×

ஓருடல் ஈருயிராய் ராகு கேது

ஸ்ரீ வாஞ்சியம்

காவிரிக் கரையில் திருவாஞ்சியம் என்னும் ஊரைக் கண்டு அதன் அழகில் மயங்கி லிங்கவடிவில் சுயம்புவாகச் சிவபெருமானும் ஞானசக்தியாகப்  பார்வதி தேவியும் அவ்வூரிலேயே கோயில் கொண்டுவிட்டனர். இந்த தலத்தை தான் மிகவும் நேசிப்பதாக சிவன் பார்வதியிடம் கூறியதாக  புராணங்கள் சொல்கின்றன. இத்தலத்தின் மூலவர் ஒரு சுயம்பு லிங்கத் திருமேனியுடன் காட்சியளிக்கிறார். உலகிலுள்ள 64 சுயம்பு லிங்கத்  திருமேனிகளுள் இதுவே மிகவும் பழமையானதாகும். ஈசன் வாஞ்சிநாதராகவும், அம்பிகை மங்களநாயகியாகவும் திருவருட்பாலிக்கும் தலம். தன்னைப் பிரிந்த திருமகளை (ஸ்ரீ) மீண்டும் அடைய விரும்பி (வாஞ்சித்து) விஷ்ணு தவமிருந்து சிவனருள் பெற்ற தலம் இதுவாதலால் இத்தலம்  ஸ்ரீவாஞ்சியம் எனப்படுகிறது. உட்பிரகாரத்தில் பைரவர் சந்நதி உள்ளது. பைரவர் இங்கு யோகநிலையில் காணப்படுகிறார். பைரவர் சநதிக்கு அடுத்து  ராகு-கேது சந்நதி இருக்கிறது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இவர்கள் உருவச்சிலையும் இக்கோயிலின் சிறப்பம்சமாகும். ராகு-கேதுவிற்கு  பாலாபிஷேகம் செய்யும் போது பால் நீலநிறமாக மாறிவிடும்.

இத்தலத்தில் ராகு-கேதுவை வழிபடுவது திருமணத் தடைகளை நீக்கும் என்றும் நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் தீரும் என்றும் பக்தர்கள்  நம்புகிறார்கள். இத்தலத்தில் சிவபெருமானே அனைத்துமாக அருட் பாலிப்பதால் இங்கு நவக்கிரகங்களுக்கு தனி சந்நதி இல்லை. தலவிநாயகர் அபயங்கர விநாயகர் என்ற பெயருடன் இங்கு விளங்குகிறார். இக்கோயிலின் சண்டிகேஸ்வரர் யம சண்டிகேஸ்வரர் என்று  அழைக்கப்படுகிறார். இத்தலத்தின் தலவிருட்சம் சந்தன மரம்.இத்தலத்தில் யமதர்மனுக்கு தனி சந்நதி இருப்பது ஒரு சிறப்பம்சம். கோயிலின் அக்னி  மூலையில் எமனுக்கும், சித்ரகுப்தனுக்கும் தெற்கு நோக்கிய தனி சந்நதி உள்ளது. அனைத்து உயிர்களையும் எடுக்கும் பதவியை உடையதால் எமனை  எல்லோரும் திட்டியதாலும், பல உயிர்களை எடுப்பதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் பொருட்டும் எமன் இத்தலம் வந்து தனக்கு ஏற்படும்  பாவம் தீர சிவனை நோக்கி கடுந் தவம் இருந்தார்.

இறைவனும் உயிர்களை எடுக்கும் பாவமும் பழியும் எமனை வந்தடையாது என்று வரம் அளித்தார். மேலும் இத்தலத்தில் சிவனை தரிசனம்  செய்பவர்களுக்கு மறு பிறப்பில்லாமலும், அமைதியான இறுதிக்காலத்தை தர வேண்டும் என்றும் அருளினார். அவ்வாறே இத்தலத்தில் க்ஷேத்திர  பாலகனாக விளங்கும் எமனை முதலில் தரிசனம் செய்த பின்பே இறைவனை தரிசிக்க வேண்டும் என்ற வரமும் அளித்தார். அதன்படி நாள்தோறும்  எமதர்மராஜனுக்கே முதல் வழிபாடு, ஆராதனைகள் நடைபெறுகின்றன. இங்குள்ள குப்தகங்கை தீர்த்தத்தில் நீராடி முதலில் யமனை வழிபட்டு பிறகே  கோயிலில் மற்றவர்களை வழிபட வேண்டும் என்பது மரபாகும். மரணபயம், மனக்கிலேசம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட அவை நீங்கும்.  இத்தலத்தில் இறப்பவர்களுக்கு எம வேதனை கிடையாது. இத்தலத்தில் எந்த இடத்தில் இறப்பு நிகழ்ந்தாலும் மற்ற தலங்கள் போல் கோயில்  மூடப்படுவதில்லை. தமிழ்நாட்டில் உள்ள க்ஷேத்திரங்களில் திருக்கடவூருக்கு அடுத்தப்படி நிகரற்ற தலம் ஸ்ரீவாஞ்சியம் ஆகும்.

Tags : Orutal Eruyirai ,Raghu Kedu ,
× RELATED திருப்பணிக்குப் பொருள் வேண்டி வேலாயுதத்தில் விளம்பரம் செய்த வேலன்!