×

அண்டியவர்க்கு அருள்வார் தண்டாயுதபாணி

முருகப்பெருமான் மாங்கனிக்காக கோபமுற்று வந்தமர்ந்த குன்றே பழனி, பழம் நீ என்பதே பழநீ என்றும் பழநி என்றும் மருவியது. கையில் தண்டம் வைத்து ஆண்டிக் கோலத்தில் முருகன் இருப்பதால் தண்டாயுதபாணி என்றும் அழைக்கப்படுகிறார். முருகனை சமாதானப்படுத்த வந்த பார்வதி, பெரியநாயகி அம்மனாக நகருக்குள்ளும், சற்று தள்ளி நின்ற சிவன், பெரியாவுடையாராக வடக்கில் 5 கி.மீ தூரம் தள்ளியும் கோயில் கொண்டுள்ளார்கள். போகர் நவ பாஷாணங்களால் பழநி முருகனை உருவாக்கி பிரதிஷ்டை செய்தார். இந்த சிலையைத் தொட்டால் மனித உடலைத் தொடுவது போல இருக்குமாம்.

இந்த சிலைக்கு தினசரி இரவில் சந்தனமும் கௌபீனமும் சாத்தப்படுகிறது. இவை சிறப்பு பிரசாதங்களாகக் கருதப்படுகின்றன. காரணம் இவை அனைத்துப் பிணிகளையும் நீக்கவல்லவை என்பார்கள். முருகன் சிலைக்கு தினசரி இரவு சாற்ற தூய சந்தனமும், நிவேதனமாக தேன் கலந்த தினைமாவும் சாது சுவாமிகள் மடத்திலிருந்து செல்கின்றன. மூலவரின் சிற்பம் செதில் அமைப்பைக் கொண்டது. அபிஷேகத்தின்போது மேலிருந்து கீழாகத்தான் பூசுவார்கள்; கீழிருந்து மேலே பூசினால் கைகள் காயப்படும். பழநியாண்டவர் முன்பாக மாக்கல் எனப்படும் பெரிய கல் ஒன்று உள்ளது.

இது பள்ளியறைக்கு எழுந்தருளும் முருகனின் திருவடிகளைத் தாங்குகிறது. முதல் பிராகாரத்தின் தென்கிழக்கில் போகர் சந்நதி உள்ளது. அவரால் பூஜை செய்யப்பட்ட புவனேஸ்வரி தேவியும், மரகதலிங்கமும் அங்கே அருள்கின்றனர். இங்குள்ள சுரங்கப்பாதை வழியாக இறங்கிச் சென்றுதான் போகர் முருகனுடன் ஐக்கியமானார் என்கிறார்கள். பிரம்மா வில், அம்போடு வேடுவ வடிவத்தில் அருள்கிறார். போகரின் சீடர் புலிப்பாணிக்கு இங்கே தனி சந்நதி உள்ளது. மலைகளைக் காவடியாக சுமந்து வந்த இடம்பாசுரனுக்கு சக்திகிரியில் தனிக்கோயில் உள்ளது.

மூலவருக்கு அருகில் சிறிய பேழை ஒன்றில் சாளக்ராம ஸ்படிக லிங்க வடிவில் சிவபெருமானும், உமாதேவியும் அருள்கின்றனர்.  இவர்களை தண்டாயுதபாணி பூஜிப்பதாக ஐதீகம். முருகன் வள்ளியை மணமுடித்ததால் பர்வதராஜ குலத்தினர் (சேலம் - எடப்பாடியை சேர்ந்தவர்கள்) மாப்பிள்ளை என்று சாமி கும்பிட வருகின்றனர். இவர்களுக்காக தைமாதம் முழுவதும் பழநி மலைக் கோயில் தாழிடப்படாமல் திறந்து வைப்பது இன்றும் தொடர்கிறது. வெள்ளிப் பல்லக்கில் மூலவரின் பாதுகைகள் பள்ளியறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அன்றைய வரவு செலவு கணக்குகளை அதன் முன் படித்துக் காண்பிப்பது வழக்கம்.
கொடைக்கானல் மலைவாழ் மக்கள் புது செருப்பு தைத்து தலையில் சுமந்தபடி பாத யாத்திரையாக பழநிக்கு வந்து முருகனுக்கு அர்ப்பணிக்கின்றனர். அதை அணியும் முருகன் அவர்கள் பகுதிக்கு வேட்டையாட வருவதாக ஐதீகம். மறுநாள் அந்த புது செருப்பு கொடைக்கானல் காட்டுப் பகுதிகளில் காணப்படுமாம். காலையில் முருகனை ஆண்டிக் கோலத்தில் தரிசிப்போர் மாலையில் ராஜ அலங்காரத்தையும் தரிசித்தால் குடும்பத்தில் மங்கலம் நிலைக்கும் என நம்பப்படுகிறது.

சு.இளம் கலைமாறன்

Tags : neighbors ,
× RELATED தேனி சுற்றுப்புற பகுதிகளில் பரவும் கொரோனா: அச்சத்தில் கிராம மக்கள்