×

அனந்தனுக்கு 1000 நாமங்கள்

155. ப்ராம்சவே நமஹ (Praamshave namaha)

‘ப்ராம்சு:’ என்றால் பேருருவம் தரித்து அனைத்து இடங்களிலும் வியாபித்து இருப்பவர் என்று பொருள். த்ரிவிக்ரமனாக ஓங்கி உலகளந்து பேருருவம் தாங்கி இருப்பதால், திருமால் ‘ப்ராம்சு:’ எனப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 155-வது திருநாமம். “ப்ராம்சவே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்க்கையில் ஓங்கி உயரும் படித்திருமால் அருள்புரிவார்.

குறிப்பு: வாமனாவதாரம் பற்றி மேலும் பல குறிப்புகளை அடுத்தடுத்த திருநாமங்களின் விளக்கங்களில் காணலாம்.

156. அமோகாய நமஹ (Amoghaaya namaha)


(‘உபேந்த்ர:’ என்ற 153-வது திருநாமம் தொடங்கி, ‘நியம:’ என்ற 163-வது திருநாமம் வரையிலுள்ள 11 திருநாமங்கள் திருமாலின் வாமன அவதாரத்தின் பெருமையை விளக்க வந்தவை) தொண்டரடிப் பொடியாழ்வார் திருவரங்கநாதனின் மேன்மைகளையும், அவனது திருநாம சங்கீர்த்தனத்தின் வைபவத்தையும் விளக்கும் விதமாகத் ‘திருமாலை’ என்னும் பிரபந்தத்தை அருளிச்செய்தார். “திருமாலையை அறியாதார் திருமாலையே அறியாதார்” என்னும் தொடர் அந்நூலின் பெருமைக்குச் சான்றாகும்.

அந்தத் திருமாலையில் அரங்கனை ஆனந்தமாகப் பாடிக்கொண்டு வந்த தொண்டரடிப் பொடியாழ்வார், திடீரெனத் தனது குற்றங்களை எல்லாம் எண்ணிப் பார்த்தார். அரங்கனின் பெருமைகளையும் எண்ணிப் பார்த்தார்.

“உள்ளத்தே உறையும் மாலை உள்ளுவான் உணர்வொன்று இல்லா
கள்ளத்தே நானும் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடனிருந்து அறிதி என்று
வெள்கிப் போய் என்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேனே”

என்ற பாடலின் வாயிலாக, “அவ்வளவு உயர்ந்தவனான அரங்கனின் அருகே நிற்பதற்குக் கூட நீசனான அடியேனுக்குத் தகுதியில்லை!” என்று கூறி அரங்கனின் கோயிலை விட்டு விலகிச் செல்ல முயன்றார். அவரைத் தடுத்தான் அரங்கன். “ஆழ்வீர்! எங்கே செல்கிறீர்?” என்று கேட்டான். “இல்லை! இல்லை! நீ மிகவும் உயர்ந்தவன். அடியேனோ மிக மிகத் தாழ்ந்தவன்.

உன் தொண்டன் என்று வேடமிட்டுக் கொண்டு கள்ளத்தனத்துடன் உன்முன்னே வந்து நின்று உன்னையே ஏமாற்றப் பார்த்து விட்டேன். என் குற்றங்களை எல்லாம் எண்ணிப் பார்க்கையில், உனக்கு எதிரே நிற்கும் தகுதி கூட அடியேனுக்கு இல்லை. நான் செல்கிறேன்!” என்றார் தொண்டரடிப் பொடியாழ்வார்.  அரங்கன், “ஆழ்வீர்! நான் த்ரிவிக்கிரமனாக ஓங்கி உலகை அளந்தேனே! எதற்காக தெரியுமா?” என்று கேட்டான். “தேவர்கள் இழந்த ராஜ்ஜியத்தை மகாபலியிடம் இருந்து யாசகமாகப் பெற்று மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்க நீ உலகளந்தாய்!” என்றார் ஆழ்வார்.

“மகாபலியுடன் போர் புரிந்து அவனை நான் எளிதாக வென்றிருப்பேனே! அல்லது எனது சக்கராயுதத்தைக் கொண்டு மகாபலியை வதைத்து இந்திரனை அவன் பதவியில் அமர்த்தியிருப்பேனே! இதற்காக நான் ஏன் உலகத்தை எல்லாம் தாவி அளக்க வேண்டும்?” என்று கேட்டான் அரங்கன். “மாயனான உனது மாயங்களை நீயே விளக்கியருள வேண்டும்!” என்று வேண்டினார் ஆழ்வார்.

அதற்கு அரங்கன், “எனது திருவடி ஸ்பரிசத்தால் அனைத்து உயிர்களுக்கும் பக்தி, ஞானம், வைராக்கியம் அனைத்தும் வளரட்டும் என்ற நோக்கில் உலகில் உள்ள ஜீவராசிகள் அனைவரின் தலைகளிலும் எனது திருவடிகளைப் பதிக்க நினைத்தேன். அவ்வாறு அனைவர் தலைகளிலும் திருவடி பதிப்பதற்கு மகாபலியையும் தேவர்களையும் வியாஜமாகப் பயன்படுத்திக் கொண்டேன்.

அப்போது, நல்லவர்-கெட்டவர், மனிதன்-மிருகம், நாத்திகர்-ஆத்திகர், கற்றவர்-கல்லாதவர், ஏழை-பணக்காரர் என எந்த ஏற்றத் தாழ்வும் பாராது அனைவரையும் என் திருவடிகளால் தீண்டினேன் அல்லவா? இதிலிருந்தே நான் யாரையும் குற்றம் கூறி விலக்குபவன் அல்ல என்று புரிந்து கொள்ளுங்கள். உங்களையும் விலக்க மாட்டேன். என்னை விட்டுச் செல்லாதீர்கள்!” என்றான். அரங்கனின் திருவுள்ளத்தை உணர்ந்த ஆழ்வார், மீண்டும் கோயிலுக்குள் வந்து அவனை வணங்கி,

“தாவியன்று உலகம் எல்லாம் தலைவிளாக் கொண்ட எந்தாய்
சேவியேன் உன்னை அல்லால் சிக்கெனச் செங்கண் மாலே
ஆவியே அமுதே எந்தன் ஆருயிர் அனைய எந்தாய்
பாவியேன் உன்னை அல்லால் பாவியேன் பாவியேனே.”

என்ற பாசுரத்தைப் பாடினார்.  ‘மோக:’ என்றால் வீண்போவது என்று பொருள். ‘அமோக:’ என்றால் வீண்போகாதது என்று பொருள். திருமால் செய்யக்கூடிய எந்தச் செயலும் வீண்போவதில்லை. அவர் மகாபலியிடமிருந்து யாசகம் பெறுவதற்காகவும், தேவர்களுக்கு ராஜ்ஜியத்தைத் தருவதற்காகவும் உலகை அளந்ததாகப் பொதுவாக எல்லாரும் கருதுவார்கள். ஆனால் அதனுள் அனைத்து ஜீவராசிகளின் தலைகளிலும் கால்பதிக்க வேண்டும் என்ற ஒரு முக்கியமான நோக்கத்தை வைத்து, அதை நிறைவேற்றிக் கொண்டார்.

 இதுபோல், தான் செய்யும் ஒவ்வொரு செயலுக்குள்ளும் ஒரு உயர்ந்த நோக்கத்தை வைத்து, அந்நோக்கத்தைச் சரியாக நிறைவேற்றிக் கொள்வதால், திருமால் செய்யும் எந்தச் செயலும் வீண்போவதில்லை. அதனால் ‘அமோக:’ என்று அவர் அழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 156-வது திருநாமம். “அமோகாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் புரியும் எந்தச் செயலும் வீண்போகாதபடித் திருமால் அருள்புரிவார்.

157. சுசயே நமஹ (Chuchaye namaha)


வேதம் அனைத்துக்கும் வித்தாக விளங்குவது ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை. முப்பதே பாசுரங்களில் அனைத்து மறைகளின் சாரத்தையும் எளிய இனிய தமிழில் ஆண்டாள் வழங்கினாள். அதனால் தான்,

“பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டும்
வேதம் அனைத்துக்கும் வித்தாகும் - கோதை தமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு.”

என்று சொல்கிறோம். திருமாலின் த்ரிவிக்கிரம அவதாரத்தைத் திருப்பாவையில் மூன்று இடங்களில் பாடியுள்ளாள் ஆண்டாள். மூன்றாம் பாசுரத்தில் “ஓங்கி உலகளந்த உத்தமன்” என்றும், பதினேழாம் பாசுரத்தில் “அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே” என்றும், இருபத்து நான்காம் பாசுரத்தில் “அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி” என்றும் பாடியுள்ளாள்.

இவற்றுள் “ஓங்கி உலகளந்த…” பாசுரத்தின் பொருளைத் திருப்பாவை ஜீயரான ராமானுஜர், தம் சீடர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு சீடர் எழுந்து, “சுவாமி! ஒரு ஐயம்! ஓங்கி உலகளந்த ‘உத்தமன்’ என்று த்ரிவிக்கிரமப் பெருமாளை ஆண்டாள் பாடுகிறாளே! உண்மையிலேயே அவர் உத்தமரா?” என்று கேட்டார். “புருஷோத்தமரான பெருமாளை ‘உத்தமன்’ என்று சொல்வதில் என்ன தவறு?” என்று கேட்டார் ராமானுஜர்.

அந்தச் சீடரோ, “இல்லை சுவாமி! த்ரிவிக்கிரமப் பெருமாள் உண்மையில் ஏமாற்று வேலை தானே செய்தார். சிறிய கால்களை மகாபலியிடம் காட்டி மூவடி நிலம் வேண்டுமென யாசித்து விட்டுப் பெரிய கால்களால் மூவுலகங்களையும் அளந்தாரே! இப்படிப்பட்ட ஏமாற்றுவித்தைக்காரரைப் போய் ‘உத்தமன்’ என்று ஆண்டாள் பாடுகிறாளே! இதை எப்படி ஏற்க முடியும்?” என்றார்.

அதற்கு மிக அழகாக விடையளித்தார் ராமானுஜர்: “மனிதர்களில் நான்கு வகைகள் உண்டு- அதமாதமன், அதமன், மத்யமன், உத்தமன். பிறரை வஞ்சித்து, பிறரைக் கெடுத்து, அதைக் கண்டு மகிழ்ந்து வாழ்பவனுக்கு அதமாதமன் (sadist) என்று பெயர். பிறரைப் பற்றிக் கவலைப் படாமல் தான் வாழ்ந்தால் போதும் என்று சுயநலத்துடன் வாழ்பவனுக்கு அதமன் (selfish) என்று பெயர். தானும் வாழ வேண்டும், பிறரும் வாழ வேண்டும் என்ற பொதுநல நோக்குடன் வாழ்பவனுக்கு மத்யமன் (ordinary soul) என்று பெயர். தான் கெட்டாலும் பரவாயில்லை, பிறர் நன்றாக இருக்க வேண்டும் என்று கருதித் தியாகம் செய்பவனுக்கே உத்தமன் (noble soul) என்று பெயர்.

இவ்வாறிருக்க, மகாபலியைத் த்ரிவிக்கிரமன் ஏமாற்றினார் என்று நீ சொல்கிறாயே! மகாபலியை ஏமாற்றி அவனது சொத்தைத் த்ரிவிக்கிரமன் எடுத்துக் கொண்டாரா? இல்லையே! அந்தச் சொத்துக்கு உண்மையான சொந்தக்காரனான இந்திரனிடம் தானே அதை மீட்டுக் கொடுத்தார். இந்திரன் இழந்த சொத்தைப் பெறவேண்டும் என்பதற்காக ‘வஞ்சகன்’ என்ற பெயரைத் த்ரிவிக்கிரமப் பெருமாள் ஏற்றுக் கொண்டாரே ஒழிய இதில் பெருமாளுக்குச் சுயலாபம் எதுவுமில்லை. தனக்கு அவப்பெயர் உண்டானாலும் பரவாயில்லை, தேவர்கள் நன்றாக இருக்கட்டும் என்று கருதியதால் தான் த்ரிவிக்கிரமனை ஓங்கி உலகளந்த ‘உத்தமன்’ என்று ஆண்டாள் பாடுகிறாள்!” என ராமானுஜர் விளக்கினார்.

வஞ்சகன் போல் மகாபலியிடம் வந்து, அவனை வஞ்சித்து அவனது சொத்தை அபகரித்தாலும், அதைத் திருமால் தனது சுயலாபத்துக்காகச் செய்யாமல், அசுரனிடமிருந்து ராஜ்ஜியத்தை மீட்டு, அதற்குரியவர்களான தேவர்களிடம் கொடுக்க வேண்டும் என்ற பொது நல நோக்கிலேயே செய்தார். எனவே அச்செயலோடு தொடர்புடைய தோஷங்களாலோ, பாபங்களாலோ தீண்டப்படாமல் உத்தமராகவே - தூயவராகவே விளங்குகிறார். ‘சுசி:’ என்றால் தூயவர் என்று பொருள்.

எப்போதும் தூயவராக விளங்குவதால் திருமால் ‘சுசி:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 157-வது திருநாமம். “சுசயே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் மனம், மொழி, மெய் அனைத்தும் தூய்மையாக இருக்கும்படித் திருமால் அருள்புரிவார்.

158. ஊர்ஜிதாய நமஹ (Oorjithaaya namaha)


மகாபலி மூவடி நிலம் தருவதாக வாமன மூர்த்திக்கு வாக்களித்தான். தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றியே தீர வேண்டும் என்ற உறுதியுடன் தன் கமண்டலத்தில் உள்ள நீரைக் கொண்டு தாரை வார்த்துக் கொடுத்தான். அவன் தாரை வார்த்த நீர் வாமனரின் கையில் பட்டது தான் தாமதம். கிடுகிடுவென அவர் வளரத் தொடங்கினார்.

“ஒண்மிதியில் புனலுருவி ஒருகால் நிற்ப
ஒருகாலும் காமரு சீர் அவுணன் உள்ளத்து
எண்மதியும் கடந்து அண்டம்மீது போகி
இருவிசும்பினூடு போய் எழுந்து மேலைத்
தண்மதியும் கதிரவனும் தவிர ஓடி
தாரகையின் புறந்தடவி அப்பால் மிக்கு
மண்முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை
மலர்புரையும் திருவடியே வணங்கினேனே!”

என்று வாமனர் த்ரிவிக்கிரமனாக வளர்ந்தமையைத் திருமங்கையாழ்வார் பாடுகிறார். அவ்வாறு நெடிய தோற்றம் கொண்டவராகத் த்ரிவிக்கிரமன் வளர்ந்தவாறே, “என்ன மாயம் இது?” என்றொரு குரல் ஒலித்தது. அது மகாபலியின் மகனான நமுசியின் குரல்.  த்ரிவிக்கிரமனைப் பார்த்து, “ ‘மாயன்’, ‘மாயன்’ என்று உன்னை எல்லோரும் அழைப்பது சரியாகத் தான் இருக்கிறது. மாயம் செய்து எங்களை ஏமாற்றப் பார்க்கிறாயா?” என்று கோபத்துடன் கேட்டான் நமுசி.

“நான் யாரையும் ஏமாற்றவில்லையே!” என்றார் த்ரிவிக்கிரமன். “இல்லை! என் தந்தையிடம் சிறிய கால்களைக் காட்டி மூவடி நிலம் வேண்டும் என்று நீ யாசித்தாய். அந்தச் சிறிய கால்களைக் கருத்தில் கொண்டுதான் என் தந்தையும் மூவடி நிலம் தருவதாக வாக்களித்தார். ஆனால் நீயோ திடீரென விஸ்வரூபம் எடுத்துப் பெரிய கால்களைக் கொண்டு அனைத்து உலகங்களையும் அளந்து எங்களை வஞ்சிக்கப் பார்க்கிறாய். என் தந்தையின் அப்பாவித் தனத்தைப் பயன்படுத்திக் கொண்டு மாயம் செய்யப் பார்க்கிறாய்!” என்று குற்றம் சாட்டினான் நமுசி.

“நமுசி! நான் எப்போதுமே எங்கும் பரந்து இருப்பவன். உன் தந்தைக்குக் காட்சியளிப்பதற்காக என்னைக் குறுக்கிக் கொண்டு குள்ள வாமனனாக வந்தேன். இப்போது எனது இயல்பான பேருருவத்துக்கு மாறிவிட்டேன்! அவ்வளவு தான். நான் உன் தந்தையை வஞ்சிக்கவில்லை!” என்றார் திரிவிக்கிரமன்.ஆனால் அதை ஏற்காத நமுசி, “நீ யாசிக்கும் போது எடுத்துக் கொண்ட வாமன வடிவத்துடனேயே மூவடி அளந்து கொள். இந்தப் பேருருவத்தோடு அளப்பதை ஏற்க மாட்டேன்!” என்றான்.

அவன் கூற்றை மீறி, உலகைப் பேருருவத்துடன் அளக்கப் போனார் திரிவிக்கிரமன். அவரது திருவடிகளைப் பிடித்து, “உன்னை அளக்க விட மாட்டேன்!” என்று தடுத்தான் நமுசி. அப்போது திரிவிக்கிரமன் தனது திருவடிகளால் நமுசியை உதைத்து அவன் ஆகாயத்தில் சுழலும்படிச் செய்துவிட்டார். இச்சம்பவத்தைப் பெரியாழ்வார் பாடியுள்ளார்:

“என்னிது மாயம் என் அப்பன் அறிந்திலன்
முன்னைய வண்ணமே கொண்டு அளவாயென்ன
மன்னு நமுசியை வானில் சுழற்றிய
மின்னு முடியனே அச்சோ! அச்சோ!
வேங்கட வாணனே அச்சோ! அச்சோ!”

இவ்வாறு நமுசி போன்ற அசுர சக்திகளை அனாயாசமாக வீழ்த்தக் கூடிய பலம் பொருந்தியவராகத் திருமால் விளங்குவதால் ‘ஊர்ஜித:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின்  158-வது திருநாமம். “ஊர்ஜிதாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு உயர்ந்த உடல் வலிமையையும் மனவலிமையையும் திருமால் தந்தருள்வார்.

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

Tags : Ananthan ,
× RELATED அனந்தனுக்கு 1000 நாமங்கள்!