×

எப்படி இருக்கிறது பிரம்மாண்ட ‘ஃப்ரீடம் அட் மிட் நைட்’ வெப் தொடர் !

‘ நம்ம சுதந்திரம் ஒரு அடி தான் தள்ளி இருக்கு பாபு ‘
இப்படி சர்தார் வல்லபாய் பட்டேல் கேட்க…

‘அந்த ஒரு அடிய நாம நம்ம ஆன்மாவ நசுக்கி தான் எடுத்து வச்சாகணுமா ? ‘

இப்படி மகாத்மா காந்தியடிகள் கேட்க இரண்டு சக்தி வாய்ந்த கேள்விகளுடன் ஆரம்பிக்கிறது ‘ ஃப்ரீடம் அட் மிட் நைட் ‘ வெப் தொடர் . சோனி லிவ் ஓடிடி தளத்தில் பிரம்மாண்டமான பொருட்செலவில் 1947ஆம் வருட சுதந்திர போராட்ட அரசியல் களத்தை விவரிக்கும் தொடராக வெளியாகி இருக்கிறது .

‘ ராக்கெட் பாய்ஸ்’ வெப் தொடர் புகழ் நிகில் அத்வானி இயக்கியிருக்கிறார்.
ஸ்டுடியோ நெக்ஸ்ட் உடன் இணைந்து மோனிஷா அத்வானி மற்றும் மது போஜ்வானியின் எம்மே என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ளது ‘ஃப்ரீடம் அட் மிட்நைட்’ வெப் தொடர். அபிநந்தன் குப்தா, அத்விதியா கரெங் தாஸ், குந்தீப் கவுர், திவ்யா நிதி ஷர்மா, ரேவந்தா சாராபாய் மற்றும் ஈதன் டெய்லர் ஆகியோர் இந்தக் கதையை எழுதியிருக்கின்றனர்.

லாரி காலின்ஸ் மற்றும் டொமினிக் லாபியர் எழுதிய புகழ்பெற்ற ‘ ஃப்ரீடம் அட் மிட் நைட் ‘ புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இன்று சுதந்திரமாக சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் நமக்கு அதன் பல உண்மைகள் இப்போது வரை தெரியவில்லை. அந்த சுதந்திரத்தை முழுமையாகவும் ஆர்ப்பரிப்புடனும் கொண்டாடுவதற்கு முன்பே அது இருளில் கிடைக்கப்பெற்று பல துரோகங்களும் ஏமாற்றங்களும் மறைக்கப்பட்டு தான் வரலாறு எழுதப்பட்டது. சர்தார் வல்லபாய் பட்டேலா அல்லது ஜவஹர்லால் நேருவா என்னும் கேள்விக்கு பதிலாக ஜவஹர்லால் நேரு என்னும் தேர்வுடன் விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்கிறார். இன்னொரு புறம் முகமது அலி ஜின்னா இந்தியாவில் பிரிவினை வேண்டும் அல்லது இந்துஸ்தான் அழிய வேண்டும் என்கிற அறிவிப்பை கொடுக்க கலவரம் உருவாகிறது. நமக்கு கிடைத்த சுதந்திரத்தை கூட முழுமையாக கிடைக்க விடாமல் ஒரு பிரச்சனையை சரி செய்து மற்றொரு பெரும் பிரச்சனையை உருவாக்கி வைத்தனர். இப்படி சுதந்திரமும் அதற்குப் பின்னணியில் இருக்கும் அரசியல் சூழ்ச்சி, இனப் பிரிவினை, ஏமாற்றம், துரோகம் என அத்தனையும் ஒருசேர உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த ‘ஃப்ரீடம் அட் மிட்நைட்’ வெப் தொடர்.

இந்தத் தொடரில் ஜவஹர்லால் நேருவாக சித்தாந்த் குப்தா, மகாத்மா காந்தியாக சிராக் வோஹ்ரா, சர்தார் வல்லபாய் பட்டேலாக ராஜேந்திர சாவ்லா, முகமது அலி ஜின்னாவாக ஆரிஃப் ஜகாரியா, பாத்திமா ஜின்னாவாக இரா துபே, சரோஜினி நாயுடுவாக மலிஷ்கா மென்டோன்சா, லிகாட் அலிகானாக ராஜேஷ் குமார், கே.சி.சங்கர் வி.பி. மேனன் கதாபாத்திரத்தில், லார்ட் லூயிஸ் மவுண்ட்பேட்டனாக லூக் மெக்கிப்னி, லேடி எட்வினா மவுண்ட்பேட்டனாக கோர்டெலியா புகேஜா, ஆர்க்கிபால்ட் வேவலாக அலிஸ்டர் ஃபின்லே, கிளெமென்ட் அட்லியாக ஆண்ட்ரூ கல்லம், சிரில் ராட்கிளிஃப் ஆக ரிச்சர்ட் டெவர்சன் ஆகியோர் நடித்துள்ளனர்.

வெளியான ஒரு சில மணிநேரங்களிலேயே பலரின் பாராட்டுகளையும் தத்ரூபமான உருவாக்கத்திற்காக கொண்டாடப்பட்டும் வருகிறது ஃப்ரீடம் அட் மிட்நைட் தொடர். ஒவ்வொரு காட்சியும் அச்சு அசலாக 1940களில் நடப்பது போல் உருவாக்கப்பட்டிருப்பது இந்த வெப் தொடரின் சிறப்பு. நடிகர்கள் தேர்வு, கலை இயக்கம், விசுவல் என அத்தனையும் நம்மை சுதந்திரப் போராட்ட களத்திற்கு கொண்டு செல்கிறது.

மொத்தத்தில் நாம் இன்று சுதந்திரமாக வாழ அதற்கு பின்னணியில் எத்தனை உயிர்களின் தியாகங்கள் இருக்கின்றன, எத்தனை பேரின் துரோகங்கள் இருக்கின்றன, எத்தனை பேருக்கு ஏமாற்றம் என அத்தனையும் ஒருசேர இப்போதைய குழந்தைகளுக்கும் சேர்த்து கிட்டத்தட்ட பாடமாகவே உருவாக்கப்பட்டு இருக்கிறது இந்த வெப் தொடர்.

Tags : Babu ,Sardar Vallabhbhai Patel ,Mahatma Gandhi ,
× RELATED மத்திய, மாவட்ட, மாநில அளவில் காங்....