×

மலையுறை மருகனை மனங்களில் ஏந்துவோம்!

*அருணகிரி உலா 90

‘‘குன்று தோறாடிய குமரற் போற்றுவாம்’’
- கந்தபுராணம்
‘‘இதயந்தனிலிருந்து க்ருபையாகி
 இடர்சங்கைகள் கலங்க அருள்வாயே….
 பதியெங்கிலுமிருந்து விளையாடி
 பலகுன்றிலுமமர்ந்த பெருமாளே’’
- திருப்புகழ்
‘‘குன்று தோறாடலும் நின்றதன் பண்பே’’ என்று நக்கீரர் முருகனின் ஐந்தாம் ஆற்றுப்படை வீடாகக் குன்று தோறாடலைக் குறிப்பிடுகிறார். மலையும் மலை சார்ந்த நிலமுமான குறிஞ்சிக்குத் தலைவனாதலால் முருகன் குன்று தோறும் உறை பவன் ஆகிறான். இத்தகு புகழுடையகுமரன் திருத்தலங்களுள் ஒன்று காரைக்குடிக்கு மேற்கே 10. கி.மீ தொலைவில் அமைந்துள்ள குன்றக்குடி முருகப் பெருமானின் வாகனமாகிய மயில் ஒரு குன்றின் உருவில் நின்று அவனை வழிபட்டதால் குன்றக்குடி என்று தலம் பெயர் பெற்றது.  மலை அடிவாரத்திலுள்ள தனி முருகன் கோயிலுக்குச் சென்று [தண்டாயுதபாணி] வணங்கிவிட்டு குன்றக்குடி மலைக்கு ஏறும் படிகளுக்கே வருகிறோம். மலையின் திருவாயில் தோகை வடிவமாயிருப்பதால் அங்கு வீற்றிருக்கும் விநாயகர் தோகையடி விநாயகர் எனப்படுகிறார். 20 படிகள் ஏறியபின் தனி மண்டபத்தின் மேல்புறம் கிழக்கு நோக்கி வீற்றிருக்கும் கார்த்திகைப் பிள்ளையாரை வணங்கி, மேலும் 110 படிகள் ஏறி இடும்பன் சந்நதியை அடைகிறோம். அதன் பின் 10-படிகள் ஏறினால் வல்லபை கணபதியைத் தரிசிக்கலாம்.

மொத்தம் 148 படிகள் ஏறி ராஜ கோபுர வாயிலை வந்தடையும் போது நால்வர், வீரபாகு தேவர் ஆகியோரின் திருவுருவங்களைக் காணலாம். துவாரபாலகர்களை வணங்கி பரந்து விரிந்த மூலவர் கோயில் மண்டபத்தினுள் நுழைகிறோம். நேரே சென்று 6-படிகள் ஏறி உற்சவர் வீற்றிருக்கும் இடத்தை அடைகிறோம். ஆறுமுகங்களும் பன்னிரு கிரகங்களும் கொண்டு கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறான். முருகன், வள்ளி, தெய்வயானை மூவருமே தனித்தனி மயிலில் எழிலுடன் காட்சி அளிக்கின்றனர்.
 
கருவறைத் திருச்சுற்றில் சொர்ண கணபதி, தட்சிணாமூர்த்தி, குழந்தை வடிவேலன், நடராஜர், பைரவர் ஆகிய தெய்வத் திருவுருவங்களைக் கண்டு மகிழலாம். நவக்கிரகங்கள், கொடி மரம், பலிபீடம், மயில், சூரியன், சந்திரன் மற்றும் விசுவநாதர்  விசாலாட்சியைக் கண்டு வணங்குகிறோம்.
 அருணகிரிநாதர் குன்றக்குடி முருகனைப் பலவாறாகப் போற்றியுள்ளார்.

 ‘‘மழுவுகந்த செங்கை அரன் உகந்திறைஞ்ச
 மனு இயம்பி நின்ற குருநாதா
வளமிகுந்த குன்றநகர்புரந்து துங்க
 மலை விளங்க வந்த பெருமாளே’’
 ‘‘குன்றக்குடிக்கதிப’’ என்றும்
 ‘‘குன்ற மாநகர் உறைவோன்’’ என்றும் முருகனை விளிக்கிறார். ‘பிறர் புகழ்’ எனத்துவங்கும் பின்வரும் பாடலில் குன்றக்குடியைக் குலகிரி என்றும் துங்கக்கிரி என்றும் போற்றுவதைக் காணலாம்.

‘‘கெறுவித வஞ்சக் சுபடமொடெண்டிக்
கிலுமெதிர் சண்டைக் கெழுசூரன்
 கிளையுடன் மங்கத் தலைமுடி சிந்திக்
கிழிபட துன்றிப் பொருதோனே
குறுமுநியின்பப் பொருள்பெற அன்றுற்
பன மனுவுஞ்சொற் குருநாதா
குலகிரி துங்கக்கிருயுயர் குன்றக்
 குடி வளர் கந்தப் பெருமாளே’’
 கர்வம், வஞ்சனை, சூது ஆகிய குணங்களுடன், எட்டுத்திக்குகளிலும் எதிர்த்துச் சண்டையிட எழுந்த சூரபத்மன் தன் குலத்தவரோடு மங்கி அழியுமாறு, அவர்கள் முடிகள் சிதறவும் உடல்கள் கிழியவும் நெருங்கிச் சென்று போர் புரிந்தவனே !

 குறிய வடிவமுடைய முனிவராகிய அகத்தியர் இன்பந்தரும் உண்மைப் பொருளை அறியும் படி அன்று திருவுளத்தில் உதித்த மந்திரத்தை உபதேசித்த குருநாதனே !உயர்ந்த மலையாகவும் தூய மலையாகவும் மேம்பட்டு விளங்கும் குன்றக்குடியில் வீற்றிருந்து அருளும் கந்தப் பெருமாளே !
 முருகனது சாபத்தால் மயிலானது மலை உருவில் நின்று தவம் செய்து சாப விமோசனம் பெற்றதால் மயூரகிரி என இத்தலம் அழைக்கப்படுவது பற்றியும், அகத்தியர் தாம் பிரதிஷ்டை செய்த சிவலிங்கத்திற்கு அபிஷேகித்த தேன் ஆறாகப் பெருகியதால் ஊருக்கு வெளியே உள்ள ஆறு தேனாறு என்று பெயர் பெற்றது பற்றியும் அருணகிரியர் குறிப்பிட்டுள்ளார்.

 ‘‘வானாடு புகழ் நாடு தேனாறு புடைசூழுமாயூரகிரி மேவு பெருமாளே’’
‘‘ வானாடேழ் நாடும் புகழ் பெற்றிடு
தேனாறே சூழ் துங்க மலைப்பதி
மாயூராவாழ் குன்றை தழைத்தருள் பெருமாளே’’
[தேனாறு = இது மதுநதி என்றும் அழைக்கப்படும்‘‘தரளஞ் சிதறும் மதுநதி உடையாய்’’  மயூரகிரி நாதர் பிள்ளைத் தமிழ்]

1895ம் ஆண்டு குன்றக்குடி வந்த பாம்பன் சுவாமிகள் ‘‘திருக்குன்றக்குடிப் பதிகம்’ எனும் நூலை இயற்றியருளியுள்ளார். குன்றக்குடி மயிலோனை வணங்கி, மலை இறங்கி வந்த பின் அருகாமையிலுள்ள பிள்ளையார் பட்டியை நோக்கிப் பயணிக்கிறோம். இங்கு பிள்ளையார் மூலவராக விளங்கும் கற்பக விநாயகர் கோயில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பர். பல்லவ மன்னன் நரசிம்ம வர்மன், தன் தந்தை மகேந்திர வர்மன் திருச்சி, சித்தன்ன வாசல் முதலான இடங்களில் கட்டிய குடவரைக் கோயில்கள் போல் தானும் கட்ட விரும்பி இங்குள்ள ஒரு குன்றில் பிள்ளையார் கோயிலைக் கட்டினான். கிழக்கு மேற்காக நின்றுள்ள குன்றில் வடக்குமுகமாக குடைந்து கோயிலை உருவாக்கியுள்ளான். ஈக்காட்டூர், மருதங்குடி, திருவீங்கைக்குடி என்றெல்லாம் அழைக்கப்பட்ட இச்சிற்றூரின் பெயர் அன்று முதல் பிள்ளையார்பட்டி என்று நிலைத்து விட்டது.

 மிக உயரமான நுழைவாயில் வழியே உள்ளே செல்கையில் நேரே கொடி மரம் தெரிகிறது. இடப்புறம் உள்ள சூரியனைத் தரிசித்துத் தொடர்ந்து நடந்தால் கருவறைக்கு மிக அருகே வந்துவிடலாம். ஆனால் அவ்வழி தடுக்கப்பட்டுள்ளது. எனவே வலப்புறம் திரும்பி சந்திரன் சிவகாமி, திருவீசர் எனப்படும் திருவீங்கைக்குடி மகாதேவர் ஆகியோரை வணங்கி, தடுப்புக் கம்பிகள் உள்ள குறுகிய வழியே சென்று நேரே கருவறையை அடைகிறோம். சிறிய குன்றின் மேல், மிகப்பெரிய உருவத்துடன், அமர்ந்த திருக்கோலத்தில் தேசிக விநாயகர் எனப்படும் கற்பக விநாயகர் காட்சி அளிக்கிறார். ஒரு சிற்பத்தை உருவாக்குவது வேறு, பாறையைக் குடைந்து அதி ஜாக்கிரதையாக இறைவன் திருவுருவைச் சமைப்பது வேறு என்று எண்ணிப்பார்க்கையில் நமக்குள் பெரும் பிரமிப்பு ஏற்படுகிறது.

தமிழ் நாட்டிலுள்ள பிற்காலக் கோயில்கள் போலன்றி, இங்கு விநாயகருக்கு இரண்டு கைகள் மட்டுமே உள்ளன. வலக்கரத்தில் சிவலிங்கம் உள்ளது. சிவ பூஜை செய்யும் கோலத்தில் விநாயகர் அமர்ந்திருப்பதாக அர்ச்சகர்கள் கூறுகின்றனர். தும்பிக்கை வலப்புறம் சுழிந்துள்ளதால் இவர் வலம்புரி விநாயகர் எனப்படுகிறார். இடக்கரம் இடையில் பொருந்தி உள்ளது. கால்கள் அர்த பத்மாச னத்தில் மடித்துள்ளன. மற்ற இடங்களை போல் கைகளில் அங்குச பாசம் இல்லை. கோயிலில் கருவறையைச் சுற்றியுள்ள ஒரே ஒரு பெரிய பிராகாரம் மட்டுமே உள்ளது.அசோக குசுமாம்பாள் எனும் வாடாமலர் மங்கையாகிய அம்பிகை, மருதீசர், அர்ஜுனவனேசுவரர் உலோக நந்தி, பாவை விளக்கு, முருகன் உற்சவ மூர்த்தி, ஆடல் வல்லான், தட்சிணாமூர்த்தி அனைவரையும் தரிசித்து வலம் வருகிறோம். நால்வர், சப்தமாதர்கள், காட்சி விநாயகர், சோமாஸ்கந்தர் ஆகியோரை வணங்குகிறோம். [வடமொழியில்
உமையுடனும் கந்தனுடனும் கூடிய இறைவன் எனும் பொருளில் சோமாஸ்கந்தர் எனப்படுகிறார். இதை சோமன் உமாஸ் கந்தன் என்று தவறாகப் பிரித்து எழுதியுள்ளார்கள்!]

திருச்சுற்று விநாயகரை வணங்கி, ஆறுமுகனைக் காண்கிறோம். குன்றக்குடி போன்று இங்கும் தனித்தனி மயில்களில் மூவரும் காட்சி அளிக்கின்றனர். ‘சரவண ஜாதா’ எனத் துவங்கும் திருப்புகழில், இத்தலத்தை ‘விநாயக மலை’ என்று குறிப்பிட்டுள்ளார் அருணகிரிநாதர்.
 ‘‘சரவண ஜாதா நமோநம கருணைய தீதா நமோநம
சததள பாதாநமோநம அபிராம
தருணக தீரா நமோநம நிருபமர் வீரா    நமோநம
சமதளவூரா நமோநம ஜகதீச
பரம சொரூபா நமோநமசுரர்பதிபூபா     நமோநம
பரிமள நீபாநமோநம உமை காளி
பகவதி பாலாநமோநம இசுபரமூலா     நமோநம
பவுருஷ சீலாநமோநம அருள் தாராய்
இரவியு மாகாசபூமியும் விரவிய தூளேற வானவ
ரெவர்களு மீடேறஏழ்கடல் முறையோவென்றிடர்பட மாமேரு பூதரமிடிபடவேதா னிசாசரரிகல் கெட மாவேக நீடயில் விடுவோனே மரகத ஆகார. ஆயனு மிரணிய ஆகார     வேதனும் வசுவெனு மாகாரஈசனும் அடிபேணமயிலுறை வாழ்வேவிநாயக மலையுறை வேலாமகீதர வனசரராதாரமாகிய பெருமாளே’’    

பொருள் :-
சரவணப் பொய்கையில் உதித்தவனே!
கருணையில் மேம்பட்டவனே!
நுண்ணியஇதழ் நூறு கொண்டதாமரைத் திருவடிகளை உடையவனே! அழகனே!
 இளமை மிகுந்த சுடர் கிரணங்களை உடையவனே!
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒப்பற்ற வீரனே!
திருப்போரூரில் எழுந்தருளியுள்ள தெய்வமே!
உலகத்துக்கே ஈசனான பரம்பொருள் சொரூபனே!
 அமரர் தலைவனான இந்திரனுக்கு அரசனே!
நறுமணம் வீசுகின்ற கடப்ப மாலையை அணிந்தவனே!
உமை, காளி, பகவதி எனப்படும் பார்வதியின் குமரனே!
இம்மை, மறுமை இரண்டிற்கும் மூலகாரணனே வீரம் நிறைந்த பரிசுத்தனே!
உன்னை வணங்குகின்றேன், வணங்குகின்றேன்! அடியேனுக்கு அருள் புரிவாயாக!
 
பரவி எழுந்த புழுதி படம், சூரிய மண்டலம், ஆகாய மண்டலம், பூமண்டலம் எங்கும் பரவவும், இமையவர்கள் யாவரும் இழந்த மதிப்பைப் பெறவும், சூர்மாவைப் பிளக்க வந்த வேலின் வெப்பத்தைத் தாங்க முடியாமல் ஏழு கடல்களும் இது முறையோ என்று அரற்றவும், புனித மேரு மலை பொடியாகவும், அவுணர்களின் பகை அழியவும் வேகம் மிகுந்த வேற்படையை ஊடுருவும் படிச் செலுத்தியவனே!

 மரகதஆகாரஇடையன் = பச்சை நிறமுடைய திருமால்
 இரணி ஆகார வேதனும் = பொன் நிறமுடைய பிரம்மன்
வசுவெனும் ஆகார ஈசன்  = அழல் மேனியவனாகிய ஈசன் ஆகிய இம்மூவரும்உன் திருவடிகளை வணங்கித் துதித்திட, மயில் மேல் வீற்றிருக்கும் வாழ்வே!
 

விநாயக மலையாகிய பிள்ளையார் பட்டியில் வீற்றிருக்கும் ஞான சக்தி தரனே ! பூமியைத் தாங்குபவனே! [ மலைக்கு நாயகனே!] வனத்தில் சஞ்சரிக்கும் வேடர்களின் வாழ்விற்கு ஆதாரமான பெருமை உடையவனே!  முருகப் பெருமானை வணங்கித் துதித்து, சிவசந்நதி கோட்டத்திலுள்ள லிங்கோத்பவர், பிரம்மா, சண்டிகேஸ்வரர், பைரவர்,தண்டபாணி, நவகிர ஹங்கள், மலைமகள், திருமகள் கலைமகள் அனைவரையும் தரிசித்து வெளியே வருகிறோம். கோயிலுக்கு முன் உள்ள பெரியகுளம் சுத்தமான நீருடன் நம்மைக் கவர்கிறது. மார்கழி மாதம் வரும் திருவாதிரை நாளும்,விநாயக சதுர்த்தியும் இங்கு கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. விநாயக மலையில் உறையும் தெய்வ சகோதரர்களை வணங்கி, திருப்புத்துறை நோக்கிப் பயணிக்கிறோம்.

(உலா தொடரும்)
* சித்ரா மூர்த்தி

Tags :
× RELATED வாசிப்பும் வழிபாடுதான்…