×

ஜாலியோ ஜிம்கானா: விமர்சனம்

பவானியின் குடும்பம் பிரியாணி கடை வைத்து நடத்தி வருகிறார்கள். எம்.எல்.ஏவிடம் இருந்து பெரிய ஆர்டர் அவர்களுக்கு கிடைக்கிறது. ஆனால், அதற்கான பணத்தை தராமல் எம்.எல்.ஏவின் ஆட்கள் பவானியின் தாத்தாவை தாக்க, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். கடையை நடத்த முடியாமல் பவானி தவிக்க, தாத்தாவின் யோசனைப்படி வழக்கறிஞர் பூங்குன்றனின் உதவியை நாடி பவானியின் குடும்பம் செல்கிறது. அங்கு அவரை யாரோ கொலை செய்துவிட, தங்கள் மேல் கொலைப்பழி விழுந்துவிடுமோ என பயந்து அவரது உடலை வெளியேற்ற பவானியின் குடும்பம் முயற்சிக்கிறது. அதன் பின்னர் நடக்கும் காமெடி களேபரம்தான் இந்த ஜாலியோ ஜிம்கானா.

படம் முழுக்க சடலமாக நடித்து சில நடிகர்கள் சில படங்களில் அசத்தியுள்ளனர். அந்த டெக்னிக்குடன் இதிலும் சடலமாக நடித்து அசத்தியிருக்கிறார் பிரபுதேவா. படத்தின் ஆரம்பத்திலேயே இயக்குநர் லாஜிக் பார்க்காமல் ஜாலியாக படம் பார்க்குமாறு வாய்ஸ் ஓவரில் கூறுகிறார். அதனால் நிறைய லாஜிக் ஓட்டைகள் இருப்பது தெரிகிறது. ஜான் விஜய், ரோபோ சங்கர், எம்.எஸ்.பாஸ்கர் என எல்லோருமே காமெடி செய்யும் நடிகர்களாக வருகிறார்கள். இவர்கள் ஒருபுறம் என்றால் மறுபுறம் யோகி பாபு காமெடி செய்கிறார். அபிராமி, மடோனா செபஸ்டியன் கேரக்டர் உணர்ந்து நடிப்பை தந்துள்ளனர்.

அதிலும் பல இடங்களில் அபிராமி அசால்ட்டாக ஸ்கோர் செய்துவிடுகிறார். மடோனாவை விட அபிராமி தான் படத்தின் பல இடங்களில் கலகலப்பூட்டுகிறார். அஸ்வின் விநாயகமூர்த்தியின் இசை கேட்கும்படி உள்ளது. கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவும் கச்சிதம். ஜெகன் கவிராஜின் பாடல் இனிமை. ‘போலீஸ்காரன கட்டிக்கிட்டா’ பாடல் ஆட்டம்போட வைக்கிறது. திரைக்கதை தொய்வாக ஆரம்பிக்கும்போதெல்லாம் யோகிபாபு நாம் கேட்க நினைக்கும் கேள்விகளை கேட்டு சரி செய்கிறார். லாஜிக் பார்க்காமல் ஜாலியான படம் பார்க்க விரும்புவோரை இந்த ஜாலியோ ஜிம்கானா கவரும்.

Tags : Jolio Gymkhana ,Bhavani ,MLA ,
× RELATED நாளை முதல் பவானி விற்பனை கூடத்தில் பாக்கு ஏலம்