×

நவரசம் வழங்கும் நாதர்!

இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்-36

முந்தும் சந்தத்தால் முருகனை வழிபட்ட முத்தமிழ் வித்தகர் அருணகிரி நாதர். 1008 சந்தங்களுக்கும் மேற்பட்டு ஆறாகப் பெருகியது அவருடைய அற்புதத் தமிழ் !  நவரசங்களும் அவருடைய கவிரசத்தில் நிலைபெற்றன ! ஆறுமுகப் பெருமானின் கீர்த்தியையும், நம் ஆன்மிக அறுசமய நேர்த்தியையும் அன்னைத் தமிழ்  மொழியின் சீர்த்தியையும் பூர்த்தியாகப் புலப்படுத்துகின்றன அவரின் புனித மொழிகள் !

‘‘அருணகிரி நாவில் பழக்கம் ! - பெறும்
அந்தத் திருப்புகழ் முழக்கம் ! - பல
அடியார் கணம் மொழி போதினில்
அமராவதி இமையோர் செவி அடைக்கும் ! -
அண்டம் உடைக்கும் !’’

எனக் காவடிச் சிந்து திருப்புகழின் சுவை இன்பத்திற்குக் கட்டியம் கூறுகின்றது.  வீரன் அச்சம் இழிப்பு வியப்பு காமம் அவலம் உருத்திரம் நகை’ என  தண்டியலங்காரமும் ‘நகையே அழுகை இளிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளி உவகை ’ என தொல்காப்பியமும் மெய்ப்பாடுகளைப்  பட்டியலிடுகின்றன. இவற்றோடு சாந்தம் என்னும் சமநிலையும் சேர, ஒன்பான் சுவை என உரைக்கிறோம். ஒன்பான் சுவையும் ஒருமிக்கும் உன்னதச் சங்கமமாகத்  திருப்புகழ் திகழ்வதால்,
 
‘வருக்கைச் சுளையும் பொருக்கரை மாவும்
சொழுங்கனி வாழையும் செஞ்சுவைக் கன்னலும்
ஒருங்குதலை மயங்கிய அரும்பெருங் கலவையின்
அருஞ்சொல் வழக்கமும் திருந்திய நடையும்
வண்ண வேற்றுமையும் தண்ணெனும் ஒழுக்கமும்
ஒன்றி நிரம்பிய குன்றாத் திருப்புகழ் !

என ‘தனித் தமிழ்’ மலை மலையடிகளே ‘மணிப் ப்ரவாளத்’ திருப்புகழை மனமாறப் போற்றி மகிழ்கிறார். கவிதாதேவியின் நவரத்தின அலங்காரமாகத் திகழும்  சுவை ஒன்பதும் திருப்புகழில் எவ்வாறு சுடர்விடுகின்றன பார்ப்போம்.

* வீரம் : ராவணன், கம்சன், துரியோதனன் என புராணங்கள் பல வீரர்களைப் பற்றிப் புகழ்ந்தாலும் சூரபத்மனே மிகச் சிறந்த வீரன். ஏன் என்கிறீர்களா ? இப்போதும்  வீரத்தில் சிறந்த ஒருவனைச் ‘சூரன்’ என்று தான் புகழ்கின்றோமே தவிர ‘ராவணன்’ ‘கம்சன்’ என யாரும் குறிப்பிடுவதில்லை. அத்தகைய சூரனைப்  போரிட்டு புறங்காணச் செய்தார் முருகப் பெருமான். அதனால் அவரையே சூரன் என்ற சொல்லால் புகழ்கின்றார் வாக்கிற்கு அருணகிரி.

  ‘சூதமர் சூரர்உட்க பொரு சூரா’

* என்பது திருவண்ணாமலைத் திருப்புகழ். முருகனும் சூரனும் மோதுகின்ற போர்க்களம் நம் நேரெதிரே தெரிகின்ற வண்ணம் வீரத்தோடு விளம்புகின்றார்  சோலைமலைத் திருப்புகழில்
 
  ‘‘போர் மிகுத்த சூரன் விடோம் விடோம் என
நேரெதிர்க்க வேலை படீர் படீர் என
போயறுத்த போது குபீர் குபீர் என வெகுசோர்
பூமியுக்க வீசு குகா குகா திகழ்
சோலை வெற்பின் மேவு தெய்வா ’’

  (பழமுதிர் சோலை - சீர்  சிறக்கும் மேனி….. திருப்புகழ்)

* அச்சம்: ‘நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின்’ என்கிறது புறநானூறு. தீமை செய்தவர்களுக்கு நரகத்தில்தான் இடம். ‘இருள்  சேர்ந்த இன்னா உலகம்’ என நரகத்தை குறிப்பிடுகிறார் திருவள்ளுவர். குற்றம் செய்தவர்களுக்கு அதிக தண்டனை தர வேண்டும். அதைக் காணும்போது தான்  உலகில் தீயவர் திருந்துவர் என்கிறோம். அருணகிரியார் நரகக் காட்சியை நமக்குக் காட்டுகிறார். இரும்பை உருக்கி வாயில் ஊற்றுவார்கள். உன் தசையை அறுத்து  உனக்கே ஊட்டுவார்கள். கழு முனையில் ஏற்றுவார்கள். யமதூதர்கள் தீயவனுக்குத் தரும் தண்டனைகளைச் சிந்தித்தாலே பயம் வந்து பற்றிக் கொள்கிறதே’

கருவி அதனால் எறிந்து சதைகள் தனையே அரிந்து
கரிய புனலே சொரிந்து விடவேதான்
கழுமுனையிலேஇ ரென்று விடுமெனும வேளை கண்டு
கடுகி வர வேணும் …..  
(கதிர்காமம் திருப்புகழ்)

* அருவறுப்பு : இழிப்பு, இளிவரல் என்னும் அருவறுப்பும் பாட்டிற்கு ஒரு சுவை உறுப்புதான். அசுரர் கூட்டத்தை அடியோடு அழித்து வெற்றி கண்டார் வேலவனார்.  மலைகள் தவிடுபொடியாக, கடல்கள் வற்ற, ரத்தம் நதியாகப் பெருக்கெடுக்க மாமிசம் மலைபோல் குவிந்தது. கழுகு, நரி, பேய்களுக்குக் கொண்டாட்டம்தான்.  ஆனால் அந்தக் காட்சி நமக்கு எவ்வளவு அருவறுப்பானது ! போர்க்களத்திலுள்ள பேய்களின் செய்கையை அருணகிரியார் அப்படியே திருவகுப்பில் படம்பிடிக்கிறார்.

பிணங்களை அடுக்கி, அவற்றின் இடையே ரத்தத்தை அடைத்தும், பின் உடைத்தும் விடுகிறதாம் பேய்கள் ! அசுரர்களுடைய முடிகளையே அடுப்பாக்கி ரத்தத்தை  உலைநீராக்கி, மலை போலக் கிடக்கும் அவர்தம் பற்களை அரிசியாக்கி… இப்படியும் ஓர் உணவா ? நீண்ட தொங்கும் நாக்கால் மென்றதை மீண்டும் நக்கி  காக்கைக்கும் நரிக்கும் தருகிறதாம் பேய்கள் ! எண்ணும் போதே என்னவோ செய்கிறதல்லவா !

அருக்கர் பதமல உடுக்கள் பதமள
வடுக்கு பிணமொரு குறட்டில் அடைசுவ
அரக்கர் முடிகளை அடுப்பு வகிர்வன
அவற்றின் உலையென ரத்தம் விடுவன
அடுக்கல் எனும் அவர் எயிற்றை அவர்கர
அகப்பை அவைகொடு புகட்டி அடுவன
குதட்டி நெடியன உதட்டில் இடுதசை
கொடிக்கும், முதுசின நரிக்கும் உமிழ்வன.

* அருணகிரியார் அனுபூதி அமுதத்தை உண்டவர் மட்டுமல்ல. நமக்கு ஊட்டியவர், முருகப் பெருமானைக் கண்டவர் மட்டுமல்ல. நமக்குக் காட்டியவர்.

 ‘சயிலம் எறிந்த கை வேற் கொடு
  மயலில் வந்தெனை ஆட் கொளால்
  சக மறியும்படி காட்டிய குருநாதா !’’
என்பது திருச்சிராப்பள்ளி திருப்புகழ்.
 
கி. பி. 1450 விஜய நகப் பேரரசராக விளங்கிய பிரபுதேவ மகாராஜா காலத்தவர் அருணகிரிநாதர். அக்காலத்தே அருணகிரியார் புகழ் அதிகம் பரவ, அது கண்டு  பொறாமை உற்றான்  புலவன் சம்பந்தாண்டான். ‘திருமுருகன் திருவருளைப் பூரணமாகப் பெற்ற புலவர் அவர் என்கிறீர்களே ! அப்படி  எனில் அனைவர்  முன்னாலும் ஆறுமுகப் பெருமானை அவரால் வரவழைக்க முடியுமா “என்று கேட்டான்  சமபந்தாண்டான். ‘திருவருள்சித்தம் என ஆணையை ஏற்று  அரசனவையில் அவர்பாட, அழகிய மயிலில் வேலன் வந்தது தான் எத்தனை வியப்பு ?

‘அதல சேடனார் ஆட அகிலமேரு மீதாட
அபின காளி தானாட அவளோடன்று
அதிரவீசி வாதாடும் விடையில் ஏறுவார் ஆட
அருகுபூத வேதாளம் அவையாட
மதுரவாணி தானாட மலரில் வேதனார் ஆட
மருவு வானுளேர் ஆட மதியாட
. . . . . . . . . . . . . . . . . . .  . . . . . .
. . . . மயிலு மாடி நீயுமாடி வரவேணும் !’’

* காமம்: காதலியை அடைய விரும்பும் காதலன் அவளது வடிவத்தையும், பெயரையும் ஒரு படத்தில் எழுதி தன் ஊரையும் பேரையும் அதன்மேல் எழுதி பனை  மடலால் குதிரை  வாகனமதில் ஏறி காதலியின் உறவினர்க்கும், ஊரார்க்கும் தன் காதலைத் தெரிவிப்பான். அன்புக்கு உரியவளை அடைய இம்மடல் ஏறுதலி  முறையை மேற் கொண்டான் முருகன்.
 
கற்பு திருமண முறைக்கு தெய்வானையோடு சேர்ந்த கந்தன் களவுத் திருமணமுறையில் வள்ளியைக் கூடினான். தினைப் புனவள்ளி நாயகியின். சந்திரபிம்ப  முகத்தையும், சிவந்த  இதழையும்,  நீண்ட கண்களையும், வளையணிந்த கரங்களையும், வடிவார்ந்த கொங்கைகளையும், மரகத உருவத்தையும் ஓவியமாக  வரைந்து உற்று பார்த்து உள்ளம் மகிழ்ந்தான் என காதல் ததும்பக் கவிதை பாடுகிறார் அருணகிரியார்
. . . .  . . . . . . . . . . . . . . . . . . . .  குறமகள்
செம்பொன் நூபுர கமலமும் வளையணி  புதுவேயும்
குங்குமாசல யுகளமும்  மதுரித
இந்த ளாம்ருத வசனமும் முறுவலும்அபிராம
. . . . . . . . . . . . . . . .  .. . .  . . . . .
இந்த்ர நீலமும் மடலிடை எழுதி பெருமாளே !

(கொந்துவார் -திருத்தணிதிருப்புகழ்)

* அவலம் : ‘நெருநல் உள்ளன் ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை படைத்திவ்வுலகு’ என்று பேசினார் திருவள்ளுவர். அன்புக்குரிய கணவர் ஆவி  பிரிகிறார். ‘கண் விழித்து உடன் இருந்தேனே ! போய் விட்டீர்களே!’ என்று செய்வதறியாது கலங்குகின்றாள் மனைவி ! முதிய வயதில் தான் இருக்க மகன்  மாண்டுவிட்டானே என அலறுகிறாள் தாய்! புதல்வர்கள் ‘அப்பா’ எனக் கதறுகிறார்கள். பிணப் பறைகள் கொட்ட, உற்றவரும், மற்றவரும் ஒவென்று அழ,  பாடையில் புறப்படுகிறது நம் கடைசிப் பயணம். அவலத்தையும் இப்படிப் படம் பிடிக்க அருணகிரிநாதர் ஒருவரால் மட்டும்தான் இயலும்.

கயல் விழித்தேன் எனைச் செயல் அழித்தாய் எனக்
கணவ! கெட்டேன் எனப்  பெருமாது
கருது புத்ரா எனப் புதல்வர் அப்பா எனக்
கதறிடப் பாடையிற்  தலைமீதே
பயில் குலத்தார் அழ பழைய நட்பார் அழ
பறைகள் கொட்டாவர சமனாரும்
பரிய கைப் பாசம் விட்டெறிய அப்போதெனைப்
பரிகரித் தாவியைத் தரவேணும்

(திருவண்ணாமலைத் திருப்புகழ்)

* கோபம் : முருகப் பெருமானுடைய திருவருள் அவன் அடியார்களுக்கு ஒரு கவசம் ! போரில் பகைவர்களின் கணை தாக்காமல் இருக்க வீரர்கள் இரும்புக்  கவசம், வஜ்ர கவசம் அணிவார்கள். தற்போதும் பிரதமர், முதல்வர் பாதுகாப்புக் கவசம் அணிகிறார்கள் அல்லவா! கவசம் அணிந்தவர் பயப்பட வேண்டாம்.  அருணகிரியார் ‘வேலாயுதனின் அருளாய கவசம் உண்டு. என்பால் யமனின் ஆயுதம் வருமா?’ எனக் கேட்பதோடு நில்லாமல் அந்தகன் மீது ஆத்திரம்  கொள்கிறார். ‘தண்டாயுதம், சூலம், பாசக் கயிறு இவற்றோடு வரும் உன்னைத் தாக்கி வெற்றி கொள்வேன். ஆற்றல் இருந்தால் அருகே வந்து பார்’ எனக்  கோபம் கொப்பளிக்கக் கூறுகிறார் கந்தரவங் காரத்தில்,

தண்டாயுதமும் திரிசூலமும் விழத் தாக்கி உன்னைத்
திண்டாட வெட்டி விழ விடுவேன் செந்தில்
வேலனுக்குத் தொண்டாகிய என் அவிரோத ஞானச் சுடர் வடிவாள் கண்டாயடா அந்தகா! வந்து பார் சற்று என்கைக் கெட்டவே !

* நகை: பொடிப்பொடியாக மணல் பொலிகின்றது கடற்கரையில் ! ‘எத்தனை மணல்?’ என எண்ணிச் சொல்லிவிட முடியுமா ? ஒருவேளை முயன்றால்  முடியலாம். ஆனால் ‘நம் பிறப்பு எத்தனை?’’ என நினைத்தாலே தலைசுற்றும் என்கிறார் அருணகிரியார். ‘பிறவிப் பெருங்கடல்’ என்கிறாரே திருவள்ளுவர்.  ‘செல்வா நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்புடம் பிறந்து இளைத்தேன்’ என்கிறாரே மாணிக்கவாசகர். அருணகிரிநாதர் இதை நயம்பட, நகைபடக்  கூறுகிறார்.

‘மனிதா! பிரமனும், யமனும் உன்னைக்கண்டு அஞ்சும் அளவுக்கு நீ பெரியவன்! எப்படி என்கிறாயா? எத்தனை முறை இவனை படைப்பது என பிரம்மாவும்,  எத்தனை முறை இவனைப் பிடிப்பது என யமனும் அஞ்சும் அளவிற்குப் பிறவி எடுத்து விட்டாய்! போதும் உன் அவதாரம் ! கழுகும் நரியும் கூட உன்னைக்  கொத்தி அலுத்து விட்டன’ எனப் பரிகசிப்பு சுவை தோன்றப்பாடுகின்றார்!‘ வாக்கிற்கு அருணகிரி’ அல்லவா? சிறிய சிறிய சொற்களில் அரிய பெரிய கருத்தை
அடுக்குகின்றார்.

‘எழுகடல் மணலை அளவிடின் அதிகம்
எனதிடர் பிறவி அவதாரம்
. . . . . . . . . . . . . . . . . . . . .
கழுகொடு நரியும், எரி, புவி, மறவி, கமலனும்
மிகவும் அயர்வானார் !
( சிதம்பரம் - திருப்புகழ்)

* சாந்தம் : அனைத்தும் அடங்கிய நிலையில் ஆண்டவனின் பேரருள் பிரசாதம் பெற்று தவ உச்சியில் சாந்த வடிவனராகச் சமைந்தவர் அருணகிரிநாதர். ‘எல்லாம்  அற என்னை இழந்த நலம் சொல்லாய் முருகா’ எனக் கேட்டு சும்மா இருக்கும் எல்லையுட் சென்ற வல்லவர் அவர். ஆணவமென்னும் முல மலர் அடியோடு  அகன்று ஜீவன் சிவனாகி சாந்தம் என்னும் சமநிலை என்னை வந்து எய்தியது என்கிறார் அருணகிரியார். அலையும், ஆரவாரமும் இல்லாத பேரின்பக்  கடற்கரையில் பேச்சற்று அனுபூதி அமுதத்தை நமக்கு வாரி வழங்குகிறார் அவர்.

(தொடரும்)

தொகுப்பு: திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்

Tags : NATHER ,
× RELATED நல்வாழ்வுக்கு வழிகாட்டும் போதனைகளை...