சென்னை: நடிப்பு, கார் ரேஸிங் என்று செம பிசியாக இருக்கும் அஜித் குமார், மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்த `விடாமுயற்சி’ என்ற படம் வரும் பொங்கலன்று திரைக்கு வருகிறது. இதில் திரிஷா, அர்ஜூன், ரெஜினா கெசன்ட்ரா, ஆரவ் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைக்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். இதன் டப்பிங் பணியை அஜித் குமார் முடித்துள்ளார். இதையடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவர் நடித்து வரும் படம், `குட் பேட் அக்லி’. இதில் அஜித் குமார் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கான படப்பிடிப்பு முடிவடைந்தது.
இதுபற்றி இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் நேற்று நெகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ள பதிவில், ‘இதுபோன்ற வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத மிகச்சிறந்த ஒரு வாய்ப்பை எனக்கு அளித்த அஜித் சாருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எனது நீண்ட நாள் கனவு இப்போது நிறைவேறிவிட்டது. லவ் யூ அஜித் சார். இது அஜித் சாரின் கடைசி நாள் படப்பிடிப்பு. இது ஒரு அழகான பயணமாக எனக்கு அமைந்தது’ என்று குறிப்பிட்டுள்ளார். இதில் திரிஷா, பிரசன்னா, அர்ஜூன் தாஸ் நடிக்கின்றனர்.
17 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அஜித் குமார் நடிக்கும் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். இப்படம் வரும் பொங்கலன்று திரைக்கு வரும் என்று அறிவித்தனர். அன்று `விடாமுயற்சி’ ரிலீசாவதால், `குட் பேட் அக்லி’ ரிலீஸ் தேதி இன்னும் முடிவாகவில்லை.