×

தர்மபுரி வனக்கோட்டத்தில் மான்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: வேட்டை கும்பலை பிடிக்க தனி வனப்படை

தர்மபுரி: தர்மபுரி வனக்கோட்டத்தில் மொரப்பூர், அரூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி வனச்சரகத்தில் மான் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளது. வேட்டை கும்பலை பிடிக்க தனி வேட்டை தடுப்பு வனப்படை அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு தொடர்ச்சி மலை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒன்றாக இணைக்கும் பகுதியாக தர்மபுரி மண்டல வனப்பகுதி உள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டம் தர்மபுரி மண்டலமாக உள்ளது. இம் மண்டலத்தில் 2 வனக்கோட்டங்களில், சுமார் 3 ஆயிரத்து 245.17 கிலோ மீட்டர் சுற்றளவில் வனப்பகுதிகள் உள்ளது. இங்கு யானை மற்றும் வன விலங்குகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. குறிப்பாக ஒகேனக்கல், பென்னாகரம், பாலக்கோடு உள்ளிட்ட வனச்சரக பகுதியில் யானை மற்றும் வன விலங்குகள் அதிகம் நடமாடும் பகுதியாக உள்ளது. மொத்த புவி பரப்பில் 36.50 சதவீதம் வனப்பகுதி தர்மபுரி மாவட்டத்தில் தான் உள்ளது. தர்மபுரி வனக்கோட்டத்தில் தர்மபுரி, பென்னாகரம், ஒகேனக்கல், பாலக்கோடு, மொரப்பூர், அரூர், கோட்டப்பட்டி, தீர்த்தமலை ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. மொரப்பூர், கோட்டப்பட்டி, தீர்த்தமலை ஆகிய வனச்சரகத்தில் மான்கள் அதிகளவில் உள்ளது. ஒகேனக்கல், பென்னாகரம், பாலக்கோடு வனச்சரகத்தில் யானைகள் நடமாட்டம் அதிகம். தர்மபுரி வனச்சரகத்தில் காட்டுபன்றி, காட்டெருமை, குரங்கு, மயில் உள்ளன. குறிப்பாக, மொரப்பூர், அரூர், கோட்டப்பட்டி, தீர்த்தமலை வனப்பகுதியில் மான், காட்டுபன்றிகள் உள்ளிட்ட விலங்கினங்கள் அதிகம் உள்ளன. கோடை காலத்தில் ஏற்படும் வறட்சியால் உணவு மற்றும் குடிநீருக்காக ஆண்டுதோறும் மான் உள்ளிட்ட விலங்குகள் இடம் பெயர்கின்றன. வனப்பகுதியில் கடந்த காலங்களில் விளை பொருட்கள் விலங்கின தேவைக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது, வனப்பகுதியில் உள்ள பல்வேறு உணவு பொருட்கள் குத்தகை அடிப்படையில் அறுவடை செய்யப்படுகிறது. இதனால், அங்கு விளையும் காய்கள் உள்ளிட்ட பல்வேறு விலங்கின உணவு பொருட்கள் அறுவடை செய்யப்படுவதால், சிறு விலங்கினங்களுக்கு கிடைக்கும் காய்கள் உள்ளிட்டவைகள் கிடைக்காமல் சிறு விலங்கினங்கள் வனப்பகுதியை விட்டு வெளியேறும் நிலை உள்ளது. கோடை காலத்தில் வனப்பகுதியில் பசுமை போர்த்திய படலம் மறைந்து செடி, கொடிகள் காய்ந்து ஜருகாகிவிடுகின்றன. வனத்தில் உள்ள சிறு ஓடைகள், குட்டைகள் வறண்டு விடுகின்றன. வனத்தில் உள்ள மான் உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் தேடி அருகில் உள்ள கிராமத்திற்குள் புகுந்து விடுகின்றன. தண்ணீர் தேடி வரும் மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளை மனிதர்கள் மற்றும் தெருநாய்களால் அதிகளவில் வேட்டையாடப்படுவது தொடர்ந்து வருகிறது. மொரப்பூர், அரூர், கோட்டப்பட்டி, தீர்த்தமலை பகுதிகளில் வேட்டை கும்பல் நடமாட்டம் அதிகரித்துள்ளது. சமீபத்தில் அரூர் அருகே வேட்டை கும்பலால் துரத்தப்பட்ட மான் சாலையில் சென்ற டூவிலரில் மோதி மானும், டூவிலரை ஓட்டிச் சென்றவரும் இறந்தனர். மொரப்பூர், அரூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி வனச்சரகத்தில் சமவெளி காடுகள் உள்ளதால் மான்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. கோடைகாலம் முடிந்த தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால், சமவெளியில் புல்கள் துளிர்விட்டுள்ளன. இதனால் கோடைகாலத்தில் இடம் பெயர் மான்கள் தற்போது தங்கள் இடத்திற்கு திரும்புகின்றன. இதை பயன்படுத்தி வேட்டை கும்பல் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வேட்டையாடுகின்றன.மான் இறைச்சிகூட ரகசியமாக விற்பனை செய்யப்படுகிறது. மான்களை வேட்டையாடிவிட்டு, காட்டில் தோல் உறித்து சதைகளை மட்டும் வெளியே கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த வேட்டை கும்பல்களை பிடிக்க இரவு நேரத்தில் சிறப்பு வனப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இரவு நேரங்களில் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து வன அதிகாரிகள் கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில் மொரப்பூர், அரூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி வனச்சரகத்தில் மான்கள் அதிகம் உள்ளன. இந்த வனச்சரகத்தில் பள்ளம், மேடு போன்று மலைக்குன்றுகள் இல்லை. புல்தரை கொண்ட சமவெளியாக உள்ளது. இதனால் மான்கள் அதிகம் வசிக்கின்றன. மான்களின் இனப்பெருக்கும் அதிகரித்துள்ளது. வனவிலங்கு சென்சஸ் எடுக்கவில்லை. அதற்காக நிதி ஒதுக்கீடும் இல்லை. மான்களை சாப்பிடும் சிறுத்தை, செந்நாய், குள்ளநரி போன்ற விலங்குகள் இல்லை. இதனால் மான்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மான், காட்டுபன்றி உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடும் நபர்களை பிடித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும் வேட்டை கும்பலை பிடிக்க தனி வேட்டை தடுப்பு வனப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்றனர். …

The post தர்மபுரி வனக்கோட்டத்தில் மான்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: வேட்டை கும்பலை பிடிக்க தனி வனப்படை appeared first on Dinakaran.

Tags : Darmapuri ,Morapur ,Arur ,Tirthamalai ,Kottapatti ,
× RELATED அரூர் நகரில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம்