×

ராகுகேது தோஷம் போக்கும் நாகேஸ்வரர்

உலக மக்களை தனது அருட்பார்வையால் ஆட்சி செய்து வருபவர் சிவபெருமான். ராம அவதாரத்தில் மனிதராக அவதாரமெடுத்து ராவணனை வதம் செய்ததால் ராமபிரானுக்கே தோஷம் ஏற்பட்டபோது அந்த தோஷங்களில் இருந்து விடுபட ராமேஸ்வரத்தில் உள்ள ராமலிங்கேஸ்வரரை வணங்கி தோஷத்தை போக்கிக்கொண்டார். மனிதர்களுக்கு ஏற்படும் தோஷங்களில் முக்கியமானதாக ராகு கேது தோஷங்கள் கருதப்படுகின்றது. இதிலிருந்து விடுபட விழுப்புரம் மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பூவரசன்குப்பம் கிராமத்தில் அமர்ந்துள்ள சிவலோக நாயகி உடனுறை நாகேஸ்வரர் கோயிலுக்கு சென்று வணங்கி வந்தால் தோஷம் நீங்கி நன்மைகள் பெறலாம் என்பது ஐதீகம். இங்குள்ள நாகேஸ்வரர் நடுநாட்டு நாகேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

ஸ்தல வரலாறு

பல்லவ மன்னன் சிம்மவர்மன் பல இடங்களில் சைவ வைணவ திருக்கோயில்கள் கட்ட வந்தபோது அப்பகுதிகளில் உள்ள காடு மலைகளை அழித்து கோயில் கட்ட முற்பட்ட போது அங்கு வாழ்ந்து வந்த நாகங்களை அழிக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. அவ்வாறு செய்ததன் மூலம் அவனுடைய வம்சத்தினருக்கும் அவனுக்கும் நாகதோஷம் ஏற்பட்டது. பூவரசன்குப்பத்தின் தக்‌ஷணபினாஹினி என்று சொல்லக்கூடிய தென்பெண்ணையாற்றின் நதிக்கரையில் தவம் செய்து கொண்டிருந்த சிவஹரி முனிவரிடம் தன்னுடைய நிலை பற்றி சிம்மவர்மன் கூறினான்.

அதற்கு முனிவர் பூவரசன்குப்பம் என்ற ஊரில் ஈசான மூலையில் ஒருபுற்று இருப்பதாவும், புற்றுக்குள் சுயம்புவாக ஒரு சிவலிங்கம் இருப்பதாகவும், அதனை ஒரு நாகம் பூஜித்து வருவதாகவும், நீ அங்குசென்று நாகத்தை வழிபட்டு, சிவலிங்கத்தை வெளியில் எடுத்து அதற்கு கருங்கல்லால் ஆலயம் கட்டி குடமுழுக்கு செய்தால் உனக்கும், உன் சந்ததிக்கும் நாக தோஷங்கள் நீங்கும் என்றுரைத்தார். அம்மன்னனும் முனிவர் கூறியபடியே ஆலயம் எழுப்பி, ஆலயத்திற்கு நாகேஸ்வரர் என்று பெயர்சூட்டி குடமுழுக்கு செய்தான். அன்று இரவே நாகம் சிவலிங்கத்தை சுற்றிக்கொண்டு காட்சி தந்தது. இத்தனை நூற்றாண்டுகள் கழித்தும் இந்த கோயிலில் ஒரு நாகம் இன்று வரை குடிகொண்டுள்ளது. அந்த நாகம் யாருக்கும் தீங்கு செய்வதில்லை.

கோயில் சிறப்பு

இந்த கோயிலில் மூலஸ்தானம், அர்த்தமண்டபம், மஹா மண்டபம், சுற்று மதில்சுவர் ஆகியவற்றுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மதிற் சுவர் தவிர்த்து அனைத்தும் கருங்கற்களாலே அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபைரவர், நாகதேவதை, செந்தூரகணபதி, ராகு கேது பகவான் சன்னதி, நவகிரகங்கள் சன்னதி, சண்முகநாதர் சன்னதி ஆகியவை அமையப்பெற்றுள்ளது. இத்திருக்கோயில் ஈசான்ய மூலையில் அமைந்திருப்பது பெரும் சிறப்பு. இக்கோயிலின் தலவிருட்சமாக வன்னிமரம் விளங்குகின்றது. இசைக்கருவி நாதஸ்வரம்.  

கும்பாபிஷேகம்

இத்திருக்கோயில் கும்பாபிஷேகம் 1964ம் ஆண்டு நடைபெற்றதாகவும், அதனைத்தொடர்ந்து 1999ம் ஆண்டு திருவாதிரை நட்சத்திரத்தில் நடைபெற்று, மூலவர் மற்றும் இதர சன்னதிகள் மறு வேலைப்பாடு செய்யப்பட்டு 2008ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதாகவும் ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர். வருடாந்திர திருவிழாக்கள் ஒவ்வொரு தமிழ்மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை ராகு கேது பரிகாரம், மஹா சண்டியாகம், லட்சார்ச்சனை நடைபெறுகின்றது. இக்கோயில் ராகுகேது பரிகாரஸ்தலம்மாக நடுநாட்டு நாகேஸ்வரம் என்ற பெயருடன் விளங்கி வருகின்றது. மகா சிவராத்திரியன்று அன்னாபிஷேகம், உத்திராயண புண்ணியகாலத்தில் தை மாதத்தில் ஆற்றுதிருவிழா தீர்த்தவாரி சுவாமி வீதி உலா நடைபெறுகின்றது.

தோஷ நிவர்த்தி

ராகு கேது பரிகாரத்தில் கலந்து கொண்டு பயன்பெற்றவர்கள் கோயிலுக்கு வந்து தங்களால் இயன்றதை செய்வதோடு, மற்றவர்களுக்கும் தோஷ நிவர்த்தி குறித்து கூறிவருகின்றனர். அதனால் இத்திருக்கோயில் ராகுகேது தோஷநிவர்த்தி தலமாக விளங்கி வருகின்றது. மேலும் மக்களின் துயரங்களை இன்றுவரை நீக்கும் நடுநாட்டு நாகேஸ்வரராக இருப்பதாக மக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்,

செல்வது எப்படி

விழுப்புரத்தில் இருந்து வளவனூர் வந்தால் அங்கிருந்து 7 கி.மீ தொலைவில் நாகேஸ்வர சுவாமி திருக்கோயிலை அடையலாம், புதுவை மற்றும் கடலூரில் இருந்து மடுகரை வந்தால் அங்கிருந்து 4 கி.மீ தொலைவில் சன்னதியை அடையலாம். காலை 8மணி முதல் 12வரையும், மாலை 4 மணி முதல் 7வரையும் நடை திறந்திருக்கும்.

Tags : Nageshwar ,
× RELATED உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஷ்வர் ராவு...