×

கள்ளிக்குடி அருகே தாழ்வான மின்கம்பியால் ஊருக்குள் பஸ் வர மறுப்பு; மக்கள் அவதி

திருமங்கலம்: கள்ளிக்குடி அருகே நேசனேரி கிராமத்தில் சாலையின் நடுவே மின்கம்பி தாழ்வாக செல்வதால் டவுன் பஸ்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கிராமமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கள்ளிக்குடி தாலுகாவிற்குட்பட்டது நேசனேரி கிராமம். சுமார் 400 வீடுகள் அமைந்துள்ள இந்த கிராமத்திற்கு மதுரையிலிருந்து சிவரக்கோட்டை செல்லும் டவுன் பஸ் தினசரி 5 முறை வந்து செல்கிறது. டவுன் பஸ் மூலமாக செங்கபடை, திருமங்கலம் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சென்று மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். மேலும் கிராமமக்கள், கல்லூரி மாணவர்கள் அனைவரும் டவுன் பஸ்சை நம்பிதான் உள்ளனர். இந்நிலையில் நேசனேரி- செங்கபடை ரோட்டில் அமைந்துள்ள மின்கம்பிகள் நேற்று முன்தினம் முதல் திடீரென உயரம் குறைந்து தாழ்வானதால் பஸ்சில் உரச துவங்கியது. இதனால் நேற்று முன்தினம் மதியத்திற்கு பின்பு மதுரையிலிருந்து சிவரக்கோட்டைக்கு சென்ற டவுன் பஸ்கள் எதுவும் நேசநேரி கிராமத்திற்குள் வராமல் சென்றது. இதனால் பள்ளி- கல்லூரி மாணவர்கள், கிராமமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். இந்நிலையில் நேற்று காலை சிவரக்கோட்டைக்கு சென்ற டவுன் பஸ்சை நேசனேரி பிரிவு ரோட்டில் கிராமமக்கள் சிறைபிடித்தனர். அப்போது டிரைவர், கண்டக்டர் டவுன் பஸ் நேசனேரி கிராமத்திற்குள் வரும் போது மின்சார கம்பி பஸ்சில் உரசுவதால் விபத்து ஏற்படும் அபாயமுள்ளது. அதனால்தான் பஸ் உள்ளே வரவில்லை என கூறினர். இதனை தொடர்ந்து போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், தாழ்வான மின்கம்பிகளை மின்வாரியத்தில் கூறி உடனடியாக சீர்படுத்தவும், கிராமத்திற்கு வந்து மண் சாலையை சரிசெய்தால்தான் பஸ்சை மீண்டும் இயக்கமுடியும் என தெரிவித்தனர். இதுதொடர்பாக கதிருமங்கலம் மின்வாரியம், கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு பொதுமக்கள் தகவல் கொடுத்துள்ளனர் மின்கம்பிகள் சரிசெய்த பின்புதான் ஊருக்குள் மீண்டும் பஸ் வரும் என்ற தகவல் கிராமமக்களிடம் வேதனையை உண்டாக்கியுள்ளது. இதுகுறித்து நேசனேரியை சேர்ந்த முத்துகிருஷ்ணன், முருகன் கூறுகையில், ‘இப்பகுதியில் பெய்த மழைக்கு மின்கம்பம் பூமிக்குள் இறங்கியதால் மின்கம்பி தாழ்வாகி விட்டது. டவுன்பஸ் கிராமத்திற்குள் வராததால் 2 கி.மீ தூரம் நடந்து சென்று பஸ் ஏற வேண்டியுள்ளதால் மாணவ, மாணவியர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே அதிகாரிகள் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்….

The post கள்ளிக்குடி அருகே தாழ்வான மின்கம்பியால் ஊருக்குள் பஸ் வர மறுப்பு; மக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Kullikudi ,Tirumangalam ,Nasaneri ,Dinakaran ,
× RELATED திருமங்கலம் – கொல்லம் நான்கு...