×

மேட்டூர் அருகே பரிதாபம் மின்வேலியில் சிக்கி யானை பலி-விவசாயியை கைது செய்து விசாரணை

மேட்டூர் : மேட்டூர் அருகே விளைநிலத்தில் போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி ஆண் யானை பரிதாபமாக இறந்தது. இதுதொடர்பாக மின்வேலி அமைத்த விவசாயி, வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே ஆலமரத்துபட்டி கிராமத்தில் கூழ் கரடுதோட்டம் உள்ளது. இந்த கிராமம் வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த விவசாயி புஷ்பநாதன்(50), என்பவர் தனது விவசாய நிலத்தில் பருத்தி சாகுபடி செய்திருந்தார். மேலும், வனவிலங்குகளிடமிருந்து பயிரை காப்பாற்றுவதற்காக சட்டத்திற்கு புறம்பாக விதி மீறி மின்வேலி அமைத்திருந்தார். விவசாய நிலத்தைச் சுற்றி கம்பி கட்டி அதில் கிணற்று மின் இணைப்பில் இருந்து மின்சாரம் எடுத்து பாய்ச்சி இருந்தார். இந்த மின்வேலியில் சிக்கி எலி, முயல், மயில், பாம்பு மற்றும் காட்டுப்பன்றி உள்ளிட்டவை உயிரிழந்தன. இந்நிலையில், நேற்று அதிகாலை சென்னம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட வடபருகூர் வனப்பகுதியில் இருந்து வந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் யானை, நன்கு விளைந்திருந்த பருத்தியை கண்டதும் ஆபத்தை உணராமல் தோட்டத்திற்குள் புகுந்துள்ளது. அப்போது, மின் வேலியில் சிக்கிக் கொண்டது. அதில், இருந்து மீள்வதற்குள் உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே துடித்து துடித்து உயிரிழந்தது. இதனைக்கண்டு நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் திடுக்கிட்டனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், மாவட்ட வன அலுவலர் கெளதமன், மேட்டூர் வனச்சரகர் அறிவழகன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், வருவாய்த்துறை அதிகாரிகளும், மின்வாரிய அலுவலர்களும் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மேலும், மின்வேலியை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். சட்ட விரோதமாக மின்சாரம் எடுத்து, விளைநிலத்தில் வேலி அமைத்தது தொடர்பாக விவசாயி புஷ்பநாதன் மீது வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டப்படிகீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.  உயிரிழந்த யானையின் உடல் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், அருகில் உள்ள வனப்பகுதியில் பிரம்மாண்ட குழி தோண்டி யானையின் உடல் புதைக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

The post மேட்டூர் அருகே பரிதாபம் மின்வேலியில் சிக்கி யானை பலி-விவசாயியை கைது செய்து விசாரணை appeared first on Dinakaran.

Tags : Paritapam ,Mettur ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அனல் மின்நிலையத்தில் உற்பத்தி பாதிப்பு..!!