×

எந்த கோயில்? என்ன பிரசாதம்?

* திருமீயச்சூர்

ஈசன் மேகநாதசுவாமி, முயற்சி நாதேஸ்வரர், திருமேனிநாதர் எனும் பெயர்களிலும் அம்பிகை  லலிதாம்பிகை, சௌந்தரநாயகி எனும் பெயர்களிலும் திருவருட்பாலிக்கும் திருத்தலம்.  காவிரிக் கரையில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள நன்னிலத்திற்கு அருகில் உள்ள பேரளத்திலிருந்து 2 கி.மீ. தூரத்திலுள்ளது திருமீயச்சூர் லலிதாம்பிகை கோயில். திருமீயச்சூர் கோயிலின் அழகுக்கு அழகு சேர்ப்பது இக்கோயிலின் விமான அமைப்பின் நூதன வடிவம். யானையின் பின்புறம் தோற்றத்தில் அமைந்துள்ள “கஜப்ருஷ்ட விமானம்” மூன்று கலசங்களுடன் காணப்படுகிறது. கோயிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடனும், இரண்டாம் கோபுரம் மூன்று நிலைகளுடனும் உள்ளது. இரண்டு பிராகாரங்கள் உள்ளன. கோயிலில் நுழைந்தவுடன் வலது பக்கம் லலிதாம்பிகையின் சந்நதி உள்ளது. மகாமண்டபத்தில் ரத விநாயகர், உட்பிராகாரத்தில் நாகர், சேக்கிழார், நால்வர், சப்தமாதர்கள் பூஜித்த லிங்கங்கள், அக்னி, யமன், இந்திரன் பூஜித்த லிங்கங்கள் உள்ளன.

திருமீயச்சூர் கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவன் மேகநாதர் சுயம்பு லிங்க உருவில் காட்சி தருகிறார். இறைவன் வீற்றிருக்கும் கர்ப்பக்கிரகத்தைச் சுற்றிலும் ஏகப்பட்ட மண்டபங்களும் அதில் செதுக்கப்பட்டுள்ள கணபதி சிலைகளும் கல் தூண்களும் சோழர்காலச் சித்திரக் கலை அழகிற்கு உதாரணமாக உள்ளன. கோயிலின் உட்பிராகாரத்தை விட்டு வெளியேறினால் வெளிப்பிரகாரத்தில் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் லலிதாம்பிகை கோயிலைக் காணலாம். இவளுக்கு சௌந்தரநாயகி என்ற திருநாமமும் உள்ளது. இவள் ஸ்ரீசக்ர பீடம்  எனும் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள்.

அபய, வரத ஹஸ்த முத்திரையுடன், வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டு அருளாட்சி  செய்கிறாள். வலது காலை மடித்திருக்கும் அம்பிகையை காண்பது அரிது. உலகில் இது போன்ற கலை அழகு மிக்க இறைவனின் உருவை வேறெந்தக் கோயிலிலும் காண முடியாது. அமர்ந்த கோலத்தில் சாந்த சொரூபியாகக் காட்சி அளிக்கும் அம்பிகையின் இருப்பிடம் ஒரு ராஜ தர்பார் போன்ற உணர்வைத் தருகிறது. இத்தலத்திற்கு வந்து, லலிதா ஸஹஸ்ரநாமமும், லலிதா நவரத்னமாலையும் படிப்பவர்களுக்கு, அம்மனின் பரிபூரண அருள் கிடைக்கும்.

லலிதா ஸஹஸ்ரநாமத்தை வஸின்யாதி வாக்தேவதைகள் இத்தலத்தில்தான் அரங்கேற்றினர். அந்த வரலற்றை அறிவோம். ஸஹஸ்ர நாமங்களுக்குள் முக்கியமானதும் மிகச்சிறந்ததும் லலிதா ஸஹஸ்ர நாமமாகும். ஏனென்றால், ‘‘லலிதா ஸஹஸ்ர நாமம்’’ அம்பிகையின் இச்சையாலேயே இயற்றப்பட்டு அப்பராம்பிகையே கேட்டு மகிழ்ந்து ஒப்புக்கொள்ளப்பட்டதாகும். இத்திவ்ய ஸஹஸ்ர நாமத்தை தினசரி பாராயணம், செய்து தேவியின் அருளைப் பெற்றுக் களிக்கின்றனர் அவளது பக்தர்கள்.சிவபெருமான் சாபத்தால் மேனி கருகிப்போன சூரியன் சாப விமோசனம் பெற திருமீயச்சூரில் 7 மாத காலம் கடுந்தவம் புரிந்தும் மேனி நிற மாறாததால் வாய்விட்டு அலறி இறைவனை அழைத்ததால் இறைவனோடு தனித்திருக்கும் பார்வதி கோபம் கொண்டு சூரியனுக்குச் சாபம் கொடுக்க நினைத்தாள்.

முன்னரே சாபத்தால் வருந்திக் கொண்டிருக்கும் சூரியனை மேலும் வருத்தப்படாதேயும் சமாதானம் கொள்ளுதல் இறைவனிடம், பார்வதி சாந்தநாயகி ஆனாள். இச்சம்பவத்தைச் சித்தரிக்கும் விதமாகக் கோயில் விமானத்தின் கீழ் தெற்கில் க்ஷேத்திர புராணேஸ்வரர் பார்வதியின் முகவைப் பிடித்துச் சாந்தநாயகியாய் இருக்க வேண்டும் என்று வேண்டுவது போன்ற வடிவத்தில் காணப்படும் சித்திரக் காட்சிகள் வேறெந்தக் கோயில் காண்பது அரிது. இந்தச் சித்திரத்தை ஒரு பக்கத்திலிருந்து பார்த்தால் அம்பாள் கோபமுடன் இருப்பதைப் போலத் தோன்றும். இதே சிற்பத்தை மறுபக்கம் சென்று பார்த்தால் அம்பாள் சாந்த சொரூபியாக நாணத்துடன் காணப்படுவாள்.

ஒவ்வொரு வருஷமும் ஏப்ரல் 21ந்தேதி முதல் 27ந்தேதி வரை உரிய காலத்தில் சூரியன் மூலவர் மேகநாதரைச் சிறப்பாகப் பூஜிக்கின்றான் என்று கூறப்படுகிறது. அந்த 7 நாட்களிலும் சூரியனது கதிர்கள் கருவறையிலுள்ள லிங்கத்தின் மீது விழுவதை இன்றளவும் காணலாம். இங்குள்ள லிங்கத்தை எமன் 1008 சங்காபிஷேகம் செய்து வழிபட்டுப் பல நன்மைகள் அடைந்தான். எனவே தீராப் பிணியால் துன்பப்படுபவர் இங்குள்ள கடவுளை 1008 சங்காபிஷேகம் செய்து வழிபட்டால் எமன் அருள் பெற்று, பிணி நீங்கி நலம்பெறுவர் என்று நம்பப்படுகிறது.பிரண்டை அன்னத்தை, தாமரை இலையில் சுவாமிக்கு அர்ப்பணம் செய்து, அன்னதானம் செய்தால் நீண்ட ஆயுளும், சகல நோய்களும் தீரும் என்ற நம்பிக்கை. எமதர்மராஜனின் மூலிகை வஜ்ரவல்லி எனும் பிரண்டை. எமதர்மராஜனே இத்தலத்தில் தன் ஆயுள் விருத்திக்காக பிரண்டை சாதத்தை நிவேதித்து பேறு பெற்றான்.

பிரண்டை சாதம்

தேவையானவை:
அரிசி - 4ஆழாக்கு.
இளம் தண்டுப் பிரண்டை:  1 கட்டு
உளுந்தம் பருப்பு: 1 டேபிள் ஸ்பூன்
குடம் புளி/ நாட்டுப் புளி: 1 நெல்லிக்காய் அளவு
சிவப்பு நீட்டு மிளகாய் வத்தல்: 10/ 12
இஞ்சி: 1 துண்டு
பெருங்காயத்தூள்: 1 சிட்டிகை
கல் உப்பு: தேவையான அளவு
செக்கிலாட்டிய நல்லெண்ணெய்:  3 டேபிள் ஸ்பூன்
கடுகு உளுந்தம் பருப்பு: தாளிக்க

செய்முறை:

முதலில் சாதத்தை வடித்து ஒரு தாம்பாளத்தில் கொட்டி ஆற வைக்கிறார்கள். பிரண்டையை   கணு நீக்கி தோல் சீவி, நாரை உறித்து சுத்தமாக்கி சிறு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்கிறார்கள். பிறகு வாணலியை சூடாக்கி 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, எண்ணெய் சூடானதும் முதலில் 1 டேபிள் ஸ்பூன் உளுந்தம் பருப்பு, 1 துண்டு இஞ்சி சேர்த்து, இஞ்சி வதங்கியதும் அதனுடன் 10 அல்லது 12 நீட்டு மிளகாய் வத்தலைப் போட்டு வறுத்துக்கொள்கிறார்கள். பின்னர் தேவையான அளவு கல் உப்பு சேர்த்து கிளறி விட்டு இறக்கவும்.

கலவை சற்று ஆறிய பின் அவற்றை மிக்சியில் இட்டு நீர் சேர்க்காமல் அரைக்கிறார்கள். கடைசியாக வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுந்து தாளித்து அரைத்து வைத்த துவையலில் கொட்டி. எண்ணெய் சூடு இறங்கியதும்  ஆறிய சாதத்தில் கொட்டி கலந்து உச்சிக்காலபூஜையில் நீலநிற சங்கு புஷ்பங்களால் ஈசனை  அர்ச்சித்து பிரண்டை சாதத்தை நிவேதிக்கின்றனர். எப்படிப்போவது மயிலாடுதுறை - திருவாரூர் மார்க்கத்தில், மயிலாடுதுறையிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள பேரளம் என்ற ஊரில் இருந்து மேற்கே 2 கி.மீ. தொலைவில் இந்தலம் உள்ளது. மயிலாடுதுறை - திருவாரூர் ரயில் மார்க்கத்தில் உள்ள பேரளம் ரயில் நிலயத்திலிருந்து கோயில் 1 கி.மீ. தொலைவில் உள்ளது.

- ந. பரணிகுமார்

Tags :
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த...