×

ராமபக்த தூதன்


ஆசை சுயநலம்
மிகுந்த வாழ்வில்
அல்லல்படும் மனதை
அணைத்து காத்திடுவான்
அன்பெனும் சொல்கேட்டு
ஆனந்தக் கண்ணீர் ஆறாகும்!

ஆபத்தில் அபயம் தரும்
சேவை சிகரமே
வலிமை உருவே
வானர வீரனே
வாயு குமாரனே
தன் பெயர் மறந்து
ராம நாமத்தில் மூழ்கும்
சிறிய திருவடி சரணம்!

கானகம் புகுந்து
கடல்மேல் பறந்து
தீவை அடைந்து
காவனம் நடுவே
கரியசெம்மல் நினைவில்
கண்ணீர் உணவாக
கற்பு அணியாக

கவலையே ஆடையாகக் கொண்ட
காரிகை சீதையைக் கண்டு
கணையாழி தந்து அவரிடம்
சூளாமணி பெற்று
திருவினை புரி்ந்து
திரும்பினான் கானகம்
‘கண்டேன் சீதையை’ எனும்
தூது  செய்தியால் ராகவன்
மனநோய்க்கு சஞ்சீவினி  தந்த
பராக்கிரம சிரஞ்சீவி வாழ்க!

மறைபொருள் தரும் மறைகள் எதற்கு
மாருதியின் சேவையே தனிச்சிறப்பு
சிரம் மேல் கரம் குவித்தோம் ஆஞ்சநேயா
சீறடி துணை கொண்டோம் ஆஞ்சநேயா!

ராமன் மீதான அன்பை
மன்றத்தில் மனம் திறந்தாய்
ரத்தினங்கள் மதிப்பிழக்க
மாபெரும் புகழ் கொண்டாய்!

குறையிலா அகஅழகு சுந்தரனே
குறிப்பறிந்து பேசும் சொல்லின் செல்வனே
தன்னடக்க தவசீலனே
தீமைக்கு எதிராக
தீவைத்து விளையாடும் வானரமே!

ராவணன் மனதில்
அச்சம் துளிர வைத்தவனே!

தீதில்லா மனமே
ராமன் கோயில்
தூது வருவாய் ஆஞ்சநேயா!

Tags : Ramapaktha Messenger ,
× RELATED இயற்கை வடித்த லிங்கம்