×

கிரிவல விதிகள்

*கிரிவலம் வரும்போது எக்காரணத்தைக் கொண்டும் தீய வார்த்தைகளைப் பேசக்கூடாது.
 
*கிரிவலம் செல்ல பௌர்ணமி, அமாவாசை, மாத சிவராத்திரி ஆகிய நாட்கள் சிறந்தவை.
 
*எந்த இடத்திலிருந்து தொடர்ந்தோமோ அதே இடத்தில் முடித்தால்தான் கிரிவலம் முழுமை பெறும் என்கிறது, அருணாசல புராணம்.
 
*சித்திரை மாத பௌர்ணமியன்று அண்ணாமலையாரின் கிழக்கு கோபுரத்தின் முன் பசுநெய்யிட்டு, தாமரைத் தண்டு திரியினால் அகல் விளக்கு ஏற்றி அதை உயர்த்திப் பிடித்து தீபத்துடன் அண்ணாமலையை தரிசித்து, பிறகு கிரிவலம் தொடங்க வேண்டும். பிறகு பூதநாராயணர் ஆலயத்தில் பூக்களை தானமளித்து கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும்.
 
*கிழக்கு கோபுர வாயிற்படியில் அருளும் லட்சண விநாயகரை சம்பங்கிப் பூக்களால் அர்ச்சித்து வணங்கி பின் அண்ணாமலையாரை தரிசிக்க வேண்டும். இதற்கு லட்சண திருமுக தரிசனம் எனப் பெயர். அதன் பின் மகாலட்சுமி காயத்ரி மந்திரத்தை ஜபித்தவாறே கிரிவலம் வந்தால் செல்வ வளம் பெருகும்.
 
*எமலிங்கத்தின் அருகே இருக்கும் எமதீர்த்தத்தில் நீராட வேண்டும். முடியாதவர்கள் அத்தீர்த்தத்தை தலையில் தெளித்துக்கொண்டு, சம்பங்கிப் பூக்களால் அர்ச்சித்து அதை பிரசாதமாகப் பெற்று எமலிங்கத்தின் வாயிலில் நின்று அண்ணாமலையை தரிசிக்க வேண்டும். இதற்கு ஔதும்பர தரிசனம் என்று பெயர். இது நீடித்த ஆயுளைத் தரும்.
 
*கிரிவலப் பாதையில் செங்கம் சாலையிலிருந்து வலதுபுறம் திரும்பியதும் அண்ணா
மலையை தரிசிக்க வேண்டும். இது பரஞ்ஜோதி தரிசனம் என அழைக்கப்படுகிறது.
 
*குபேரலிங்கத்தின் வாசலிலிருந்து அண்ணாமலையை தரிசிக்க வேண்டும். இதனை வைவஸ்வதலிங்கமுக தரிசனம் என்பார்கள்.
 
*பூதநாராயணப் பெருமாளை தரிசித்து நம் பொருளாதார பிரச்னைகளுக்கு அவரிடம் பிரார்த்தனை செலுத்தி பின் அண்ணாமலையை தரிசிக்க வேண்டும். இது சத்தியநாராயண தரிசனம் எனப்படுகிறது.
 
*கிரிவலம் வரும்போது மிகவும் மெல்ல நடக்க வேண்டும். இறை சிந்தனையோடும் நாம ஜபத்தோடும் நடக்க வேண்டும்.
 
*கிரிவலத்தின் போது ஒவ்வொரு திக்கிலும் தியானித்து, கைகூப்பித் துதித்து, ஒரு நிறைமாத கர்ப்பிணி எவ்வளவு நிதானமாக நடப்பாளோ அவ்வளவு மெதுவாக, வைக்கும் காலடி சத்தம் கேட்காதபடி நடக்க வேண்டும்.
 
*நீராடி, மடித்துணி உடுத்தி, விபூதி&ருத்ராட்சம் தரித்து கிரி பிரதட்சிணம் செய்ய வேண்டும். அவரவர் சம்பிரதாயப்படி நெற்றிக்கு அணியலாம்.
      
*நீர் அருந்துவதைத் தவிர வேறு எதையும் உண்ணக்கூடாது.
 
*பாதணிகள் அணியாமல் அண்ணாமலையை வலம் வர வேண்டும்.
 
*பிரம்ம தீர்த்தத்தில் நீராடி அண்ணாமலையாரை அர்ச்சித்து மௌனமாக கிரிப்பிரதட்சிணம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் பாவங்கள் பறந்தோடும்.
 
*கிரக பீடைகள் நீங்க விரும்புவோர் சனிக்கிழமையில் அண்ணாமலையை கிரிவலம் வர வேண்டும்.
 
*எக்காரணம் கொண்டும் வாகனத்தில் அமர்ந்து கிரிப் பிரதட்சிணம் செய்யக்கூடவே கூடாது.
 
*நிலைத்த இளமை வேண்டுவோர் கிரிவலம் வந்து உண்ணாமுலையம்மனை தரிசித்தல் வேண்டும் என்று ஸ்காந்த புராணம் கூறுகிறது.
 
*மற்ற தலங்களில் தவமிருந்தால் முக்தி கிட்டும்; இங்கோ, நினைத்த மாத்திரத்திலேயே முக்தி கிட்டும். எனவே முடிந்த போதெல்லாம் அருணாசல மலையை தியானிக்க வேண்டும்.
 
*உலகில் எவ்வளவு தவங்கள் உண்டோ அவ்வளவு தவங்களின் பலனையும் கிரிப்பிரதட்சிணம் ஒன்றே தரும் என்பதால் ஆழ்ந்த நம்பிக்கை.

Tags : Kirivala ,
× RELATED திருப்பதி முதல் திருவண்ணாமலைக்கு...