×

மனைவி மாமியாருடன் என்ன பிரச்னை? ஜெயம் ரவி பகீர் தகவல்கள்

சென்னை: மனைவி ஆர்த்தியை பிரிவதற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து நடிகர் ஜெயம் ரவி பல பரபரப்பு தகவல்களை பேசியிருக்கிறார். இது குறித்து பிரபல யூடியூபர் ஆர்ஜே ஷாவிடம் ஜெயம் ரவி பேசியிருக்கிறார். அப்போது ஜெயம் ரவி கூறியிருப்பதாவது:  ஆர்த்தியுடன் திருமணமாகி 10 ஆண்டுகள் நன்றாக போனது. அந்த 10 ஆண்டுகளும் எங்களுக்குள் காதல் இருந்தது. அதன் பிறகுதான் பிரச்னைகள் ஆரம்பித்தது. எனக்கென்று தனியாக வங்கிக் கணக்கு கிடையாது.

என் பெயரிலும் மனைவி பெயரிலும் சேர்த்து ஜாயின்ட் அக்கவுண்ட் 3 இருக்கிறது. இதில் நான் எவ்வளவு பணம் எடுத்தாலும் அதற்கான மெசேஜ் ஆர்த்திக்குதான் போகும். எனக்கு வராது. அதேபோல் ஆர்த்தி பணம் எடுத்தால் அந்த விவரமும் எனக்கு தெரிய வராது. இது பற்றி ஆர்த்தியிடம் கேட்கும்போது, ‘நீங்க பெரிய ஹீரோ. உங்க ‘பிரைவேசி’ பாதிக்கும். மற்றவர்களுக்கு நீங்கள் செலவு செய்வது தெரியக்கூடாது’ என சொன்னார். திருமணத்துக்கு முன் எனது அம்மாவுடன்தான் எனது ஜாயின்ட் அக்கவுண்ட் இருந்தது.

அதுபோல் இப்போது மனைவியுடன் ஜாயின்ட் அக்கவுன்ட் இருக்கிறது என என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன். இப்படி 10 வருடங்கள் கழிந்தது. ஆனால் அதற்கு பிறகுதான் இந்த விஷயங்கள் பெரிதானது. நான் வெளிநாட்டுக்கு படப்பிடிப்புக்கு சென்று பணத்தை எடுத்தால், எதற்காக பணம் எடுத்தாய்? என்ன செலவு செய்தாய்? அந்த பணத்தில் என்ன சாப்பிட்டாய்? என்றெல்லாம் ஆர்த்தி கேட்க ஆரம்பித்துவிடுவார். அதே சமயம், அவர் லட்சங்களில் ஹேண்ட் பேக்குகள், அழகு சாதனப் பொருட்கள் வாங்கிக் குவிப்பார்.

அதை நான் கேட்க முடியாது. ஒரு கட்டத்துக்கு பிறகு எனது உதவியாளர்களுக்கு போன் செய்து, ‘சார் இவ்வளவு பணம் எடுத்திருக்கிறார். இதற்கெல்லாம் செலவு செய்ததாக சொல்கிறார். அது நிஜமா’ என்றெல்லாம் விசாரிக்கத் தொடங்கிவிட்டார். இது தெரிந்து நான் அதிர்ச்சியடைந்தேன். என்னைப் பற்றி அவர் கேட்டால் அது கணவன், மனைவி பிரச்னையாக மட்டுமே முடிந்துவிடும். அதை விட்டு விட்டு எனது உதவியாளர்களிடம் கேட்டால், அவர்கள் என்னை எப்படி பார்ப்பார்கள்? ஒரு முறை பெரிய படம் ஒன்று நடித்தபோது, அந்த படக்குழுவுக்கு ட்ரீட் கொடுத்தேன்.

நான் பணம் எடுத்து செலவு செய்துவிட்டேன். உடனே எனது உதவியாளர்களுக்கு போன் செய்து, ‘எதற்கெல்லாம் எவ்வளவு செலவு செய்தார், யார் யார் வந்தார்கள்’ என்றெல்லாம் ஆர்த்தி கேட்டிருக்கிறார். இது என்னை மனதளவில் பாதிக்க செய்தது.  இதற்கிடையில் வாட்ஸ்அப்பில் ஏதாவது மெசேஜ் வந்தால் இந்த மெசேஜ் ஏன் வந்தது? இந்த புகைப்படம் ஏன் உங்களுக்கு வந்தது என்றெல்லாம் ஆர்த்தி கேட்பார். சினிமா துறையில் இருக்கும்போது, படம் சம்பந்தமாக புகைப்படங்கள் வரும்.

அதைக் கூட கேள்வி கேட்பதால் 6 வருடம் நான் வாட்ஸ்அப்பே பயன்படுத்தாமல் இருந்தேன். ‘பிரதர்’ படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடக்கும்போது, ஒருமுறை வீடியோ கால் செய்து, ‘உங்கள் ஓட்டல் அறையில் யார் இருக்கிறார்கள் காட்டுங்கள்’ என கேட்டார். இந்த சம்பவமும் எனக்கு பேரதிர்ச்சியை தந்தது. இது பெரிய பிரச்னையாகி படப்பிடிப்பிலிருந்து நான் பாதியில் வெளியேற வேண்டிய நிலை வந்தது. இதுபோல் நெருக்கடிகளால் நான் மனதளவில் காயம்பட்டேன். ‘எனது மம்மிக்கு (தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார்) ஆண்டுக்கு ஒரு படம் பண்ணுங்க’ என ஆர்த்திதான் சொன்னார். சரி, அவரும் அம்மாதானே என ‘அடங்க மறு’ படத்தில் நடித்தேன்.

அந்த படம் நஷ்டம் என்றார்கள். சரி, இனிமேல் நாம் சேர்ந்து படம் எடுக்க வேண்டாம் என நான் சொன்னபோது, மற்ற படங்களுக்கு நான் கொடுத்த கால்ஷீட்டில் குளறுபடிகள் செய்து, மீண்டும் அவரது அம்மாவுக்காக ‘பூமி’ என்ற படத்தில் நடிக்க வேண்டியதாகிவிட்டது. அந்த படமும் நஷ்டம் என்றார்கள். மூன்றாவதாக ‘சைரன்’ படத்தையும் எனது நடிப்பில் சுஜாதா அவர்கள் தயாரித்தார். அந்த படத்தை தெலுங்கில் ரிலீஸ் செய்யவில்லை. சரியாக விளம்பரம் செய்யவில்லை.

இது பற்றியெல்லாம் கேட்டபோது, ‘அய்யோ மம்மிக்கு இந்த படமும் லாஸ்’ என ஆர்த்தி சொன்னார். அப்போதுதான் எனக்கு கோபம் வந்து, எங்கள் புரொடக்‌ஷனில் இருந்த ஒருவரை வைத்து கணக்கு பார்த்தேன். அதில் அதிர்ச்சி தகவல் கிடைத்தது. சுஜாதா அவர்கள் என்னை வைத்து தயாரித்த 3 படங்களுமே அவருக்கு லாபம்தான். ஆனால் என்னிடம் பொய் சொல்லியிருக்கிறார்கள் என்பது தெரிந்தது. நான் சம்பாதித்து வாங்கிய வீடு எனது பெயரிலும் ஆர்த்தி பெயரிலும் இருக்கிறது. இது தவிர, ஆர்த்தி பெயரில் நகைகள், மேலும் பல சொத்துகள் இருக்கிறது. 6 காரில் 2 கார்தான் எனது பெயரில் இருக்கிறது. மீதி 4 கார் ஆர்த்தி பெயரில் இருக்கிறது.

அப்படியெல்லாம் இருக்கும்போது நஷ்டம் என ஏன் பொய் சொன்னீர்கள் என கேட்டபோதுதான் இந்த விவகாரம் பூதகரமாக வெடித்தது. அந்த வீட்டில் (மாமியார் வீட்டில்) ஒரு சிலருக்கு இருக்கும் மரியாதை கூட எனக்கு கிடைக்கவில்லை. வேலையாட்கள் முன்கூட கோபமாக பேசுவது, சண்டை போடுவது என இருந்தால் யார்தான் பொருத்துக்கொள்வார்கள்? இதனால்தான் பிரியும் முடிவை எடுத்தேன்.
செப்டம்பர் 9ம் தேதி ஆர்த்தியை பிரிவதாக நான் அறிக்கை வெளியிட்டதும், இந்த பிரிவு என்பது ஜெயம் ரவி எடுத்த தன்னிச்சை முடிவு என்றும் இது பற்றி தனக்கு தெரியாது என்றும் 2 குழந்தைகளையும் தவிக்க விட்டு ஜெயம் ரவி சென்றுவிட்டதாகவும் ஆர்த்தி சொல்லியிருக்கிறார்.

உண்மையில், ஜூன் மாதம் பெரிய பையனுக்கு பிறந்த நாள் வந்தது. இதற்காக நட்சத்திர ஓட்டலில் நான் பார்ட்டி ஹால் புக் செய்திருந்தேன். அங்கு சின்ன பையனை அழைத்து வரும்படி ஆர்த்தியிடம் சொல்லியிருந்தேன். ஆனால் அவர் பிறந்த நாள் பார்ட்டிக்கு வராமல், மகனுடன் இலங்கை போய்விட்டார். பிரிவு அறிக்கை வெளியிடுவதற்கு 2 நாள்கள் முன்பு கூட நான் எனது 2 மகன்களுடன் தான் இருந்தேன். அப்படி இருக்கும்போது நான் அவர்களை தவிக்க விட்டதாக ஆர்த்தி பொய் சொல்கிறார். இவ்வாறு ஜெயம் ரவி கூறியிருக்கிறார்.

* வீடு எனது பெயரிலும் ஆர்த்தி பெயரிலும் இருக்கிறது. இது தவிர, ஆர்த்தி பெயரில் நகைகள், மேலும் பல சொத்துகள் இருக்கிறது

* பிரதர் படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடக்கும்போது, வீடியோ கால் செய்து, ‘உங்கள் ஓட்டல் அறையில் யார் இருக்கிறார்கள் காட்டுங்கள்’ என கேட்டார்.

The post மனைவி மாமியாருடன் என்ன பிரச்னை? ஜெயம் ரவி பகீர் தகவல்கள் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Jayam Ravi ,Chennai ,Aarti ,RJ Shah ,Jayam Ravi Bagheer ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஜெயம் ரவி – ஆர்த்தி தம்பதியர் இடையே...