ளது.

அங்குள்ள ரங்கநாதர் சக்தி வாய்ந்தவர் அவரை வணங்கி, அக்கோயிலின் தல விருட்சமான காரைச் செடிகளினுடைய இலைகளைப் பறித்து ஒரு மண்டல காலம் அரைத்துப் போட்டால். இந்நோய் குணமாகும்’’ என்றனர். திருமலை நாயக்கரும், காரமடை ரங்கனை வேண்டி காரை இலையை அரைத்து முதுகில் தடவிவர விரைவில் அந்த நோய் குணமடைந்தது. தீராத நோயைத் தீர்த்த காரமடை ரங்க நாதரின் பெருமையை உணர்ந்து காரமடையிலேயே திருமலை நாயக்கர் தங்கி, மிக அற்புதமான திருக்கோயிலை காரமடை ரங்கனுக்கு கட்டி வைத்தான். திருக்கல்யாண மண்டபமும், மதில் சுவரும் எடுப்பித்தான். சந்திர புஷ்கரணி என்ற தெப்பக்குளத்தை உண்டாக்கினான்.

பரிவேட்டை மண்டபம், மிகப் பெரிய நந்தவனம் அமைத்துக் கொடுத்தான். அழகிய தேர் உருவாக்கினான். காரைமடை ஊரைச் சுற்றித் தேர் பவனி வர நான்கு மாடவீதிகளும் அமைத்து , தேர் திருவிழா சிறப்பாக நடைபெற பல ஏக்கர் நிலங்கள் தானமாக அளித்து, பல செப்பு சாசனங்கள் அப்பகுதியில் உள்ள மிராசு தாரர்களுக்கு வழங்கியுள்ளான். காரமடை ரங்க நாதர் திருக்கல்யாண மண்டபத்தில் உள்ள தூணில் திருமலை நாயக்கர் மற்றும் அவரது ராணியின் உருவச்சிலைகள் உள்ளன. காரமடை ரங்கநாதரின் சக்தியைப் புலப்படுத்த ஓர் உண்மைச் சம்பவம் சுவையாக இன்றும் நினைவூட்ப்படுகின்றது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்த ஊரில் ஒரு வெள்ளைக்கார என்ஜினியர் ரயில்வே இருப்புப் பாதையை கோயிலின் அருகே அமைக்க முயன்றார். அதைப் பலர் தடுத்தும் கேளாமல் மதிப்பீடு செய்து வேலையைத் துவக்க நினைத்தார்.

அன்றைய வேலை முடிந்து அவர் இரவு தூங்கும் போது, அவர் கனவில் எம்பெருமான் ஒரு வெள்ளைக் குதிரை மேல் ஏறிவந்து கோபத்துடன் ஆங்கிலேய என்ஜினியரை சாட்டையால் இருமுறை அடித்தாராம். திடீரென கனவு கலைந்து எழுந்த அந்த என்ஜினியர் தம் தவறை உணர்ந்து எம்பெருமானிடம் மன்னிப்பு வேண்டிய பிறகு இருப்புப் பாதையை வேறு பக்கம் மாற்றியமைத்து திருத்திய மதிப்பீடு தயாரித்து மேலிடத்திற்கு அனுப்பினாராம். தம் பிழைக்கு வருந்தி தம் சொந்த செலவில் வெள்ளை மரக்குதிரை ஒன்றை செய்து, திருக்கோயிலுக்கு அன்பளிப்பாகக் கொடுத்து இறைவனை வணங்கினாராம். இன்றைக்கும் இத்திருக்கோயிலில் உற்சவ மூர்த்தி வெள்ளைக் குதிரை மேல் எழுந்தருளித்தான் பரிவேட்டை உற்சவத்திற்கு திருவீதியுலா புறப்படுகிறார்.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றையும் சிறப்புறப் பெற்றுத் திகழும் காரமடை ரங்கநாதரை சரணடைந்தால் போதும். அவர்களது கஷ்டங்கள் அனைத்தும் விலகி விடும். நல்லனவெல்லாம் வந்து சேரும். இத்திருநகரம் கோயம்புத்தூர் - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் கோவையிலிருந்து 29 கி.மீ. தொலைவிலும் மேட்டுபாளையத்திலிருந்து  7 . கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இத்திருத்தலம் (காரமடை) ரங்க நாதர்‘கோயிலை மையமாகக் கொண்டு தனிச் சிறப்புடன் விளங்கி வருகிறது.

Tags : Ranga Barak ,Govinda Barak ,
× RELATED வாசிப்பும் வழிபாடுதான்…